Featured Posts

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-02)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
சுவனத்தின் வாயில்களின் எண்ணிக்கை:
சுவனம் எட்டு வாயில்களைக் கொண்டது. அவற்றின் சில வாயில்களின் பெயர்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதராணமாக ரய்யான் இது நோன்பாளிகள் மாத்திரம் செல்லும் வாயிலாகும். அவ்வாறே தொழுகையாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோர், நோன்பாளிகள், தர்மம் செய்தோர், (ஒட்டகம், குதிரை, வாகனம் போன்ற) பொருட்களில் ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தோர் போன்ற ஒவ்வொருவரும் அதற்கென உரிய வாயில்களால் அழைக்கப்படுவார்கள். (புகாரி),

இது பிரதான வாயில் என்று சொல்ல முடியாது. சொர்க்கத்தில் நுழைந்த பின்னால் அழைக்கப்படும் வாயில்களையே குறிக்கலாம். (பத்ஹுல்பாரி)

யார் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும், நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தூதரும் என்றும், ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் மர்யமுக்கு அவன் சொன்ன வார்த்தையும், ஆவியும் என்றும், சுவர்க்கம் உண்மையானது, நரகமும் உண்மையானது என்றும் சாட்சி சொல்கின்றாரோ அவர் செய்கின்ற அமலுடன் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தின் எட்டு வாயில்களில் ஒரு வாயில் வழியாக நுழைவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

உங்களில் ஒருவர் உழுச் செய்கின்றார், அதைப் பூரணமாகவும் செய்து முடித்து:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

“அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி, வரசூலுஹு” என்று கூறுகின்றாரோ நிச்சயமாக அவர் சுவர்க்கத்தின் எட்டு வாயில்களில் ஒரு வாயில் வழியாக நுழைவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

வாரத்தில் இரு தினங்கள் திறக்கப்படும் சுவன வாயில்கள்
சுவனத்தின் வாயில்கள் ஆண்டுக்கொரு முறை மாத்திரம் திறக்கப்படுவதாகவே பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். ஆனால் வாரத்தில் இரு நாள் அது திறக்கப்டும் என்று பின்வரும் ஹதீஸ் மூலம் அறிய முடிகின்றது.

சுவர்க்கத்தின் வாயில்கள் திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் கொண்டு இணையாக்காதவர்களுக்கு (விஷேட) மன்னிப்பு வழங்கப்படுகின்றது. எந்த மனிதனுக்கும், அவனது சகோதரனுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததோ அவர்களைத் தவிர. அவ்விருவரும் சமாதானமாகும் வரை பொறுத்திருங்கள், அவ்விருவரும் சமாதானமாகும் வரை பொறுத்திருங்கள் என்று வானவர்களிடம் கூறப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

ரமளான் முழுவதும் திறக்கப்படும் சுவன வாயில்கள்
ரமளான் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நகரத்தில் வாயில்கள் மூடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). இது ரமளான் மாதத்தை சிறப்பிக்கின்ற செய்தியாகும்.

இருப்பினும், சில நல்லரங்களின் காரணமாகவும் சுவனத்தில் வாயில்கள் திறக்கப்படுகின்றன என்ற உண்மையினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

1. ஓரிறைக் கொள்கையுடன் மரணித்தவர்களுக்காக சுவன வாயில்கள் திறக்கப்படுதல் (முஸ்லிம்),

2. உழுச் செய்து முடித்து ஓதுகின்ற பிரார்த்தைனையின் பயனாக திறக்கப்படும் சுவன வாயில்கள் (புகாரி, முஸ்லிம்),

3. வாரந்தோறும் திங்கள், மற்றும் வியாழன் நாட்களில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொருக்கும் (விஷேச) மன்னிப்பு வழங்கப்படுகின்றது. இருப்பினும், யாருக்கும், தனது சகோதரருக்கும் இடையில் குரோதம் காணப்படுகின்றதோ அவருக்கும் மன்னிப்பு நிறுத்தப்பட்டு, இவ்விருவரும் சமரசமாகும் வரை காத்திருங்கள், இவ்விருவரும் சமரசமாகும் வரை காத்திருங்கள், இவ்விருவரும் சமரசமாகும் வரை காத்திருங்கள் என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், புகாரி).

சுவனத்தின் படித்தரங்கள் (வகுப்புக்கள்)
சுவனம் பலதாகும். அவை பெயர்களைக் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது, சாதராண நிலையில் உள்ளது என்றெல்லாம் வகுப்புக்கள் உள்ளன.

