895. நபி (ஸல்) அவர்கள், ‘கன்னி கழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள்.
896. நான், ‘இறைத்தூதர் அவர்களே! பெண்களிடம் அவர்களின் திருமணம் தொடர்பாக யோசனை கேட்கப்படவேண்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். நான், ‘அவ்வாறாயின் கன்னிப் பெண்ணிடம் யோசனை கேட்கப்படும்போது அவள் வெட்கப்பட்டுக்கொண்டு மௌனமாக இருப்பாளே?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவளுடைய மௌனமே சம்மதமாகும்” என்றார்கள்.