Featured Posts

பூவையருக்கு

Articleஎனதன்பிற்குரிய முஸ்லிம் சகோதரிகளே!

(ஒரு முஸ்லிம் பெண்மணியின் சரித்திரத்தை இங்கு கவனியுங்கள்!)

அவள் இறையச்சமுள்ள ஒரு பெண். நன்மையை விரும்பி அல்லாஹ்வின் நினைவில் திளைத்திருப்பவள். அவள் தனது நாவிலிருந்து எந்த தீய வார்த்தையையும் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டாள். அவள் நரகத்தை நனைத்தால் அச்சத்தால்நடுங்கிவிடுவாள். அந்நரகைவிட்டும்தன்னை காப்பாற்ற அவளது இரு கரங்களும் அல்லாஹ்வின்பால் உயர்ந்துவிடும்.

அவள் சுவர்க்கத்தை நினைத்தால் அதில் விருப்பம் ஏற்பட்டுவிடும். அந்த இன்பம் நிறைந்த சுவர்க்கத்தில் தானும் ஒருவளாக ஆகிவிடுவதற்காக பிரார்த்தனை செய்வாள். அவள் மனிதர்களோடு நல்லமுறையில் பழககக்கூடியவளாக இருந்தாள். அவள் மனிதர்களை விரும்புவாள். மனிதர்களும் அவளுடன் அவ்வாறே பழகக்கூடியவர்களாக இருந்தனர்.

இச்சிறந்த பண்புகளைக்கொண்ட இப்பெண்ணுக்கு திடீரென ஒருநாள் தனது காலில் கடுமையான நோவை உணர்ந்தாள். அதற்காக எண்ணெய் மற்றும் அதுபோன்ற மருந்துகளை பயன்படுத்தினாள். எனினும் நோவு அதிகரித்துக் கொண்டே சென்றது. பல வைத்தியசாலைகளுக்கு சென்றும் நோயை குணப்படுத்த முடியவில்லை. பின்பு தனது கணவருடன் இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனுக்குச் சென்று அங்குள்ள உயர்தரமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்குப்பின் இரத்தத்தில் மாற்றம் இருப்பதாக வைத்தியர்கள் கண்டு பிடித்து அதற்கான அடிப்படைக்காரணம் என்ன வென்பதை ஆராய்ந்த போது அவளுடைய கால் புற்று நோயால் தாக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்கள். அந்நோய் உடலின் எல்லா பாகங்களிலும் பரவாமல் இருப்பதற்காக காலில் பெரும்பகுதி முழுமையாக நீக்கப்படவேண்டுமென தீர்மானித்தனர்.

சத்திர சிகிச்சை அறையில் அப்பெண்மணி அல்லாஹ்வின் விதியை ஏற்றுக்கொண்டு, அவளது நாவு அல்லாஹ்வை ஞாபகப்படுத்தி உள்ளச்சத்துடன் அவனிடம் கெஞ்சி பிரார்த்தித்துக் கொண்டிருந்தது.

இதோ வைத்தியர்கள் வருகின்றனர். தீர்மானித்தபடி காலை களட்டுவதற்கு ஆயத்தமாகின்றனர். இதோ! ஆங்கோர் அதிசயம்! அல்லாஹ்வின் அருள் அங்கு விரைகின்றது. காலை களட்டுவதற்காக பயன்படுத்துவதற்காக எடுத்த கருவி திடீரென உடைகின்றது. வைத்தியர்கள் அதிர்ச்சியடைகின்றனர். மீண்டும் புதிய கருவியை எடுக்கின்றார்கள். அதுவும் உடைகின்றது. ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம்! இது அந்த வைத்திய சாலை வரலாற்றில் நடந்த முதல் நிகழ்வாகும். வைத்தியர்களின் முகங்களில் பதட்டம் தென்படவே அவர்களில் பெரியவர் அவர்களை அழைத்து சற்று தூரமாகி காலை களட்டாமல் நோவு உள்ள இடத்தில் மாத்திரம் சத்திர சிகிச்சை செய்வதென முடிவு செய்கின்றனர். சத்திர சிகரிச்சை செய்யும்போது அங்கும் ஓர் அதிசயம்! அதாவது காலினுள் துர்நாற்றமுள்ள சிறிய பஞ்சை வைத்தியர்கள் நிதர்சனமாக காண்கின்றனர். சிறிய சத்திர சிகிச்சையின் பின் அவ்விடத்தை சுத்தம் செய்து அவர்களின் வேலையை முடித்துக் கொண்டனர். அப்பெண்மணி பூரணமாக குணமடைகின்றாள். ஆதன்பின் அப்பெண்மணி எவ்வித நோவையும் உணரவில்லை. ஆச்சரியம் நீங்காத நிலையிலிருக்கும் அவ்வைத்தியர்கள் அப்பெண்மணியின் கணவரை அழைத்து அவளது கணவரிடம் உங்கள் மனைவிக்கு ஏற்கெனவே ஏதாவது சத்திர சிகிச்சை குறிப்பிட்ட இடத்தில் நடந்ததா? எனக்கேட்டனர். அதற்கு அவர் நீண்டநாட்களுக்கு முன் ஒரு சிறிய வீதி விபத்திற்குள்ளாகி அவ்விடத்தில் பெரிய காயம் ஏற்பட்டது என்று கூறினார். இதனை அறிந்த அவ்வைத்தியர்கள் நிச்சயமாக இது இறைவனுடைய விஷேச கருணை என ஒருமித்துக் கூறினர்.

அல்லாஹ்வின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்த அப்பெண்மணி சந்தோஷம் நிறைந்தவளாகவும், அல்லாஹ்வை புகழ்தவளாகவும் (தன் கணவருடன் நாடு) திரும்பினாள்

என் இனிய இஸ்லாமிய சகோதரிகளே!
இறையச்சமுள்ள இப்பெண்மணியின் சம்பவம் ஒரு முன்மாதிரியாகும். அல்லாஹ்வின் கட்டளைகளை பற்றிப்பிடித்து ஏனையவர்களின் திருப்தியைவிட அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் நாடக்கூடிய அவனது நேசர்களுக்குரிய மட்டில்லா நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

அவர்களின் உள்ளங்கள் அவனது நேசத்தால் நிறைந்திருக்கும். அதனால் அல்லாஹ்வையே அவர்கள் இடைவிடாது ஞபகப்படுத்திக் கொண்டிருப்பர். இறைநினைவு அவர்களது இதய கீதமாகிவிடும். அவர்களின் நாவு அவனை துதிப்பதிலிருந்து சோர்வடையாது. முற்றாக அதுவே அவர்கள் இன்பம் காணுவார்கள். அவனுடைய கட்டளைகளை ஆசையுடன் வரவேற்பார்கள். அவனது சட்டதிட்டங்களை மிகவும் பிரியத்துடன் நிறைவேற்றுவார்கள். இவர்களை அல்லாஹ் என்றும் கைவிடுவதில்லை. எனினும் இவர்களுக்கு அவன் உதவியையும், பாதுகாப்பையும் வழங்குகின்றான். இவர்களுக்கு ஏற்படுகின்ற தீங்குகளை அவனது வல்லமையினால் தடுத்துவிடுகின்றான். மேலும் அவர்களுக்கு அவனது பொருத்தத்தை அருளி அவனது சுவர்க்கத்தையும் அருளுகின்றான்.

நேசத்திற்குரிய என் இனிய முஸ்லிம் சகோதரியே!
இவ்வுலக வாழ்வில் மனிதன் தன் உடல் பலத்தினாலும், அழிந்துவிடும் செல்வத்தினாலும் அகம்பாவம் கொண்டு தன்னை மனிதர்களிளெல்லாம் மிகவும் பலசாலியாகவும், துணிவுள்ளவனாகவும், பிறரிடம் தேவையற்றவனாகவும், தானே பெரிய கொடை வள்ளளாகவும் எண்ணிக் கொண்டிருக்கின்றான். எனினும் கால ஓட்டத்தில் சிக்குண்டு அவன் செல்வம் குறைந்து, அதிகாரம் நீங்கி, மரியாதை இழந்து, உடல் நலம் குன்றி, கஸ்டம் ஏற்படுகின்றபோது சிறு குழந்தை தனது தந்தையை தேடுவதுபோல் அவன் மனிதனின் உதவியை தேடி, அவர்களது அன்பை பெற நாடுகின்றான்.

நிச்சயமாக மனிதன் அல்லாஹ்வின்பால் சாராமல், அவன் பக்கம் சேராமல் அவன்பால் தங்கசமடையாமல் மனிதனாக முடியாது. மிருகமாகவே வாழ்கின்றான். தன்னுடைய மனோ இச்சையை பின்பற்றி மனம்போன போக்கில் வாழ்கின்றான். ஆனால் உண்மையான ஒரு முஸ்லிம் இதற்கு மாற்றமாக உயர்வான மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு தன் காரியங்களை முன்னெடுத்துச் செல்கின்றான். இதனால் மனிதர்களுக்கு நன்மையை விரும்புகின்றான், தீமையை வெறுக்கின்றான், இல்லார்க்கு இரங்குவதில் முந்திக்கொள்கின்றான், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிபுரிவதற்கு தன்னையே அற்பணிக்கின்றான்.

நேசமுள்ள என் இனிய சகோதரியே!
அல்லாஹ்வுடன் தனது உள்ளத்தை தொடர்புபடுத்தி அவனுடைய கட்டளையை தனது வாழ்க்கையில் நறைமுறைப் படுத்துவதுடன், அவனது கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிமான ஆண், பெண் இருவருக்கும் கிடைக்கின்ற சிறப்பம்சம் என்னவெனில் உளச்சாந்தியும், மன நிம்மதியுமாகும். எச்சந்தர்ப்பத்திலும் அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாகவே இருப்பர். ஏதேனும் அவர்களுக்கு நன்மை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மதிமயங்கி விட மாட்டார்கள். அவர்கள் எதையேனும் இழந்துவிட்டால்அதற்காக அவர்கள் கலங்கவும் மாட்டார்கள். சில நேரங்க ளில் நலவிற்குப்பின் இழப்பு வரலாம். சிலவேளை இழப்பிற்குப்பின் நலவு வரலாம் என்று தங்களது மனதை தேற்றிக்கொள்வார்கள். இதைத்தான் அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம். ஆனால் அது உங்களுக்கு நன்மையாக இருக்கும். ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம். ஆனால் அது உங்களுக்கு தீமையாக இருக்கும். இவற்றையெல்லாம் அல்லாஹ் அறிவான் நீங்கள் அறியமா ட்டீர்கள். (அல் பகறா: 2 : 216)

இவ்வுலகத்தின் ஆசாபாசங்கள் அவர்களை மயக்கிவிடாது. ஆவர்கள் உலக இன்பங்களில் அளவு கடந்து மூழ்கிவிட மாட்டார்கள். அளவோடு நின்றுகொள்வார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் உனக்கு கொடுத்த செல்வத்திலிருந்து மறுமை வீட்டை தேடிக்கொள்! எனினும் இவ்வுலகத்தில் உனக்கு விதித்திருப்பதை மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதை செய்திருப்பதை போல் நீயும் நல்லதை செய்! பூமியில் குழப்பம் செய்யவிரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல் கஸஸ்: 28 : 77)

நிச்சயமாக இவ்வுலகம் நிரந்தரமற்றது, அழியக் கூடியது. அதில் கஸ்டங்களும், நஸ்டங்களும் நிறைந்திருக்கின்றது. இதில் ஒன்றை மனிதன் இழப்பதனால் துக்கமடையவோ, சந்தோஷமடையவோ தேவையில்லை. ஏனெனில் இவ்வுலகம் மறுவுலகத்தோடு ஒப்பிட முடியாத ஒன்றாக இருக்கின்றது. காரணம்: மறுவுலக வாழ்வு நிரந்தரமானதும், சுபீட்சமானதுமாகும். அதில் எந்த கண்களும் கண்டிராத, எந்த காதுகளும் கேட்டிராத, எந்த இதயத்தாலும் உணரமுடியாத இன்பங்கள், உண்மையான இறையச்சமுள்ள விசுவாசிகளான ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிரந்தரமாக உள்ளது என்று அவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

என் பாசத்திற்குரிய சகோதரியே!
இவ்வுலக வாழ்வு கஷ்ட நஷ்டங்களிலிருந்து தெளிந்து எவ்வித பிரச்சினையும் அற்றதாக உள்ளது. ஒருவாதத்திற்கு வைத்துக்கொள்வோம் ஆனால் மரணம் ஒன்று இருக்கின்றதல்லவா அதனை ஞாபகப்படுத்துவது ஒரு சிரமம். அது இவ்வுலக இன்பத்தை கசப்பாக மாற்றிவிடுகின்றது. அதன் நீளத்தை சுருக்கமாக ஆக்கி விடுகின்றது அதன் தெளிவை கலக்கமாக மாற்றிவிடுகின்றது. இவையெல்லாம் ஒரு மனிதனுக்கு நீண்டஆயுள் ஒன்று இருக்கின்றதென்று வைத்துக் கொண்டால்தான் ஆனால் நிலமை அவ்வாறில்லையே. காலையில் விழித்த மனிதன் மாலைவரை இருப்பான் என்பது நிச்சயமில்லை மாலையை அடைந்த மனிதன் மாலையில் விழிப்பான் என்பது நிச்சயமில்லை.

உறவினர்களின் இழப்பு நண்பர்களின் இழப்பு உடலில் நோய் உறுப்புகளில் ஆபத்து உள்ளத்தில் கடுந்துடிப்பு ருசியான உணவைக்கூட உண்பதற்கு மறுப்பு மரணம் வந்துவிட்டதோ என்றஅச்சம் மேலும் அச்சத்தால் நோய்அதிகரிப்பு ஈற்றில் வெருட்சி குடிகொண்டநிலை போன்ற நிகழ்வுகள் கூடிகலையும் மேகம்போல் காட்சியளிக்கின்றது. மனிதனின் பலவீனத்திற்கு ஆச்சரியப்படாமலிருக்க முடியாது இவன் எவ்வளவு அற்பமான படைப்பு! நேற்றுத்தான் உடலுறுதி துளிர்விடும்அழகு பலம் நிறைந்தமேனி ஆகிய தோற்றத்தையுடைய வாலிபனாக இருந்தான்.

காலத்தின்கோலம் இவனை ஆட்டிப் படைக்கின்றது கூனி மடிகின்றான். முகமும் சுருங்கிவிடுகின்றது ஒருசிறிய சிரமமும் அவனை களைத்து விடச்செய்கின்றது ஒருஅற்ப வேலைகூட அவனை ஆட்டிப் படைக்கின்றது. மேலும் நேற்று அவனை உயர்ந்தமாடியில் வாழும் செல்வந்தனாகக் காண்கிறாய் ஆடம்பரமான காரில் ஏறிப்பறக்கின்றான். பெறுமதிவாய்ந்த விரிப்புகளில் அமர்கின்றான் ஆனால் காலம் மாறுகின்றது நாட்கள் பல கழிகின்றன எந்த குடிசையில் இருக்க மறுத்தனோ அக்குடிசையிலேயே இருக்க நேருகின்றது. எந்தவாகனத்தை இழிவாகக் கருதினானோ அந்தவாகனத்தில் ஏறிப்பிரயாணம் செய்ய நேருகின்றது உண்ணமுடியாததை உண்ணவும் உடுக்கமுடியாததை உடுக்கவும் நிலமை இவனை நிர்ப்பந்திக்கின்றது. எனவேதான் வாழ்க்கையின் இன்பமும் அதன் அழகும் சுபீட்சத்தின் உச்சகட்டமும் அதன் உயர்வும் அல்லாஹ்வை வழிப்படுவதிலேயே தங்கியுள்ளது. இதனை ஏற்படுத்திக் கொள்வதற்கு எவ்வத செலவோ கஷ்டமோ தேவையில்லை அல்லாஹ்வின் கட்டளைகளை கடைபிடித்து அதன்மீது உறுதியாக இருப்பதனாலும் அது நிறைவேறுகின்றது. இதனால் ஒருமனிதன் தனதுவாழ்வில உளஅமைதி பெற்றவனாகவும் மனநிம்மதி அடைந்தவனாகவும் முகமலர்ச்சியுடையவனாகவும் தனக்கு அநீதியிழைத்தவனுக்குக் கூட அன்புக்கரம் நீட்டக்கூடியவனாகவும் அவர்களது அத்தவறை மன்னிக்கக்கூடியவனாகவும் சிறியோருக்கு இரங்கக்கூடியவனாகவும் பெரியோருக்கு மரியாதை செய்பவனாகவும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் விருப்பமுள்ளவனாகவும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதில் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருப்பான். மேலும் அவன் அல்லாஹ்வின் கட்டளைகளில் ஒரு சிறுவிடயத்தில்கூட அலட்சியம் இல்லாமல் எல்லாவிசயத்தையும் ஆசையுடன் சரிவர நிறைவேற்றக்கூடியவனாக இருப்பான். வாழ்க்கையில் ஏதேனும் விரும்பத்தகாதகாரியங்கள் நிகழுமிடத்து அதனை பொறுமையுடனும் மனப்பொருத்தத்துடனும் தாராளமாக ஏற்றுக்கொள்வான் மரணத்தைகூட உலகத்தின் கஷ்டங்களிலிருந்து விடுதலையடைந்து நித்திய வீட்டைநோக்கிபயணம் செய்வதற்கு அரிய சந்தர்ப்பமாகக் கருதுவான்.

