– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
மரணத்தின் பின்னால் மனிதர்களாகிய நாம் இரு இல்லங்களை சந்திக்கவிருக்கின்றோம். ஒன்று சுவனம், மற்றது நரகம். நரகத்தை பாவங்கள் செய்து மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால், சுவனம் இலகுவாகப் பெற முடியாத சொத்து. அதற்காகப் பல தியாகங்கள் செய்தாக வேண்டும். சிரமங்கள் பல மேற்கொள்ள வேண்டும்.
“உங்களில் போராளிகள், சகிப்புத்தன்மை உடையோர் யார் என்பதை அறியாது சுவனத்தில் (எளிதாக) பிரவேசிக்கலாம் என நினைக்கின்றீர்களா? (ஆலுஇம்ரான். 142) என்ற இறை மறை வசனம் சுவனத்தின் பாதைக்கு வழியமைத்துக் கொடுத்த ஆரம்பகால மக்களின் தியாகத்தை வேண்டி நிற்கின்றது. மாத்திரமின்றி அதனை இலகுவாக அடையவும் முடியாது எனவும் அறிவிக்கின்றது.
சுவனத்திற்காக ஆசை வைப்போம்
சுவனத்தை ஒரு முஃமின் ஆசை வைப்பதுடன், அதை அல்லாஹ்விடமும் வேண்டி நிற்கவேண்டும். நபிமார்கள், போராளிகள், நல்லடியார்கள் வசிக்கும் அந்த சுவனத்தில் கால் பதிக்க வேண்டுமே என்ற எண்ணம் ஒரு முஃமினிடம் காணப்படல் வேண்டும்.
இன்பம் நிறைந்த சுவனத்தின் வாரிசுக்காரர்களில் ஒருவராகவும் என்னை ஆக்கிடுவாயாக! (அஷ்ஷுஃரா. வசனம்: 85) என தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
என் இரட்சகனே! சுவனத்தில் எனக்கென்று ஒரு மாளிகை அமைத்திடு, ஃபிர்அவ்ன், அவனது (கொடுமையான) நடவடிக்கையில் இருந்து என்னைக் காத்திடு என்று அன்னை ஆசியா (ரழி) அவர்கள் பிரார்த்தனை செய்து பெற்றுக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நான் இந்தப்போரில் கொல்லப்பட்டால் நீங்கள் வாக்களிக்கின்ற சுவனம்! வானங்கள், பூமியை விட விசாலமானதா ? என உமைர் பின் ஹுமாம் (ரழி) அவர்கள் பத்ர் போரில் கேட்டு தனது கையில் இருந்த பேரீத்தம் கனிகளை வீசி எறிந்து விட்டு களத்தில் குதித்து ஷஹீதாகிய செய்திகளையும் அவை போன்ற நூற்றுக்கணக்கான செய்திகளையும் கவனித்தால் நமது எட்டுக்களும் சுவனத்தில் என்றாவது ஒரு நாள் வைக்கப்பட வேண்டுமே என்ற பேரார்வம் நம்மில் மேலிடுகின்றது.
சுவனம் நமக்காகவே படைக்கப்பட்டுள்ளது
சுவனம் முஃமின்களின் இறுதியான தங்குமிடமாகும். அது இறை விசுவாசிகளான நமக்காகத்தான் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் நுழைய நமக்கு உரிமை உண்டு. ஆனால் அதன் தகுதிகளுடன், அதற்குத் தகுதி பெற்ற மக்களாக நாம் மாற முயற்சி செய்ய வேண்டும்.
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்தார்களோ அவர்களுக்கு பிர்தௌஸ் எனும் சுவனச் சோலைகள் விருந்தாக (பேருபகாரமாக) உண்டு. அவர்கள் அதைவிட்டும் நகர்த்தப்படமாட்டார்கள். அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்கஹ்ப்: வசனம்: 107,108).
மனம் விரும்பும் இன்பங்கள் நிறைந்த அந்தச் சுவனம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ளது என்பதை அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நமக்கு நூற்றுக்கணக்கான இடங்களில் உணர்த்தியுள்ளார்கள்.
“நான் சுவனத்தில் நுழைந்தபோது ஒரு அழகான மாளிகையைக் கண்டேன்”. (புகாரி),
“சுவனத்துக் கனிகள் என் முன் காட்டப்பட்டது அதைப் பறிப்பதற்காகவே (தொழுகையில் இருந்தவாறு) முன்னோக்கிச் சென்றேன். (புகாரி, முஸ்லிம்).
“பிலாலே! உமது பாதணிகளின் ஓசைகளை சுவனத்தில் செவியுற்றேன். நீர் இஸ்லாத்தில் இணைந்த பின்னால் என்ன விரும்பத்தக்க அமல்கள் செய்தாய் என்று எனக்கு அறிவிப்பீராக! (புகாரி, முஸ்லிம்).
“நீங்கள் காணாத பலதை நான் காண்கின்றேன் “நான் கண்டதை நீங்கள் கண்டால் அதிகமதிகம் அழுவீர்கள், சிறியளவே சிரிப்பீர்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எதைக் கண்டீர்கள் என ஸஹாபாக்கள் கேட்க, “நான் சுவனத்தையும், நரகத்தையும் கண்டேன்” எனக் கூறினார்கள் (புகாரி).
இவ்வாறு நூற்றுக்கணக்கான சான்றுகள் சுவர்க்கம் படைக்கப்பட்டிருப்பதை அறிவித்துக் கொண்டிருக்கின்றபோது அது மறுமையில்தான் படைக்கப்படும் என்று வாதிடுவது அறிவுடைமையாகாது. அவ்வாறு வாதிடுபவர்களின் வாதம் சரி என்பது வடிட்டிய தக்லீத் (கண்மூடித்தனமாகும்).
சுவனம் இப்போது படைக்கப்படுவது வீண் இல்லையா? என்று ஆரம்ப காலத்தில் முஃதஸிலாக்கள் கேட்டார்கள். அவர்களின் நாவில் சிலர் இப்போது பேசுகின்றார்கள். இத்தகையோரின் கருத்தைக் கேட்ட பலர் அவர்களது நாவில் சிலர் இப்போது சவாரி செய்கிறார்கள்.
“நிச்சயமாக எனது இரட்சனை நான் நம்பி விட்டேன். எனவே நீங்கள் எனக்கு செவிசாயுங்கள் என்றார். (அவரிடம்) நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டது. என் இரட்சகன் என்னை மன்னித்து, சங்கைமிக்கவர்களில் ஒருவனாக என்னை ஆக்கியது பற்றி எனது சமுதாயம் அறிய வேண்டுமே என்றார் (யாஸீன், வசனம்: 25-27)
நல்லவர்களான நிலையில் எவரது உயிர்களை வானவர்கள் கைப்பற்றுகின்றார்களோ அவர்களிடம் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் செய்தவற்றிக்காக சுவனத்தில் நுழையுங்கள் (என்று கூறுவார்கள்). (அந்நஹ்ல், வசனம்: 40-41).
சுவனம் இனித்தான் படைக்கப்படும் என்றால் அதில் நுழையுமாறு எவ்வாறு கூற முடியும்! அல்லாஹ்வின் வானவர்கள் இல்லாத ஒன்றில் நுழையுமாறு கூறுவார்களா? இந்த சாதாரண அறிவுகூட இல்லாமல் சிலர் புலம்புவதை சிலர் வேதமாக்கிக் கொள்கின்றனர்.
சுவனத்தின் அமைவிடம்
சுவனம் வானலோக்கத்தில் இருப்பதை உறுதி செய்கின்ற பல சான்றுகள் அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் காணக் கிடைக்கின்றன.
وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى (13) عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى (14) عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَى
[النجم : 13]
(முஹம்மதாகிய) அவர், அவரை (ஜிப்ரீலை மிஃராஜின்போது) ஸித்ரத்துல் முன்தஹாவில் நிச்சயமாகக் கண்டார். அந்த இடத்தில்தான் ஜன்னத்துல் மஃவா இருக்கின்றது. (அந்நஜ்ம். 13-15).
அபூஸலமா என்ற நபித்தோழர் மரணித்த போது (إن الروح إذا قبض تبعه البصر (مسلم) உயிர் (ரூஹ்) கைப்பற்றப்பட்டால் பார்வை அதனை மேல் நோக்கும் என்று கூறினார்கள் . (முஸ்லிம்). உயிர்கள் கைப்பற்றப்பட்டதும் அல்லாஹ்வின் ஆசிர்வாதத்தை, அல்லது சாபத்தைப் பெற வானலோகத்தை நோக்கி உயிர்கள் உயர்த்தப்படுகின்றது.
மற்றொரு சந்தர்ப்பத்தில், இறை நிராகரிப்பாளனின் உயிர் பற்றிக் குறிப்பிட்டபோது, ஒட்டகம் ஊசியின் துவாரத்தில் நுழையும்வரை அவர்கள் சுவனத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
அங்கு சுவனம் என்று குறிப்பிடுவது ஆதம் நபி (அலை) அவர்கள் குடியிருந்த, வானத்தில் உள்ள அந்த சுவனத்தைத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சுவனம் பல படித்தரங்களைக் கொண்டதாகும்
மனிதர்களில் அதிகம் அமல் செய்பவர்கள் இருக்கின்றார்கள். குறைவாக அமல் செய்பவர்களும் இருக்கின்றார்கள். அதைக் கவனத்தில் கொண்டே அல்லாஹ்வின் சுவனமும் பல படித்தரங்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ وَأَقَامَ الصَّلَاةَ وَصَامَ رَمَضَانَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ هَاجَرَ فِي سَبِيلِ اللَّهِ أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نُنَبِّئُ النَّاسَ بِذَلِكَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِهِ كُلُّ دَرَجَتَيْنِ مَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ
(متفق عليه)
யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் யார் நம்பி, தொழுகையையும் நிலைநாட்டி, ரமளான் (மாத) நோன்பையும் நோற்கின்றாரோ அவரை சுவனத்தில் நுழைவிப்பது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும். அவர் ஹிஜ்ரத் செய்தாலோ, அல்லது அவர் பிறந்த ஊரில் வாழ்ந்தாலோ (மரணித்தாலோ) எதுவானாலும் சரியே! என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! இதை மக்களுக்கு நாம் அறிவிக்கட்டுமா? எனக் கேட்டனர். நிச்சயமாக சுவனத்தில் நூறு படித்தரங்கள் (வகுப்புக்கள்) உள்ளன. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்காக அதனை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றில் இரு படித்தரங்களுக்கும் இடையில் உள்ள அளவு வானம், பூமி ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட அளவாகும். நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டுகின்றபோது “அல்பிர்தௌஸ்” என்ற சுவனத்தை வேண்டுங்கள். அது சுவனத்தில் மத்தியும், சுவனத்தில் உயர்வானதுமாகும். அதன் மேல் அர்ரஹ்மானின் அர்ஷ் இருக்கின்றது. அதிலிருந்து சுவனத்தின் நதிகள் பெருக்கெடுக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்கள் ஏழு வானங்களையும் கடந்து சென்றபோது கண்ட அற்புத நிகழ்வை எடுத்துக் கூறும் குர்ஆனின் வசனமும், பிர்தௌஸ் என்ற சுவனம் அல்லாஹ்வின் அமைவிடமான அர்ஷின் முகட்டில் முட்டிக் கொண்டிருப்பது போன்ற செய்தியும் கூறப்படுகின்றது.
இவ்விரண்டும் வானத்தில்தான் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அப்படி அறிந்த பின்னர் சுவர்க்கம் வானத்தில் இல்லை என சிலர் உளருவதை நம்புவது அறிவுடமையாகுமா ?
சுவனத்தின் நில அமைப்பு
(அரையும், குறையுமாக ஷைத்தானின் துணையுடன் செய்திகளை அறிவிக்கின்ற) இப்னு ஷைய்யாத் என்பவன் சுவர்க்கத்து மண்ணின் நிறம் பற்றியும், அதன் தன்மை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் வினவியபோது ” தூய்மையான, வெண்ணிற கஸ்தூரி” போன்றது என அவனுக்கு பதில் கூறினார்கள் (முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத்).
இதன் மூலம் சுவனத்தின் மண்ணின் நிறம் தூய்மையான வெண்ணிற மண் என அறியலாம்.
புகாரியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில்: மிஃராஜின் போது “சுவனத்தில் நான் பிரவேசித்தேன் அங்கு மணல் குவியலைப்போன்ற முத்துக்கள் இருந்தன, அதன் மண் கஸ்தூரியினால் இருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). அப்படியானால் அதன் நில அமைப்பு வெண்ணிறமான கஸ்தூரியை ஒத்ததாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.
சுவனத்தின் காவலர்கள்
நரகத்தின் பிரதான காவலர் “மாலிக்” அவர்கள் என்றும், அத்துடன் பத்தொன்பது பேர்கள் காணப்படுவார்கள் என்றும் குர்ஆனிலும், ஹதீஸிலும் வந்ததை வைத்து விளங்க முடிகின்றது. சுவனத்தின் காவலர், காவலர்கள் பற்றி குர்ஆனும், ஹதீஸும் குறிப்பிடுவதைப் பார்க்கின்றபோது அவர்களின் எண்ணிக்கை பற்றி அல்லாஹ்வே அறிவான்.
சுவனத்தின் காவலரது பெயர் “ரிழ்வான்” என்பதைத் நாம் தேடிப் பார்த்தவரை ஆதாரபூர்வமான செய்திகளில் காணமுடியவில்லை. சுவனம் பற்றி வர்ணிக்கப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட, அல்லது பலவீனமான செய்திகளில் ரிழ்வானே! என்று அழைத்து வரும் செய்திகளைக் காணமுடிகின்றது.
“பழாயிலுல் அவ்காத்”; “கன்ஸுல் உம்மால்” “அல்இலலுல் முதனாஹியா” ” தன்ஸீஹுஷ் ஷரீஅத்தில் மர்பூஆ| போன்ற நூல்களில் “ரிழ்வான்” என்ற பெயருடன் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில், பலவீனமான செய்திகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அப்படி இருப்பதாக ஸஹீஹான ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுபவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம் இன்ஷா அல்லாஹ்.
அப்படியானால் மாலிக் என்ற பெயர் போன்று சுவனக் காவலாளியின் பெயர் என்னதான் என்று நீங்கள் கேட்கலாம். خازن الجنة ஃ خزنة الجنة சுவனத்தின் காவலாளி- காவலாளிகள் என்று ஆதாரபூர்வமான செய்திகளில் காணமுடிகின்றது. ( الله أعلم)
தமது இரட்சகனை அஞ்சி வாழ்ந்தோர் சுவனத்தின் பக்கம் கூட்டம், கூட்டமாகக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அங்கு வந்ததும் அதன் காவலர்கள் “உங்கள் மீது (ஸலாம்) சாந்தி உண்டாகட்டும். நல்லவர்களாக வாழ்ந்தீர்கள். எனவே அதில் நுழைந்து நிரந்தமாக தங்குங்கள். என்று வரும் வசனத்தில் அதன் காவலர்கள் என இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். (அஸ்ஸுமர்.73).
மறுமை நாளில் சுவனத்தின் வாயிலுக்கு நான் வந்து, (அதை) திறக்குமாறு வேண்டுவேன். அதன் காவலர் நீ யார் எனக் கேட்பார், நான் முஹம்மத் என்று கூறுவேன். உடனே அவர் உம்மைக் கொண்டே பணிக்கப்பட்டுள்ளேன். உமக்கு முன்னர் யாருக்கும் திறந்து விடமாட்டேன் என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்). இங்கும் ( خازنஹாஸின்) காவலர் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
சுவனத்தின் பிரதான நுழைவாயிலின் விசாலம்
உலகில் எந்த ஒரு இல்லத்திற்கும் பிரதான நுழைவாயிலும், அந்த இல்லத்திற்குரிய பிற வாயில்கள் என்றும் இரு அமைப்பிலான வாயில்கள் இல்லாமல் இருப்பதில்லை. சுவனத்தின் பிரதான நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
நான் எனது உம்மத்திற்காக சிபாரிசு வேண்டுகின்றபோது முஹம்மதே உமது தலையை உயர்த்தி கேள்விக் கணக்கில்லாதவர்களை சுவனத்தின் வலது பக்க வாயில்களால் அனுப்புங்கள் என்று கூறப்படும். எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நிச்சயமாக சுவனத்தின் இரு பிரதான வாயில்களுக்கும் இடைப்பட்ட தூர அளவு மக்காவுக்கும் ஹிம்யருக்கும் (யமனில் ஒரு நகரம்) இடைப்பட்ட அல்லது மக்காவுக்கும், புஸராவுக்கும் (டமஷ்கஸில் உள்ள ஒரு நகரம்) இடைப்பட்ட தூர அளவாகும். (புகாரி, முஸ்லிம்).
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் ஹதீஸ்களில் நாற்பது ஆண்டுகள் நடை தூர அளவு என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எவ்வளவு விசாலமானது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் வழியாக மக்கள் நெருக்கிக் கொண்டு போகும் ஒரு நேரமும் வரும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
very good article by brother riswan
zajakallahu khair! excellent article! may ALLAH bless you with beautiful “ilm” brother rizwan! we expect more article from you! thanks a lot
(அரையும், குறையுமாக ஷைத்தானின் துணையுடன் செய்திகளை அறிவிக்கின்ற) இப்னு ஷைய்யாத் என்பவன் சுவர்க்கத்து மண்ணின் நிறம் பற்றியும், அதன் தன்மை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் வினவியபோது ” தூய்மையான, வெண்ணிற கஸ்தூரி” போன்றது என அவனுக்கு பதில் கூறினார்கள் (முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத்).
what do you mean by (அரையும், குறையுமாக ஷைத்தானின் துணையுடன் செய்திகளை அறிவிக்கின்ற) ?… do you mean this hadeeth is not authentic or something else?
yenakku kanavukalin vilakathai ariya vendum????