Featured Posts

[05] எச்சரிக்கை

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-5

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது!

பித்அத்தை யாராவது நல்ல பித்அத் கெட்ட பித்அத் என்று பிரிப்பாரானால் அவர் மிகப் பெரிய தவறை செய்தவராவார், இன்னும் நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கு மாற்றம் செய்தவராவார். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ‘ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்’ எனக்கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு என்பது தான். ஆனால் ஒருவன், ‘ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடு கிடையாது, நல்ல பித்அத்துகளும் இருக்கின்றன’ என்று கூறுவானானால் இது மிகப்பெரிய தவறாகும்.

ஹாபிழ் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் ‘ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடு’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று நபியுடைய குறைந்த வார்த்தைகளின் செறிந்த கருத்தை உடையதாகும். இது இஸ்லாத்தின் மகத்தான ஒரு அடிப்படையைச் சொல்கிறது, ‘எவர் மார்க்கத்தில் நாம் ஏவாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்’ என்பதும், அதை இன்னும் தெளிவாகக்காட்டுகிறது. புதிதாக ஏற்படுத்தப்படுபவைகளுக்கு மார்க்கத்தின், முலாம் பூசப்படுகிறது, ஆனால் அவைகளுக்கு மார்க்கத்தின் எந்த அடிப்படையும் கிடையாது, அவைகள் வழிகேடாகும், அதை யார் ஏற்படுத்துகிறார்களோ அது அவர்களின் பாலே மீளக்கூடியதுமாகும். மார்க்கம் அப்படியான செயல்களை விட்டு முழுமையாக நீங்கியதாகும். அவை கொள்கை சார்ந்தவையாக இருக்கலாம், அல்லது செயல்கள் சார்ந்தவையாக இருக்கலாம், அல்லது வெளிப்படையான, மறைவான சொற்கள் சார்ந்தவையாக இருக்கலாம் அனைத்தும் இது உள்ளடக்கும்.

நல்ல பித்அத்துக்கு இவர்களிடம் இருக்கும் ஒரே ஆதாரம். உமர் (ரலி) அவர்களின் தராவீஹ் தொழுகை பற்றிய கூற்றாகும்: (இது ஒரு நல்ல பித்அத்தாகும்). இன்னும் அவர்கள் சொல்வது ஸலபுகள் நிராகரிக்காத மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பல விடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஒரே ஏடாக குர்ஆனை ஒன்று சேர்த்தது, ஹதீஸை எழுதியது அதை ஒன்று சேர்க்க ஏற்பாடுகள் செய்தது.

இவைகளுக்கெல்லாம் பதில், இவர்கள் சொல்கின்ற இந்த அனைத்துக்கும் மார்க்கத்தில் ஒரு அடிப்படை உள்ளது, இவைகள் புதியவைகள் அல்ல. உமர் (ரலி) அவர்களின் (இது ஒரு நல்ல பித்அத்தாகும்). என்ற கூற்றைப் பொறுத்த வரையில் அது மொழி ரீதியாக நாடப்பட்ட ஒரு வார்த்தையே தவிர மார்க்க ரீதியாக நாடப்பட்டதல்ல. அதன் பால் மீள்வதற்கு மார்க்கத்தின் எந்த அடிப்படையும் கிடையாது, அது பித்அத் என சொல்லப்படுமானால் மொழி ரீதியானதே தவிர மத ரீதியானது கிடையாது. ஏனெனில் மார்க்கத்தில் எந்த அடிப்படையுமில்லாத ஒன்றைத்தான் பித்அத் எனக் கருதப்படும்.

குர்ஆனை ஒரு ஏடாக ஒன்று சேர்த்ததற்கு மார்க்கத்தில் அடிப்படை இருக்கிறது, ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதுவதற்கு ஏவினார்கள், அவை பல இடங்களில் எழுதிவைக்கப்பட்டிருந்தன. அவைகளைத் தான் ஸஹாபாக்கள் பாதுகாக்கவேண்டுமெனக் கருதி ஒரே ஏட்டுக்கு ஒன்று சேர்த்தார்கள்.

தராவீஹைப் பொறுத்த வரையில் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு பல இரவுகள் தொழுவித்தார்கள். இறுதியில் அது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தான் விட்டார்கள். ஸஹாபாக்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே தனித் தனியாக பிரிந்து அதை நிறைவேற்றிக்கொண்டு தான் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்கள், அவர்களை ஒரே இமாமுக்குக் கீழ் ஒன்று படுத்தினார்கள் நபியவர்களுக்குப் பின்னால் இருந்து தொழுததைப் போல, இது மார்க்கத்தில் ஒன்றும் புதியது கிடையாது.

ஹதீஸ்களை எழுதியதற்கும் மார்க்கத்தில் ஒரு அடிப்படை இருக்கிறது, ஹதீஸ்களை எழுதுவதற்கு சிலர் நபியிடத்திலே அனுமதி கேட்ட பொழுது, ஒரு சிலருக்கு நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள், ஆனால் நபியுடைய காலத்தில் பொதுவாக ஹதீஸ்களைப் பதிவு செய்வது தடை செய்யப்பட்டிருந்தது, காரணம் அது குர்ஆனுடன் கலந்து விடுமோ என்ற அச்சத்தில் தான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் இந்த அச்சம் நீங்கி விட்டது ஏனெனில் குர்ஆன் பரிபூரணமாகி விட்டது. அதற்குப் பின் சுன்னாவை பாதுகாக்கும் நோக்கில் முஸ்லிம்கள் அதை ஒன்று திரட்டினர்.

அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் நபியுடைய சுன்னாவுக்கும் தீயவர்களால் எந்த கலங்கமும் வந்து விடக்கூடாது என்பதற்காக அதை பாதுகாப்பதில் முழு முயற்சி எடுத்துக் கொண்ட அந்த உத்தமர்களுக்கு அல்லாஹ் சிறந்த கூலியை வழங்குவானாக!

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *