Featured Posts

கட்டிடத்தின் கடைசிக் கல்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
எனக்கும் எனக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் இடையிலான உதாரணம் ஒரு கட்டிடத்தைக் கட்டிய மனிதனின் உதாரணத்தை ஒத்ததாகும்.
 
“அந்த மனிதர் ஒரு வீட்டை அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டினார். ஒரேயொரு கல் வைக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டார். அந்த வீட்டை மக்கள் சுற்றிப் பார்த்து (அதன் அழகையும், நேர்த்தியையும் கண்டு) வியந்தனர். இந்த இடத்தில் உள்ள கல் மட்டும் வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கூறினர். விடுபட்ட அந்த இடத்தை அடைக்கும் கல் நானாவேன். நான் நபிமார்களில் இறுதியானவன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
(அறி: அபூஹுரைரா(ரழி), ஆதா:புஹாரி-3535, முஸ்லிம்:6103)
 
இந்த ஹதீஸ் புஹாரி, முஸ்லிம் உட்பட மற்றும் பல ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உதாரணத்தின் மூலம் நபித்துவம் என்ற கட்டடம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாகவும், தான் இறுதி இறைத் தூதர் என்றும் தனக்குப் பின்னர் வேறு இறைத்தூதர் வர முடியாது என்றும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறுகின்றார்கள்.
 
நபித்துவத்தை ஒரு கட்டிடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் ஒப்பிடப்பிட்டுள்ளார்கள். அந்தக் கட்டடம் அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டப்பட்டிருக்கின்றது. அதன் ஒரேயொரு கல் வைக்கும் இடம் மட்டும் காலியாக இருக்கின்றது. அந்தக் கட்டடத்தைப் பார்க்கும் மக்கள் அதன் அழகிலும், நேர்த்தியிலும் வியந்து போகின்றனர். ஆனால், ஒரு இடம் மட்டும் அதுவும் ஒரேயொரு கல் வைக்கப்படும் இடம் மட்டும் அடைபடாது இருக்கின்றது. இந்த இடம் மட்டும் அடைக்கப்பட்டால் எவ்வளவு அழகாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர். விடுபட்ட அந்த இடத்தை நிரப்பிய கல் நான் தான். நபிமார்களுக்கு இறுதியானவன் என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
 
காதியானிகள் எனும் காபிர்கள் நபி(ஸல்) அவர்களது இறுதி நபித்துவத்தை மறுக்கின்றனர். அல் குர்ஆனில் அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்களை “ஹாதமுன் நபிய்யீன்” நபிமார்களில் இறுதியானவர் என்று கூறுகின்றான்.
 
“முஹம்மத், உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.” (33:40)
 
இந்த வசனத்தை நேரடியாக மறுக்கும் விதத்தில் மிர்ஸா குலாம் அஹ்மத் எனும் பொய்யனை இவர்கள் நபி என நம்புகின்றனர். அதே நேரம் “காதம்” என்ற அரபு வார்த்தைக்கு “இறுதி” என்பது அர்த்தம் அல்ல “சிறப்பானவர்” என்பதுதான் அர்த்தம். “ஹாதமுன் நபிய்யீன்” என்றால் நபிமார்களில் சிறந்தவர் என்பது பொருளாகும். இந்த அடிப்படையில்; நபியவர்கள் நபிமார்களில் சிறந்தவர்ளூ இறுதியானவர் இல்லை. அவருக்குப் பின்னரும் நபிமார்கள் வரமுடியும். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் மிர்ஸா குலாம் அஹ்மத் என வாதிடுகின்றனர்.
 
நபி(ஸல்) அவர்கள் நபிமார்களில் சிறந்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் “காதம்” என்பதற்கு சிறந்தவன் என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கம் கூறவில்லை. இறுதியானவர் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.
 
