Featured Posts

மாணவர்களுக்கு சில அறிவுரைகள் – 01

மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுக்கு சில வஸிய்யத்கள் – 01

بسم الله الرحمن الرحيم

அறிவைத் தேடும் மாணவர்கள் தங்களது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில அம்சங்களை வஸிய்யத்களாக இனம்காட்டியிருக்கின்றோம். நன்கு வாசித்துப் பயன்பெற அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள்பாளிப்பானாக!

முதல் வஸிய்யத்:

வஸிய்யத்களில் மிக மகத்தான வஸிய்யத்தான தக்வா எனும் வஸிய்யத்தை மாணவர்களுக்கு முதலாவதாக எத்திவைக்கின்றேன். தக்வாவைக் கொண்டுதான் அல்லாஹ் எமக்கும் எமக்கு முன்னால் இருந்தவர்களுக்கும் வஸிய்யத் செய்துள்ளான். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

உங்களுக்கு முன்னால் இருந்த வேதங்கொடுக்கப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறு நிச்சயமாக நாம் வஸிய்யத் செய்தோம்.

– சூரதுந்நிஸா: 131

தக்வா என்றால் அதன் சரியான வரைவிலக்கணம்: அல்லாஹ் ஏவியவைகளை வாழ்க்கையில் இயன்ற அளவு அமுல்படுத்தி, அவன் தடுத்தவைகளைத் தவிர்ந்து கொள்வதன் மூலம் அல்லாஹ்வுடைய வேதனைக்கும் அவனுடைய கோபத்திற்கும் மத்தியில் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதாகும்.

தக்வாவுடைய பிரதிபலனை பின்வரும் வசனங்களின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

யார் அல்லாஹ்வைப் பயந்து கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் கஷ்டங்களிலிருந்து வெளியாகக்கூடிய ஒரு பாதையை ஏற்படுத்துவான். மேலும், அவருக்கு அவன் அவர் நினைத்துப் பார்க்காத விதத்தில் ரிஸ்க் அளிப்பான்.

– சூரதுத்தலாக்: 2,3

அறிவைத் தேடக்கூடிய மாணவர்கள் பல இன்னல்களையும் சோதனைகளையும் தாங்கிய வண்ணம் அறிவைத் தேடக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். நிச்சயமாக ஒரு மாணவன் அல்லாஹ்வை சரியான முறையில் பயந்து கொண்டால் அவனுக்கு ஏற்படும் அனைத்து விதமான சிக்கல்களிலிருந்தும் வெளியேறக்கூடிய ஒரு பாதை ஏற்படுத்துவான்.

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

யார் அல்லாஹ்வைப் பயந்து கொள்கிறாரோ அவருக்கு அவன் அவருடைய விடயங்களில் இலகுவை ஏற்படுத்துவான்.

– சூரதுத்தலாக்: 5

மார்க்க அறிவைத் தேடக்கூடிய மாணவர்களுக்கு பல வகையில் நெருக்கடிகள் இருப்பதை நாம் பார்க்கலாம். அவர்கள் எழுத வேண்டும், பாடம் மீட்ட வேண்டும், வாசித்துப் பார்க்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும், மனனம் செய்ய வேண்டும் இவ்வாறு பல விடயங்களுக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டிருப்பார்கள். அம்மாணவர்கள் உண்மையான முறையில் அல்லாஹ்வைப் பயந்து கொண்டால் நிச்சயமாக அவர்களுக்கு இருக்கும் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வால் இலகுபடுத்தப்படும் என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடம் கிடையாது.

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

யார் அல்லாஹ்வைப் பயந்து கொள்கிறாரோ அவருடைய பாவங்களை அவரை விட்டும் அல்லாஹ் போக்கி விடுவான். மேலும், அவருக்கு கூலியை மகத்தானதாக ஆக்குவான்.

