தற்போது ஜித்தாவில் நிலவுகின்ற தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக, மிதவை கடல்நீர் சுத்திகரிப்புக்கூடம் ஏப்ரல் இறுதியில் கரையை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்திக் கூடம் ஏற்கனவே செங்கடலை அடைந்திருந்தாலும், ஜித்தாவை நோக்கிய தன் பயணத்தில் தற்போது இருக்கிறது. இதுபோன்ற மற்றொரு உற்பத்திக்கூடமும் மே மாத இறுதியில் ஜித்தாவின் கடற்கரையை வந்தடையும். இதனால் ஜித்தாவின் தண்ணீர் தட்டுப்பாடு வெகுவாக நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு கப்பல்களும் மிகப்பெரிய டீசல் இயந்திரங்களின் மூலம் கடல்நீரை சுத்திகரிக்கும் உற்பத்திக்கூடங்களாகும். இவை இரண்டும் ஏழே மாதங்களில் உருவாக்கப்பட்டு சாதனைப்படைத்திருக்கிறன. சாதாரணமாக இதுபோன்ற மிதவை கடல்நீர் சுத்திகரிப்புக்கூடம் உருவாக சுமார் இரண்டு வருடங்கள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தினால், கிழக்கு ஜித்தாவின் அருகாமை பகுதிகளும், அல்-ரெய்ஹைலி மற்றும் அஸ்ஃபான் ஆகிய வடக்கு பகுதிகளும் தென்பகுதியிலுள்ள பழைய மக்கா ரோடு ஆகிய பகுதிகளும் பயன்பெறும்.
இவ்வருட இறுதியில் முடிவடைய இருக்கும் சுஐபா-3 தண்ணீர் சுத்திகரிப்பு திட்டத்தினால் ஜித்தாவின் தண்ணீர் தட்டுப்பாடு நிரந்தரமாக நீங்கும் என்று தெரிகிறது. இத்திட்டத்தினால் 1.3 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் கிடைக்கும். இவ்வுற்பத்திக்கூடம் 550,000 கியூபிக் மீட்டர் தண்ணீரை ஜித்தாவிற்கு வினியோகம் செய்யும்.
சுமார் 9.1 பில்லியன் சவூதி ரியால் மதிப்புள்ள சவுதி அரேபியாவின் முதல் “சுதந்திரமான தண்ணீர் மற்றும் மின்சாரத் திட்டம்” (Independent water and power project – IWPP) உருவாக நவம்பர் 2005-ல் சவூதி மற்றும் மலேசிய தனியார் குழுமங்களுடன் சவூதி அமைச்சகம் ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இத்திட்டத்தின் பயனாக தினந்தோறும் 194 மில்லியன் பீப்பாய்கள் தண்ணீரும் 900 மெகா வாட்ஸ் மின்சாரமும் கிடைக்கும். இத்திட்டத்தின் முதல் பிரிவு அக்டோபர் 13-ல் (2008) செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியா அரசாங்கம் “தேசிய நீர் நிறுவனத்தை” 22 பில்லியன் சவுதி ரியால் செலவில் தொடங்கியது. இத்திட்டமானது நிலத்தடி நீர், குடிநீர் வினியோகம், மற்றும் கழிவு நீர் பகுப்புத் திட்டம் ஆகியவற்றிற்கு வர்த்தக ரீதியாயாக அனைத்து வகையில் சேவையாற்றி வருகிறது.
தற்போது அமைச்சகம் தனியார் மயமாக்கல் பற்றி கலந்தாலோசித்து ரியாத், மதினா, ஜித்தா, தம்மாம், அல்கோபர் ஆகிய நகரங்களில் சர்வே செய்து கொண்டிருக்கிறது. முதல் முதலாக தனியார் மயமாக்கல் நாட்டின் 50 சதவீதம் தண்ணீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை உள்ளடக்கிய மேற்கூறிய ஐந்து நகரங்களில் தொடங்கும். இதில் முதலாவதாக சவூதியின் தலைநகரமான ரியாத்திலிருந்து தொடங்கி வைக்கப்படும்.
இவ்வகையில் உருவாகும் புதிய நீர் நிறுவனம், தகுதி சார்ந்த மாற்றங்களை நாட்டின் தண்ணீர் உற்பத்தி மற்றும் வினியோக முறையில் காட்டும் என்று எதிபார்க்கப்படுகிறது. உலகிலேயே அதிக அளவு கடல்நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவது சவூதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரை உருவாக உதவியது: அரப் நியூஸ்