1136. எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1137. நான் உமர் இப்னு உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) ஹரூரிய்யாவுக்குப் புறப்பட்டபோது கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்துக் காட்டினேன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாள்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க்களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘எதிரிகளைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள். (வேறு வழியின்றி போர்க்களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். மேலும், ‘சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, ‘இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! (குலங்கள் அனைத்தும் சேர்ந்து திரட்டி வந்துள்ள) படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.