– சூரதுத்தலாக்: 6

 

இரண்டாவது வஸிய்யத்:

அறிவைத் தேடும் மாணவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு விடயமே உளத்தூய்மையாகும். அதாவது, அவர்கள் தேடக்கூடிய அந்த மார்க்க அறிவை அல்லாஹ்வுடைய முகத்தையும் மறுமை நாளையும் நோக்கமாகக் கொண்டு தேடவேண்டும். பொதுவாக இபாதத் என்பது இரண்டு நிபந்தனைகள் இன்றி அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. உளத்தூய்மையுடன் இபாதத் செய்தல் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அங்கீகாரம் பெற்ற இபாதத்தாக இருத்தல் ஆகிய இரண்டுமே அந்நிபந்தனைகளாகும். அதனடிப்படையில் மார்க்க அறிவைத் தேடுவது கட்டாயம் மட்டுமின்றி அது ஒரு இபாதத்தாகவும் இருக்கின்றது. ஆகவே, மார்க்க அறிவைக் கற்பவர்கள் அல்லாஹ் ஒருவனுக்காக மாத்திரமே அதை கற்க வேண்டும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

நேரிய வழி நின்று, கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு, அல்லாஹ்வை வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறுமே தவிர, அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும்.

– அல்பய்யினா: 5

ஆகவே, மார்க்க அறிவை உலக நோக்கம் ஒன்றிற்காக அல்லது தொழிலுக்காக அல்லது சான்றிதழ் பெறுவதற்காக அல்லது மக்களின் புகழைத் தேடுவதற்காக அல்லது ஆலிம், ஷெய்க், அல்லாமா போன்ற பெயர்களைப் பெற்றுக்கொள்வதற்காக அல்லது நல்ல சம்பளம் ஒன்றிற்காகத் தேட முடியாது. மாறாக அல்லாஹ் ஒருவனுக்காக மாத்திரமே அந்த அறிவு தேடப்படவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வின் முகம் நாடப்படக்கூடிய அறிவை உலக நோக்கம் ஒன்றை அடைந்து கொள்வதற்காகக் கற்றுக் கொள்கிறாரோ அவர் மறுமை நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்.

– ஸஹீஹு அபீதாவூத்

இன்று பல நோக்கங்களுக்காக மார்க்க அறிவைத் தேடக்கூடியவர்களை நாம் அதிகமாகப் பார்க்கலாம். எனவே, யாரெல்லாம் மார்க்க அறிவைக் கற்க விரும்புகிறார்களோ அவர்கள் முதலாவது தங்களுடைய நிய்யத்தை சரிபடுத்;திக்;கொள்ள வேண்டும்.

மூன்றாவது வஸிய்யத்:

மார்க்க அறிவைக் கற்றுக் கொள்பவர்கள் தாம் படித்த மார்க்க விடயங்களை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது கட்டாயமாகும்.

எங்களுடைய முன்னோர்களான ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈன்கள் எவ்வாறு பர்ளான விடயங்களில் கவனம் செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்களோ அவ்வாறே சுன்னத்தான விடயங்களிலும் கவனம் செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மார்க்கத்தைக் கற்றுக்கொண்டு இரவில் எழுந்து தொழாத மாணவர்களைக் கண்டிக்கின்றார்கள். சுப்ஹானல்லாஹ்! அறிவைத் தேடக்கூடியவன் இரவில் எழுந்து தொழாமல் இருக்கின்றானா?! என ஆச்சரியத்துடன் அவர்கள் வினவினார்கள்.

ஆகவே, அனைவருக்கும் எவ்வாறு முதலில் மார்க்கத்தைக் கற்பது கட்டாயமோ இரண்டாவது கட்டமாக படித்த விடயங்களை தன்னுடைய வாழ்வில் அமுல்படுத்துவதும் கட்டாயமாகும்.

இன்று மக்களுக்கு நல்லவற்றை ஏவி தீயவற்றைவிட்டும் தடுக்கக்கூடிய பலர் தான் ஏவிய விடயங்களை அவர்களுடைய வாழ்வில் கடைபிடிப்பதில்லை. தான் தடுத்த விடயங்களை அவர்கள் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

விசுhவசிகளே! ஏன் நீங்கள் செய்யாதவற்றை பிறருக்கு செய்யுமாறு கூறுகின்றீர்கள். நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் பெரிதாகிவிட்டது.

– அஸ்ஸாப்: 1,2

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

நீங்கள் உங்களை மறந்த நிலையில் மனிதர்களுக்கு நல்லவற்றை ஏவுகின்றீர்களா? நீங்களோ வேதத்தை ஓதியவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் சிந்தனைபெற வேண்டாமா?

– அல்பகறா: 44

நான்காவது வஸிய்யத்:

தொடர்ச்சியாக அறிவைக் கற்பதில் மாணவர்கள் ஈடுபடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். நாம் மத்ரஸாவில் ஏழு வருடங்கள் படித்திருக்கின்றோம், பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் படித்திருக்கின்றோம், ஆகவே நாம் தற்பொழுது ஆலிம்கள், ஷெய்க்மார்கள் என்ற சிந்தனைப்போக்கு யாருக்கும் ஏற்படக்கூடாது. எமது மரணம் வரைக்கும் எப்பொழுதும் நாம் மாணவர்களாக இருக்கவே சிந்திக்க வேண்டும்.

நாம் ஒரு விடயத்தைப் புதிதாக அறியும் போதே எமது மடமையைப் புரிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலம் கற்றதன் பின்பு கல்வியை நிறுத்துவது உண்மையான ஆலிம்களின் பண்பல்ல.

ஐந்தாவது வஸிய்யத்:

மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுடன் நற்பண்புகள் எப்பொழுதும் சேர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் அல்குர்ஆனையும் சுன்னாவையுமே கற்கின்றார்கள். எனவே, அவை அவசியம் மாணவர்களின் வாழ்வில் மிளிர வேண்டும். எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்குணம் அல்குர்ஆனாக இருந்தததோ அதேபோல் மாணவர்களது நற்குணமும் அல்குர்ஆனாக இருக்க வேண்டும்.

அவர்கள் ஒரு பண்பை கற்றுக்கொண்டால் அப்பண்பை தங்களிடம் வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோருக்கு உபகாரம் புரிதல், உறவினர்களை சேர்ந்து நடத்தல், குர்ஆன் ஓதுதுல், திக்ர் செய்தல், நோன்பு மற்றும் தானதர்மங்களில் கரிசனை காட்டுதல், இறையச்சத்துடன் தொழுதல், நாவையும் கற்பையும் பாதுகாத்தல், முஸ்லிம்களின் மீது நல்லெண்ணம் வைத்தல், போன்ற நற்பண்புகளை அவர்கள் தங்களது வாழ்வில் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், மென்மையான முறையில் நடந்துகொள்ள வேண்டிய இடங்களில் கடினப்போக்கின்றியும், கடினப்போக்கான முறையில் நடந்துகொள்ள வேண்டிய இடங்களில் மென்மையின்றியும் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

ஆறாவது வஸிய்யத்:

தான் கற்ற அறிவைக்கொண்டு பெருமைப்படுபவர்களாக மாணவர்கள் இருக்கக்கூடாது. அவர்கள் மார்க்கத்தில் ஒவ்வொரு விடயத்தையும் கற்றுக்கொள்ளும்போது பணிவை தங்களுக்குள் அதிகரித்துக்கொள்ள வேண்டும். அஷ்ஷெய்ஹ் அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: அறிவை பொருமைக்காக, வெளிப்படுத்திக் கொள்வதற்காக, முகஸ்துதிக்காக, தன்னை அடுத்தவர்கள் புகழ்வதை செவியேற்பதற்காக, பிரசித்தியடைவதை விரும்புவதற்காக கற்றுக்கொள்வதை விட்டும் உன்னை நான் எச்சரிக்கின்றேன். ஏனென்றால், அவைகள் உனக்கு உனது அறிவை சீர்கெடச் செய்துவிடும். மனிதன் தான் அறிவைத் தேடும் காலமெல்லாம் அவன் ஆலிமாக இருப்பான். அவன் ஆலிமாகிவிட்டதாக அவன் நினைத்தால் அவன் நிச்சயமாக மடயனாகிவிட்டான்.

இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: அறிவை வெட்கப்படக்கூடியவனும் பெருமையடிக்கக்கூடியவனும் கற்றுக்கொள்ளமாட்டான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்ஷிலாப்தீன்


நன்றி: salaf.co

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *