Featured Posts

தள்ளிப் போட்டது போதும்!

Articleசில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமையிழந்து வேகமாக கடந்துச் செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்; ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல! கடந்த காலத்தை புறட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு பிறகு செய்யாமலே போன பல காரியங்கள் நினைவுக்கு வரும். இப்படி தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டே நாம் வாழ்வின் பெரும்பகுதியை செலவளித்து விட்டோம். கடந்து போன அக்காலக் கட்டத்தில் நாம் நமது மறுமை வாழ்விற்காக சேகரித்துக் கொண்டது மிக சொற்பமாகத்தான் இருக்கும்!

காலத்தின் மீது சத்தியமாக!
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர! (அவர்கள் நஷ்டத்திலில்லை!)
– (குர்ஆன் 103: 1-3)

திருமறையின் இந்தச் சின்னஞ்சிறு அத்தியாயம், ஒரு பேருண்மையை பறைசாற்றுகிறது. ஒவ்வொரு வினாடியும் காலம் கழிந்து கொண்டே இருக்கிறது. அதோடு சேர்ந்து நம் வாழ்வும்தான்! இதை பெரும்பாலும் நாம் உணர்வதில்லை! மாறாக, யாரெல்லாம் நற்காரியங்களைச் செய்து நன்மைகளை தமது கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்களோ, அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள். காலத்தை தம் கைவசப் படுத்தியவர்கள்!

ஒரு நல்ல செயலை, ஒரு நல்ல சொல்லை, ‘அப்புறம் செய்யலாம்’ ‘அப்புறம் சொல்லலாம்’ என நாம் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால், அந்த ‘அப்புறம்’ வராமலே போய்விடலாம். கானல் நீரைப் போல நம் கண்ணுக்குத் தெரிந்து பின் காணாமல் போய் விடலாம்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

என்னை வளைத்துப் பிடித்(து அணைத்)தவர்களாக அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்:

இவ்வுலகில் ஒரு நாடோடியைப் போல அல்லது வழிப்போக்கனைப் போல வாழப் பழகிக் கொள். மண்ணறைக்குச் சென்று விட்டவர்களின் நினைவை மனதில் இருத்திக் கொள். காலையில் எழும்போது மாலை வரை (உயிரோடு) இருப்போம் என்று உறுதி கொள்ளாதே! மாலையை அடைந்தால் (மறுநாள்) காலை வரை இருப்போம் என்றும் உறுதி கொள்ளாதே! நோயுறுமுன் உன் உடல் நலத்தைப் பயன் படுத்திக் கொள்; மரணம் வருமுன் உன் வாழ்வைப் பயன் படுத்திக் கொள்.அப்துல்லாஹ்! நாளைக்கு உனது பெயர் என்னவாயிருக்கும் என்று உனக்குத் தெரியாது (அப்துல்லாஹ்வா மய்யித்தா என்று).அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இபுனு உமர், பதிவு: திர்மிதீ 2255

நம்மிடம் ஒரு மூட்டை விதை நெல்லும் அதை பயிரிட வளமான நிலமும் கொடுக்கப் பட்டால் நாம் என்ன செய்வோம்? நம் வருங்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு அந்த விதை நெல்லை விதைத்து அதன் விளைச்சலை அறுவடை செய்வதைத்தான் விரும்புவோம். அப்படி இல்லாமல் அந்த விதை நெல்லை அலட்சியமாக தூக்கி எறிந்தால் பிற்காலத்தில் கைசேதமடையப் போவது நாம்தானே!

நம் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடமும் ஒரு விதை நெல்லைப் போன்றதே! அதை எவ்வகையில் விதைத்தால் மறுமை என்னும் பிற்காலத்தில் நன்மைகளை அறுவடை செய்யலாம் என்பதையே இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறி நமக்கு விளக்குகிறது.

நமக்குள் தோன்றும் தீய எண்ணங்களையும் வீணான செயல்களையும் கடினமான வார்த்தைகளையும் வேண்டுமானால் இன்னொரு நாளைக்காக தள்ளிப் போடுவோம். இதற்கான ‘இன்னொரு நாள்’ வராமலே போனால் கூட சரிதான்! ஆனால், நமது நல்ல எண்ணங்கள், செயல்படுத்த வேண்டிய நல்ல காரியங்கள், அன்பை வெளிப்படுத்தும் சொற்கள் மற்றும் செயல்கள், இவற்றை தள்ளிப் போட்டதெல்லாம் போதும்! இவற்றை காலம் உள்ள போதே, இன்றே, இப்பொழுதே நிறைவேற்றுங்கள், இன்ஷா அல்லாஹ்!

2 comments

  1. very nice ariurai, but I can’t do. I lost my time. Good for all others not for me.

  2. assalamu alaikum,

    the article was super, good example used for explanation, i apriciate the authour ibnu Basheer may Allah accept his good deeds ameen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *