Featured Posts

மாணவர்களுக்கு சில அறிவுரைகள் – 02

மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுக்கு சில வஸிய்யத்கள் – 02

بسم الله الرحمن الرحيم

ஏழாவது வஸிய்யத்:

பரப்பப்படுகின்ற செய்திகளை உண்மைப்படுத்துவதில் மாணவர்கள் அவசரப்படக்கூடாது. நிச்சயமாக சமூகத்தில் பரவுகின்ற செய்திகளை சரியான முறையில் விசாரிக்காமல் அவைகளை உண்மைப்படுத்துவது ஒரு மாணவனுடைய அறிவு மற்றும் ஒழுக்கத்தைப் பாதித்துவிடும்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

விசுவாசிகளே! ஒரு தீயவன் உங்களிடம் ஒரு செய்தியைக்கொண்டு வந்தால் ஒரு கூட்டத்தை மடமையின் காரணமாக நீங்கள் பிழைகண்டு கொள்ளாமல் இருக்க அதில் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.

– அல்ஹுஜுராத்: 6

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தான் கேட்டதையெல்லாம் பேசுவது ஒரு மனிதன் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும்.

– முஸ்லிம்

இன்று சமூகத்தில் சரியான முறையில் அழைப்புப் பணியை மேற்கொள்பவர்களுக்கு எதிராக அவர்கள் பொய்யர்கள், பித்அத்வாதிகள், வழிகேடர்கள் என பல செய்திகள் பரப்பப்படுவதை நாம் பார்க்கலாம். நல்ல உறவோடு இருக்கின்ற இரண்டு அழைப்பாளர்களின் உறவைப் பிரித்துவிடுவதற்காக ஓர் அழைப்பாளரிடம் சென்று மற்ற அழைப்பாளரைப் பற்றி தவறான முறையில் கதைத்து இருவரையும் பிரிக்கக்கூடிய மோசமான மனிதர்களையும் நாம் பார்க்கின்றோம்.

ஒரு மாணவனைப் பொறுத்தமட்டில் யார் எச்செய்தியையும் பரப்பினாலும் அதை சரியான முறையில் விசாரிக்காமல் உண்மைப்படுத்தக்கூடாது என்பதை நல்ல முறையில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எட்டாவது வஸிய்யத்:

மாணவர்களிடம் யாராவது ஒரு விடயத்தைக் கேட்டறிய முற்பட்டால் அவர்கள் கேட்கப்படும் விடயத்தில் அவர்களுக்கு சரியான அறிவு இருந்தால் மாத்திரமே அதனைப் பிறருக்குக் கூறவேண்டும். அறிவின்றி ஒருவருக்கு மார்க்கத்தீர்ப்பு வழங்குவது மிகவும் பயங்கரமான ஒரு செயலாகும். இவ்வாறு அறிவின்றி தீர்ப்பு வழங்குவதே வழிகேட்டின் பக்கம் இட்டுச்செல்லும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் அறிவை மனிதர்களிடமிருந்து ஒரேயடியாக பிடுங்கி எடுக்கமாட்டான். ஆனால் அவன் அறிஞர்களை மரணிக்கச் செய்வதன் மூலமே அதைப் பிடுங்கி எடுப்பான். எந்த அளவுக்கென்றால் அவன் ஒரு ஆலிமையும் எஞ்சியிருக்கச் செய்யமாட்டான். அப்போது மனிதர்கள் மடையர்களான தலைவர்களை எடுத்துக்கொள்வார்கள். அவர்களிடம் பத்வா கேட்கப்பட்டு அவர்கள்; அறிவின்றி பத்வா வழங்குவார்கள். அவர்கள் வழிகெட்டு பிறரையும் வழிகெடச் செய்வார்கள்.

– புஹாரீ, முஸ்லிம்

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: உமக்கு எது விடயத்தில் அறிவு இல்லையோ அதை நீ பின்பற்றாதே.

– அல்இஸ்ரா: 36

எம்மிடம் கேட்கப்பட்ட விடயம் குறித்து எமக்கு அறிவு இல்லாவிடின் அல்லாஹ் அறிவான் என்றோ அல்லது தெரியாது என்றோ நாம் கூச்சமின்றிக் கூறவேண்டும்.

ஒன்பதாவது வஸிய்யத்:

மாணவர்கள் கற்கும் விடயங்களை அவர்கள் எழுதிக்கொள்ள வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அறிவை எழுதுவதைக் கொண்டு விலங்கிட்டுக் கொள்ளுங்கள். – ஹாகிம் – அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

முஆவியா இப்னு குர்ரா என்பவர் கூறுகிறார்: யார் தனது அறிவை எழுதவில்லையோ அவருடைய அறிவை அறிவாகக் கணக்கிடப்படமாட்டாது.

நாம் கற்கின்ற விடயங்களை எழுதுவதன் மூலம் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடிகின்றது.

பத்தாவது வஸிய்யத்:

குர்ஆனையும் ஸுன்னாவையும் மாணவர்கள் கற்கும்போது அவ்விரண்டையும் ஸலபுகளுடைய விளக்கத்தின் அடிப்படையில் கற்க வேண்டும். முதல் மூன்று நூற்றாண்டைச் சேர்ந்தவர்களே ஸலபுகள் என அழைக்கப்படுகின்றார்கள். இவர்களுடைய விளக்கமின்றி சொந்த அறிவால் கற்பிக்கப்பட்ட அல்குர்ஆன், ஸுன்னா அறிவு குப்பைத் தொட்டியை சென்றடைய வேண்டிய அறிவாகும். அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் நாம் விளங்குவதற்கு ஸலபுகளின் விளக்கம் இன்றியமையாததாகும். ஏனென்றால், அல்குர்ஆன் இறங்குகின்ற வேளையிலும் மற்றும் நபிமொழிகள் உருவாகிய வேளையிலும் வாழ்ந்தவர்களே அந்த ஸலபுகளில் முதலிடம் பெறக்கூடிய ஸஹாபாக்கள். இவர்களுடைய விளக்கம் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்களுக்கு கற்றுக்கொடுத்த விளக்கமேயாகும்.

இவர்களுடைய விளக்கத்தையும் போக்கையும் நாம் பின்பற்றுவது அவசியமாகும். அதனைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்:

நேர்வழி இதுதான் எனத்தெளிவாகிய பின்பும் யார் தூதருடன் பிளவுபட்டு முஃமின்களுடைய பாதையல்லாத வேறொன்றை பின்பற்றுகிறாரோ அவர் செல்கின்றவாறே நாம் அவரைச் செல்லவிடுவோம். பின்பு அவரை நாம் நரகத்தில் சேர்த்து விடுவோம்.

– அந்நிஸா: 1150

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு பிளவுபட்டவர் மாத்திரமின்றி முஃமின்களின் பாதையைப் பின்பற்றாதவர்களுக்கும் நரகம் உண்டு என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. நிச்சயமாக இவ்வசனம் இறக்கப்படும்போது முஃமின்களாக இருந்தவர்கள் ஸஹாபாக்கள் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. ஆகவே, அவர்களுடைய வழியை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதை இவ்வசனம் குறித்து நிற்கின்றது.

மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

அவர்கள் நீங்கள் ஈமான் கொண்டதைப்போல் ஈமான் கொண்டால் நேர்வழி அடைவார்கள். அவர்கள் புறக்கணித்தால் அவர்கள் நிச்சயமாக பிளவிலேயே இருக்கின்றனர்.

– அல்பகறா: 137

இந்த வசனத்தில் அவர்கள் என்பதன் மூலம் நாடப்பட்டவர்கள் காபிர்களாவார்கள். நீங்கள் என்பதன் மூலம் நாடப்பட்டவர்கள் ஸஹாபாக்களாவார்கள். ஏனென்றால், இவ்வசனம் இறக்கப்படும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இருந்தவர்கள் அந்த ஸஹாபாக்களே. ஆகவே, யாராயினும் ஸஹாபாக்கள் ஈமான் கொண்டதைப்போல் ஈமான் கொள்ளாவிட்டால் அவர் பிளவிலேயே இருக்கின்றார் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இந்த உம்மத் 73 பிரிவுகளாகப் பிரியும். ஒன்றைத்தவிர மற்ற அனைத்தப் பிரிவும் நரகத்திலேயாகும். அப்பிரிவுதான் அல்ஜமாஅத்தாகும். மற்றோர் அறிவிப்பில் அவர்கள்தான் நானும் எனது தோழர்களும் எக்கொள்கையில் இருக்கின்றோமோ அக்கொள்கையில் இருப்பவர்கள்.

– அத்திர்மிதீ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய கொள்கையை மாத்திரமின்றி ஸஹாபாக்கின் கொள்கையையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்கள். இதன் மூலம் அவருடைய கொள்கையும் ஸஹாபாக்களின் கொள்கையும் ஒன்றே என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ஹதீஸின் மூலம் ஸஹாபாக்களின் வழியைப் பின்பற்றலாம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஸஹாபாக்கள் பத்து வசனங்களை அல்குர்ஆனிலிருந்து கற்றுக்கொண்டால் அவைகளை தங்கள் வாழ்வில் அமுல்படுத்தாமல் மற்றைய பத்து வசனங்களைப் படிக்கமாட்டார்கள். ஆகவே, இவர்களுக்கு கற்றுக்கொடுத்தவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே. எனவே, இவர்கள் செய்த அமல்களும் அவர்களின் வழிகாட்டலின்படியே அமைந்திருந்தன என்பதை நாம் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

பதினொராவது வஸிய்யத்:

மார்க்க அறிவைக் கற்பவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர்களைச் சார்ந்த அறிஞர்களிடமே மார்க்க அறிவைக் கற்க வேண்டும். இதற்குப் புறம்பாக பித்அத்தைத் தூண்டக்கூடிய அதனைச் சுமக்கக்கூடிய வழிகேட்டில் உள்ளவர்களிடம் மார்க்கத்தைப் படிப்பது எம்மை வழிகேட்டில் இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: அறிவு என்பது மார்க்கமாகும். ஆகவே, யாரிடமிருந்து நீங்கள் உங்களது மார்க்கத்தை எடுக்கின்றீர்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

– முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பின் முன்னுரை

இமாம் ஸவ்ரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: யார் ஒரு பித்அத்வாதியிடமிருந்து கேட்கிறாரோ அவருக்கு அவர் கேட்டது பயனளிக்காது.

இன்று அறிவைக் கற்றுக் கொடுக்கக்கூடிய பல இடங்கள் மலிந்து எமது நாட்டிலும் பிற நாடுகளிலும் காணப்படுகின்றன. ஆனால், சரியான விளக்கத்துடனும் பித்அத்தை விட்டும் தூரமாகி கல்வி போதிக்கக்கூடியவர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள். அறிவைக் கற்க ஆரம்பிக்க முன்னால் தனது ஆசிரியர் குறித்து ஒரு மாணவன் நல்ல முறையில் தெளிவடைந்ததன் பின்பே அவரிடம் கல்வி கற்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.

பன்னிரெண்டாவது வஸிய்யத்:

தான் கற்ற அறிவை பிறருக்கு எத்திவைக்கும்போது எந்த ஒன்றையும் மறைக்காமல் தெளிவாகவும் பூரணமாகவும் எத்தவைக்க வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்காகவும் சம்பாத்தியத்திற்காகவும் கற்ற அறிவை மறைத்து வாழக்கூடிய வழிகேடர்களாக நாம் வாழக்கூடாது. எந்த ஓர் இடத்திலும் யாருக்கு முன்னிலையிலும் சத்தியத்தைக் கூறக்கூடியவர்களா அம்மாணவர்கள் இருக்க வேண்டும். இதுதான் சத்தியம் எனத் தெரிந்தும் ஊரின் கண்ணியத்திற்காக அல்லது ஊர் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் அந்த சத்தியத்தை மறைப்பார்களாயின் நிச்சயமாக மறுமையில் அதன் பலனை அவர்கள் காண இருக்கின்றார்கள்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: மனிதர்கள் அபூஹுரைரா அதிகமாக ஹதீஸ் அறிவித்துள்ளார் எனக் கூறுகின்றார்கள். அல்லாஹ்வுடைய வேதத்தில் இரண்டு வசனங்கள் இல்லாவிட்டால் நான் ஒரு ஹதீஸையும் அறிவித்திருக்கமாட்டேன். பின்பு அவர்கள் அந்த இரு வசனங்களையும் ஓதினார்கள்.

தெளிவான அத்தாட்சிகளிலிருந்தும் நேர்வழியிலிருந்தம் நாம் இறக்கி வைத்துள்ளதை நாம் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னர் நிச்சயமாக மறைக்கின்றார்களே அத்தகையோர் அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றார்கள். தவ்பாச் செய்து, சீர்திருத்திக் கொண்டு, தெளிவாகவும் எடுத்துரைக்கின்றனரே அத்தகையோரைத் தவிர.

– அல்பகறா: 159, 160

அவர்கள் ஓதிய இரு வசனங்களும் இதுவேயாகும். தெளிவாகவே சத்தியத்தை மறைப்பவர்களின் நிலை எவ்வாறு அமையும் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.

இமாம் இப்னு அப்தில்பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: அமலை மறைப்பது வெற்றியாகும். அறிவை மறைப்பது அழிவாகும்.

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! அறிவைத்தேடும் பணியில் இருக்கும் நாங்கள் மேற்கூறப்பட்ட வஸிய்யத்களைக் கருத்திற்கொண்டு எமது பணியை நல்ல முறையில் தொடர அல்லாஹ் எமக்கு உதவி புரிவானாக!

தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்ஷிலாப்தீன்


நன்றி: salaf.co

2 comments

  1. அஸ்ஸலாமு அழைக்கும்

    சகாபாக்களின், விளக்கத்தை முதன்மையாக எடுத்து கொள்ள வேண்டும். இது சரி. ஆனால் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பது தவறு.

    இது மாணவர்களுக்கு சில அறிவுரைகள் என்ற தலைப்பின் கருத்துக்கு எதிரான என் கருத்து

    by RASOOL.

  2. jazakallahu khair! very good suggestions! these are the basic rules to be followed while searching deenul islam!
    when a person know which way to follow on the basis of quran and hadeeth is very important! indeed your guidance will be very helpful! thank you! May ALLAH reward you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *