இலங்கையில் அழுத்கம பகுதியில் நடந்த கலவரம்
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம்கள் அழிக்கப்பட்டார்கள்
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி-
இலங்கையில் அழுத்தகம எனும் பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக 15.06.2014 அன்று நடாத்தப்பட்ட இனக்கலவம் உலக ஊடகங்களின் கவனத்தை பெற்றது. பல நாடுகளில் இந்த இனப் படுகொலைக் கெதிராக பாரிய ஆரப்பாட்டங்களும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. முஸ்லிம்களின் இருப்புக்கெதிராக பௌத்த மத கடும் போக்குடைய இனவாத குழுக்கள் பயங்கரமாக செயற்பட்டதன் விளைவாக இந்த கலவரம் நடந்தது. பாரிய அழிவை ஏற்படுத்தி கொன்தளிப்புக்களை ஏற்படுத்திய இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் (23.06.2014) கருத்து தெரிவிக்கும் போது இது ஒரு சின்னப் பிரச்சனை. இதற்கெதிராக (முஸ்லிம்கள்) பாரிய ஹர்த்தால்களை மேற்கொள்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
அனைத்தையும் இழந்து அனாதரவான நிலையில் முஸ்லிம்கள் கண்ணீரோடு இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கூறும் வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் முஸ்லிம்களுக்கு பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. கலவரம் சம்பந்தமாக அரசு நீதமான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியாக நம்ப முடியவில்லை. அதே வேளை இந்த அனியாயங்களுக்கு காரணமான கடும்போக்குடைய பொதுபல சேனாவை பற்றி ஒரு வார்த்தையாலும் கண்டிக்காத ஜனாதிபதி முஸ்லிம்களின் இழப்பை பார்த்து துச்சமாக மதிக்கிறார். உயிர்களையும் உடமைகளையும் இழப்பது இவருக்கு சாதாரண பிரச்சனையாக தோன்றலாம். அதுவே அவரது குடும்பத்தில் நடந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்வாரா? இந்த நிலையில் அழுத்கம விவகாரத்தில் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை இக்கட்டுறை மூலம் வெளிப்படுத்த விளைகிறேன்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தி புனித குர்ஆனை கொச்சைப்படுத்தி கடுமையாக செயற்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பு தற்போது பகிரங்கமாகவே முஸ்லிம்களை எதிர்க்கத் துணிந்துள்ளது.
முஸ்லிம்களது பொருளாதாரத்தை நசுக்குவது முஸ் லிம்களை ஓட்டாண்டியாக ஆக்குவது பள்ளிவாசல் கள் மற்றும் முஸ்லிம் வர்த்தகங்கள் மீது தாக்குதல்கள் தொ டுப்பது என்ற நிகழ்ச்சி நிரல்கள்; அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களது அச்சத்தை போக்குவதற்கும் அமைதியைநிலைநாட்டுவதற்கும் அர சாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகமுன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான் அளுத்கமையில் தற்போது கலவரம் நடந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக அளுத்கமை பகுதியில் பதற்றமான சூழல் இருந்து வருகிறது. முஸ்லிம் ஒருவ ருக்கு சொந்தமான வர்த்தக நிலையமொன்று இரவு நேரத்தில் தீவைத்து கொளுத்தப்பட்டு முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
அதன் பின் 12.06.2014 அன்று தேரர் ஒருவர் பயணித்த வாகனத்தின் சாரதிக்கும் வீதியில் சென்ற முஸ்லிம் ஒருவருக்குமிடையில் வீதி ஒழுங்குசம்பந்தமாக கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இறுதியில் சமாதானமாகி முஸ்லிம்கள் தேரரிடம் மன்னிப்புக் கேட்டதும் பிரிசனை முடிவுக்கு வந்தது. இச்சம்பவத்தில் சம்பந்தப்படாத ராவ னபலய எனும் கடும் போக்குடைய அமைப்பின் தேரர் ஒருவர் பொலிஸ்க்குச் சென்று இப்பிரச்சனை சம்பந்தமாக முறையிட்டு தேரர் ஒருவர் மூன்று முஸ்லிம்களால் தாக்கப்பட்டுள்ளார் என பொய்கூறி புகார் செய்தார். இதற்கிடையில் எமதுதேரர் முஸ்லிம்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. பிரச்சனைகள் உருவாகாமல் தடுப்பதற்காக மூன்று முஸ்லிம்களும் பொலிஸிற்கு சென்று ஆஜராகினர்.
கடும்போக்குடைய குழுக்கள் தேரரை தாக்கியவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி ஆர்பாட்டமொன்றை நடாத்தினர். இம்மூன்று முஸ்லிம்களும் தேரரை தாக்கியதாக பொலிஸார் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பொலிஸ் நிலையத்தில் வைத்து இம்மூவரும் பொலிஸாராலும் தேரராலும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து நடுநிலமையான சிங்கள சகோதரர்கள் குறிப்பிடும் போது சாரதியிக்கும் முஸ்லிமுக்குமிடையில் நடந்த வாக்குவாதத்தில் தேரர் தாக்கப்பட வில்லை இருதரப்புக்குமிடையில் சமாதானத்தை ஏற்படுத்த பன்சலை குருமார்கள் நடவடிக்கை எடுத்தனர் என குறிப்பிடுகின்றனர். ஆனாலும் கடும்போக்குடைய இனவாத சிந்தனையுடைய குழுக்கள் இந்நிகழ்வை முன்வைத்து பெரும் பிரச்சனையை உருவாக்க திட்டமிட்டனர்.
இதன் நிமித்தமாக 15.06.2014 அன்று அளுத்கமையில் பாரிய எதிரப்புக் கூட்டம் பொதுபல சேனா மற்றும் கடும்போக்குடைய அமைப்புகளால் ஒழுங்குச் செய்யப்பட்டது. அளுத்கம பகுதிக்கு வெளியிலிருந்தும் பெரும் திரளான சிங்கள மக்கள் பஸ்களில் வரவழைக்கப்பட்டனர்
இக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிராக வெளிப்படையாக துவேஷங்களும் இனவாதக் கருத்துக்களும் பரப்பப்பட்டதுடன் மக்களை தூண்டும் வகையில் ஆக்ரோஷமாக பேசவும் செய்தனர்.
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட ஞான சார பேசும் போது மிகவும் வெறித்தனமாக பேசினார். நாம் மதவாதிகள் நாம் இனவாதிகள் தாம். முஸ்லிம் ஒருவருக்கு நீதி அமைச்சர் பதவியை அரசாங்கம் வழங்கியது மோட்டுத்தனமாகும். பேருவளை மற்றும் அளுத்கம பகுதியை சுற்றியுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு நாம் பொறுப்பல்ல. எம்முடன் விளையாட வேண்டாம். இரண்டாம் கட்ட நடவடிக்கை பாரதூரமானதாக இருக்கும் என்று ஆவேசமாக பேசிக் கொண்டு போனார் இவரது பேச்சின் சாராம்சம் இன்னும் எதற்காக சிங்களவர்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற வகையில் அமைந்திருந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முஸ்லிம்களை ஒருகை பார்த்து விட்டு போக வேண்டும் என்பது போல் செய்தி சொல்லப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்து செல்லும் போது முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் தர்கா நகர் நோக்கியே புறப்பட்டார்கள். போகும் வழியில் முஸ்லிம்களை நோக்கி கற்களை வீசி தாக்கத் துவங்கினர். கற்கள் போத்தல்கள் ஆகியவற்றை பைகளில் நிரப் பிக் கொண்டே இவர்கள் வந்திருந்தனர். தங்களது முதலாவது தாக்குதலை தர்கா நகர் பள்ளிக்கு சுமார் 100 மீட்டருக்கு முன்பாகவே தொடங்கினார்கள் அதன் பின்பே பள்ளிவாசலுக்குள் இருந்த முஸ்லிம்களை நோக்கி தாக்கத் தொடங்கினர். இதன் மூலம் அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி கலவரத்தை உண்டாக்கினர்.
கலவரத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அமுல் நடாத்தியது. முஸ்லிம்கள் வீடுகளுக்குள் அடங்கியிருந்தனர். ஆனால் கடும் போக்குடைய தீவிரவாதிகளோ வீதியில் நின்றிருந்தனர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பூரண பாதுகாப்புடன் இந்த காடையர்கள் நகரை சுற்றி வந்தனர். பள்ளி வாசலுக்குள் புகுந்த காடையர்கள் பள்ளிவாசலை தாக்கி பெற்றோல் குண்டுகள் மறறும் வெடி மருந்துகளை வீசி கொளுத்தியதுடன் அங்கிருந்தவர்ளையும் சுட்டுத் தள்ளினர். மூன்று பேர் பலியாகியதுடன் எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
பின்னர் முஸ்லிம் வீடுகளுக்குச் சென்று சிறியவர் பெரியவர் ஆண் பெண் அனை வரையும் பாரிய தடிகளால் தாக்கி கூர்மை யான ஆயுதங்களால் வெட்டினர். கை குழந்தை உட்பட ஏழு மாத குழந்தைகளும் வெட்டு காயங்களுக்கு ஆளாகினர். அதன் பின் பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து கொளுத்தினர். இதனால் பாட சாலை புத்தகங்கள் ஆவனங்கள் ஆடைகள் தளபாடங்கள் என்று அனைத்தும் சாம்பலாகின. உடுத்தியிருந்த ஆடைகளைத் தவிர வேறெதுவும் முஸ்லிம்களுக்கு மிச்ச மிருக்கவில்லை.
சில வீடுகளை கொளுத்த முன்னர் வாகன மொன்றை கொண்டு வந்து நிறுத்தி வீடுகளிலுள்ள பெருமதியான பொருட்களை தளபாடங்களை சூரையாடி கொள்ளையடித்து அவைகளை பத்திரமாக வானத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மானிக்க கல் வியாபாரிகளின் வீடுகளும் குறி வைக்கப்பட்டு பெறுமதியான கற்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த அயோக்கியர்கள் முஸ்லிம்களுக் கெதிராக கலவரத்தை தூண்டுவது கொள்ளையடித்து ஏப்பமிடுவதற்கும் வாழ்கையை ஓட்டுவதற்கும்தான்.
இச்செய்தி எழுதப்படும்வரை எடுக்கப்ட்ட கணக்கீட்டின் படி 80 வீடுகள் முற்றிலுமாக நாசப்படுத் தப்பட்டுள்ளதுடன் 140 வீடுகள் சேதமடைந்துள்ளன. 85கும் மேற் பட்ட வர்த்தக நிலையங்கள் அழிக்கப் பட்டுள்ளன. 2 பள்ளிவாசல்கள் 50 -க்கும் மேற்பட்ட வாகனங்கள்முற்றிலுமாக சேத மடைந்துள்ளன. இது தவிர ஆட்டுப் பண் ணையொன்றும் கொளுத்தப் பட்டதுடன் பாதுகாப்பாளராக இருந்த தமிழ் சகோதரர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். 2700 பேர் அகதிகளாகியுள்ளனர். 100 -க்கும் மேற் பட்டவர்கள் காயப்பட்டுள்ளனர்.
சுமாராக 100 கோடி ரூபாக்களுக்கு மேல் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்கிளல் இந்த வன்முறைகளை மேற் கொண்டது போல் பகல் பொழுதிலும் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள். ஆயுததாரிகள் என மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
கணவனை இழந்த பெண்களும் தந்தையை இழந்த அனாதைகளும் பிள்ளைகளை இழந்த பெற்றோரும் அனைத்தையும் இழந்த அப்பாவிகளும் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை இழந்த இளைஞர்களும் கண்ணீரோடு நிற்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு உலர் உணவு நிவாரனங்கள் மருத்துவங்கள் கூட அரசாங்கத்தினால் உரிய முறையில் ஆரம்பத்தில் வழங்கப்படவில்லை. முஸ்லிம்கள் ஓடோடிப் போய் அந்தப் பணிகளை செய்யும் போது அதற்கும் இந்த காடையர்கள் தடையாக நின்றனர்.
இத்தனை அட்டூளியங்களும் அட்டகாசங்கள் அடாவடித்தனங்களும் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் முன்னிலையில் -ஊரடங்கு சட்டத் தின்போது- நடந்துள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய படையினரே அயோக்கியர்களுக்கு அரவணைப்பை வழங்கியுள்ளனர். தேரர் தாக்கப்பட்டார் என பெய்யான செய்தியை உருவாக்கி பெரும் அழிவை முஸ்லிகளுக்கு கொடுத்து விட்டார்கள்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்பட்ட அத்தனை கலவரங்களிலும் பாரிய அழிவுகள் ஊரடங்கு நேரத்தின் போதே நடாத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தின் மூலம் முஸ்லிம்களை அடக்கி வைக்க முயற்சித்த அதே வேளை காடையர்களை நடமாட விட்டனர். ஏனைய பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் உள்ளே வரவிடாமல் தடுத்தனர்.
இப்பிரச்சனை சூடுபிடித்திருந்த வேளையில் கொழும்புக்கு மிக அண்மை யில் இருந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான மருந்தகம் (பார்மசி) இரவோடு இரவாக ஒரு கும்பலினால் அடித்து நொருக்கப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதலும் நடாத்தப்பட்டது.
அதற்கடுத்ததாக பதுளையில் இன வாதிகள் கூட்டம் நடாத்தி முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையத்தையும் தாக்கினர். இந்த அழிவை ஏற்படுத்த முஸ்லிம்கள் எந்த தேரரையும் தாக்கவில்லையே.
முஸ்லிம்களது வர்த்தக நிலையங்கள் பள்ளிவாசல்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிளை அடையாளம் காட்டிய பின்பும் பொலிஸார் எவரையும் கைது செய்யவுமில்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுமில்லை.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து துவம்சம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்த இனவாதிகளுக்கு முழு திருப்தி இதில் கிடைத்துள்ளது. ஆனால் இந்த திருப்தி நிரந்தரமாக அமையாது. அனியாயக்காரர்களை நிச்சயம் இறைவன் விடமாட்டான்.
ஒரு இனத்தை அழித்து இன்னுமொரு இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஒரு இனத்தை வேறருத்து ஆட்சியில் நீடித்த தலைவர்கள் அரசாங்கங்கள் இருந்ததாகவும் வரலாறு இல்லை. ஹிட்லர்களாக முசோலின்களாக உருவாக பலரும் நினைத்தாலும் அவர்களின் இறுதி முடிவு மிகக் கெட்டதாகும்.
முஸ்லிம்கள் படித்து கொள்ள வேண்டிய நிறைய பாடங்களை இந்த கலவரம் கற்றுத் தந்துள்ளது.
யா அல்லாஹ் எமக்கு மன அமைதியைத் தந்து எமது ஈமானை பலப்படுத்துவாயாக எமது காரியங்களை சீர் செய்வாயாக. உன் மீதே தவக்குல் வைக்கின்றோம். அனியாயக்காரர்களை உன்னிடமே ஒப்படைக்கின்றோம் உனது பிடியோ மிக கடினமானது.
சிங்கள இனவாதிகள் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கெதிராக நடத்திய அட்டூழியங்களை விரிவாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்த சகோதரருக்கு ஜஸாகல்லாஹு கைறன்.