قَالَ إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ أُرَاهُ فَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ (صحيح البخاري

சுவனத்தில் நூறு படித்தரங்கள் (வகுப்புக்கள்) உள்ளன

அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்காக அதனை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கும் இடையில் உள்ள அளவு வானம், பூமி ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட அளவாகும். நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டுகின்ற போது “அல்பிர்தௌஸ்” என்ற சுவனத்தை வேண்டுங்கள். அது சுவனத்தில் மத்தியும், சுவர்க்கத்தில் உயர்வானதுமாகும். அதன் மேல் அர்ரஹ்மானின் அர்ஷ் இருக்கின்றது. அதிலிருந்து சுவனத்தின் நதிகள் பெருக்கெடுக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்முஃமினூன் அத்தியாயத்தை ஆரம்பம் முதல் படித்துக் கொண்டு வாருங்கள். அதில் சுவனத்தைப் பெற முடியுமான சில காரியங்கள் கூறப்பட்டு இறுதியில் ” அவர்களே அல்பிர்தௌஸ் என்ற சுவனத்தை வாரிசாக்கிக் கொள்வோர், அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்று கூறப்படுவதைப் பார்ப்பீர்கள். (அல்முஃமினூன்; 1-11).

சுவனத்தின் பெயர்கள்
சுவனம் பல பெயர்கள் கொண்டு வர்ணிக்கப் படுகின்றது, அவற்றில் சிலது பற்றி அறிவது ஈமானுக்கு உணர்வூட்டுவதாக இருக்கும் என்பதற்காக அவை பற்றி இங்கு தரப்படுகின்றன.

அல்ஃபிர்தவ்ஸ்
இது பற்றி சுவனத்தின் படித்தரங்கள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள ஆதாரங்களைக் கவனத்தில் கொள்ளவும்.

ஜன்னா
“ஜன்னத்”: என்று ஒருமையாகவும், “ஜன்னாத்” என்று பன்மையாகவும் உபயோகிக்கப்படும் இந்த வார்த்தையானது சாதாரண தோட்டத்தைக் குறிக்கவும், முஃமின்களின் இறுதியும், நிரந்தர இல்லமுமான சுவனங்களைக் குறிக்கவும் அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தையாகும். இதை குர்ஆனிலும், ஹதீஸிலும் அதிமதிகம் நீங்கள் காணமுடியும்.

ஒரு தினம் ஹாரிஸா (ரழி) அவர்களின் தாய் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவின் மீது நான் வைத்திருக்கும் பாசத்தையும். மதிப்பையும் நீங்கள் அறிவீர்கள். அவர் சுவனத்தில் இருந்தால் பொறுமை செய்து, நன்மையை -அல்லாஹ்விடம்- எதிர்பார்ப்பேன். ஆனால், அவரது நிலை வேறு எதுவாக இருந்தாலும் (அந்தக் கவலையினால்) நான் என்ன செய்வேன் என்பதை நீங்கள் அறியத்தான் போகின்றீர்கள் என்றார்கள். ஹாரிஸாவின் தாயே உனக்கென்ன நேர்ந்தது? அது ஒரு சொர்க்கமல்ல. அது பல சொர்க்கங்கள். உனது மகன் “அல்பிர்தௌஸ்” என்ற உயர்வான சொர்க்கத்தில் உள்ளார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

இங்கு அது ஒரு சொர்க்கமல்ல, பல சொர்க்கங்கள் என்ற வாசகத்தின் மூலம் சுவர்க்கங்கள் ஒன்றல்ல பலதுதான். அதைக் குறிக்க ஜன்னா, ஜன்னத் என்ற வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளதுடன், அல்ஃபிர்தௌவ்ஸ் என்ற உயர்ந்த சுவனம் பற்றியும் விளங்க முடிகின்றது.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் வசனங்களைப் பார்க்கவும்:
அல்பகரா-35, 82, 111, 214, 221),
(ஆலுஇம்ரான்- 142, 185),
(அந்நிஸா-124),
(அல்அஃராஃப்-19, 22, 27, 40, 42,43,44, 46, 49, 50),
(அத்தவ்பா-111),
(யூனுஸ்-26),
ஹுத்-23, 108,119),
(அர்ரஃத்-35),
(அந்நஹ்ல்-32),
(மர்யம்-60,63),
(தாஹா-117, 121),
(அல்புர்கான்-24),
(அஷ்ஷுஃரா-85),
(அல்அன்கபூத்- 58),
(ஸஜ்தா-13),
யாஸீன்- 26,55),
அஸ்ஸுமர்- 73, 74)
(காபிர்-40),
(ஷுரா-7),
(ஸுக்ருஃப்-70, 73),
(அஹ்காஃப்- 16),
(முஹம்மத்-6,15),
(காஃப்-31),
(ஹஷ்ர்-20),
(அத்தஹ்ரீம்-11),
(அத்தஹ்ர்-12),
அல்ஹாக்கா-22),
(அல்மஆரிஜ்- 32),
(அல்காஷியா-12),

ஜன்னத்துல் மஃவா
“மஃவா” என்ற சொல்லின் பொருள் ஒதுங்கும் தலம், தங்குமிடம் என்பதாகும். நரகத்தின் ஒதுங்குதலம், சுவனத்தின் ஒதுங்குதலம் என்பதைக் குறிக்க மஃவா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுவனம் பற்றி இடம் பெறுவதில், சிறந்த தங்குமிடம் என்றும், நரகம் பற்றி இடம் பெறுவதில் கெட்ட தங்குமிடம் என்றும் அடையாளப்படுத்தி கூறப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.

எவர் தனது இரட்சகன் முன்னிலையில் நிற்பதை அஞ்சி, (தனது) ஆத்மாவை மனோ இச்சையை விட்டும் கட்டுப்படுத்திக் கொள்கின்றாரோ நிச்சயமாக (அவர்) ஒதுங்கும் தலம் சுவர்க்கமாகும். (அந்நாஸிஆத். வசனம்: 40 – 41) என்பதை மொழி பெயர்க்கின்றபோது அவர் ஓதுங்கும் தலம் மஃவாதான் என்றும், மஃவா என்பதே அவருக்கான சொர்க்கம் என்றும் மொழி பெயர்க்கலாம்.

நிச்சயமாக (முஹம்மதாகிய) அவர் (ஜிப்ரீலாகிய) அவரை மீண்டும் ஒரு தடவை ஸித்ராவில் (ஸித்ரத்துல் முன்தஹாவில்) கண்டார். அங்குதான் “ஜன்னத்துல் மஃவா” சுவனம் இருக்கின்றது. (அந்நஜம். வசனம்: 13- 15) இங்கு மஃவா என்பது சுவனத்தின் பெயர்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.

அத்ன்
நிரந்தரம் என்ற பொருளைக் கொண்ட இந்தச் சொல்லை சுவர்க்கத்தைக் குறிக்கும் சொல்லுடன் இணைத்து கூறப்பட்ருக்கின்றது.

“நம்பிக்கையாளர்களான ஆண்கள், நம்பிக்கையாளர்களான பெண்கள் ஆகியோருக்கு சுவனச்சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான், அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள், அத்ன் சுவனச் சோலைகளில் சிறந்த குடியிருப்புக்களும், (அல்லாஹ்வின்) மாபெரும் பொருத்தமும் உண்டு, அதுவே மக்கதான வெற்றியாகும் (அத்தவ்பா: வசனம்: 72).

மேலும் விபரங்களுக்கு பார்க்க:
(அர்ரஃத். -23),
(அந்நஹ்ல் -31),
அல்கஹ்ஃப் -31),
(மர்யம்-61),
(தாஹா-76),
(பாத்திர்-33),
(ஸாத்-50),
(காபிர்-8),
(அஸ்ஸஃப்-61),
அல்பய்யினா-8)

அவர்களும், அவர்களின் மூதாதையர், மற்றும் மனைவியர், அவர்களின் சந்ததியினர் ஆகியோர் “அத்ன்” என்ற சுவனத்தில் நுழைவார்கள், வானவர்கள் அனைத்து வாயில்களாலும் நுழைந்து உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவார்கள். (அர்ரஃத் வசனம்:22-23)

عن سَمُرَةُ بْنُ جُنْدَبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنَا أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ فَابْتَعَثَانِي فَانْتَهَيْنَا إِلَى مَدِينَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ فَتَلَقَّانَا رِجَالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ وَشَطْرٌ كَأَقْبَحِ مَا أَنْتَ رَاءٍ قَالَا لَهُمْ اذْهَبُوا فَقَعُوا فِي ذَلِكَ النَّهْرِ فَوَقَعُوا فِيهِ ثُمَّ رَجَعُوا إِلَيْنَا قَدْ ذَهَبَ ذَلِكَ السُّوءُ عَنْهُمْ فَصَارُوا فِي أَحْسَنِ صُورَةٍ قَالَا لِي هَذِهِ جَنَّةُ عَدْنٍ وَهَذَاكَ مَنْزِلُكَ قَالَا أَمَّا الْقَوْمُ الَّذِينَ كَانُوا شَطْرٌ مِنْهُمْ حَسَنٌ وَشَطْرٌ مِنْهُمْ قَبِيحٌ فَإِنَّهُمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا تَجَاوَزَ اللَّهُ عَنْهُمْ- صحيح البخاري

என்னிடம் இருவர் இன்றிரவு (கனவில்) வந்தனர். என்னை ஒரு தங்கம், வெள்ளிக் கற்களால் கட்டப்பட்ட ஒரு நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். எம்மை சில மனிதர்கள் (இடையில்) சந்தித்தனர். அவர்களில் தோற்றதில் அரைப்பகுதி நீ காண்கின்ற சிறந்த அழகைப் போன்றதாக இருந்தது. மற்ற அரைப்பகுதி நீ காண்கின்ற மிகவும் அசிங்கமான தோற்றமாக காட்சி தந்தது. அவர்களிடம் நீங்கள் இதோ இந்த நதியில் மூழ்கி விடுங்கள் எனக் கூறப்பட்டதும், உடனே அவர்கள் அதில் வீழ்ந்தார்கள். அவர்களிடம் (முதலில்) காணப்பட்ட அந்த தீய தோற்றம் அவர்களை விட்டும் அகன்று விட்டது. இதன் பின், மிகவும் அழகிய தோற்றத்தை உடையவர்களாக அவர்கள் மாறினர். (அந்த மனிதர்களிடம்) இது ஜன்னத்து அத்ன், இதுவே உனது தங்குமிடம் எனக் கூறப்பட்டது. ஒரு பகுதி அழகியதும், மறுபகுதி அசிங்கமுமான தோற்றத்தில் இருந்தோர் தமது நல்ல அமல்களுடன் தீய அமல்களையும் கலந்தவர்கள் இவர்கள் பற்றி விளக்கம் தரப்பட்டது. (புகாரி).

ஜன்னத்துன் நயீம், ஜன்னத்துல் குல்த்
சுவனத்தைக் குறிக்க ஜன்னத்துன் நயீம், ஜன்னத்துல் குல்த், “ஜன்னத்து அத்ன்” என இடம் பெறும் வாசகங்களுடன் “ஜன்னா” (சொர்க்கம்) என்ற சொல் இணைக்கப்பட்டு, அதில் காணப்படும் இன்பங்கள், தன்மைகள் போன்றவற்றை விபரிக்கப்படுகின்றது. (அல்லாஹ்வே மிக அறிந்தவன்)

சுவனவாதிகளின் பண்புகள், தன்மைகள்
உலகில் வாழும் மனிதர்களில் நல்லவர்களே சுவனத்தின் வாரிசுகள். சுவனம் ஒரு தூய்மையான தேசம். அதில் வசிக்க வருபவர்களும் தூய பண்புடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகின்றான்.

பாவிகளான முஸ்லிம்கள் நரகத்தில் போடப்பட்டு தூய்மைப் படுத்துப்படுவதும், ஸிராத் பாலத்தில் முன்னால் சிலர் தடுத்து பரிசுத்தப்படுவதும் இதற்காவே. இந்தத் தூய்மை ஆன்மீகத்துடன் தொடர்புடையது மாத்திரமல்ல, மனித உடலுடன் காணப்படும் வெளிப்படையான தூய்மையையும் குறிக்கும் என்பதை பின்வரும் நபி மொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

சுவனத்தில் முதலாவது நுழையும் குழுவின் தோற்றம் பௌர்ணமி இரவின் நிலவு போன்றதாகும். அவர்கள், அதில் (எச்சில்) துப்பமாட்டார்கள், மூக்கு சிந்தமாட்டார்கள், மலம் கழிக்கமாட்டார்கள், அவர்களின் சீப்புக்கள் தங்கம், வெள்ளியினாலானதாகும், அவர்களின் வாசனைத் திரவியம் தட்டு உலுவ்வா எனப்படும் மணக்கட்டையாகும். அவர்களின் வியர்வை வாசனை நிறைந்த கஸ்தூரியாகும், அவர்கள் ஒவ்வொருக்கும் இரு மனைவியர் இருப்பார்கள், அழகின் காரணமாக அவ்விருவரினதும் கெண்டைக்கால் மஜ்ஜை உள்ளிருந்து தெரியும். அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகளோ, குரோதமோ இருக்காது, அவர்களின் இதயங்கள் ஒரு மனிதனின் இதயம் போன்றதாகும். அவர்கள், காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வை துதிப்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவனவாதிகளின் காணிக்கை (முகமன்)
உலகில் முஸ்லிம்கள் தமக்கு அறிமுகமான, அறிமுகமற்ற ஏனைய முஸ்லிம் சகோதரர்களுக்கு பரஸ்பர ஸலாம் கூறிக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் கட்டளை இட்டுள்ளது. “உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக” என்ற சாதாரண பொருளுடைய வார்த்தையாக நாம் எண்ணி விடக்கூடாது அது பல சிறப்புக்களைக் கொண்டதாகும்.

சுவர்க்கத்தில் இருப்போர் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றபோது கூறிக்கொள்ளும் காணிக்கையாக ஸலாமை அல்லாஹ் அறிமுகம் செய்கின்றான்.

تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُ سَلَامٌ

அவர்கள் சந்திக்கும் அந்த நாளின் காணிக்கை ஸலாம் என்பதாகும். (அல்அஹ்ஸாப்: வசனம்:44)

تَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ

அவர்களின் காணிக்கை ஸலாமாகும் (இப்ராஹீம்: வசனம்: 23)

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

One comment

  1. excellent jazakallah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *