ஜூலை முதல் வாரத்தில் ஸ்காட்லாந்தின் கிளனிகல்ஸ் நகரின் நடந்து முடிந்த கூட்டத்தில் G8 எனப்படும் உலகின் ஆகப்பெரிய 8 பணக்கார நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை ஒழிக்கப்போவதாக சூளுரைத்தன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டமைப்புதான் இந்த G8. உலகின் பெரும் பணக்கார இந்நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி உலக பொருளியல் தொடர்பான விஷயங்களை விவாதித்து சில பல அறிவிப்புகளை செய்வது வாடிக்கையாக நடப்பதுதான். வளர்ச்சி பெற்ற இந்நாடுகளின் திட்டங்கள் தத்தம் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, உலகின் பிற நாடுகளை, முக்கியமாக ஏழை நாடுகளை பாதிப்புக்குள்ளாக்குவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும் வாடிக்கைதான். இந்த G8 அமைப்பிற்கு தலைமைப் பதவி என்று எதுவும் இல்லாவிட்டாலும், வழக்கம்போல அமெரிக்க பெரியண்ணனின் நாட்டாமை இங்கு அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.
இந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளுக்காக 50 பில்லியன் டாலருக்கு உதவித்திட்டங்களும், சில ஏழை ஆப்பிரிக்க நாடுகளின் கடன் தொகையை திரும்ப செலுத்தத் தேவையில்லை என்று ரத்து செய்துவிடுவதும் G8 தலைவர்கள் அறிவித்த திட்டங்களில் அடங்கும்.
நோக்கம் என்னவோ சிறப்பானதுதான். ஆனால், இந்த திட்டங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பயனளிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி என பொருளியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதலாவதாக, இவர்கள் அறிவித்திருக்கும் தொகை இந்த பணக்கார நாடுகளுக்கு சும்மா பாக்கெட் மணி மாதிரி. இந்த அறிவிப்பு, ஏழை நாடுகளின் பிரச்னைகளை இவர்கள் கண்டு கொள்வதே இல்லை எனும் குற்றச்சாட்டை சமாளிப்பதற்காக வெறும் கண்துடைப்பு மட்டுமே! இவான் டேவிஸ் என்னும் BBC-யின் Economics Editor இப்படி சொல்கிறார், ‘குறைந்த செலவில் தலைப்புச் செய்தியில் இடம் பிடிப்பதில் இவர்கள் வல்லுனர்கள்’. இருந்தாலும், இப்போது அறிவிக்கப் பட்டிருக்கும் தொகை தலைப்புச் செய்தியில் அல்ல, சாதாரண செய்தியாக வெளியிடக்கூட லாயக்கற்றது என்கிறார் அவர்.
இரண்டாவதாக, G8 என்ற பெயரில் இவர்கள் பாட்டுக்கு கூட்டாக திட்டங்களை அறிவித்து விட்டார்களே தவிர, அவற்றை நடைமுறைப் படுத்துவது அந்தந்த நாடுகளின் விருப்பத்தின்பாற்பட்டது. இதற்கு யாரும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. கும்பகோண தீவிபத்தும் தமிழ்த்திரையுலக நடிகர்களின் உதவி அறிவிப்புகளும் இங்கு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஆனால் நிலைமை அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை. பஞ்சத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நைஜர் போன்ற நாடுகளுக்கு உதவிப்பொருட்களுடன் விமானங்கள் வந்து இறங்கத்தொடங்கி விட்டன என்பது சற்று ஆறுதலான செய்தி.
வறுமையை ஒழிப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுள் ஒன்று, ஏழை ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை ரத்து செய்வது. இந்தத் திட்டம் அந்த நாடுகளுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக இருக்குமே தவிர, வறுமையை ஒழிக்க இது எப்படி உதவும் என்பது புரியவில்லை. ஒரு பழமொழி சொல்வார்களே, பசித்தவனுக்கு ஒருவேளை உணவளிப்பதை விட அவன் கையில் ஒரு தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பது சிறந்தது என்று. அது போல இந்த நாடுகள் தனது பொருளாதார தேவைகளை தானே நிறைவேற்றிக் கொண்டு ஒரு தன்னிறைவு பெற்ற சமுதாயமாக நிமிர உதவும் வகையில் உதவித்திட்டங்களை வழங்குவதே ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்று தோன்றுகிறது. பணக்கார நாடுகள் சிந்திப்பார்களா?
தலைப்பிற்கு என்ன பொருள் என்று குழம்புபவர்களுக்கு: ‘கரீபி ஹட்டாவ்’ அதாவது ‘வறுமையை ஒழிப்போம்’ என்பது இந்திரா காந்தியின் மிக பிரபலமான ஒரு தேர்தல் கோஷம். கோஷம் பிரபலமான அளவிற்கு வறுமை ஒழிந்ததா என தெரியவில்லை.
அடுத்த தலைப்பு: “வாழைப்பழ விவகாரம்”
நன்றி: BBC, Economist
http://www.makepovertyhistory.org
எவ்வளது தூரம் இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ‘G-8 summitல் எடுத்த முடிவுகள் செயல்படுத்தப்படுகிறதா’ என்று உறுதி செய்யும் என்று தெரியவில்லை. ஆனால், பல பெரிய தலைகள் இந்த நிறுவனத்தோடு தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.
//எவ்வளது தூரம் இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ‘G-8 summitல் எடுத்த முடிவுகள் செயல்படுத்தப்படுகிறதா’ என்று உறுதி செய்யும் என்று தெரியவில்லை.//
உண்மைதான் ரம்யா, இந்த நிறுவனத்தின் வலைப்பக்கத்தில், இந்த ஆண்டு UK G8-ன் host ஆக இருப்பதை குறிப்பிட்டு இப்படி சொல்கிறார்கள் “They have the power and we can make them use it.”
இவர்களின் நம்பிக்கை வெல்லட்டும்!