Featured Posts

மது ஊற வைக்கப்படும் குடுவைகள் பற்றி…

1296. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்” என்று சொன்னதாக அனஸ் (ரலி) எனக்கு அறிவித்தார்கள்.

புஹாரி : 5587 அனஸ் (ரலி).

1297. நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும், தார் பூசப்பட்ட பாத்திரத்தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

புஹாரி : 5594 அலீ (ரலி).

1298. நான் அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அவர்களிடம் ‘எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத்தகாதது என இறை
நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (வினவினேன்). இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரான எங்களை சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) கூறினார்:) ‘சுட்ட களிமண் பாத்திரத்தையும் மண்சாடியையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லையா?’ என கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) ‘நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காத ஒன்றை உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா?’ என்று கூறினார்கள்.

புஹாரி : 5595 இப்ராஹீம் (ரலி).

1299. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு நான் தடை செய்கிறேன்’ என்று கூறினார்கள். (பின்னர் இத்தடை நீக்கப்பட்டது)

புஹாரி : 1398 இப்னு அப்பாஸ் (ரலி).

1300. நபி (ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, ‘மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே” என்று சொல்லப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்கள்.

புஹாரி : 5593 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *