உலகில் ஒரு முஸ்லிம் அடையக்கூடியவற்றில் மிகச்சிறந்தது கல்வியாகும். அதிலும் குறிப்பாக மார்க்க கல்வி. இஸ்லாம் இதற்கு ஏராளமான சிறப்புகளை வழங்கியுள்ளது. அதனை கற்பதை நம் மீது கடமையாகவும் ஆக்கியுள்ளது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உயர்வும் அந்தஸ்தும் கல்வியைக்கொண்டுதான்.
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் 58:11
ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், (கலீஃபா) உமர் (ரலி) அவர்களை உஸ்ஃபான் எனுமிடத்தில் சந்தித்தார்கள். (இக்காலகட்டத்தில்) உமர் (ரலி) அவர்கள் நாஃபிஉ (ரலி) அவர்களை மக்காவின் ஆளுநராக நியமித்திருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (நாஃபிஉ (ரலி) அவர்களிடம்) “நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கு (மக்கா)வாசிகளுக்கு எவரை ஆளுநராக ஆக்கினீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி) அவர்கள், “(அப்துர் ரஹ்மான்) இப்னு அப்ஸா (ரலி) அவர்களை” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “இப்னு அப்ஸா யார்?” எனக் கேட்டார்கள். நாஃபிஉ (ரலி) அவர்கள், “எங்களால் விடுதலை செய்யப்பட்ட எங்கள் (முன்னாள்) அடிமைகளில் ஒருவர்” என பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவர்களுக்கு ஒரு முன்னாள் அடிமையையா ஆட்சித் தலைவராக்கினீர்?” என்று கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி) அவர்கள், “அவர் (இப்னு அப்ஸா) இறை வேதத்தை அறிநதவர்; பாகப் பிரிவினைச் சட்டங்களை அறிந்தவர்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள் “அறிந்துகொள்க: அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான்; வேறு சிலரைத் தாழ்த்துகிறான்” என்று உங்கள் நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்ஸா வேத அறிவினால் மேன்மை பெற்றார்)” என்று சொன்னார்கள். நூல் ஸஹீஹ் முஸ்லிம் 1487
அடிமையாக இருந்தவர் மார்க்க கல்வியை கற்றதனால் அடைந்த சிறப்பை இச்செய்தி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
கல்வியில்லாதவர்கள் ஒரு போதும் கல்வியாளர்களின் சிறப்பை பெறமுடியாது.
அல்லாஹ் கூறுகிறான்
(நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”39:9
அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் கூறினார்கள்
‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். அறிவிப்பாளர் முஆவியா(ரலி) நூல்:ஸஹீஹுல் புஹாரி 71
கடந்த காலங்களைவிட கொள்கை குழப்பங்களும் நூதனசெயல்களும் பெருகிவிட்ட இக்கால கட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது குழப்பங்களிலிருந்து தப்பிப்பதற்கு அல்லாஹ்வின் பேருதவிக்கு அடுத்தபடியாக குர்ஆனையும் சுன்னாவையும் பற்றிப்பிடிப்பது முடியுமானவரை மார்க்க கல்வியை முறையாக கற்பதைத் தவிற வேறு வழியில்லை
அல்லாஹ் கூறுகிறான்
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.17:9
மார்க்க கல்வியைக் கற்பவர்களுக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹும் அவனது தூதரும் வாக்களித்துள்ளார்கள்
அபூ தர்தா அவர்கள் நபிﷺ அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள் கல்வியைத்தேடி யார் ஒரு வழியில் பயணிப்பானோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்குரிய வழியை இலகுவாக்குவான் கல்விதேடும் மாணவனுக்காக மலாயிகா மாணவனின் மீதுள்ள பொருத்தத்தால் தங்களது இறக்கைகளை விரித்து வைக்கிறார்கள் நிச்சயமாக ஒரு கல்வியாளருக்காக வானங்களில் இருப்பவர்களும் பூமியில் உள்ளோர்களும் நீரில் உள்ள மீன்களும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்புதேடுகிறது வணக்கசாலியை விட ஆலிமின் சிறப்பானது ஏனைய நட்சத்திரங்களை விட சந்திரனின் சிறப்பை போன்றதாகும் நிச்சயமக உலமாக்கள் நபிமார்களின் வாரிசாவார்கள் நிச்சயமாக நபிமார்கள் தீனாரையோ,திர்ஹமையோ விட்டுச்செல்லவில்லை மாறாக அவர்கள் கல்வியைத்தான் விட்டுச்சென்றார்கள் யார் அதனை எடுத்துக்கொள்வாரோ அவர் பாக்கியமிக்க பங்கை எடுத்துக்கொண்டார் .நூல் சுனன் அபீதாவூத்3641,சுனனுத்திர்மிதி 2682
கல்வி கற்பவர் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான சில உபதேசங்கள்
முதலாவதாக இஹ்லாஸ் உளத்தூய்மை
நமது செயல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்வதற்கான முதன்மையான அடிப்படை உளத்தூய்மையாகும் அதிலும் குறிப்பாக கல்வியைத்தேடும் மாணவன் உளத்தூய்மையோடு இருக்கவேண்டும் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகக் கல்வி கற்கவேண்டும் முகஸ்துதிக்காகவோ, பெயருக்காவோ கல்வியைத்தேடக்கூடாது
அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், அதில் ஒருவர் …
கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)”அறிஞர்” என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “குர்ஆன் அறிஞர்” என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார். நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 3865
உளத்தூய்மையுடன் கல்வி கற்காவிட்டால் அக்கல்வி நமக்கு கேடாக விளையும் என்பதையே இந்த நபிமொழி சுட்டிக்காட்டுகிறது எனவே கல்வி தேடும் மாணவன் அவனது நிய்யத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
ஏனெனில் கல்வி கற்கும் மாணவனுக்கு நிறைய குழப்பங்களும் ஷைத்தானிய ஊசலாட்டங்களும் இருக்கும் கல்வியை கற்பதை விட்டு அவனை திசைத்திருப்ப அவன் முயற்சித்துக்கொண்டே இருப்பான் அது போன்ற நேரங்களில் நமது நிய்யத்தை புதுப்பித்துக்கொண்டு ஷைத்தானை விட்டு பாதுகாவல் தேடவேண்டும்.
இரண்டாவதாக: பாவங்களை விட்டு விலகியிருக்க வேண்டும்
பாவங்கள் ஒரு மனிதனை அல்லாஹ்வை விட்டு தூரமாக்கி ஷைத்தானின் பக்கம் நெருக்கிவைக்கும் செயலாகும் பாவங்கள் செய்பவனின் உள்ளம் இருண்டுவிடுவதால் அத்தகைய உள்ளத்திற்கு வஹியின் ஒளி கிடைக்காது கல்வி என்பது அல்லாஹ்வை அஞ்சி பாவங்களை விட்டு விலகியிருப்போருக்குத்தான் கிடைக்கும்
அல்லாஹ் கூறுகிறான்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் அவன் உங்களுக்கு கல்வியை கற்றுத்தருவான் 2:282
இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள்
நான் என் ஆசிரியர் வகீஃ அவர்களிடம் என் மனனகுறைப்பட்டைப் பற்றி முறையிட்டேன் அதற்கு அவர் எனக்கு பாவங்களை விட்டு விடுமாறு வழிகாட்டினார். மேலும் அவர் கூறினார் நிச்சயமாக கல்வியென்பது ஒளியாகும் அல்லாஹ்வின் ஒளி பாவிகளுக்கு வழங்கப்படாது
பாவங்களை விட்டு விலகி அதிகமாக பாவமன்னிப்புக்கோரவேண்டும் திக்ருகளை அதிகமாக கடைபிடிக்கவேண்டும்
மூன்றாவதாக: பெருமையை அடிப்பதை தவிற்க வேண்டும்
கல்வி கற்பவர்கள் ஷைத்தானுக்கு இடம் கொடுக்கக்கூடாது மற்றவர்களை விட நான் சிறந்தவன் என்பது ஷைத்தானின் பண்பாகும் அத்தகைய பெருமை குணத்தை விட்டு ஒரு மாணவன் விலகியிருக்க வேண்டும்
நபிﷺ அவர்கள் கூறினார்கள் யாருடைய உள்ளத்தில் அணுஅளவு பெருமையுள்ளதோ அவர் சொர்க்கம் செல்ல மாட்டார் அப்போது ஒரு மனிதன் அல்லாஹ்வின் தூதர் அவர்களே ஒரு மனிதன் தனது ஆடையும் செருப்பும் அழகாக இருப்பதை விரும்புகிறார் இது பெருமையாகுமா? என்று கேட்டார் அதற்கு நபிﷺ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அழகை விரும்புகிறான் பெருமை என்பது ஆணவத்துடன் சத்தியத்தை மறுப்பதும் பிறரை இழிவாக கருதுவதும் தான் என்று கூறினார்கள் .அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 147
நான்காவதாக: மிக முக்கியமானதிலிருந்து துவங்கவேண்டும்
கல்வியை கற்பதில் மாணவன் எதற்கு முன்னுரிமைக்கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கவேண்டும் மார்க்கத்தை கற்க விரும்பும் ஒருவர் முதலில் குர்ஆனை கற்க வேண்டும் அதன் பின்னர் ஹதீஸை படிக்க வேண்டும்
அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சமஅளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அவருடைய அனுமதியின்றி அமர வேண்டாம்.
இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் :ஸஹீஹ் முஸ்லிம் 1192
அதே போன்று சரியான அகீதாவை குர்ஆன், சுன்னா மற்றும் ஸலஃபு ஸாலிஹீன் களின் புரிதலின் அடிப்படையில் கற்றுக்கொள்ளவேண்டும் அகீதா என்பது மார்க்கத்தில் தலையான விஷயமாகும். நபி அவர்கள் தமது அழைப்புப்பணியின் ஆரம்ப காலகட்டத்தில் தௌஹீதைத்தான் முதன்மையாக போதித்தார்கள் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள் என்றார்கள் இன்னும் ஷிர்க்கைப்பற்றி அதிகமாக எச்சரித்தார்கள்
அல்லாஹ் கூறூகிறான்
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை ஒருபோதும் மன்னிக்கமாட்டான்; இதற்கு கீழ் நிலையில் உள்ள பாவத்தை, தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.4:48
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபிﷺஅவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்‘ என்றார்கள்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 7372
ஐந்தாவதாக: படிப்படியாக கற்பது
மாணவர்கள் கல்வி பயிலும் போது படிப்படியாக கற்க வேண்டும் ஆரம்பத்தில் சிறிய எளிமையான நூலை படிக்க வேண்டும் அதன் பின்னர் பெரிய நூல்களை வாசிக்கவேண்டும்
ஆறாவதாக: அறிஞரிடம் பாடம் பயில்வது
தங்களிடம் தகுதியான உலமாக்கள் இருக்கும் போது அவர்களிடம் கல்வி பயிலவேண்டும் நல்ல உலமாக்கள் தங்களுக்கு மத்தியில் இல்லையெனில் நல்ல சிறந்த நூல்களின் துணையைக்கொண்டு கல்வி கற்கவேண்டும்
ஏழாவதாக :விடாமுயற்சி
கல்விகற்க விரும்புவோர்கள் பலர் ஆரம்ப கட்டத்தில் உற்சாகமாக இருப்பார்கள் பின்னர் அவர்களுக்கு தோய்வு ஏற்பட்டு ஆர்வம் குன்றி கல்வியில் பின் தங்கிவிடுகிறார்கள் .கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்கள் விடாமுயற்சியை கடைபிடிக்க வேண்டும் விடாமுயற்சியின் மூலம் தான் நமது இலக்கை அடையமுடியும் அரபியில் கூறுவார்கள் யார் முயற்சிப்பாரோ அவர் வெற்றி அடைவார்
அல்லாஹ் கூறுகிறான்
இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.53:39
எட்டாவதாக : உலமாக்கள் மீது வெறுப்பு கொள்வதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பது
முஸ்லிமிடத்தில் மார்க்கக் கல்வியும் அறிவும் அதிகரிக்கும் போது அவரது ஈமானும் இறையச்சமும் அதிகரிக்கவேண்டும் கல்வியினால் அவர் பயனடைந்தார் என்பதற்கு இது தான் சான்றாகும் ஒரு மனிதனிடம் ஈமான் அதிகரித்து விட்டால் அவரிடம் இஸ்லாமிய சகோதரத்துவமும் முஸ்லிம் சகோதரர்கள் மீது அன்பும் ,நேசமும் அதிகரிக்கும்
அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்யவேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ,அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். அறிவிப்பாளர் ,அபூஹுரைரா (ரலி) அவர்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 5010
முஸ்லிம்கள் அனைவரும் பரஸ்பரம் நேசிக்கக்கூடிய சகோதரர்களாக உளத்தூய்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும் தங்களுடைய சகோதரர்களான அறிஞ்ர்களிடம் எதாவது தவறுகளையோ தடுமாற்றங்களையோ கண்டால் அதை மறைக்கவேண்டும் இன்னும் அதற்கு நியாயமான காரணங்களை தேடவேண்டும் அத்துடன் அதனை மக்களுக்கு மத்தியில் பரப்பி சந்தோஷமடையக்கூடாது மாறாக உலமாக்களின் மாமிசத்தை உண்பது விஷத்தை உண்பதாகும் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் இன்னும் அல்லாஹ்வின் தூதரைத்தவிற வேறு யாரும் தவறுகளுக்கு அப்பார்ப்பட்டவர்கள் அல்ல என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் .
ஒன்பதாவதாக: இபாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்
கல்வி பயிலும் மாணவன் இபாதத் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இபாதத் தான் ஒரு மனிதனை பண்படுத்தும் தீய செயல்களை விட்டு அவனை தடுக்கும்
அல்லாஹ் கூறுகிறான்
நிச்சயமாக தொழுகை மானக்கேடான,அருவருக்கதக்க செயலைவிட்டும் தடுக்கும் 29:45
கல்வி நம்மை நற்செயல் செய்ய தூண்டவேண்டும், இபாதத் செய்ய தூண்டவேண்டும் இன்னும் இறையச்சம்,பணிவு ஆகிய பண்புகளையும் வழங்க வேண்டும்
பத்தாவதாக : வெட்கப்படாதீர்கள்
மாணவன் கல்வி கற்க வெட்க்கப்படக்கூடாது தனக்கு தெரியாததை அறிந்தவர்களிடம் ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும் அதில் தயக்கம் காட்டக்கூடாது கேள்வி கேட்ப்பதனால் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்று வெட்க்கப்பட்டு கேட்க்காமல் இருந்துவிடக்கூடாது
இமாம் முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு) வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது எனக்கருதி) அகந்தை கொள்பவரும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக் கொள்ளமாட்டார். ஸஹீஹுல் புஹாரி