அதாவது சம்பவங்களிலும் மனிதர்களின் வாழ்விலும் நட்சத்திரங்களின் தாக்கம் இருப்பதாக நம்புவது. இதுவும் ஷிர்க்காகும்.
ஸைத் பின் ஹாலித் (ரலி) அறிவிப்பதாவது: ‘ஹுதைபிய்யா எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். இரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி, உங்கள் இறைவன் என்ன கூறினான் தெரியுமா? என வினவினார்கள். அதற்கு, அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்! என தோழர்கள் கூறினர். பிறகு, ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்புபவர்களும் என்னை மறுப்பவர்களும் இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் அருளாலும் அவனுடைய கருணையாலும் தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் என்னை நம்பியவரும் நட்சத்திரத்தை நிராகரித்தவரும் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் என்னை நிராகரித்தவரும் நட்சத்திரத்தை ஏற்றுக் கொண்டவரும் ஆவார்’ என இறைவன் கூறினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
பத்திரிக்கைகளில் வரக்கூடிய ராசிபலன்களில் நம்பிக்கை வைப்பதும் இந்த வகையைச் சேர்ந்தது தான். அதிலுள்ள நட்சத்திர மற்றும் வானசாஸ்திரங்களை ஒருவன் நம்பினால் அவனும் இணை வைத்தவனாவான். ராசிபலனை ஒருவன் ஆறுதலுக்காகப் படித்தால், அவன் பாவியாவான். ஏனெனில் ஷிர்க்கான விஷயங்களைப் படித்து ஆறுதலடைவது கூடாததாகும். இன்னும் சொல்வதானால் சில வேளை ஷைத்தான் அவனுடைய உள்ளத்தில் ராசிபலனைப் பற்றிய நம்பிக்கையை விதைத்து விடுவான். பிறகு அது ஷிர்க்கில் வீழ்வதற்கு சாதனமாக அமைந்து விடும்.