எனதினிய அன்புச்சகோதரியே!
இப்புத்தகத்தில் சில அறிவுரைகளை வைத்திருக்கின்றேன். அவற்றை நீர் கடைப்பிடிக்கும்போது உனது இவ்வுலக வாழ்வு கஸ்டத்திலிருந்து நிம்மதியின்பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின்பாலும் மாறிவிடும். அது மட்டுமல்ல. உனது வாழ்க்கைக்கு ஒரு புற்றுணர்வாக அவற்றை நீர் காண்பாய்! இப்புத்தகத்தை சீர்திருத்தத்திலே எனக்கு ஏற்பட்ட ஆசையும், அதற்காக கொடுக்கப்படும் நற்கூலியில் எனக்கு ஏற்பட்ட பேராசையும் இப்புத்தகத்தை எழுதுவதற்கு என்னை தூண்டியது. இதோ அப்பூக்கொத்துக்களை என் முன் வைக்கின்றேன். அதைப் படிப்பதற்கும், அதன்வழி நடப்பதற்கும் அல்லாஹ் உனக்கு நல்லருள் புரிவானாக!

பூவையருக்கு 50 அறிவுரைகள்

1.எனது இனிய இஸ்லாமிய சகோதரிகளே!
எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்!

அல்லாஹ் கூறுகின்றான்:-
தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அன்னிஸா:- 4 : 14)

உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுத்தரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் உனது பேச்சை பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
ஒவ்வொருவரின் வலது புறத்திலும், இடது புறத்திலும் அமர்ந்து (செயல்களை) எழுதும் இரு வானவர்கள் மனிதனிடம் இல்லாமல் எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை. (காஃப்:-50 : 17,18)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீர் ஓதுவீராக! (அதன்மூலம்) உயர்வீராக! இவ்வுலகில் நீர் திருத்தமாக ஓதியதுபோல் திருத்தமாக ஓதுவீராக! கடைசி வசனத்தை ஓதும்போது நீர் அடையும் இடம் உமது தங்குமிடமாகும். என்று குர்ஆனை மனனம் செய்தவரிடம் கூறப்படும். (திர்மிதி)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதன் தீங்கையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதன் தீங்கையும் எவருக்கு அல்லாஹ் பாதுகாக்கின்றானோ அவர் சுவர்க்கத்தில் நுழைவார் (திர்மிதி)

அல்லாஹ்வின் தூதரே! ஈடேற்றம் பெறுவது எவ்வாறு என்று கேட்டேன். அதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் நாவை தீங்கை விட்டும் தடுத்துக்கொள்! உன் வீடு விஸ்தீரணமாக இருக்கட்டும். உன் பிழைகளுக்காக அழுவீராக! எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரழி) ஆதாரம்: திர்மிதி)

2. அன்புச் சகோதரிகளே!
வாழ்வின் வழிகாட்டியான அல்குர்ஆனை தினமும் ஓதி அதை விளங்கி நிலைநிறுத்துவதோடு அதில் முடிந்தளவு சில அத்தியாயங்களையும் மனனம் செய்துகொள்ளுங்கள். அதன்மூலம் மறுமையில் மகத்தான நன்மையை பெற்று வெற்றி அடைவீர்கள்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
நீர் ஓதுவீராக! (அதன்மூலம்) உயர்வீராக! இவ்வுலகில் நீர் திருத்தமாக ஓதியதுபோல் திருத்தமாக ஓதுவீராக! கடைசி வசனத்தை ஓதும்போது நீர் அடையும் இடம் உமது தங்குமிடமாகும். என்று குர்ஆனை மனனம் செய்தவரிடம் கூறப்படும். (திர்மிதி)

3. அன்புச்சகோதரிகளே!
உங்கள் காதால் கேட்கும் அனைத்தையும் பிறரிடம் கூறிவிடாதீர்கள். அது சிலவேளை பொய்யாகவும் இருக்கலாம்.
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

தான் கேட்டது அனைத்தையும் அப்படியே பேசுவது ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமான ஆதாரமாகும். (முஸ்லிம்)

4. அன்புச்சகோதரிகளே!
பிறர் கண்களுக்கு தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணி பெருமைப்படாதீர்கள்.

நபிகளார் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதரே! எனது கணவர் எனக்கு வழங்காததையெல்லாம் அவர் வழங்குவதாக நான் கூறுகின்றேன். அதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- நமக்கு வழங்கப்படாத ஒன்றை யார் வழங்கப்பட்டதாக கூறுகின்றாரோ அவர் பொய்யான இரண்டு ஆடைகளை அணிந்தவர் போலாவார். (புஹாரி, முஸ்லிம்)

5. அன்புச்சகோதரிகளே!
அல்லாஹ்வின் திகர் ஒரு முஸ்லிமின் வாழ்வில் உடல், உள, ஆத்மீக ரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. எனவே நீங்கள் என்னிலையிலும், எப்போதும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னை நினைவுபடுத்தக்கூடிய நல்லடியார்களை பின்வருமாறு புகழ்ந்து கூறுகின்றான்.

நிச்சயமாக வானம்,பூமி ஆகியவற்றின் படைப்பிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப்புறங்கள் மீது (சாய்ந்த) நிலையிலும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கின்றார்கள். (ஆலு இம்ரான்:-3 : 190, 191)

நபிகளார் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளைகள் என்மீது அதிகமாகிவிட்டன. எனவே நான் வழக்கமாக கடைப்பிடித்துவர விஷேசமான ஒரு அமலை எனக்கு சொல்லித்தாருங்கள் எனக் கேட்டார்கள். அதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள் உன்னுடைய நாவு எப்பொழுதும் அல்லாஹ்வை திக்ர் செய்வதிலேயே திளைத்ததாக இருக்கவேண்டும் எனக் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா,இப்னுஹிப்பான்)

6. அன்புச்சகோதரிகளே!
நீர் பேச்த்தொடங்கினால் கர்வமாக, பெருமையாக, பேசுவதை தவிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பேசுவது நபிகளார் (ஸல்) அவர்களிடம் மிகவும் கோபத்திற்குரிய அம்சமாகும்.

நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில்அழகிய குணமுள்ளவர்கள் எனக்கு மிக நேசமானவர்களிலும், மறுமைநாளில் எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருப்பவர்களிலும் அடங்குவர். உங்களில் எனக்கு மிக வெறுப்பானவர்களும், மறுமைநாளில் என்னை விட்டும் தூரத்திலிருப்பவர்களும் உங்களில் அதிகமாக பேசுபவர்களும் தங்களின் பேச்சால் மக்களிடம் பெருமையடிப்பவர்களும், வாய்பிளந்திருப்பவர்களும் ஆவார்கள். அல்லாஹ்வின் தூதரே! வாய் பிளந்தோர் என்றால் யார்? என்று நபித்தோழர்கள் கேட்ட போது பெருமையடிப்பவர்கள் என நபிகளார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுஹிப்பான், தப்ரானி)

7. அன்புச்சகோதரிகளே!
அதிகம் சிரிக்காதவர்களாக,மௌனமாக,சிந்தனை மிக்கவர்களாக இருந்துகொள்ளுங்கள். நபிகளார் (ஸல்) அவர்களின் முன்மாதிரி உங்கள் வாழ்வில் பிரதிபலிக்கட்டும்.

நீங்கள் நபிகளார் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்களா? என நான் ஸமுராவின் மகன் ஜாபிர் (ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் எனக்கூறி நபிகளார் (ஸல்) அவர்கள் நீண்டநேரம் மௌனமாக இருப்பவர்களாகவும், குறைவாக சிரிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தோழர்கள் கவிதைகளை கூறியும், தங்களின் தனிப்பட்ட விரூப்பங்களை பற்றி கதைத்து சிரித்து மகிழ்வார்கள். சிலவேளைகளில் நபிகளார் (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூப்பார்கள். (முஸ்னத் அஹ்மத்)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் நல்லதை பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.(புஹாரி, முஸ்லிம், திர்மிதி)

8.அன்புச்சகோதரிகளே!
நீங்கள் எவரிடமாவது பேசும்போது அவர்களின் பேச்சை அசட்டை செய்யாது இடையில் துண்டிக்காது, மறுப்புத் தெரிவிக்காது நல்லமுறையில் கேட்டு அதற்கு தெளிவாக ஒழுங்கான முறையில் அழகிய பதிலை கூறுங்கள். அதுவே உங்களுக்கு அழகிய பண்பாகும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
உங்களில் சிறந்தவர் உங்களில் அழகிய குணமுடையவரே! (புஹாரி)

நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
தனது சகோதரனை சிரித்த முகத்துடன் பார்ப்பது உட்பட எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இலகுவாக, இழிவாக கருதிவிடாதே! (முஸ்லிம்)

9.அன்புச்சகோதரிகளே!
பிறர் கதைக்கும்போது அதைப்பார்த்து பரிகசிக்காதீர்கள். ஏனெனில் சிலர் பேசும்போது அவர்களின் பேச்சில் திக்கித்திக்கி பேசும் பழக்கம் இருக்கலாம். அல்லது அவர்களின் பேச்சில் குறைகள் இருக்கலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை பரிகாசம் செய்யவேண்டாம். (பரிகாசம்) செய்யப்பட்ட அவர்கள் (பரிகாசம்) செய்யும் இவர்களைவிட மிகச்சிறந்தவர்களாக இருக்கலாம். (அவ்வாறே) எந்தப்பெண்களும் மற்றப்பெண்களை (பரிகாசம்) செய்யவேண்டாம். (பரிகாசம்) செய்யப்பட்ட அவர்கள் (பரிகாசம்) செய்யும் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். (அல்ஹுஜ்ராத்:- 49 : 11)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனவான். எனவே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு அநீதி இழைக்கமாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை கைவிடமாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் பொய்யுரைக்க மாட்டான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை தாழ்த்திட மாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது என்று நபிகளார் (ஸல்) அவர்கள் மூன்றுமுறை தங்கள் நெஞ்சை தொட்டுக்காட்டினார்கள். ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதர முஸ்லிமை இழிவாக கருதுவது தீய செயலாகும். ஒரு முஸ்லிமின்மீது ஒரு சகோதர முஸ்லிமின் இரத்தமும், உடைமையும், கண்ணியமும் ஹராமாக்கப்பட்டுள்ளது. (அவற்றிற்கு ஊறு விழைவிக்கக்கூடிய எந்தச் செயலும் விலக்கப்பட்டதாகும். (முஸ்லிம்)

10. அன்புச்சகோதரிகளே!
அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் ஓதுவதை கேட்டால் அனைத்து பேச்சுக்களையும் விட்டுவிட்டு அதற்கு செவிசாய்க்கவும். ஏனெனில் இதுவே அவனது பேச்சிற்கு மதிப்பளித்து அவனது கட்டளைக்கு கீழ்படிவதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
குர்ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாக) கேளுங்கள், மௌனமாக இருங்கள். (அதனால் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள். (அல் அஃராப்:- 7 : 204)

11. அன்புச்சகோதரிகளே!
நீங்கள் எதையாவது பேசினால் சிந்தித்து பேசுங்கள்! மேலும் நீங்கள் பேசக்கூடிய வார்த்தை நன்மையானதாகவும், அல்லாஹ்வுடைய கோபத்தின்பால் இட்டுச்செல்லக்கூடிய தீமையான விடயங்களிலிருந்து தூரமானதாகவும், இருப்பது அவசியமாகும். எனவே நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு மகத்தான நன்மை உள்ளது.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஒரு வார்த்தை இறைதிருப்தியில் எவ்வளவு உயர்ந்த இடத்தை பெற்றுத்தரும் என்பதை அறியாமலேயே ஒரு அடியான் அவ்வார்த்தையை பேசுகின்றான். இவ்வார்த்தையின் காரணமாக அல்லாஹ் அவனது அந்தஸ்தை உயர்த்துகின்றான். மேலும் ஒரு வார்த்தையால் எந்தளவு அதிருப்தி ஏற்படும் என அறியாமலேயே பேசுகின்றான். அவ்வார்த்தையின் காரணமாக அவன் நரகத்தை அடைகின்றான். (புஹாரி)

நிச்சயமாக அடியான் சிலநேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய விஷயங்களின் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகின்றான். (எனினும்) அல்லாஹ் அதற்காக அவனது அந்த ஸ்த்துக்களை உயர்த்துகின்றான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசுகின்றான். அதனால் அவன் நரகில் வீழ்கின்றான். (புஹாரி)

நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம் என்னை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகை விட்டுத் தூரமாக்கும் ஒரு அமலை எனக்கு சொல்லித்தாருங்கள் என்றேன். அதற்கவர்கள் நீர் மாபெரும் விஷயத்தை கேட்டுவிட்டீர். எவருக்கு அதை அல்லாஹ் இலேசாக்கி வைக்கின்றானோ அவருக்கு அது இலகுவாகும். அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு எப்பொருளையும் இணையாக்காதிருப்பாயாக!, தொழுகையை நிலைநாட்டுவீராக! ஸகாத்தை வழங்குவீராக! ரமழானில் நோன்பு நோற்பீராக! இறையில்லமான கஃபாவை ஹஜ் செய்வீராக! எனக்கூறி பின்னர் கூறினார்கள: நன்மைகளின் வாயில்களை உங்களுக்கு நான் அறிவித்து தரட்டுமா? நோன்பு பாவங்களை தடுக்கும் கேடயமாகும். தண்ணீர் நெருப்பை அணைப்பதுபோல் அது பாவத்தை போக்கிவிடும். நடு இரவில் தஹஜ்ஜத் தொழுவதுமாகும். பின்னர் ததஜா பாஜினூபுஹும் என்று தொடங்கும் வசனத்திலிருந்து யஃமலூன் வரை ஓதினார்கள். பின்னர் நபிகளார் (ஸல்) அவர்கள் கருமங்களில் தலையானதையும், அதன் தூணையும், அதன் உச்சியையும் உமக்கு நாம் அறிவித்து தரட்டுமா? எனக்கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். அப்போது நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கருமங்களில் தலையானது இஸ்லாமாகும். அதன் தூண் தொழுகையாகும். அதன் உச்சி ஜிஹாதாகும். பின்னர் கூறினார்கள்: இவை அனைத்தையும் (ஒன்று சேர்த்துக் கொள்ளக்கூடிய) உறுதியான ஒரு விஷயத்தை உமக்கு அறிவிக்கட்டுமா? அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்று கூறினேன். அப்போது தங்கள் நாவை பிடித்து இதனை தடுத்துக் கொள்வீராக! எனக் கூறினார்கள். நாங்கள் பேசுவதைக் கொண்டும் பிடிக்கப்படுவோமா? எனக்கேட்டேன். அதற்கவர்கள் என்தாய் உன்னை இழக்கட்டுமாக! மக்களை முகங்குப்புற நரகில் வீழ்த்துவது அவர்களின் நாவின் விபரீதமாகும் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல்(ரழி) ஆதாரம்: திர்மிதி)

12. அன்புச்சகோதரிகளே!
உங்களது நாவு அல்லாஹ் உனக்களித்த மாபெரும் அருட்கொடையாகும். நன்மையை ஏவி, தீமையை தடுத்தல், நன்மையின்பால் மக்களை அழைத்தல் போன்ற நல்ல விஷயங்களுக்காக அதனை பயன்படுத்திக்கொள்!

அல்லாஹ் கூறுகின்றான்:-
தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கு இடையில் சமாதானம் ஏற்படுத்துவதுபற்றி அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அந்நிஸா:- 4 : 114)

13. அன்புச்சகோதரிகளே!
கல்வியை கற்றுக்கொள்வது சிறப்பான கண்ணியமான பாதையாகும். ஷிபா பிந்த் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் ஹப்ஸா (ரழி) அவர்களிடம் இருக்கும்போது நபிகளார் (ஸல்) அவர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் ருகையாவிற்கு எழுதுவதற்கு கற்றுக் கொடுக்கவில்லையா? எனக்கேட்டார்கள். (அஹ்மத்)

14. அன்புச்சகோதரிகளே!
கற்றுக்கொள்வது என்பது சான்றிதழ்களை பெறுவதும், பதவிகளை அடைவதும், தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதென்பதுமல்ல. மாறாக மார்க்க விஷயங்களை அறிவதும் அதிலிருந்து சட்டங்களை பெறுவதும், திருக்குர்ஆனை அழகாக, திருத்தமாக ஓதிப்பழகுவதுமாகும். எதுவரையெனில் தனது நாயனை பேணுதலாக வணங்கும் வரையிலாகும். மேலும் கல்வியை கற்றுக்கொள்வதற்கான நோக்கங்கள் சீரான பயிற்சிக்கான வழிகளை பெற்றுக் கொள்வதும், நபிகளார் (ஸல்) அவர்களினதும், அவர்களது அருமை தோழர்கள், மற்றும் இச்சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்த முன்வாழ்ந்த ஸஹாபாக்கள் போன்றவர்களுடைய வாழ்க்கையை வாழ்வில் முன்மாதிரியாக கொள்வதுமாகும். இதனால் பெண்கள் மகழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழமுடியும்.

15. உங்களின் சகோதரிகளில் எவரையாவது பரிகாசம் செய்தல், எள்ளி நகையாடுதல், இழிவாக கருதுதல் போன்ற தீய குணங்களைவிட்டும் உன்னை துஸரமாக்கிக்கொள்! கல்வியை கற்றுக்கொள்வதில் உன்னை உயர்வாகவும், மற்றவர்களை தாழ்வாகவும் எண்ணிவிடாதே! கல்வியை தேடும்போது பணிவாக நடந்துகொண்டால் கல்விப்படிகளில் நீ மேலும் முன்னேறுவாய். இவ்வாறில்லாமல் நீ தற்பெருமை கொள்வாயாயின் உனது கல்வி உனக்கு அழிவைத்தான் தேடித்தரும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
அறிஞர்களிடம் தர்க்கம் செய்வதற்காகவோ, மடையர்களிடம் பெருமை அடிப்பதற்காகவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்புவதற்காகவோ யாரேனும் கல்வி கற்றால் அவரை அல்லாஹ் நரகில் நுழைவிப்பான். (திர்மிதி)

16. அன்பின் சகோதரிகளே!
இசையுடன் கலந்த பாடல்கள், தீய பேச்சுக்கள் போன்றவற்றை விட்டும் உனது செவியை துய்மைப்படுத்திக்கொள்!

17. அன்பின் சகோதரிகளே!
நீங்கள் எல்லோரும் இஸ்லாமிய சகோதரிகள். எனவே உங்களின் ஆடை மார்க்கம் அனுமதித்த முறையில் மேனி வெளியே தெரியாதளவிற்கு தடிப்பமானதாக இருப்பது அவசியமாகும்.

18. பெண்கள் வெளியில் செல்லும்போதும், வீடு திரும்பும் போதும், வாகனத்தில் ஏறும்போதும், அதிலிருந்து வெளியேறும் போதும் மணிக்கட்டு, முகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கக்கூடிய ஆடைகளை அணியவேண்டும்.

சபை ஒழுங்கு

19. அன்புச்சகோதரிகளே!
ஆண்கள், பெண்கள் கலந்திருக்கக்கூடிய சபைகளுக்கு செல்லாமல் எச்சரிக்கையாக இருந்துகொள்! மேலும் நல்ல விஷயங்கள், மற்றும் மார்க்க சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய சபைகளில் கலந்துகொள்! அல்லாஹ் உன்னை பேணிப் பாதுகாப்பானாக!

20. அன்புச்சகோதரிகளே!
நீங்கள் தனிமையில் அல்லது உனது தோழிகளுடன் இருக்கும்போது அல்லாஹ்வை ஞாபகப்படுத்திக் கொள்! இதன்மூலம் அல்லாஹ்விடத்தில் நீங்கள் நன்மையையும், நற்வுலியையும் பெற்றுக்கொள்வீர்கள்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
அல்லாஹ்வை நினைவுகூறப்படாத சபையில் எவர் அமர்கின்றாரோ அவருக்கு (மறுமைநாளில்) அல்லாஹ்விடம் கைசேதமுள்ளது. மேலும் எவர் அல்லாஹ்வை நினைவு கூறாது சாய்ந்திருக்கக்கூடிய சபையில் சாய்ந்திருக்கின்றாரோ அவருக்கும் அல்லாஹ்விடத்தில் கைசேதமுள்ளது. (திர்மிதி)

நீங்கள் சபையை விட்டு வெளியேறும்போது ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக என்று கூறுவதற்கு மறந்து விடாதே! (திர்மிதி)

காரணம்:- அச்சபையில் நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் அல்லாஹ் உன்னை மன்னிப்பான்.

21. அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே!
நீங்கள் கலந்துகொள்ளக்கூடிய சபை அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிந்து அவனது தண்டணைக்கு அஞ்சக்கூடியதாகவும், புறம், கோள் போன்றவற்றை விட்டும் தூய்மையானதாகவும் இருக்கவேண்டும். ஏனெனில் இவை வெறுக்கத்தக்க குணங்களும் இழிவான பண்புகளுமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
விசுவசிகளே! உங்களில் சிலர் சிலரை புறம்பேச வேண்டாம். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரனின் மாமிசத்தை (அவர் செத்து) சவமாக இருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். (அல் ஹுஜ்ராத்:- 49 : 12)

22. சபையில் இருக்கக்கூடிய சகோதரிகளில் ஒருவர் தேவையற்ற அல்லது தவறான பேச்சுக்களை பேசினால் அவர்கள் சபையிலிருந்து வேளியேறிய பின் அவர்களிடம் மென்மையான அழகான முறையில் அவர்களுக்கு உபதேசம் செய்வது அவசியமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
(நபியே!) நீர் விவேகத்தை கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது நாயனின் வழியின் பக்கம் அழைப்பீராக!
(அந் நஹ்ல்:- 16: 125)

23. அன்புச்சகோதரிகளே!
நீங்கள் வீட்டில் சிறிய நூல்நிலையம் வைப்பதற்காக பயனுள்ள புத்தகங்களை சேகரிப்பதற்கு ஆர்வங்காட்டு. இதனால் குடும்பத்திலுள்ள அனைவரும் பயனடைவார்கள்.

24. பயனற்ற புத்தகங்களை வாசிப்பதில் உனது நேரத்தை வீணாக்காதே! மேலும் மோசமான சஞ்சிகைகள், இழிவான விஷயங்களை பிரசுரிக்கக்கூடிய, குழப்பத்தையும், இழிவான குணங்களை பரப்பக்கூடிய தீய வார்த்தைகளை படிக்காமல் இருப்பாயாக! இத்தீமைகளை உனது வீட்டில் நுழைய விடாமல் பாதுகாப்பாயாக!

25. உனது நூல் நிலையம் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யக்கூடியதாகவும் பல்வேறு தலைப்புக்களை ஆராயக்கூடியதாகவும் இருப்பது பயனுள்ள அம்சமாகும். எனவே முஸ்லிமான ஆண், பெண் இருவரும் தங்களின் மார்க்க சட்டங்கள், அதன் கொள்கை பற்றி அறிவதும், உலகில் நடக்கின்ற செய்திகளை பார்ப்பதும், முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூய பிரச்சினைகள், துன்பங்களை அறிவதும், தங்களையும், தங்களின் குடும்பத்தாரையும் சிறந்தமுறையில் வளர்த்துக்கொள்ளக்கூடிய சாதனங்களை பெற்றுக்கொள்வதும், முன்சென்ற நல்லோர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்து அவற்றை அறிவுரையாகவும், படிப்பினையாகவும் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

26. பயனுள்ள நூல்களை நீ கண்டால் அதை நீ மற்ற சகோதரிகளுக்கும் அறிமுகப்படுத்து! அதை வாசிப்பதற்கு அவர்களையும் தூண்டு! மேலும் உன்னிடம் மோசமான அல்லது விபரீதங்களை ஏற்படுத்தக்கூடிய ஏதாவது புத்தகங்களை நீ பெற்றுக்கொண்டால் அதன் தீமை பற்றி மற்ற சகோதரிகளுக்கும் உணர்த்துவதும், விளக்கிக் கூறுவதும் உன்மீது கடமையாகும்.

