-மௌலவி யூனுஸ் தப்ரீஸ். சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை
இந்த உலகத்தில் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இன்றுவரை பல கோடி மக்கள் படைக்கப்பட்டுள்ளார்கள். அன்றைய காலம் முதல் இன்றுவரை அவரவர் விரும்பியவர்களை (மகான்களை) கடவுளாக அமைத்துக் கொண்டார்கள். காலப்போக்கில் அவர்களே தனது குல தெய்வங்களாக மாற்றப்பட்டு வணங்கி வரப்படுகின்றது.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அல்லது ஒவ்வொரு சமயத்திற்கும் அவரவர் நம்பிக்கை வைத்த கடவுள்கள் இருக்கிறார்கள். அவரவர் சமயத்திலிருந்து அடுத்த சமயத்தவர்களின் கடவுளைப் பார்க்கும்போது அது அவர்களுக்கு குறையாகவே விளங்கும். அதேபோல ஏனைய வணக்கங்களையும் ஏளனமாகவே பார்ப்பார்கள். இப்படித்தான் இன்றைய உலகில் மக்களும் சமயங்களும் இருந்து வருகின்றன.
ஒருவர் விரும்பும் கடவுளை ஏதோ ஒரு விதத்தில் குறையாகக் கூறினால் அந்த சமுதாயமே வெகுண்டு எழுந்து, பிரச்சினைகளை ஏற்படுத்துவதைக் காண்கிறோம்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை இந்த உலகத்தைப் படைத்து, பரிபாலிப்பவன் அல்லாஹ் ஒருவன்தான். வேறு எந்த கடவுள்களும் கிடையாது. மனிதனாகப் பிறந்து, உலகத்தில் மதிக்கப்பட்டவர்கள் கடவுளாக மாற்றப்பட்டுள்ளார்கள் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது.
படைக்கப்பட்ட மனிதர்களை இறைவனாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இறைவன் குர்ஆன் மூலமும் நபியவர்கள், ஹதீஸின் மூலமும் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இந்த உலகத்தில் வாழும்போது இறைவனுக்கு நெருக்கமான அடியார்களான நபிமார்களையோ அல்லது நல்லடியார்களையோ அவர்களது மரணத்திற்குப் பின் அடக்கஸ்தலங்களை வணங்கப்படும் இடமாக ஆக்கக் கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், அது இறைவனால் மன்னிக்கப்பட மாட்டாது என்பதை இஸ்லாமியர்கள் உட்பட எல்லா மக்களுக்கும் இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கிறது.
அதே நேரம் தவறான கொள்கையில் இருப்பவர்களையும் மூட நம்பிக்கையில் இருப்பவர்களையும் அழகான முறையில் தெளிவுகளை எடுத்துக்காட்டி, சரியான வழியின் பக்கம் இஸ்லாம் அழைக்கும்படி கூறுகிறது.
பிறரை திருத்துகிறோம் என்ற பெயரில் அல்லது பிறருக்கு உண்மையான மார்க்கத்தை எடுத்துச் சொல்கிறோம் என்ற பெயரில் தனிப்பட்டவர்களை தரக்குறைவாக பேசவோ அல்லது மானபங்கப்படுத்தவோ அல்லது அவர்கள் நம்பியிருக்கும் கடவுள்களை தரக்குறைவாக விமர்சிக்கவோ இஸ்லாத்தில் உள்ள எவருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.
தஃவாவிற்கு என்று இஸ்லாம் அழகான வழிமுறைகளை நமக்குக் காட்டியுள்ளது. அதனால்தான் “அந்தத் தூதரிடம் அழகிய முன்மாதிரியுள்ளது! என்று படைத்தவன் கூறுகிறான். நபியவர்கள்தான் நமக்கு வழிகாட்டி, அந்த நபியவர்களின் அணுகுமுறைகளை நாம் நமது தஃவாவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கொலை வெறி பிடித்த, மௌட்டீகத்தில் வாழ்ந்த, எப்படி வாழ வேண்டும் என்று தெரியாத, மனிதனை மனிதன் மதிக்கத் தெரியாத அந்த ஜாஹிலிய்யாக் கால மக்களையே நபியவர்கள் தனது தஃவாவில் வென்றெடுத்தார்கள் என்றால், நாம் ஏன் எல்லை மீறி விமர்சிக்க வேண்டும்? இதை இஸ்லாம் முற்றாகத் தடைசெய்கிறது.
இந்தக் கடவுள்கள் மனிதனால் செய்யப்பட்டது. இவர் இந்த உலகில் வாழ்ந்தார். இதற்கு முன்னரும் இவரைப்போல பலரை கடவுளாக அமைத்துக் கொண்டார்கள். இவைகளினால் ஒன்றும் செய்ய முடியாது என்பது அந்த அந்த மக்களுக்கே நன்றாகத் தெரியும். அவரவர்கள் வேதத்தில் இஸ்லாம் பற்றி அல்லது நபி பற்றி சொல்லப்பட்ட செய்திகளையும், முன் வந்த நபிமார்களின் செய்திகளை எடுத்துக் காட்டினாலே தானாக இஸ்லாத்திற்குள் வந்து விடுவார்கள். அதையும் சொல்லக்கூடிய அமைப்பில் சொல்ல வேண்டும். ஏன் என்றால் பிற கடவுள்களை ஏசக் கூடாது என்பது அல்லாஹ்வுடைய கட்டளை.
“அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.” (6:108)
முஸ்லிம் அல்லாதவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டோரை தரக்குறைவாகப் பேசுவதோ, விமர்சிப்பதோ, ஏசுவதோ கூடாது. அவர்கள் எவ்வளவு தான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாகக் கருதுவதை நாம் ஏசக்கூடாது.
நாங்கள் உண்மையில் இருக்கிறோம், எங்களுக்கு எந்தப் பயமுமில்லை என்று கண்மூடித்தனமாக நடந்துகொள்ளக் கூடாது. ஒரு தனி மனிதனோ ஒரு சமுதாயமோ தவறில் இருக்கும்போது அவர்களை எப்படித் திருத்த வேண்டும் என்ற அணுகுமுறை தெரிந்திருக்க வேண்டும்? எடுத்த எடுப்பிலே அவர்களின் மனம் நோகடிக்கப்படும் விதத்தில் நடந்து கொண்டால், நாம் எவ்வளவுதான் சரியாக எதைச் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள். மாறாக பேசுபவர்களோடு பிரச்சினைக்குத்தான் வருவார்கள். அதன் பிறகு அந்த வாசலை திறப்பது என்பது கஷ்டமாகிவிடும்.
நபி (ஸல்) அவர்கள் தனிமனிதனுடைய விடயத்திலும், சமுதாயத்துடைய விடயத்திலும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை ஓரிரு விடயங்களைக் கவனியுங்கள். செய்திகளை சுருக்கமாகத் தருகிறேன்.
பள்ளியில் சிறுநீர் கழித்த காட்டரபியிடம் அந்தத் தவறை சுட்டிக்காட்டிய விதத்தை சிந்தித்துப் பாருங்கள். அவர் சிறுநீர் கழிக்கும்போது நபித்தோழர்கள் ஆவேசப்பட்டார்கள். அந்த ஆவேசத்தை நபியவர்கள் அமைதிப்படுத்தி, இறுதியில் இலகுவாக நடந்து கொள்ளுங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். நற்செய்தியை கூறுங்கள், வெருண்டு போகக்கூடிய அமைப்பில் நடந்துகொள்ளாதீர்கள் என்று கூறினார்கள்.
அதுபோல் எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள் என்று ஒருவர் நபியிடம் அனுமதி கேட்டபோது, நபித்தோழர்கள் ஆத்திரப்பட்டார்கள். ஆனால், நபியவர்கள் அந்தத் தவறை அழகான முறையில் எடுத்துக் காட்டி, அது தவறு என்பதை உணர்த்தினார்களா? இல்லையா? நீ விபச்சாரம் செய்யப்போவது ஒருவருடைய மனைவியாக இருப்பாள், அல்லது சகோதரியாக இருப்பாள் அல்லது தாயாக இருப்பாள் அல்லது சாச்சியாக இருப்பாள் என்று அடுக்கிக் கொண்டே போய்விட்டு, உனது மனைவியிடத்தில் அல்லது உனது சகோதரியிடத்தில் அல்லது உனது தாயிடத்தில் என்று சொல்லும்போது, அவர் அதனுடைய விபரீதத்தை உணர்கிறார்.
இப்படி பல நிகழ்ச்சிகளை வரலாற்றில் காணலாம். அதுபோல சமுதாயம் சம்பந்தப்பட்ட விடயத்தை ஹுதைபிய்யா உடன்படிக்கையில் காணலாம். எல்லா நபித்தோழர்களும் முடியாது, நாங்கள் அதிகமாக இருக்கிறோம், எங்களிடம் பலம் இருக்கிறது, நாங்கள் உண்மை கொள்கையில் இருக்கிறோம், நீங்கள் உண்மையான நபியாக இருக்கிறீர்கள், அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான் என்று கூறியபோதும், நபியவர்கள் எப்படி அந்நிய சமுதாயத்தோடு நடந்து கொண்டார்கள். இறுதியில் வெற்றி யாருக்குக் கிடைத்தது.
உதாரணத்திற்கு முஸ்லிம்கள் சாப்பாட்டில் எச்சி துப்பித்தான் பிறருக்குக் கொடுப்பார்கள். அந்நியர்களுடைய காணிகளை அபகரிக்கும்படி குர்ஆனில் உள்ளது என்று எரிச்சலை உண்டுபண்ணக் கூடிய அளவிற்கு பேசுகிறார்கள் என்றால், அது தவறு என்பதை அழகான முறையில் தஃவா அமைப்புகள் சுட்டிக்காட்ட வேண்டும். நீ பொய் சொல்கிறாய் -விவாதத்திற்குத் தயாரா? என்ற அவர்களது சூழ்ச்சி தெரியாமல் மாட்டிக் கொள்ளக் கூடாது. இது பொய் தான் என்று அவர்களது சமூகமே சொல்கிறது. அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் அவசரப்பட்டு நமது சமூகத்தை பலிக்கடாவாக கொடுத்து விடக்கூடாது. சமூகத்தால் பழிக்கப்பட்ட கூட்டமாகவும் மாறிவிடக் கூடாது.
எனவே தஃவா களத்தில் செயல்படும் தனிநபராக இருக்கலாம், அமைப்பாக இருக்கலாம், கள நிலவரங்களை அறிந்து யாரிடம் எப்படி தஃவாவை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அணுகுமுறையை நாம் அமைத்துக் கொள்வதோடு, நம்மிடத்தில் அழகிய பண்புகளையும் பழக்கங்களையும் ஒழுங்குகளையும் நாகரிகங்களையும் பண்பாடுகளையும் அமைத்துக் கொள்வது கட்டாயக் கடமையாகும்.