- தமிழகக் காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – கலைஞர் கருணாநிதி
- தமிழகக் காவலதுறையின் இதயம் கெட்டுவிட்டது – தா.பாண்டியன்
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – ஜெயலலிதா
- கேவலமான போலீஸ் – சரத்குமார் கண்டனம்
- சட்டக் கல்லூரி: சேவல் சண்டையா நடந்தது? விஜயகாந்த் ஆவேசம்
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த 12.11.2008 மாலை மாணவர்களிடையே நடந்த உக்கிரப் போரின்போது போலீஸாரின் அலட்சியப் போக்குக் குறித்து பலவித வியாக்கியானங்கள் பேசப்படுகின்றன.
காவல் துறையைக் கையில் வைத்து,தான் ஆட்சி செய்யும்போது மட்டும் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது எனவும்,அடுத்தவர் ஆட்சி செய்யும் போது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, ஈரல்/இதயம் செயலிழந்து விட்டது என்றும் வழக்கம்போல் மாண்புமிகு நமது அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க புல்லரிக்கும் வசனம் பேசுகிறார்கள்!
தன் சாதியினரையே நம்பி கட்சித் தொடங்கியவர்கள் மட்டுமின்றி நால்வருண / சாதி முறையையும் பேணும் பாஜகவின் இல.கணேசனும்கூட சட்டக்கல்லூரி விவகாரத்தில் சாதிப்பிரச்சினையே முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது என்று வருத்தப்பட்டிருந்தார்!
போலீஸாரின் அலட்சியமும் பாரபட்சமும் புதிதல்ல. விபத்தோ அல்லது கொலையோ நடந்திருந்தால் “தங்கள் சரகத்திற்கு உட்பட்டதல்ல” என்று எல்லை தாண்டாமல் தட்டிக்கழித்த எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். கோவை,குஜராத்,ஒரிஸ்ஸாவில் சிறுபான்மையினர் மீது காவிபயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டம் போட்டபோது சிறுபான்மையினரை அடிப்பதிலும் அழிப்பதிலும் கூடுதலாக ஈடுபட்டது காவியா? காக்கியா? என்று பட்டிமன்றம் வைத்தால் லியோனிகூட தீர்ப்புச் சொல்ல முடியாமல் திணறுமளவுக்கு காவல் துறையும் காவித்துறையும் வேறுபாடின்றி கைகோர்த்துச் ‘செயல்’பட்டனர்.
முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களருகே விநாயகர் ஊர்வலங்கள் செல்லும் போது,அதில் முஸ்லிம்களுக்கு எதிராக, விநாயகருக்குச் சம்பந்தமில்லாத பாகிஸ்தானுடன் இந்திய முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தியும்,ஆபாசமான, வன்முறையான முழக்கங்களைத் திட்டமிட்டே எழுப்புவதால் பொது அமைதி கெட்டு, சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதால், அவ்வழியே ஊர்வலம் செல்லக் காவல்துறை முன்னெச்சரிக்கையாக அனுமதி மறுக்கிறது.அதையும் மீறி,தடை செய்யப்பட்ட பகுதிகள்வழியே கலவர நோக்கில் விநாயகர் ஊர்வலங்கள் செல்லும் போது ஆபாச, வன்முறை முழக்கங்கள் எழுப்புவதால் முஸ்லிம்கள் அதை எதிர்த்து அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் போலீஸார் ஒருதலைப்பட்சமாகச் செயல் படுவர் என்பது எழுதப் படாத விதி.
சில மாதங்களுக்கு முன்பு முஹம்மது நபியை (ஸல்.) அவமதிக்கும் நோக்கில் விஷமத்தனமாகச் செயல்பட்ட தினமலருக்கு எதிராக வேலூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதும் போலீஸாரின் கொலைவெறித் தாக்குலை யாரும் மறக்க முடியாது. [படம்].
விழுப்புரம் அருகே கூலிகேட்டு ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய ஏழைத் தொழிலாளர்கள்மீது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, வயதானவர்கள
் என்றுகூடப் பார்க்காமல் கொடூரமாகத் தாக்கி சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்றிய(!) போலீஸ்,
ஒரு பக்கம் கண்ணதிரே நடந்த விநாயகர் ஊர்வலம் முதல் சட்டக்கல்லூரி சம்பவம்வரை அக்கிரமங்களைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் கைகட்டியக் காவலர்கள்;இன்னொரு பக்கம் ஜனநாயக முறையில் எதிர்ப்புக் காட்டியவர்கள் மீது தடியடி நடத்தும் கடமை தவறாக் காவலர்கள்!
மதச்சார்பற்று, பொதுவாகச் செயல்படவேண்டிய காவலர்கள் முஸ்லிம்கள் விசயத்தில் பெரும்பாலும் கடைப்பிடிக்கவில்லை. அப்போதெல்லாம் அசையாத நாக்கு சட்டக்கல்லூரி நடந்த சாதிப்பிரச்சினைக்கு அசைகிறது. காவலர்களின் அலட்சியத்திற்கு மேலிட உத்தரவு உடனடியாகக் கிடைக்காததே நிஜக்காரணம் எனில் வேலூர்,திண்டுக்கல்,விழுப்புரம் மக்களை அடித்து, உதைக்கவும் வழக்கத்திற்கு மாறாக நடுமண்டையில் லத்திசார்ஜ் செய்யவும் உடனடியாக உத்தரவிட்டது யார்? ஏன் என்று எந்த நாக்கும் கேட்கவில்லை.
செயல்படாமல் போனது ஈரலும் இதயமும் அல்ல; நாக்கும்தான்!