ஒரு கட்டடம் கட்டப்படுகின்றது. ஒரேயொரு கல் வைக்கப்படும் இடம் மட்டும் விடுபட்டுள்ளது. அந்த விடுபட்ட இடத்தை நிரப்பும் கல் நான். நான் நபிமார்களில் இறுதியானவன் என நபி(ஸல்) அவர்கள் கூறுவதன் மூலம் “காதம்” என்றால் இறுதிதான் என்பதையும் நபித்துவக் கட்டிடம் பூரணப்படுத்தப்பட்டு விட்டது என்பதையும,; இனி யாரும் நபித்துவ வாதம் செய்ய முடியாது என்பதையும் தெளிவாகக் கூறுகின்றார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் யாராவது நுபுவ்வத்திற்கு வாதிட்டால் அவர்கள் பொய்யர்கள், தஜ்ஜால்கள் என நபிமொழிகள் அடையாளம் காட்டுகின்றன.
 
புஹாரி, முஸ்லிம் உட்பட பல்வேறுபட்ட கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்ட நபிமொழிகளில் தன்னை அல்லாஹ்வின் தூதர் எனப் போலியாக வாதிடும் சுமார் 30 பொய்யர்களான தஜ்ஜால்கள் தோன்றுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
(புஹாரி:3609, 7121 , முஸ்லிம்: 7, 84, 7526 , திர்மிதி: 2218)
 
எனவே, மிர்ஸா குலாம் அஹ்மத் உட்பட யாரெல்லாம் தன்னை நபியென வாதிடுகின்றார்களோ அவர்கள் அத்தனை பேரும் பொய்யர்கள், காபிர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
 
எனக்குப் பின்னர் நபி இல்லை என நபி(ஸல்) அவர்கள் தெளிவாகவே கூறியுள்ளார்கள். இது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையில் ஒன்றாகும். இந்த ஹதீஸ் இந்த உண்மையை அழகாக உதாரணத்துடன் கூறுகின்றது. எனவே, இதில் தெளிவோடு இருப்பது எமது கடமையாகும்.
 
இந்த நபிமொழி ஒருவர் ஒரு வீடு கட்டியதாகவும், அதை அழகாகக் கட்டியதாகவும் கூறுகின்றது. எனவே, நாம் வீடு கட்டும் போது அதை அழகாகவும், நேர்த்தியாகவும் பிறர் வியப்புறும் விதத்திலும் கட்டலாம் என்பதை இந்த ஹதீஸ் அங்கீகரிக்கின்றது.
 
ஒருவர் ஒரு கட்டடத்தைக் கட்டி முடித்ததும் மக்களை அழைத்துள்ளார். மக்கள் வந்து அந்தக் கட்டடத்தைப் பார்த்துள்ளனர். இந்த அடிப்படையில் வீடு கட்டியவர் அதன் முடிவில் மக்களை அழைக்கலாம், விருந்த படைக்கலாம் என்பதையெல்லாம் இந்த ஹதீஸ் அங்கீகரிக்கின்றது.
 
அடுத்ததாக இந்த உதாரணத்தின் மூலம் நபி(ஸல்) அவர்கள் தனது இறுதி நபித்துவத்தை உறுதி செய்வது போன்றே தனது நபித்துவத்தையும் உறுதி செய்கின்றார்கள்.
 
“வேறொரு உவமையைக் கேளுங்கள். வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புற தேசத்திற்குப் போயிருந்தான்.”

“கனிகாலம் சமீபித்த போது, அதன் கனிகளை வாங்கிக் கொண்டு வரும்படி நன் ஊழிக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.”
 
“தோட்டக்காரர் அந்த ஊழிக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலை செய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.”
 
“பின்னும் அவன் முந்தியவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான். அவர்களையும் அப்படியே செய்தார்கள்.”
 
“கடைசியிலே அவன் என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.”
 
“தோட்டக்காரர் குமாரனைக் கண்ட போது இவன் சுதந்தரவாளிளூ இவனைக் கொண்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டுளூ”
 
“அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலை செய்தார்கள்.”
 
“அப்படியிருக்க திராட்சைத் தோட்டத்தின் எஜமான் வரும் போது அந்தத் தோட்டக்காரனை என்ன செய்வான் என்று கேட்டார்.”
 
“அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறொரு தோட்டக்காரரிடத்தில் திராட்சத் தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.”
 
“இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?”
 
“ஆகையால் தேவனுடைய இராச்சியம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.”
 
“இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொருங்கிப் போவான்ள    இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப் போடும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.” (பைபில் மத்தேயு:21-33-44)
 
ஈஸா(அலை) அவர்கள் ஒரு உதாரணம் கூறியதாக பைபிள் கூறுகின்றது.
 
ஒருவர் தனது தோட்டத்தைக் குத்தகைக்கு விடுகின்றார். அதன் கணிகளைப் பெற்று வர தனது அடிமைகளை அனுப்புகிறார், தூதர்கள் அனுப்புகிறார்கள். அந்தத் தோட்டக்காரர்கள் அவர்களைக் கொலை செய்துவிடுகின்றனர். இறுதியில் தனது மகனை அனுப்புகிறார். அவரையும் கொலை செய்துவிடுகின்றனர். அந்த எஜமான் வந்து என்ன செய்வர் என்று கேட்டதும் யூதர்கள் அவர் வந்து தோட்டத்தைச் செய்தவர்களைக் கொண்றுவிட்டு தோட்டத்தை உரிய முறையில் பராமரிக்கும் ஒருவரிடம் ஒப்படைப்பார் என்கின்றனர். இந்த பதிலைப் பெற்ற ஈஸா(அலை) அவர்கள் “இவ்வாறுதான் தேவன் இராஜ்ஜியம் உங்களிடமிருந்து பரிக்கப்பட்டு அதை சரியாகப் பராமரிக்கும் இன்னொரு கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப் படும்” என்று கூறுகின்றார்.
 
இப்றாஹீம் நபிக்கு இஸ்மாயீல், இஸ்ஹாக் என இரு புதல்வர்கள் இருந்தார்கள். இஸ்ஹாக் நபியின் சந்ததியில் தான் தூதர்கள் வந்தார்கள். இஸ்ரவேலர்கள் தூதர்களில் பலரைக் கொலை செய்தார்கள். மற்றும் பலரைப் பொய்ப்பித்தனர். ஈஸா நபியின் வருகையுடன் இந்தத் தூதுத்துவம் அவர்களிடமிருந்து பரிக்கப்பட்டு மற்றொரு கூட்டத்தாருக்குக் கொடுக்கப்படும் என்று கூறுவதுடன் அது யாருக்குக் கொடுக்கப்படும் என்றும் கூறுகின்றார்கள்.
 
தவ்றாத்தில் கூறப்பட்டது போல் ஒதுக்கப்பட்ட கல் என இஸ்மாயீல் நபி பரம்பரை கூறப்படுகின்றது. நபியவர்களும் நான் அந்த விடுபட்ட கல் என்று கூறுவதுடன் தன்னுடன் நுபுவ்வத் கட்டிடம் முழுமை பெறுவதாகக் கூறுகின்றார்கள்.
 
ஈஸா(அலை) அவர்கள் அந்தக் கல் பற்றிக் கூறும் போது “அந்தக் கல்லின் மீது விழுகிறவன் நொருங்கிப் போவான். அந்தக் கல் எவன் மீது விழுமோ அவன் நசுங்கிப் போவான் என்ற வாசகம் நபியவர்களை யாரும் அழிக்க முடியாது. அவர்களோடு மோதுபவர்களும் தோற்றுப் போவர். அவர் யாருடன் மோதுகின்றாரோ அவர்களும் தோற்றுப் போவர் என்று கூறுகின்றார்கள். இது நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்தேரியது.
 
நானே அந்த விடுபட்ட கல் என நபி(ஸல்) அவர்கள் கூறுவதன் மூலம் தனது தூதுத்துவத்தை உண்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் அதே நேரம் தானே இறுதி நபி, தனக்குப் பின் நபி இல்லை என்ற சத்தியத்தையும் நிலைநாட்டிவிட்டார்கள்.

One comment

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    உங்களால் அனுப்பி வைக்கப்பட்ட ஹதீஸை வாசித்தேன். நான் இதுவரை கேட்டிராத சம்பவங்களை வாசித்து அறிந்துக் கொண்டேன்.

    தயவுசெய்து மேலும் இப்படியான ஹதீஸ்களை அனுப்பி வைப்பீர்களாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *