– மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்)
இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சென்ற நோன்புப் பெருநாள் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறு விட்டது! ஒரு தவறு நடந்தால் அதிலிருந்து பாடம் படித்து, திருந்தி அது போன்ற தவறு மீண்டும் வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பிரச்சினைக்கு மற்றுமொரு பிரச்சினையே தீர்வாக மாறி வருகின்றது.
நோன்புப் பெருநாள் விவகாரத்தில் ஜம்இய்யதுல் உலமா விட்ட தவறால் இலங்கை முஸ்லிம்களில் பலரும் ஜம்இய்யதுல் உலமா மீது அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது பிறை விடயத்தில் தான்தோன்றித்தனமாக, ஆதாரங்களைக் கருத்திற் கொள்ளாது தமது சுய சிந்தனைகளையும், வாதப் பிரதிவாதங்களையும் முதன்மைப்படுத்தி நோன்பையும் பெருநாளையும் கொண்டாடிக் கொண்டிருக்கும் காளான் குழுக்களுக்கு நல்ல சந்தர்ப்பமாய் அமைந்துவிட்டது. ஹஜ்ஜுப் பெருநாள் விடயத்தில் மக்கள் எழுப்பி வந்த கேள்விகள் இதைத்தான் உணர்த்துகின்றது.
நோன்புப் பெருநாள் விடயத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜம்இய்யதுல் உலமா அல்லாமல் தனிப்பட்ட முறையில் சில அமைப்புக்கள் பிறை பார்க்கவும், பிறையைத் தீர்மானித்து அறிவிக்கவும் துணிந்துவிட்டன. இவ்வறிவிப்புக்களை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதில் மக்கள் திணறினர். இது சமூகத்தில் மேலும் மேலும் சிக்கலான நிலையைத் தோற்றுவிக்கலாம்.
கடந்த துல்ஹஜ் மாதத்தைத் தீர்மானிப்பதற்கான பிறையைப் பார்ப்பதற்காக ஜம்இய்யதுல் உலமா குறிப்பிட்டிருந்த தினத்திற்கு ஒரு நாளைக்கு முன்னரே இவ்வமைப்புக்கள் பிறையைப் பார்க்க ஆரம்பித்தன. தப்பித்தவறி யாராவது பிறை கண்டிருந்தால் தவ்ஹீத் சமூகம் மட்டுமல்லாது ஜம்இய்யதுல் உலமா மீது அவநம்பிக்கைக்கு உள்ளாகியுள்ள மக்களும் பெரும் குழப்பத்திற்குள்ளாகியிருப்பார்கள்.
எனவே, ஒவ்வொருவரும் தனித்தனியாக தமக்கென பிறை பார்த்தல் என்பது பிறை விவகாரத்தைத் தீராத பிரச்சினையாக மாற்றுவதாகவே அமையும். ஆகவே, குறைகளைக் களைந்து ஒருமுகமாகச் செயற்பட வேண்டியுள்ளது.
இதே வேளை பெரிய பள்ளியும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் இதனைத் தமது கைக்குள் மட்டும் வைத்துக் கொள்ளாது முழு முஸ்லிம் உம்மத்தின் விவகாரம் என்ற அடிப்படையில் எல்லா அமைப்புக்களையும் குறிப்பாக, தனித்தனியாகப் பிறை பார்க்க ஆரம்பித்துள்ள அமைப்புக்களையும் அரவணைத்துக் கொண்டு பிறைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவது பொருத்தமானதாகும்.
தொடரும் குழப்பமான பிறை விவகாரம் மக்களை சர்வதேசப் பிறை, கணிப்பீட்டுப் பிறை எனப் புதிய புதிய பிரச்சினைகளின் பால் நகர்த்திக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இம்முறை துல்ஹஜ் மாதத்தின் தொடக்கத்தை உள்நாட்டுப் பிறையின் படி ஆரம்பித்த பலர் அரபா நோன்பை வெளிநாட்டுப் பிறையில் பிடித்தனர். இதுவெல்லாம் மக்கள் குழம்பி இரண்டும் கெட்ட நிலையில் தள்ளாடுகிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
மக்காவில் அரபா தினம் என்பதைக் காரணம் காட்டி அதே தினத்தில் உள்நாட்டில் அரபா நோன்பு நோற்றுவிட்டு, உள்நாட்டுப் பிறைப்படி பெருநாள் கொண்டாடியோரும் உள்ளனர். அவர்கள் 9 ஆம் பிறையை சந்தேகத்திற்குரிய நாளாக தாங்களே பிரகடனம் செய்து கொண்டனர். இவ்வாறு செய்வது நபிவழிக்கு முரணானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பிறைக் குழப்பம் சமய ரீதியில் முஸ்லிம் சமூகத்தின் குழப்பமான நிலையைத் தெளிவுபடுத்துகின்றது என்றால் சமீபத்தில் நடந்த மாகாண சபைத் தேர்தல், முஸ்லிம் சமூகத்தின் குழம்பிப் போன அரசியல் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட எந்த நடவடிக்கைக்கும் எதிராக அரசு இயந்திரம் சட்ட ரீதியான எந்த எதிர் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் முஸ்லிம் மக்கள் அரசுடன் வெறுப்புடன் இருக்கின்றனர். எனவே, அரசுடன் சேராமல் தனித்துக் கேட்டால் சென்ற முறையை விட மேலதிகமான சில ஆசனங்களைப் பெறலாம் என முஸ்லிம் காங்கிரஸ் கணக்குப் போட்டது.
இவர்களது கணிப்பு சரியாக இருந்தாலும் பல முஸ்லிம்கள் அரசை விட முஸ்லிம் காங்கிரஸ் மீது வெறுப்புடன் இருக்கின்றனர். அடுத்து இவர்களுக்குப் போட்டாலும் பின்னர் போய் ஒட்டிக் கொள்ளத்தானே போகின்றார்கள் என எண்ணினர். அதனால் இருந்த ஆசனங்களையும் இழக்க நேரிட்டது.
முஸ்லிம்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட எதிர்க் கட்சி ஒரே பகுதியில் பல முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி முஸ்லிம்களின் வாக்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றது. வாக்குகளை சிதறியளித்த முஸ்லிம்கள் ஆசனங்களைப் பெறாமல் வாக்குகளை மட்டும் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
சில முஸ்லிம்கள் ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் தானா சொல்லுங்கள்?’ என எல்லோரையும் நோக்கி சுட்டுவிரல் நீட்டி வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
சிலர் அரசுக்கு வாக்களிப்பதன் மூலம்தான் சின்னச் சின்ன அபிவிருத்திகளைச் செய்து கொள்ளலாம். எம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என கணக்குப் போட்டனர். அவர்கள் ஆளும் தரப்புக்கு வாக்குப் போட்டனர். ஆனால், அதைக் கூட சமூக சிந்தனையோடு போடவில்லை. இதனால் அரசாங்கத் தரப்பில் போட்டியிட்ட பல முஸ்லிம் வேட்பாளர்களில் ஓரிருவரைத் தவிர ஏனையோர் வெற்றி பெறவில்லை. இது பெரும் இழப்பாகும்.
ஆனால், தமிழ் சமூகம் இந்தத் தேர்தலை முறையாகப் பயன்படுத்திக் கொண்டது. வட-கிழக்கில் அவர்கள் ஒருமித்த அரசியல் நிலைப்பாட்டில் நின்று உலகையே தம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். மலையகத்திலும் இம்முறை தமிழ் மக்கள் அரசியல் விழிப்புணர்வுடன் வாக்களித்து தமது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ் சமூகத்திடமிருந்து இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் படிப்பினை பெறவேண்டியுள்ளது.
யாருக்கு வாக்களிப்பது என்ற விடயத்தில் நாம் எந்த முடிவையும் சொல்ல விரும்பவில்லை. வாக்களிப்பில் வெறும் உணர்ச்சிக்கு அடிமையாகாமல் கட்சி, தனிநபர் மீதான மோகம் இல்லாமல் சமூக விழிப்புணர்வுடன், அரசியல் அறிவுடன் வாக்களிக்கும் பக்குவம் முஸ்லிம் சமூகத்தில் இல்லை என்பதையே இந்தத் தேர்தல் உணர்த்துகின்றது.
இந்த அரசியல் விழிப்புணர்வும், அரசியல் ரீதியிலான அறிவுபூர்வமான வழிகாட்டலும் முஸ்லிம் சமூகத்திற்கு அத்தியவசியமாகும். இந்தத் தேர்தல் சமூக ரீதியில் முஸ்லிம் சமூகம் பிளவுபட்டு பலவீனப்பட்டிருப்பதை மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
சமயத்துறையில் ஏற்பட்ட பிளவுக்கும் பின்னடைவுக்கும் ஆலிம்கள் காரணமாய் இருந்தது போல் அரசியல் துறையில் இந்த இழிவு நிலைக்கு ஆளாவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் தூர நோக்கமின்மையே காரணம் எனலாம்.
சமூக அரசியலைக் காப்பதை விடுத்து, இத்தலைவர்கள் சுயநல அரசியலைக் காத்துக் கொள்ளவே முழு வியூகம் வகுத்தனர் என்பதுதான் வெள்ளிடை மலையாகக் காட்டியது இந்தத் தேர்தல் முடிவுகள்.
சுயநலனுக்காகவும், கௌரவத்துக்காகவும், போட்டி-பெறாமைக்காகவும், அரசியலிலும் சமயத்திலும் இனியும் பிளவுபட்டுப் போனால் நம்மை நாமே அழித்துக் கொள்வதாகவே அது அமையும்.
எனவே, முஸ்லிம் சமூகம் சமய, சமூக ரீதியில் தன்னை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான கட்டத்தில் உள்ளது. இதனை முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்கள் உணர்ந்து ஒன்று சேர்ந்து முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்த முன்வர வேண்டும்.