27. வாசிப்புப் பழக்கம் முக்கியமான ஒரு அம்சமாகும். எனவே அறிவைக் கூட்டக்கூடிய விஷயங்களை அறிந்துகொள்வதில் ஓய்வுநேரங்களை பயன்படுத்து! அல்லாஹ் உனக்கு உதவியளிப்பான்.

கடைத்தெருவிற்கு செல்லும்போது பெண்கள் பேணவேண்டிய ஒழுக்கங்கள்.

28. அன்புச்சகோதரிகளே!
உனது தேவைகளை நிறைவுசெய்யக்கூடிய ஒருவர் இருக்கும்போது நீ வெளியே செல்வதற்கு ஆசைப்படாதே! மேலும் நீ தனிமையில் வெளியே செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால் உன் தேவைகளை விரைவாக குறுகிய நேரத்திற்குள் நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பு!

29. கடைத்தெருவிற்கு செல்லும்போது மணம் பூசுவது, அலங்கரித்துக்கொள்வது, பிறர் பார்வையை தன்பக்கம் திருப்பக்கூடிய அழகிய ஆடைகளை அணிவது போன்றவற்றை விட்டும் எச்சரிக்கையாக இருந்துகொள்!

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எப்பெண்மணி நறுமணத்தை பூசிக்கொண்டு அடுத்தவர்கள் முகர்வதற்காக அங்கு செல்கின்றாளோ அப்பெண் விபச்சாரியாவாள்.
(திரிமிதி, நஸாயி)

உன் ஆடை, உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருப்பது அவசியமாகும்.

30. நீ கடைத்தெருவில் அல்லது பாதையில் செல்லும்போது அதிகம் திரும்பிப் பார்க்காதே! ஏனெனில் பார்வையினால் பல விபரீதமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. மேலும் தேவையில்லாமல் வியாபாரிகளுடன் அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்! ஏனெனில் அது வெட்கத்தை இல்லாமலாக்கி குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

31. நீ கடைத்தெருவில் அல்லது பாதையில் செல்லும்போது ஏதாவது தீமையை கண்டால் அதை கையால் தவிர்க்கவேண்டும். அததற்கும் முடியாவிட்டால் நாவால் தடுக்கவேண்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் வெறுத்துவிட வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் சிலர் சிலருக்கு உற்ற நண்பர்களாவார்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள், தீமையை விட்டும் தடுப்பார்கள். (அத் தவ்பா:- 9 : 71)

32. பெண்களில் சிலர் கடைத்தெருக்களுக்கு செல்வதை தங்களது பொழுதுபோக்காக எடுத்துக் கொள்கின்றார்கள். இவ்வகையை சேர்ந்த பெண்களாக நீங்கள் இருக்காமலிருப்பதற்கு நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன். இவ்வாறு செய்வதனால் அதிகமானவர்கள் குழப்பத்திற்குள்ளாவதோடு நேரத்தையும் வீணாக்குகின்றார்கள்.

33. அன்புச் சகோதரிகளே!
தயவு செய்து நீ உன்மீது இரக்கங்காட்டு! அதுபோன்று உன் கணவர் மீதும் இரக்கங்காட்டு! சந்தையில் ஒரு பகுதி உன்னுடைய வீட்டிற்குள் இருக்கவேண்டுமென ஆசைப்படாதே! எனவே உனக்கு எது தேவையோ அதை மாத்திரம் வாங்குவதற்கு பழகிக்கொள்!

34. அன்புச்சகோதரியே!
நீ அல்லாஹ்வின்பால் தேவையுடையவளாகவும், பலவீனமுள்ளவளாகவும் இருக்கின்றாய். எனவே நீ அவனிடம் பணிவாக கையேந்தி இம்மையிலும், மறுமையிலும் மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும் கேட்பாயாக! நீ அவனிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொள்வாய்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
நிச்சயமாக உங்கள் நாயன் (என்றுமே) உயிரோடிருப்பவனும், வாரி வழங்குபவனுமாவான். அடியான் அவனிடம் கையேந்தி பிரார்த்தித்தால் அவற்றை வெறுமையாக திருப்பி (அனுப்புவதற்கு) அவன் வெட்கப்படுகின்றான். (ஆதாரம்:- ஸுனன் இப்னுமாஜா)

மேலும் விரைவாக (பிரார்த்தனை) ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்று எண்ணாதே! எந்தவொரு அடியானும் தனது இரு கைகளையும் தனது அக்குள் தெரியுமளவிற்கு உயர்த்தி அல்லாஹ்விடத்தில் ஏதாவதொன்றை கேட்டு அவன் அவசரப்படாமல் இருந்தால் அல்லாஹ் அவன் கேட்டதை கொடுக்கின்றான். என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக்கேட்ட நபித்தோழர்கள் எவ்வாறு அவன் அவசரப்படுகின்றான்? எனக்கேட்டார்கள். அதற்கவர்கள் நான் அல்லாஹ்விடம் கேட்டேன் மேலும் கேட்டேன் அவனால் எனக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறுவதாகும். (ஆதாரம்:- திர்மிதி)

உன் பிரார்த்தனையை அல்லாஹ்வை புகழ்ந்து நபிகளார் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் சொல்வதன் மூலம் ஆரம்பித்து அதைக்கொண்டே நிறைவுசெய்வாயாக!

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
பிரார்த்தனைக்கு விடையளிக்கப்படுவதில் உறுதிகொண்டவர்களாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வை மறந்து வீண் விஷயங்களில் ஈடுபடக்கூயவர்களின் பிரார்த்தனைக்கு அவன் விடையளிக்கமாட்டான். (ஆதாரம்:- திர்மிதி)

நீ பாவமான காரியங்களை கொண்டோ பிரார்த்திக்காமல் அல்லது உறவினர்களை துண்டிப்பது கொண்டோ பிரார்த்திப்பதில் எச்சரிக்கையாக இரு! வெளிப்படையாக உனது பிரார்த்தனைக்கு விடை கிடைக்கப்படவில்லை என்றால் அதற்காக நீ கவலைப்படாதே! அல்லாஹ் அதற்குரிய (நன்மையை) பலனை மறுமையில் உனக்கு சேமித்திருப்பான். அல்லது அதன்மூலம் உனது பாவங்களை மன்னிப்பான். அல்லது உனக்கு ஏற்படவிருக்கும் தீங்கிலிருந்து உன்னை பாதுகாப்பான்.

35. அன்புச்சகோதரியே!
பர்ளு, ஸுன்னத்கள் மற்றும் அல்லாஹ்வை நெருங்கக்கூடிய நல்லமல்களை செய்வதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கி மாபெரும் கூலியை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது உயர்ந்த அந்தஸ்த்துக்களை அடைந்துகொள்வதுடன் எவ்வித அச்சமோ கவலையோ இல்லாத அல்லாஹ்வின் நேசர்களில் ஒருவராக நீயும் இருப்பாய்! மேலும் அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனைக்கு விடையளிக்கின்றான். அவர்களின் கவலைகளை நீக்கி அவர்களின் உள்ளங்களை அமைதியால் நிரப்புகின்றான்.

அல்லாஹ் சொல்வதாக,  நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:-
எவன் எனது நேசரை பகைத்துக்கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கின்றேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறெதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நபிலான) வணக்கங்களால் என்பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்பை கோரினால் நிச்சயம் நான் அவனுக்கு பாதுகாப்பளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரை கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று நான் செய்யும் எந்தச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கின்றான். நானும் (மரணத்தின்மூலம்) அவனுக்கு கஷ்டம் தருவதை வெறுக்கின்றேன். (ஆதாரம்:- புஹாரி)

36. அன்புச் சகோதரியே!
மார்க்கத்தில் விருப்பமுள்ள தனது நாயனின் கட்டளையை ஏற்று நடக்கக்கூடிய தனது கொள்கையின் மூலம் பெருமைப்படக்கூய சகோதரியை நீ கண்டால் அவளுடன் அன்புவைத்து அவளை உனது தோழியாக்கிக்கொள்! அல்லாஹ்விற்காக அன்பு வைப்பவர்களுக்கு அவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளது.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எனது கண்ணியத்திற்காக ஒருவரையொருவர் நேசிப்பவர்களுக்கு (மறுமையில்) ஒளியிலான மேடைகள் இருக்கும். (அவர்கள் அம்மேடைகளின்மீது இருப்பார்கள்) அவர்களை பார்த்து நபிமார்களும், ஸுஹதாக்களும் தங்களுக்கும் இவை கிடைக்கவேண்டுமென ஆசைப்படுவார்கள். (ஆதாரம்:- திர்மிதி)

37. அன்புச் சகோதரியே!
நீ நேரத்தை வகுத்துக் கொள்ளாவிட்டால் அது உன்னை வீணாக்கிவிடும். நீ மாணவியாக இருந்தால் உனது பாடங்களை மீட்டுவதற்கு நேரத்தை செலவிடு! நீ வீட்டுப்பெண்ணாக இருந்தால் உன் குடும்பம், கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், பயனுள்ள நூல்களை வாசிப்பதற்கும், உறவினர்களை சந்திப்பதற்கும், இதுபோன்ற நல்லவேலைகளில் ஈடுபடுவதற்கும் நேரத்தை வகுத்துக்கொள்!

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
அடியான் தனது ஆசைகளை எவ்வாறு செலவளித்தான் என்றும், தன் கல்வியை எதில் செயல்படுத்தினான் என்றும், தன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான். எதில் செலவளித்தான் என்றும், தன் உடலை எதில் பயன்படுத்தினான் என்றும் அவனிடம் விசாரிக்கப்படாதவரை அவனது இரு பாதங்களும் (மறுமைநாளில் அவன் நிற்கும் இடத்தைவிட்டு சிறிதளவும்) நகரமுடியாது. (ஆதாரம்:- திர்மிதி)

38. உறவினர்களை தரிசிப்பது, வயதிலும், உணவிலும் பரகத்தை ஏற்படுத்தும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எவர் தனது உணவில் அபிவிருத்தியும், தனது வாழ்நாள் நீடிக்கவேண்டுமெனவும் விரும்புகின்றாரோ அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து நடக்கவும். (ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்)

எனவே உனது உறவினர்களை தரிசிப்பதற்கு ஆசைவைப்பாயாக! மேலும் உனது தரிசிப்பு அவர்களுக்கு பயனளிக்கக்கூடியதாகவும், நன்மைகளை செய்வதற்கு அவர்களை ஆர்வமூட்டக்கூடியதாகவும், தீமைகள் செய்வதைவிட்டு அவர்களை தடுக்கக்கூயதாகவும், பயனுள்ள அம்சங்களை அவர்களுக்கு கொடுக்கக்கூடியதாகவும், தீமைகளைவிட்டும் அவர்களை எச்சரிக்கக்கூடியதாகவும் இருப்பதுடன் அவர்களுக்கு சிறந்தமுறையில் அறிவுரைகூறி அவர்களின் நிலைகளைபற்றி கேட்டறிந்துகொள்!

39. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்யக் கூடியவர்கள், அவனது மர்க்கத்தை நிலைநாட்டுவதில் அலட்சியம் செய்யக் கூடியவர்களும் உன்னை ஏமாற்றிவிடவேண்டாம். ஒருநாள் வரும் அந்நாளில் அநியாயக்காரன் தன் கைகளை கடித்துக்கொள்வான். இறைவிசுவாசி தான் ஈடேற்றம் பெற்றதற்காக பெரும் மகிழ்ச்சியடைவான். அவன் மறுமைநாளின் கஷ்டங்களை காண்பான். எனினும் தனது பட்டோலையை வலக்கையால் பிடித்துக் கொண்டிருப்பான். அவன் எதனையும் பேசுவதற்கு சக்திபெற மாட்டான்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
எவர் தனது பதிவுப்புத்தகத்தை வலக்கையில் கொடுக்கபட்டாரோ அவர் (மற்றவர்களிடம்) வாருங்கள் என்னுடைய பதிவுப்புத்தகத்தை நீங்கள் படித்துப்பாருங்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறுவார். நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை சந்திப்பேன் என்று உறுதியாக எணணியிருந்தேன் என்று உறுதியாக கூறுவார். (அல்ஹாக்கா:- 69 : 19, 20)

40. அன்புச்சகோதரியே!
உனது உள்ளத்தில் அன்பையும், பாசத்தையும் விதைப்பாயாக! பெரியோர், சிறியோர் மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்புசெலுத்துவாயாக!

நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவன் அல்லாஹ்வால் இரக்கம் காட்டப்படமாட்டான். (ஆதாரம்:- புஹாரி)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஒரு மனிதர் ஒரு பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. அவர் வழியில் ஒரு கிணற்றை கண்டார். உடனே அதில் இறங்கி தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கை தொங்கவிட்டபடி மண்ணை நக்கிக்கொண்டிருப்பதை கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதை போன்ற (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும் என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கி (தண்ணீரை தோலிலான) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதை தமது வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்கு புகட்டினார். அல்லாஹ் அதற்கு நன்றியாக அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான் என்று அல்லாஹ்வின் தூதர் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதை செவியேற்ற) மக்கள் அல்லாஹ்வின் தூதரே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள் ஆம் உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்போது மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும் என்று சொன்னார்கள். (ஆதாரம்:- புஹாரி)

41. கெட்ட அழைப்பாளர்கள் மற்றும் தங்களின் கற்பனைகள், தந்திரங்கள், சதித்திட்டங்கள் போன்றவற்றை நாகரீகம் என்று கருதக்கூடிய அழைப்பாளர்கள் பலதரப்பட்ட வழிகளிலும் சாதனங்களையும் பயன்படுத்தி முஸ்லிம் பெண்களை வழிகெடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு, நாணம், பத்தினித்தன்மை போன்றவற்றிலிருந்தும் அவர்களை வெளியேற்றி தங்களின் அழகை வெளிப்படுத்தித்திரியக் கூடிவர்களாக ஆக்கிவிடுகின்றார்கள். எனவே அவர்களின் பேச்சுக்களை கேட்டு ஏமாந்து அவர்களின் மாயவலையில் விழுந்துவிடாமல் உன்னை பாதுகாப்பதுடன், உனது ஏனைய சகோதரிகளையும் அதைவிட்டும் எச்சரிப்பாயாக!

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எவர் நேர்வழியின்பால் அழைக்கின்றாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்றுபவர்களுடைய நற்கூலிகள் போன்றவை உண்டு. அவர்களின் நற்கூலிகளில் எதுவும் குறையாது. எவர் தீய வழியின்பால் அழைக்கின்றாரோ அவருக்கு அத்தீய வழியை பின்பற்றுபவர்களின் பாவங்கள் போன்றவை உண்டு. அதனால் அவர்களின் பாவங்களில் எதுவும் குறைவதில்லை.
(ஆதாரம்:- முஸ்லிம்)

42. உனது மார்க்கத்தை கொண்டுபெருமைப்படக் கூடியவளாகவும், உனது கொள்கையை கொண்டு உயர்வடையக் கூடியவளாகவும் இருந்துகொள்!

அல்லாஹ் கூறுகின்றான்:-
(விசுவாசிகளே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம்,கவலையும் படவேண்டாம். (உண்மையாவே) நீங்கள் விசுவாசம்கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மிக்க மேலானவர்கள். (ஆலு இம்ரான்:- 3 : 139)

மேலும் உன்மார்க்கத்திற்குரிய அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கு வெட்கப்படுவதையும் அவைகளை கேலிசெய்வதையும் உன்னை நான் எச்சரிக்கின்றேன்.

43. இஸ்லாமிய சொற்பொழிவுகளை கேட்டல், பயனுள்ள மநாடுகளில் கலந்து கொள்வதின்மூலம் உனது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு உரமிடுவாயாக! அது ஆடியோ கெஸட்டுக்களாக இருந்தாலும் சரி. மேலும் பயனுள்ள இஸ்லாமிய சஞ்சிகைகளை வாசிப்பதற்கு ஆர்வங்கொள்! முஆத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
நபிகளார் (ஸல்) அவர்கள் அவரின் கரத்தை பிடித்துக்கொண்டு ஓ முஆதே! அல்லாஹ்வின்மீது ஆணையாக நான் உன்னை நேசிக்கின்றேன் எனக் கூறினார்கள். பின்னர் ஓ முஆதே! உனக்கு நான் நல்லுபதேசம் செய்கின்றேன். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இறைவா! உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றிசெலுத்துவதற்கும், அழகிய வணக்கங்களை நிறைவேற்றுவதற்கும் எனக்கு நீ உதவிசெய்வாயாக! என்று கூறுவதை நீ விட்டுவிட வேண்டாம் எனக்கூறினார்கள்.
(ஆதாரம்:- அபூதாவூத்)

44. நன்மைகளையும், சிறப்பான அம்சங்களையும், அழகிய குணங்களையும், பயனுள்ள கல்வியையும் உனது வீட்டிலும், பாடசாலையிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியிலும் பரப்புவதற்கு உதவி செய்வாயாக!

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எவர் யாதேனும் நன்மையை பிறருக்கு அறிவித்து கொடுக்கின்றாரோ அவருக்கு அதை செய்பவரின் நன்மை போன்று உண்டு. (ஆதாரம்:- முஸ்லிம்)

45. அன்புச்சகோதரியே!
வீட்டு வேலைகளில் உனது தாய்க்கு உதவியாக இரு! ஏனெனில் அது (தாய்க்கு நன்மை செய்வதாகவும் அவள் செய்த நன்மைகள் சிலவற்றிற்கு பகரமாகவும் இருக்கும். மேலும் அல்லாஹ்வின் உதவியால் உனது எதிர்கால வாழ்க்கை வெற்றியடைவதற்கு பயிற்சியாகவும் இருக்கும். பாடங்களை மீட்டுதல், பாடசாலை வேலைகளை செய்தல் போன்றவற்றின் பெயரால் ஓய்வு நேரத்தை ஓய்வெடுப்பதிலும், சோம்பலிலும் கழித்துவிடாதே!

46. நீ எப்போதும் புன்முறுவலுடன் இருந்துகொள்! இதனால் நீ அல்லஹ்விடத்தில் நன்மையை பெற்றுக்கொள்வதுடன் மற்றவர்களின் அன்பையும் பெற்றுக்கொள்வாய்!

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
நீ உனது சகோதரனைப்பார்த்து புண்முறுவல் பூப்பதும் உனக்கு தர்மமாகும். (ஆதாரம்:- திர்மிதி)

47. கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவதை விட்டும் உன்னை நான் எச்சரிக்கின்றேன்.
ஒரு மனிதர் நபிகளார் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் எனக்கூறினார். அதற்கு அவர்கள் கோபப்படாதீர் என்று கூறினார்கள். மீண்டும் மீண்டும் அதை அவர் கேட்க கோபப்படாதீர் என்றே கூறினார்கள்.
(ஆதாரம்:- புஹாரி)

அறிந்துகொள்! நிச்சயமாக கோபம் ஷைத்தானில் உள்ளதாகும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
நிச்சயமாக கோபம் ஷைத்தானில் உள்ளதாகும். ஷைத்தான் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளான். தண்ணீரினால் நெருப்பை அணைக்கமுடியும். எனவே உங்களில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர் வுழு செய்து கொள்ளவும். (ஆதாரம்:- அஹ்மத்)

கோபப்படக்கூயவன் தன்னை அமைதிப்படுத்தக்கூய எவரையும் பெற்றுக்கொள்ளமாட்டான். எனவே நீ உன்னை அமைதியைக்கொண்டு அழகுபடுத்திக்கொள்! அவர்கள் செய்யும் தவறுகள், குறைகள் போன்றவற்றை பொறுமையுடன் சகித்துக்கொள்!

48. இறை நிராகரிப்பாளர்களாகிய காபிர்களை பின்பற்றுவதில் எச்சரிக்ககையாக இருந்துகொள்! பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், அவர்களின் உண்ணுதல், பருகுதல், உடையணிதல் போன்றவற்றிலும் இவை தவிர்ந்த ஏனைய அம்சங்களிலும் அவர்களின் வழியை பின்பற்றுவதை விட்டும் எச்சரிக்கையாக இரு!

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எவர் எக்கூட்டத்திற்கு ஒப்பாகுகின்றாரோ அவர் அக்கூட்டத்தை சேர்ந்தவராவார். (ஆதாரம்:- அபூதாவூத்)

49. பெண்களில் அதிகமானோர் தொழுகை விஷயத்தில் பொடுபோக்காக இருக்கின்றனர். தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாது பிற்படுத்துகின்றனர். காரணம் அவர்கள் தங்கள் வேலையில் மூழ்கியிருப்பது அல்லது மற்றப்பெண்களிடம் வீணான பேச்சுக்களை பேசி ஓய்வுநேரத்தை வீணாக்குவதும், குறிப்பாக விருந்து வைபவங்களில் தொழுகையை நிறைவேற்றாது அதனை வீணாக்குகின்றனர். எனவே நீங்கள் இவ்வகையை சேர்ந்த பெண்களாக இருக்காது தொழுகையை உரியநேரத்தில் பேணி தொழக்கூயவர்களாக இருந்துகொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:-
தொழுகைகைளையும், (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள். (அல் பகரா:- 2 : 37)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம் அமல்களில் மிக மேலான அமல் எது? எனக்கேட்டேன். அதற்கு அவர்கள் தொழுகையை அதன்நேரத்தில் தொழுவது எனக் கூறினார்கள். பிறகு எது எனக்கேட்டேன். பெற்றோருக்கு நன்மை செய்தல் எனக் கூறினார்கள். பிறகு எது? எனக்கேட்டேன். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது எனக் கூறினார்கள். (ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்)

50. நோன்பு நோற்பதற்கு உயர்ந்த அந்ததும், மகத்தான கூலியம் உண்டு. மேலும் அது உள்ளத்தை தூய்மைப்படுத்தி அதனை சீராக்குகின்றது. மாதத்தில் மூன்று நாட்களும், ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்களுமாக ஸுன்னத்தான இந்நோன்புகளை பிடிப்பதற்கு நீ உன்னை பழக்கிக்கொண்டால் உனக்கு சுபசோபனம் உண்டாகட்டும். அல்லாஹ் ஈருலகிலும் சுபீட்சத்தை தருவானாக!

அல்லாஹ் கூறுகின்றான்:-
விசுவாசிகளே! உங்களுக்குமுன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்ட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் பயபக்தியுடையோராகலாம். (அல் பகரா:- 2 : 183)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எவர் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும்போது ஒரு நாள் நோன்புவைக்கின்றாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்கு பகரமாக அல்லாஹ் அவரின் முகத்தை எழுபது ஆண்டுகள் நரகநெருப்பை விட்டும் துஸரமாக்குகின்றான். (ஆதாரம்:- புஹாரி, முஸ்லிம்)

ஆசிரியரின் கூற்று
பொருத்தமாக கண்டபோது சல இடங்களில் பல ஹதீஸ்களை மேலதிகமாக சேர்த்துள்ளேன்.

மேலும் தமிழ் மொழியில் உள்ள இரசனையை பேணி சில இடங்களில் அறபு மொழியின் வடிவத்திலிருந்து விலகியிருக்கின்றேன்.

மேலும் அறபு மொழியின் அழகாம் ஒரு கருத்தை தரும் பல சொற் குவிப்பிலிருந்து சில இடங்களில் தளர்ந்திருக்கின்றேன்.

அறபு மொழியின் நீளத்திற்கேற்ப தமிழ் மொழி பெயர்ப்பு செய்தால் அப்பந்தியின் இரசனையை மொழிபெயர்ப்பு இழந்துவிடும் என்பதற்காக தமிழ் மொழிபெயரப்பில் சில இடங்களில் சுருக்கம் பேணியிருக்கின்றேன். அல் ஹம்துலில்லாஹ்.

அறபு மொழியில்
அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் முக்பில்.

தமிழில்
ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம்
அழைப்பாளர் அல் ஜுபைல் அழைப்பகம்.
ஸவூதி அரேபியா

8 comments

  1. in 35 th second pessage its mentined that prophet (sal) said. but it should be allah said please check it and correct…….

  2. நிர்வாகி

    Thanks Bro. Ibrahim,

    We corrected those words.

  3. Assalaaamu Alaikkum (Varah),

    MAASHA ALLAH…

  4. Alhamdulillah… thanks

  5. Alhamthulillah………. allah yallarukum rahamath arulvanaha…………….

  6. masha allah

  7. I am very glad to read about this kind of messages. A muslim women who straightens her path in the way of islam can only succeed in the day of judgement–all the praise due to allah ,may allah accept your good deeds& bless his mercy in the day of judgement.

  8. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிக பயனுள்ள / தேவையுள்ள தகவல்.
    வல்ல அல்லாஹ், உங்களுக்கு அருள் புரிவானாக!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *