– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
சிறுவர்களைக் காணாத போது தேடுதல்:
தந்தை வீட்டுக்கு வந்ததும் தனது பிள்ளைகள் குறித்து விசாரிக்க வேண்டும். குழந்தைகள் எங்கேனும் சென்று வரத் தாமதித்தால் அவர்களைத் தேடவேண்டும். இது குழந்தைக்கு எமது பெற்றோர் எம்மீது அக்கறையாக உள்ளனர் என்ற உணர்வை ஊட்டும் நாம் வெளியிடங்களுக்குச் சென்றால் வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்று விடவேண்டும். இல்லை என்றால் எமது பெற்றோர் எமது வருகையை எதிர்பார்த்து ஏக்கத்துடன் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த உணர்வு குழந்தைகளைத் தவறான வழியில் செல்லாமல் காக்கும் அரணாகத் திகழும்.
வீணாக வீதிகளில் விளையாடித் திரியும் இளைஞர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். இன்று இளைஞர்கள் பலரும் வழிகெடுவதற்கு வீட்டுடன் அவர்களுக்கு இறுக்கமான தொடர்பின்மை என்பது முக்கிய காரணமாகும். நண்பர்களுடன் சேர்ந்து ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர். மேலதிக வகுப்பு, வீட்டுப் பயிற்சி எனப் பெற்றோரை ஏமாற்றி விட்டு கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நண்பர்களின் தூண்டுதலால் சிகரட் மற்றும் போதைப் பாவனைக்கு அடிமையாகின்றனர். எனவே பிள்ளைகள் நீண்ட நேரம் தம்மை விட்டும் பிரிந்திருந்தால் பெற்றோர்கள் அவர்களைத் தேடுபவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் பனூ கைனுகா கோத்திரத்தின் சந்தைக்குச் சென்று வந்தார்கள். பின்னர் தனது இரு முழங்கால்களையும் கைகளால் பிடித்துக்கொண்ட நிலையில் மஸ்ஜிதில் அமர்ந்தார்கள். பின்னர் ‘அந்த சுல்லான் எங்கே? அந்த சுல்லானை அழைத்து வாருங்கள்!’ எனக் கூறினார்கள். ஹஸன்(ரழி) அவர்கள் வந்ததும் பாய்ந்து அவரை அரவணைத்து அன்பு முத்தம் பொழிந்து ‘யா அல்லாஹ்! இவரை நான் நேசிக்கின்றேன்! எனவே நீயும் இவரை நேசிப்பாயாக! இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள் என அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
முத்தமிடுதல்:
முத்தம் அன்பைப் பரிமாறும் ஒரு ஊடகமாகும். சிறுவர்களுடன் உரையாடும் போது அன்பான ஸ்பரிசம் அவர்களது உடலில் ஊக்கத்தை ஊட்டும். தம்மைத் தொட்டுத் தழுவிப் பேசுபவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பையும், பாசத்தையும் பெறுவதாக உணர்கின்றனர். இந்த வகையில் அன்புப் பரிமாற்றத்தில் முத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு.
எல்லாப் பெற்றோர்களும் தமது பிள்ளைகள் மீது பெருமளவு பாசத்துடன்தான் இருக்கின்றனர். சிலர் பாசத்தை மனதில் வைத்துப் பூட்டி வைத்து விடடுத்தான் பழகுகின்றனர். இது தவறானதாகும். பெற்றோர்களின் மனதில் உள்ள பாசத்தைப் பிள்ளைகள் உணர முடியாது. எனவே பாசத்தைப் பேசும் வார்த்தைகள் ஊடாகவும், பழகும் முறையாலும், அன்பான அரவணைப்பின் மூலமும் வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் (தமது பேரக் குழந்தைகளான) ஹஸன்-ஹுஸைன்(ரழி) இருவரையும் முத்தமிட்டார்கள். அப்போது அங்கே இருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ்(ரழி) அவர்கள் (நீங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா!) எனக்குப் பத்துப் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை!’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்!’ எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி), ஆதாரம்:புகாரி)
இன்றைய பெற்றோர்களில் பலரும் தமது குழந்தைகள் தம்முடன் பாசத்துடனும், பரிவுடனும் நடப்பதில்லை; நம்மை மதிப்பதில்லை என்ற ஏக்கத்தில் காலத்தைக் கழிக்கின்றனர். மற்றும் சிலர் முதியோர் இல்லங்களில் தமது இறுதிக் காலத்தைக் கழிக்கின்றனர். குழந்தைகளுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தாலும், கொடுக்காது விட்டாலும் அது பெரிய தாக்கத்தை அவர்களது மனதில் ஏற்படுத்தாது. இருப்பினும் தமது பெற்றோர்கள் தம்மீது போதிய அக்கறையும், கரிசனையும் காட்டவில்லை என்ற எண்ணம் அடிமனதில் அழகாகப் பதிந்து விட்டால் அது ஆபத்தாக அமைந்து விடும். எனவே, எமது குழந்தைகள் எமது இறுதிக் காலத்தில் எங்கள் மீது அன்பு காட்ட வேண்டுமானால் நாம் அவர்களது இளமைப் பருவத்தில் எமது அன்பை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான சிறந்த வழியாக முத்தமிடுவது அமைந்திருப்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது.
குழந்தை பெரியவர்களுடன் செய்யும் குறும்புத்தனங்களை அங்கீகரித்தல்:
குழந்தைகள் என்றால் குறும்புத்தனம் இருக்கவே செய்யும். பல நேரங்களில் அவர்களின் குறும்புத்தனங்கள்தான் நொந்து போன உள்ளங்களுக்கு ஒத்தடமாக அமைந்து விடுகின்றது. வீட்டில் நிலவும் விரும்பத்தகாத அமைதியை அவர்களின் குறும்புகள்தான் விரட்டியடிக்கின்றன. கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் தகராறுகள், மன முரண்பாடுகள் என்பவற்றைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகக் கூட அவர்களின் குறும்புத்தனம் அமைந்து விடுவதுண்டு! எனவே குழந்தைகளின் குறும்புத்தனம் வெறுக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல. குழந்தைகளின் குறும்புத்தனம் ஆபத்தை விளைவிக்காமல் பார்த்துக்கொண்டால் போதுமானது.
குழந்தைகள் எதையும் அறிய வேண்டும் என்று ஆர்வம் கொள்வர். அவர்களின் குறும்புத்தனமும், அறிந்துகொள்ளும் ஆர்வமும் கூட்டணி அமைத்து அவர்கள் பேசும் பேச்சுக்களும், செய்யும் செயல்களும் உண்மையில் இரசிக்கத்தக்கவை. எனினும் வீட்டுக்கு வந்த பெரியவர்களிடம் அவர்கள் வித்தியாசமான வினாக் கணைகளைத் தொடுக்கும் போது சூழ இருப்பவர்கள் சிலபோது சங்கடப்பட நேர்வதுண்டு! சில சிறுவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வருபவர்களிடம் ‘நீங்க ஏ எங்கட ஊட்டுக்கு ஒரே வார? ஒங்கட ஊட்டுல டீ இல்லயா?’ என்றெல்லாம் கேட்டுத் தொலைப்பார்கள். வந்தவர் சற்று நெளிவார். வீட்டாரும் இப்படிக் கேட்டு விட்டானே எனச் சங்கடப்படுவதுடன் பிள்ளைகளைக் கண்டிக்கவும் செய்வர். சிலர் குழந்தைத்தனத்தை இரசிக்கத் தெரியாமல் ‘எங்கட வருகயப் பத்தி ஊட்டுல தப்பாகப் பேசீக்குறாங்க! அதுதான் சிறுவன் இப்படிக் கேக்குறான்!’ எனத் தவறாக எண்ணி விடுகின்றனர். இது தவறாகும்.
சிறுவர்கள் பல விடயங்கள் குறித்தும் சிந்திக்கின்றார்கள். அவர்களிடம் கள்ளம்-கபடம் இல்லாததினால் தமது மனதில் எழுந்த எண்ணத்தை பளிச்சென வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றனர். இது அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு. இதைத் தடுத்து அவர்களின் சிந்திக்கும் திறனையும், கற்பனை வளத்தையும் முளையிலேயே முடக்கி விடக்கூடாது.
இவ்வாறே சில பிள்ளைகள், பெரியவர்கள் சிலரின் உடையைப் பிடித்து இழுப்பர்; சீண்டிப் பார்ப்பர்; தாடியைப் பிடிப்பர். இதுவெல்லாம் குழந்தைகள் உள்ளத்தில் அச்சத்தை அகற்றி அவர்கள் அடுத்தவர்களுடன் சகஜமாகப் பழகும் ஆளுமையை அடைந்து வருகின்றனர் என்பதற்கான அடையாளங்களாகும். எனவே எமது நிலையிலிருந்து இதை நோக்காமல் சிறுவர்கள் என்ற அவர்களது மனநிலையிலிருந்து நோக்கி இச்செயல்பாடுகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
‘அப்படிச் செய்யாதே!’, ‘இப்படிப் பேசாதே!’ என்று அவர்களை அதட்டி அவர்களின் குறும்புத்தனத்தை அழிப்பதோ, அவர்களின் உள்ளத்தை உடைப்பதோ, குழந்தை உள்ளத்தைச் சிதைப்பதோ தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
நபி(ஸல்) அவர்களிடம் கறுப்புப் புள்ளிகள் போடப்பட்ட ஒரு ஆடை கொண்டுவரப்பட்டது. ‘இதை நாம் யாருக்கு அணிவிக்கலாம்?’ என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். கூட்டத்தில் இருந்தவர்கள் மௌனம் காத்தனர். எனவே நபி(ஸல்) அவர்கள் ‘ஹாலித் இப்னு ஸயித்(ரழி) அவர்களின் மகள் உம்மு காலிதை அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். அச்சிறுமி சுமந்து வரப்பட்டாள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியை எடுத்துத் தன் கையாலேயே அந்த ஆடையை அவளுக்கு அணிவித்தார்கள்.
பின்னர், ‘ஸனா! ஸனா!’ என்று கூறினார்கள். இது அறபு வார்த்தை அல்ல. இது அபீஸீனியப் பாஷையாகும். ‘ஸனா’ என்றால் அழகு என்று அர்த்தமாகும். இந்தச் சிறுமி அபீஸீனியாவிலிருந்து வந்திருந்ததால் அந்தச் சிறுமிக்குப் புரியும்படி அவளது பாஷையில் ‘அழகாக இருக்கிறது!’ என்று கூறினார்கள். அது மட்டுமன்றி அச்சிறுமியின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனையும் செய்தார்கள். இந்தச் சிறுமி, தான் பெரியவளான போது இந்த ஹதீஸை அறிவிக்கும் போது;
‘பின்னர் நான் நபி(ஸல்) அவர்களை அண்டி அவர்களின் இறுதி நபித்துவ முத்திரை அடையாளத்தைப் பிடித்து விளையாட ஆரம்பித்தேன். அப்போது (நான் நபி(ஸல்) அவர்களுடன் மரியாதைக் குறைவாக நடப்பதாக எண்ணிய) எனது தந்தை என்னை அதட்டினார். அதற்கு நபியவர்கள் எனது தந்தையைப் பார்த்து ‘அவளை அவள் பாட்டில் விட்டு விடு!’ எனக் கூறினார்கள்.
உண்மையாக நடந்துகொள்ளுதல்:
பிள்ளைகள், பெரியவர்களை முன்மாதிரியாகக் கொள்கின்றனர். இந்த வகையில் பெரியவர்கள் – குறிப்பாகப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும். குழந்தைகளுடன் பேசும் போது பொய் பேசலாகாது! வாக்களித்தால் மீறக்கூடாது! போலி வாக்குறுதிகள் அளிக்கவும் கூடாது! இந்த விடயத்தில் பெற்றோர்கள் – குறிப்பாகத் தாய்மார்கள் தவறு விடுகின்றனர்.
அழுகின்ற பிள்ளையைச் சமாளிப்பதற்காகவும், பிள்ளைகளிடமிருந்து வேலை வாங்குவதற்காகவும் அது தருவவேன், இது தருவேன் என அரசியல்வாதிகள் போன்று போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். பின்னர் தேர்தல் முடிந்த கதை போன்று கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் குழந்தைகள் பொய்யையும், வாக்களித்து விட்டு மாறு செய்வதையும், ஏமாற்றுவதையும் சர்வ-சாதாரண விஷயங்களாக எடுத்துக்கொள்வர். இவை மூன்றும் முனாஃபிக்குகளின் பண்பாகும். இந்த மூன்று குற்றத்தையும் சாதாரணக் குற்றங்களாக அவர்கள் கருத ஆரம்பித்து விட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்வில் பாரிய வீழ்ச்சியை உண்டுபண்ணி விடும். இந்த வகையில் பிள்ளைகளிடம் பொய் சொல்லவோ, போலி வாக்குறுதி அளிக்கவோ கூடாது. அவர்களைச் சின்ன விஷயத்தில் கூட ஏமாற்றக் கூடாது!
இதற்கு மாற்றமாக நடந்தால் பெற்றோர் பற்றிய நல்லெண்ணம் பிள்ளைகளிடம் எடுபட்டு விடும். ‘எனது தாய் பொய் சொல்பவள்; எனது தந்தை ஏமாற்றுபவர்’ என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால் அவர்கள் பெற்றோரின் எந்தப் போதனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே இது விடயத்தில் பெரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்!
அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
‘எங்களது வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது எனது தாய் என்னை அழைத்தார்கள். அப்போது ‘வா! ஒரு சாமான் தருவேன்!’ எனக் கூப்பிட்டார். இது கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் குழந்தைக்கு என்ன கொடுக்க விரும்புகின்றீர்களா?’ எனக் கேட்டார்கள். எனது தாய் ‘நான் பேரீத்தம் பழம் கொடுப்பேன்!’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (இப்படி அழைத்து விட்டு) குழந்தைக்கு எதையாவது நீங்கள் வழங்காவிட்டால் பொய் சொன்ன குற்றம் உங்கள் மீது பதியப்படும்!’ எனக் கூறினார்கள்.
எனவே குழந்தைகளை ஏமாற்றவோ, அவர்களிடம் பொய் பேசவோ, போலி வாக்குறுதிகளை வழங்கவோ கூடாது. இது அவர்களின் ஆளுமையில் பாரிய வீழ்ச்சியை உண்டுபண்ணும் என்பதைப் பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆடை விடயத்தில் அவதானம்:
‘ஆள் பாதி! ஆடை பாதி!’ என்பர். ஆடையை வைத்து மனிதன் மதிப்பிடப்படுகின்றான். எனவே மனிதன் அணியும் ஆடை அவனுக்கு கண்ணியத்தையும், ஆளுமையையும் அளிக்கின்றது. சில ஆடைகள் குப்பார்களின் அடையாளமாகவும் மற்றும் சில ஆடைகள் குற்றச் செயல்களைச் செய்பவர்களினதும், நாகரிகமற்றவர்களினதும் ஆடைகளாக உள்ளன. மற்றும் சில ஆடைகள் ஒழுக்கங்கெட்டவர்களின் அடையாளமாக இருக்கின்றது. எனவே எமது குழந்தைகளின் ஆடை விடயத்தில் நாம் மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும்.
சில பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்குப் பெண்பிள்ளைகளினதும், பெண்பிள்ளைகளுக்கு ஆண்பிள்ளைகளினதும் ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கின்றனர். ஆண்பிள்ளை இல்லாத பெற்றோர் தனது பெண்பிள்ளைக்கு ஆண்பிள்ளைகளுக்குரிய ஆடைகளை அணிவித்துத் தமது ஆசையைத் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். இதை இஸ்லாம் தடுத்துள்ளது.
ஆண் போன்று ஆடை அணியும் பெண்ணையும், பெண் போன்று ஆடை அணியும் ஆணையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். உங்கள் குழந்தைகள் நபி(ஸல்) அவர்களின் சாபத்துக்குள்ளாகுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?
இவ்வாறு பால் மாறி ஆடை அணிவது பழக்க-வழக்கத்திலும், பண்பாட்டிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆணிடம் பெண் தன்மையையும், பெண்ணிடம் ஆண் தன்மையையும் ஏற்படுத்தி விடும். இதனால் அவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சி ஏற்படுவதுடன் சமுகத்தின் கேலிப் பொருளாகவும் அவர்கள் மாறி விடுவார்கள்.
அடுத்து, அணியும் ஆடை கண்ணியமானதாக இருந்தால் அதை அணிந்தவனின் செயல்பாடும் கண்ணியமானதாக இருக்கும். இன்றைய பெற்றோர் சினிமா நடிகர்களின் ஆடைகளைத் தமது குழந்தைகளுக்கு அணிவித்து அழகு பார்க்க ஆசைப்படுகின்றனர். அவர்கள் அணியும் ஆடைக்கு ஏற்ப அவர்களிடம் செயல்பாட்டிலும் மாற்றம் இருக்கும். முரட்டுத்தனமான ஆடை அணிபவர்களிடம் நீங்கள் மென்மையை எதிர்பார்க்க முடியாது. அநாகரிகமான ஆடைகளை அணிபவர்களிடம் நீங்கள் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே ஆடை விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும். கண்ணியமான தோற்றத்தைத் தரும் ஆடைகளை அவர்களுக்கு அணிவிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளின் ஆடை விடயத்தில் கரிசனை காட்டியுள்ளார்கள்.
அம்ரிப்னுல் ஆஸ்(ரழி) அவர்களின் மகன் அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
‘நான் மஞ்சள் சாயம் பூசப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்த நிலையில் என்னை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். ‘உனது தாய்தான் இந்த ஆடையை அணிவித்தாளா? இது நிராகரிப்பாளரின் ஆடை. இதை அணிய வேண்டாம்!’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களின் ஆடையில் அவதானம் செலுத்தியிருப்பதை அவதானிக்கலாம். எனவே, பெற்றோர் தமது குழந்தைகளுக்கு ஆடை எடுக்கும் போது கூடிய அக்கறை செலுத்த வேண்டும். சில பெற்றோர் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் ஆடை விடயத்தில் கூட அலட்சியமாக இருக்கின்றனர். ‘ஜீன்ஸ்’, டீ-சேர்ட் சகிதம் தலையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு பாதையில் பவணிவர அனுமதிக்கின்றனர். இது ஹறாமாகும். நாளை மறுமையில் நிச்சயமாக இதற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். ஆடை என்பது ஒரு மனிதனின் ஆளுமையிலும், ஒழுக்கத்திலும் அதிக தாக்கத்தைச் செலுத்தும் அம்சமாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு குழந்தைகளின் ஆடை விடயத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.