அல்லாஹ், உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
அவையாவன:
– நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “தௌராத்”
– நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “ஸபூர்”
– நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “இன்ஜீல்”
– நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட “அல்குர்ஆன்”
இவற்றைத் தவிர, இன்றுள்ள பல மதங்களின் வேத கிரந்தங்கள் அல்லாஹ்வால் அருளப்பட்டவையா இல்லையா என்பதை நாம் நிச்சயப்படுத்திக் கூறமுடியாது. எனவே, ஒரு முஸ்லிம் பெயரறிந்து மேற்கூறப்பட்ட வேதங்களையும், மற்றவற்றைப் பொதுவாகவும் அல்லாஹ் அருளியவை என நம்புவது இஸ்லாமிய நம்பிக்கைச் சார்ந்த மூன்றாவது அம்சமாகும்.
அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்குர்ஆனாகும். இதில் முந்திய எல்லா வேதங்களினதும் போதனைகளின் சாராம்சம் அடங்கப்பெற்றுள்ளது. எனவே, எவரொருவர் அல்குர்ஆனை தன் வேத நூலாக ஏற்று பின்பற்றுகிறாரோ அவர் அதற்கு முந்திய வேத நூல்களையும் ஏற்றவர் ஆகின்றார். இதன்படி முந்திய வேதங்கள் நம்பிக்கைக்கு மட்டும் உரியனவாகும்பொழுது, அல்குர்ஆன் நம்பிக்கைக்கும், நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதற்கும் உரியதாக அமைந்து விடுகிறது.
“அல்குர்ஆனுக்கு முந்திய வேதங்கள் சத்தியமானவையாயின் மற்றொரு புதிய வேதத்தின் – அல்குர்ஆனின் – அவசியம் என்ன?” என யாரேனும் கேட்க முடியும்.
உண்மையில், அவ்வேதங்கள் அருளப்பட்ட ஆரம்ப நிலையில் சத்தியமானவையாகவே இருந்தன. அந்த நிலையில் அவற்றைத் திரிபுபடுத்தாது பின்பற்றியவர்களும் இறையன்புக்குரிய தூயவர்களே! எனினும், காலம் செல்லச்செல்ல அவற்றை ஏற்றுக் கொண்ட மக்களே அவற்றின் அசல் வடிவத்தைக் கெடுத்து விட்டார்கள். அவற்றிலிருந்த இறைக்கருத்துக்களுடன் தம் கருத்துக்களையும் கலந்து விட்டார்கள். மேலும், பல திருத்தங்கள், கூட்டல், குறைத்தல்கள், நீக்கல்களும் செய்து விட்டார்கள். இறுதியில் அசல்கள் இருந்த இடத்தில் நகல்கள் அமர்ந்து கொண்டன.*
மேலும் முந்திய வேதங்கள் குறிப்பிட்டதொரு சமூகத்திற்கு, குறிப்பிட்டதொரு காலத்தின் தேவையையும் அந்த வகையிலான போதனைகளையும் கொண்டு அருளப்பட்டவையாகும். அன்றி, அவை எதுவுமே முழு உலகத்துக்கும் உரிய பொது வேதங்களாக அருளப்படவில்லை.
இந்த இரண்டு காரணிகளை அடியொட்டி அல்குர்ஆன் அருளப்பட்டதாகக் கொள்ளலாம். அல்குர்ஆன் முழு உலகுக்கும் எல்லா மக்களுக்குமான இறுதி வேதமாகும். இதன்பின் வேறு வேதங்கள் என்றுமே அருளப்பட மாட்டாது.**
“அப்படியாயின் முந்திய வேதங்களுக்கு ஏற்பட்ட அதே கதி அல்குர்ஆனுக்கும் ஏற்படாதா? மக்கள் தம் கைவரிசையைக் காட்ட மாட்டார்களா?” என மீண்டும் வினவப்படலாம்.
இது ஒருபோதும் நடவாது. அல்குர்ஆன் அருளப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் தோல்வியுற்று குர்ஆனின் எதிரில் மண்டியிட்டதையே கேட்கின்றோம். குறிப்பாக, அல்குர்ஆனுக்கு எவரும் எத்தகைய தீங்கும் செய்ய முடியாமல் இருப்பதற்குக் காரணம் இதைப் பாதுகாக்கும் பொறுப்பை இதை அருளிய அல்லாஹ்வே ஏற்றிருப்பதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“திண்ணமாக இந்த நல்லுரையை நாம்தாம் இறக்கி வைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருப்போம்” (அல்குர்ஆன்: 15:9)
பைபிள் எத்தகைய திரிபுகளுக்கு ஆளாகியுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள கீழ்காணும் நூல்களைப் படிக்கவும்:
* 1. ‘Let the Bible Speak’ written by Abdul Rahman Dimashkiah.
2. ‘Christian – Muslim Dialogue’ written by Dr. H.M Bagil M.D.
** அல்குர்ஆனைப் பற்றி அதிக விளக்கம் பெற அடுத்து வரும் அத்தியாயத்தைப் படிக்கவும்.
குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.