Featured Posts

பெண்ணே பெண்ணே! – (தொடர் 5)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

போலிப் புகழாரம் வேண்டாம் கண்ணே!

சில பெண்கள் போலிப் புகழ் பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்வர். தம்மைப் பற்றி எப்போதும் பீற்றித் திரிவர். இவர்களை அடுத்தவர்கள் மிக இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர். அவர்கள் பேசும் தொணி, ஸ்டைல், சப்ஜக்ட் அனைத்துமே அவர்களது புகழ் போதையைப் படம்பிடித்துக் காட்டிவிடும். இவர்கள் பெருமை பேசிவிட்டு நகர்ந்ததும் அடுத்த பெண்கள் இவளின் பேச்சைச் சொல்லிச் சொல்லியே சிரிப்பர். தாம் தம்மைச் சூழவுள்ள பெண்களால் இழிவாக நோக்கப்படுவதை உணராமலே இவர்கள் பீற்றித் திரிவர். இத்தகைய இயல்பைக் கொண்ட பெண்கள் மிக விரைவாகவே அடுத்தவர்களுக்கு பலிக்கடாக்களாகக் கூடியவர்கள். எனவே, இந்த குணம் ஆபத்தானது. இத்தகைய பெண்களை ஒரு பெண்ணோ அல்லது ஆணோ சில போலிப் புகழ் வார்த்தைகள் மூலம் இலகுவாக ஏமாற்றி காரியம் சாதித்து விடுவர். உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது, உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன என்று கூறவே முடியாது போன்ற சாதாரண புகழ் வார்த்தையில் கூட சரிந்து விடுவர். எனவே, இந்தக் குணம் அவசியமாக இல்லாது ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

போலிப் புகழ் பாடுபவர்களை பல கூறுகளாகப் பிரித்து நோக்கலாம்.

சுய புராணம் பாடும் பெண்கள்:

இவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி புகழ்பாடுவர். நான் அப்படி, நான் இப்படி, எனக்கென்றால் இப்படித்தான், நான் அணிந்துள்ள ஆடை, போட்டுள்ள நகை என்று சம்பந்தமே இல்லாமல் பேசுவர். இவர்கள் உண்டது, குடித்ததிலிருந்து பீற்றித் திரிவர்.

பிறர் தன்னைப் புகழும் போதே பணிவைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறும் போது எந்தத் தேவையும் இல்லாமல் உள்களை நீங்களே புகழ்ந்து தள்ளுவதை எந்த ரகத்தில சேர்ப்பதென்று சிந்தித்துப் பாருங்கள்.

“தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் என எண்ணிக்கொள்வோரை (நபியே!) நீர் பார்க்க வில்லையா? மாறாக அல்லாஹ்வே, தான் நாடுவோரைப் பரிசுத்தப்படுத்துகின்றான். மேலும், அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.” (4:49)

தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வது யஹூதி, நஸாராக்களின் பண்பாக இருந்ததை குர்ஆன் சுட்டிக் காட்டுகின்றது.

சுய புகழ்பாடும் பெண்களிடம் நான் நான் என்ற எண்ணமும், பெருமையும், கர்வமும் குடிகொண்டிருக்கும். இவ்வாறு சுய புராணம் பாடும் பெண்களிடம் கீழ்க்காணும் குணங்களும், இயல்புகளும் காணப்படுவது தவிர்க்கமுடியாததாகும்.

01. தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக தனது ஆடை, செயற்பாடு, செலவினங்கள் அனைத்திலும் தன் சக்திக்கு மீறிச் செயற்பட ஆரம்பிப்பாள். இதனால் இவள் வாழ்வில் பலத்த இழப்புக்களைச் சந்திப்பாள்;. தான் பெரிய தர்மசாலி எனப் பீற்றுபவள் பிறர் முன்நிலையில் பிச்சைக்காரனுக்கும் வாரி வழங்கி தனது வள்ளல் தன்மையை நிரூபிக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவாள். இவ்வாறு இல்லாத செலவுகளைத் தானாக ஏற்படுத்திக் கொள்வாள்.

02. சிலர் எனது பிள்ளைகள், எனது ஊர், எனது குடும்பம் எனப் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள். தம்மைப் பற்றி மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் சும்மா பீற்றித் தள்ளுவார்கள்.

03. இத்தகையவர்கள் பிறர் தம்மைப் புகழ வேண்டும் என எதிர்பார்ப்பர். புகழப் புகழ கொப்பில் ஏறிக் கொண்டே செல்வார்கள். எந்த இடத்தில் விழுவார்கள் என்பது இவர்களுக்கே தெரியாது.

04. இத்தகையவர்கள் தம்மைப் புகழ்பவர்களுக்காக எதையும் செய்யவும், இழக்கவும் தயாராவார்கள்.

இத்தகையவர்களிடம் புகழ்ந்து புகழ்ந்தே கறக்க வேண்டியதைக் கறந்துவிடலாம். இத்தகைய பெண்கள் ஆண்களின் வஞ்சக வலையில் இலகுவாக விழுந்துவிடுவர். சாதாரண தொலைபேசிப் பேச்சில் உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது! நீங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றீர்கள்! உங்கள் சிரிப்பு, தலை வாரும் ஸ்டைல் எனக்குப் பிடித்திருக்கிறது!… என்பன போன்ற சாதாரண வஞ்சக வார்த்தைகளுக்கே கிறுங்க ஆரம்பித்து விடுவர்.

இன்றைய நவீன உலகில் சாதாரண ஒரு “மிஸ் கோல்” (Missed Call) மூலம் இத்தகைய பெண்கள் தமது வாழ்வை இழந்துள்ளனர். இணையத்தில் எதிர்த் தரப்பில் இருந்து பேசும் ஆண் யார்? எவர்? என்று தெரியாமலேயே அவனது போலிப் புகழாரத்தில் மயங்கி போஸ் கொடுத்து வாழ்வை இழக்கும் பெண்கள் இருக்கின்றனர். எனவே, புகழப்; போதைக்கு அடிமையாவது ஆபத்தான குணமாகும்.

05. இத்தகைய பெண்கள் சபைகளிலும், நிகழ்ச்சிகளின் போதும் பிறர் பார்வை தம்மீது விழ வேண்டும் என்பதில் அக்கறை எடுப்பர். இது அவர்களின் வாழ்வில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

06. என்னிடம் அது இருக்கு, இது இருக்கு எனப் பீற்றுவர். அடுத்த வீட்டு ஆயிஷhவின் நகையைப் போட்டுக் கொண்டு போய் போன மாதம் தான் இதை வாங்கினேன் என ரீல் விடுவாள்.

07. தன்னைப் பெரிய புத்திசாலியாகவும், சிந்தனை வாதியாகவும் காட்டிக்கொள்ள கரிசனை எடுப்பாள். என்றாவது ஒரு நாள் முட்டாள்தனம் தெரிய வர நொந்து நூலாகிப் போவாள்.

08. இப்படிப்பட்ட பெண்கள் அவசியமின்றி அதிகம் பேசுவர். தன்னைப் பற்றியே அடிக்கடி பேசுவதால் கேட்பவர்களுக்கும் எரிச்சல் எரிச்சலாய் வரும்.

09. சில வேளை இவர்கள் அடுத்தவர்களைப் புகழ்வார்கள். அது கூட தன்னைப் புகழ்வதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கும். “நீங்க சுகமில்லாம இருக்கும் போது வந்த மனிதர் நல்ல மனிசர்கள். நீங்க ஏன்ட சொந்தம் என்று தெரிந்து தான் உங்களைப் பார்க்கவந்தாங்க” எனக் கூறி அதிலும் தன்னை உயர்த்திக் கொள்வாள்.

10. தனது அந்தஸ்தைக் குறைக்கும் எனக் கண்டால் நீதி நியாயத்தையும், சத்தியத்தையும் இத்தகையவர்கள் மறுப்பார்கள்.

11. பலவீனமான ஏழை மக்களிடம் கர்வத்துடன் நடந்து கொள்வர். இவர்களுடன் கதைத்தால் தமது ரெஸ்பெக்ட் குறைந்துவிடும் என நினைப்பர். பணக்காரர்கள் பதவியில் உள்ளவர்களைக் கண்டால் விழுந்து விழுந்து உபசரிப்பர்.

12. தம்மைப் புகழாமல் தமது குறைகளைச் சுட்டிக்காட்டும் நல்லவர்களையும், நண்பர்களையும் பகைத்துக் கொள்வர். இதனால் இவர்கள் நல்ல நண்பர்களை இழந்து நயவஞ்வகக் கூட்டத்தின் நடுவே தான் வசிக்க நேரிடும்.

13. கர்வத்தின் காரணத்தினாலும், பெருமையின் காரணத்தினாலும் தனது தவறுகளை உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ள முன்வரமாட்டார்கள். இதனால் இவர்கள் திருந்தும் வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவாகும்.

இது போன்ற மற்றும் பல பாதிப்புக்கள் போலிப் புகழாரம் பாடுபவர்களுக்கு ஏற்படும். நாம் கூறிய அனைத்தும் இத்தகைய ஒருவரிடம் குடிகொண்டிருக்காவிட்டாலும் இவற்றில் பல இருக்க வாய்ப்புள்ளது.

போலிப் புகழாரம் இத்தகைய பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதால் உங்களை நீங்களே புகழ்ந்து தள்ளுவதைத் தவிருங்கள். பிறரிடம் பேசிய பின்னர் நான் பேசிய பேச்சில் என்னை நானே புகழ்ந்து தள்ளும் வார்த்தைகள், செய்திகள் இடம் பெற்றதா என்பதைச் சிந்தித்துப் பார்த்து அவற்றை நீக்க முயற்சி செய்யுங்கள்.

ஒரு உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்! உங்களை நீங்களே எந்தளவுக்கு புகழ்கிறீர்களோ அந்தளவுக்கு உங்கள் மதிப்பும், மரியாதையும் அடுத்தவர் மனங்களில் குறைய ஆரம்பிக்கும். நீங்களே உங்களைப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டியது தான். உங்களைப் புகழத்தக்க ஒருவராக சமூகம் மதிக்காது.

எனவே, போலிப் புகழாரத்தையும், சுய புராணத்தையும் நிறுத்துங்கள். இது தொடர்பில் இன்னும் சில செய்திகளை அடுத்த இதழில் நோக்குவோம்.

இன்ஷா அல்லாஹ்.

4 comments

  1. assalamu alaikkum this topic will change the woman those who have bad in her attitude

  2. a good thought

  3. please be kind enough to give us more knowledge on this pennae pennae ..im eagerly waiting to see the 6th

  4. Its really beneficial.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *