– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
தஃவா பணியில் ஈடுபடுகின்றவர்கள் மீது மக்களுக்கு ஏற்படும் நல்லெண்ணம் என்பது தஃவாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்ற தாஈகளின் கருத்துக்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உங்களது தஃவா அதிகூடிய வெற்றியை வழங்குவதற்குப் பின்வரும் அடிப்படைகள் பெரிதும் உதவலாம்.
1. இஹ்லாஸ்
நாம் யாரை சத்தியத்தின் பால் அழைக்கின்றோமோ அந்த மக்கள் இவர் அல்லாஹ்வுக்காகத்தான் தஃவத் செய்கின்றார் என்று உறுதியாக நம்ப வேண்டும். இவர் புகழுக்காக அல்லது உலக ஆதாயத்திற்காக தஃவா செய்கின்றார் என நினைத்தால் சொல்லும் கருத்து உண்மையாக இருந்தாலும் அதை ஏற்று செயற்படுத்த முன்வர மாட்டார்கள். சில போது கருத்தை ஏற்றவர்கள் கூட எதிர்க்கக் கூடிய நிலை ஏற்படலாம்.
நபிமார்கள் பலரும் மக்களுக்கு தஃவா செய்யும் போது உங்களிடத்தில் நான் கூலியை எதிர்பார்க்கவில்லை என்பதைத் திரும்பத் திரும்ப கூறியுள்ளதும் இதைத்தான் உணர்த்துகின்றது.
2. அழைக்கப்படுபவனின் நலனில் அக்கறை:
நீங்கள் யாருக்கு தஃவா செய்கின்றீகளோ அவர் விடயத்தில் நீங்கள் அக்கறையுடன் இருப்பதாக அவர் உணர வேண்டும். அவர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் உயர்வடைய வேண்டும் என நீங்கள் விரும்புவதாக அவர் உணர வேண்டும்.
ஒருவரின் தவறை நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். இதன் மூலம் அவரை இழிவடையச் செய்ய நீங்கள் விரும்புவதாக அவர் உணர்ந்தால் உங்கள் கருத்தை ஏற்க மாட்டார்.எதிர்ப்பார். அத்துடன் உங்களிடம் சுட்டிக் காட்டுவதற்கு என்ன குற்றம் குறைகள் இருக்கின்றன எனத் தேடுவார்.
எனவே, யாருக்கு நீங்கள் தஃவத் செய்கிறீர்களோ அவர்களின் இம்மை, மறுமை முன்னேற்றத்தில் நீங்கள் அக்கறை செலுத்து கின்றீர்கள் என்பதை அவர்கள் உணரும் விதத்தில் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். அவர்களது உலக விடயத்திலும் ஆர்வம் காட்டுங்கள். இதோ இறைத் தூதர்(ச) அவர்கள் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
‘நிச்சயமாக உங்களில் இருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தையளிக்கின்றது. உங்கள் விடயத்தில் அவர் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்.நம்பிக்கையாளர்களுடன் கருணையும் இரக்கமுடையவருமாவார்.’ (9:128)
இறைத் தூதர்கள் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் இந்த உணர்வை வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
‘நிச்சயமாக நாம் நூஹை அவரது சமூகத்தாருக்குத் தூதராக அனுப்பினோம். அவர், ‘எனது சமூகத்தினரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனையன்றி வணங்கப்படத் தகுதியானவன் உங்களுக்கு வேறுயாரும் இல்லை. (நீங்கள் மாறு செய்தால்) நிச்சயமாக நான் மகத்தானதொரு நாளின் வேதனையை உங்கள் மீது அஞ்சுகின்றேன்’ என்று கூறினார்.’
(7:59)
இங்கே நூஹ்(அலை) அவர்கள் மகத்தான அந்நாளின் வேதனைக்கு நீங்கள் ஆளாகி விடுவீர்கள் என நான் அஞ்சுகின்றேன் என இரக்கப்படும் தொணியில் பேசி மக்கள் மீதான தனது நேசத்தையும், பாசத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
3. கனிவான அணுகுமுறை:
நாம் யாருக்கு தஃவா செய்கின்றோமோ அவர்களுடன் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அன்பான அரவணைப்பும் கனிவான வார்த்தையும் சில வேளை அவர்கள் உண்மையை உணர உதவலாம். அவர்களது உள்ளக் கதவுகளைத் திறக்கலாம்.
எல்லா நபிமார்களும் சிலை வணங்கக் கூடிய, அல்லாஹ்வை நிராகரிக்கக் கூடிய மக்களை அழைத்துப் பேசும் போது கூட ‘யாகவ்மீ!’ – என் சமுதாயமே! என விழித்தே அழைத்தனர். உங்களுக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என்ற தோறணையில் நடந்ததே இல்லை.
இவ்வாறே தங்களுடைய உறவு முறையை மறக்காமல் குறிப்பிட்டு அழைத்துள் ளனர். இப்றாஹீம் நபியின் தந்தை பெரும் சிலை வணங்கியாக இருந்தார்கள். இருப்பினும் ‘யா அபதீ’ – எனதருமைத் தந்தையே! என அந்த உறவைக் குறித்து விழித்துப் பேசியுள்ளார்கள்.
எங்களில் சிலர் தமது கொள்கை உறுதியைப் பறைசாட்டுவதற்காக தந்தை, மாமி போன்ற உறவுடைய மாற்றுக் கருத்துடையவர்களையும் அபூஜஹ்ல், பிர்அவ்ன் அவன்ட முகத்தையும் நான் பார்க்கிறதில்லை என்ற தோறணையில் பேசுகின்றனர்.
தவறில் இருக்கின்றவர்கள் மீது காட்டும் கோபம்தான் தமது கொள்கை உறுதிக்கான சான்று எனத் தப்பாக எடை போட்டு வருகின்றனர். சிலர் புதிதாக ஒரு கருத்தைப் புரிந்து கொள்வார்கள். அடுத்த நாளே அந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்தில் இருப்பவர்களுடன் வெறுப்பை வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வார்கள். நேற்றுவரை நானும் இவர்களது நிலைப்பாட்டில்தானே இருந்தேன் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. நான் திருந்திய உடனேயே முழு உலகமும் திருந்திவிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது சாத்தியப்படக் கூடியதல்ல.
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போரிடச்) சென்றால் (எதிரியையும் நண்பனையும் பற்றி) தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இவ்வுலக வாழ்வின் பொருட்களை விரும்பி, உங்களிடம் ஸலாம் கூறியவரிடம் நீர் நம்பிக்கை கொண்டவர் அல்லர் என்று கூறாதீர்கள். அல்லாஹ்விடமோ ஏராளமான வெகுமதிகள் உள்ளன. இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே, (நம்பிக்கை கொண்டோர் யார் என்பது பற்றி) தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.’
(4:94)
இதனை எண்ணி மாற்று நிலைப்பாட்டில் இருப்பவர்களுடன் அன்பாகவும், பண்பாகவும், கனிவாகவும், கண்ணியமாகவும் உண்மைகளை எடுத்துச் சொல்ல முயல வேண்டும்.
4. தீர்ப்புக் கூறுவதில் அவசரம் காட்டாதீர்கள்:
சிலர் தஃவா செய்வார்கள். அதை மக்கள் ஏற்காவிட்டால் காபிர், பாவி, பித்அத் காரன், உருப்படமாட்டான், திருந்தாத ஜென்மங்கள், ஜஹன்னவாதி (நரகவாதி) என்றெல்லாம் பேசிவிடுகின்றனர். சில போது தீர்ப்புக் கூறிவிடுகின்றனர். தெளிவுபடுத்து வதில் நான் குறைவிட்டிருக்கலாம் என்று எண்ணுவதில்லை. என்மீது உள்ள நம்பிக்கையீனத்தால் இந்த மக்கள் இந்த உண்மையை உணராமல் இருந்திருக்கலாம் என எண்ணுவதில்லை. ஹிதாயத் அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. அவன் இன்னும் நாடவில்லை என்று சிந்திப்பதுமில்லை. ‘எருமை மாட்டிற்கு மேல் மழை பொழிவது போல’ எவ்வளவு சொன்னாலும் இந்தக் கூட்டத்துக்கு ஏறவே ஏறாது என்று பேசிவிடுகின்றனர். சில போது மறுத்தவர்கள் குறித்துப் பேசும் போது அவனையென்டால் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று அல்லாஹ்வின் விடயத்தில் கூட தீர்ப்புக் கூறிவிடுகின்றனர். இவை தவறான போக்குகளாகும். இதனால் சில போது நம்மால் திட்டப்பட்டவன் நாம் கூறுவது உண்மை என்றாலும் நம்முடன் இணைந்து பணி செய்ய விரும்பமாட்டான்.
5. பழிவாங்குவது தஃவாவின் இலக்கு அல்ல:
சிலர் மாற்றுக் கருத்துள்ளவர்களைப் பழிவாங்குவதையே தமது தஃவாவின் இலக்காகக் கொள்கின்றனர். எப்படியாவது அவர்களின் குற்றம் குறைகளைத் தேடித் துருவிக் கண்டுபிடித்து அவற்றை ஊதிப் பெருப்பித்து பிரச்சாரம் செய்வதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம். அப்படியே தப்புத் தவறு கிடைக்காவிட்டால் நல்ல செயற்பாடுகளுக்குக் கூட உள்நோக்கம் கற்பித்து அல்லது அவதூறுகளை இட்டுக் கட்டி வஞ்சம் தீர்த்துக் கொள்கின்றனர். உண்மையான தஃவா என்பது பழிதீர்ப்பது, பள்ளத்தில் வீழ்த்திவிடுவது அல்ல. உள்ளத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதே உண்மையான தஃவாவாகும்.
இந்த வகையில் எதிரியின் குறைகளையும் மறைக்க வேண்டும். நல்ல அணுகுமுறை மூலம் எதிரியையும் நண்பனாக மாற்றிக் கொள்ளலாம்.
‘உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவு வைப்போருக்கு அவர் களிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது. எனினும் எவன் புறக்கணிக் கின்றானோ நிச்சயமாக அல்லாஹ் (அவனை விட்டும்) தேவையற்றவன்ளூ புகழுக்குரியவன்.’ (60:6)
‘உங்களுக்கும், அவர்களில் எவர்களை நீங்கள் பகைத்துக் கொண்டீர்களோ அவர்களுக்குமிடையில் அல்லாஹ் அன்பை உண்டு பண்ணுவான். அல்லாஹ் பேராற்றலுடையவன். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ (60:7)
நாம் யாரை வஞ்சம் தீர்க்க நினைத்து அவர்களது தவறுகளைக் கிளறி பகிரங்கப் படுத்துகின்றோமோ அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு பரிசுத்தமாகி இருந்தால் எமது நிலை என்ன? அல்லாஹ் மன்னித்தவனை மக்கள் மன்றத்தில் மட்டம் தட்ட எமக்கு என்ன உரிமை இருக்கின்றது? எனவே, தஃவா எனும் இந்த உயரிய பணியைப் பழி தீர்ப்பதற்கான ஊடகமாகப் பயன்படுத்தக் கூடாது. இது மக்களை சத்தியத்தை விட்டும் தூரமாக்கு வதுடன் அழைப்பாளன் மீது வெறுப்பையும் ஏற்படுத்தும்.
6. உரிய கண்ணியத்தைக் கொடுங்கள்:
உண்மைக்கு மாற்றமான கருத்தில் இருப்பவர் முதியவராக இருந்தால் அந்த வயதுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். சிறியவராக இருந்தால் அவருக்குரிய அன்பைக் கொடுத்தே தஃவத் செய்ய வேண்டும். நமக்கு முரணான நிலைப்பாட்டில் இருப்பவர் ஆலிமாக இருந்தால் அவரது இல்முக்குரிய கண்ணியத்தை வழங்கியே தஃவத் செய்ய வேண்டும். மாற்று இயக்கத்தில் மதிக்கப்படக் கூடிய தலைவர்களாக இருந்தால் அதற்குரிய சமூக அந்தஸ்த்தை வழங்கியே தஃவத் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் எமது தஃவத் வெற்றி பெறாத அதே வேளை, தேவையில்லாத வம்புகளுக்கும் நாம் ஆளாக நேரிடும்.
நபி(ச) அவர்கள் தாயிபில் இருந்து மக்கா வந்த போது முத்இம் என்ற முஸ்ரிக் அவருக்கு உதவினார். பத்ர் யுத்தம் நடந்த போது அவர் மரணித்துவிட்டார். பத்ர் போரில் காபிர்கள் எழுபது பேர் கைதிகளாகப் பிடிக்கப் பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் நபி(ச) அவர்கள் முத்இம் இப்போது உயிரோடு இருந்து இவர்கள் விடயமாகப் பேசினால் நான் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்கள்.
முத்இம் முஷ;ரிக்தான். ஆனால் நல்லவர். அவருக்குரிய மரியாதையை அவர் முஷ;ரிக்காக இருந்தாலும் மரணித்த பின்னர் கூட நபி(ச) அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்பதைத்தான் இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
இன்று பித்அத்துக்களை முன்நின்று செய்யும் சில உலமாக்கள் கடந்த காலங்களில் சமூகத்திற்கு பல சேவைகளைச் செய்துள்ளார்கள். அவர்களால் இந்த நாட்டில் பல இஸ்லாமிய அம்சங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களது கடந்த கால சேவைகளையெல்லாம் அள்ளிக் குப்பையில் போடுவது போல் பேசுவதென்பது எந்த வகையிலும் நபி வழியாக இருக்காது. எனவே, மக்களை அவரவர் அந்தஸ்த்திற்கு ஏற்ப அணுகுவது தஃவாவின் முக்கிய பண்பாகக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.
7. மறைவாக எடுத்துக் கூறல்:
புத்தி சொல்வது இப்போது யாருக்கும் பிடிப்பதில்லை. பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் புத்தி கூறும் போது வேண்டா வெறுப்புடன் அதனை செவிமடுக்கின்றனர். சில போது பெற்ற பிள்ளைக்குக் கூட அடுத்தவர் முன்னிலையில் புத்தி சொன்னால் பிடிப்பதில்லை. எனவே, அடுத்தவர்களுக்கு நல்லது கூறும் போது கூட முடிந்தவரை இரகசியமாக, மறைவாகக் கூற முனைய வேண்டும். குற்றங்களைப் பகிரங்கப்படுத்தி அடுத்தவர்களின் மானத்துடன் விளையாடக் கூடாது. மானத்துடன் விளையாடுவது எவ்வளவு மனவலியைக் கொடுக்கிறது என்பதைப் பின்வரும் சம்பவத்தைப் படித்தால் புரியும்.
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ‘ஹஜ் அல்லது உம்றாவின் போது நான் உமர்(ரழி) அவர்களுடன் இருந்தேன். நாம் ஒரு பயணக் கூட்டத்தைக் கடந்த போது அதில் ஒருவர் எங்களைத் தேடுவதாகத் தான் கருதுவதாக உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர் உமர்(ரழி) அவர்களிடம் வந்து அழுதார். அப்போது உமர்(ரழி) அவர்கள் உனது நிலை என்ன? நீ கடனாளியாக இருந்தால் உனக்கு உதவுகிறோம். நீ யாரையும் கொலை செய்திருந்தால் அதற்காக உம்மைக் கொல்வோம். அப்படி இல்லாமல் யாருக்காவது அஞ்சினால் உமக்கு நாம் பாதுகாப்பு அளிக்கின்றோம். உனக்குப் பக்கத்தில் இருப்பவர்களால் உனக்குப் பிரச்சினையென்றால் உன்னை வேறு இடத்திற்கு மாற்றுகின்றோம் என்று கூறினார்கள்.
வந்த மனிதர், நான் தய்யிம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். மது அருந்திவிட்டேன் அபூ மூஸா(ரழி) அவர்கள் எனக்குத் தண்டனை அளித்தார்கள். அத்துடன் எனது முகத்தில் கரியைப் பூசி மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். என்னுடன் யாரும் சேரக் கூடாதுÉ கூடி உண்ணக் கூடாது என்று கட்டளையிட்டார். இதனால் ஆத்திரமுற்ற நான் மூன்று முடிவுகள் எடுத்தேன்.
1. வாளை உருவி அபூமூஸாவைக் கொன்று விடுவது.
2. அல்லது என்னை நீங்கள் சிரியாவிற்கு இடம் மாற்ற வேண்டும். ஏனெனில், அவர்கள் என்னை அறியமாட்டார்கள்.
3. அல்லது நான் எதிரிகளுடன் இணைந்து அவர்களுடன் உண்டு, குடித்து வாழ்வது.
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத்தான் நான் செய்ய வேண்டும் என்றார். இது கேட்டு அழுத உமர்(ரழி) அவர்கள் அபூ மூஸா(ரழி) அவர்களைக் கண்டித்தார்கள்.’ (பைஹகி)
ஒரு மனிதரது பாவத்தைப் பகிரங்கப் படுத்துவது சில போது அவனை அவன் ஏற்கனவே செய்ததை விட பெரிய தவறுகளைச் செய்யத் தூண்டிவிடும். எனவே, அடுத்தவர்களின் தப்புத் தவறுகளை மறைக்க வேண்டும். தனிப்பட்ட தவறுகளை தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டித் திருத்த முற்படுவதே சிறந்ததாகும். பொதுவாக உபதேசிப்பதாக இருந்தால் தவறு செய்தவரைச் சுட்டிக் காட்டாமல் தவறைக் கண்டிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
8. அன்பளிப்புக்கள் மூலம் அணுகுதல்:
நீங்கள் யாருக்கு தஃவா செய்ய விரும்புகின்றீர்களோ அவர்களுக்கு சின்னச் சின்ன அன்பளிப்புக்களை வழங்கலாம். அதனால் அவர்களுக்கு உங்கள் மீது பாசமும் சினேகமும் ஏற்படும். உங்களை அவர் மதிக்க ஆரம்பிப்பார். தான் நேசிப்பவரின், மதிப்பவரின் வார்த்தைகளை உள்ளம் வெகு விரைவாக உள்வாங்கிக் கொள்ளும். நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்புக்களினூடாக அறப்பணி செய்துள்ளார்கள் என்பதை அவர்களது வழிகாட்டல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
‘ஸஅத்(ரழி) அவர்கள் அருகில் இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் சில மக்களுக்கு பொருளாதார உதவிகளைச் செய்தார்கள். ஆனால் ஒரு மனிதருக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. கொடுக்கப்பட்ட மக்களை விட கொடுக்கப்படாதவர் எனக்குச் சிறந்தவராக்கப்பட்டார். எனவே, யா யாஸுலுல்லாஹ்! ஏன் இந்த மனிதரை விட்டு விட்டீர்கள். நிச்சயமாக அவரை ஒரு முஃமினாக நான் கருதுகின்றேன் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அதன்படி செயற்படாத போது மூன்று முறை இதையே திரும்பத் திரும்ப ஸஅத்(ரழி) கூறிய போது நபி(ஸல்) அவர்கள்,
‘ஸஅதே! சில போது சில மனிதர்களுக்கு நான் பொருளாதார உதவிகளைச் செய்வேன். ஆனால் அவர்களை விட மற்றவர்கள் எனக்கு விருப்பமானவர்களாக இருப்பார்கள். ஏனெனில் நான் உதவி செய்யவில்லை என்பதால் தடம் புரண்டு அவர்கள் நரகத்தில் சென்று விழுந்து விடுவார்களோ என்ற அச்சமே காரணம் என்றார்கள்.’ (ஹதீஸ் கருத்து (புஹாரி, முஸ்லிம்))
எனவே, நபி(ஸல்) அவர்கள் சிலரது பலவீனங்களை அவதானித்து அவர்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கியுள்ளார்கள். இந்த அடிப்படையில் அன்பளிப்புக்கள் மூலம் உள்ளங்களை வெற்றி கொள்ள அழைப்பாளர்கள் முயற்சிக்கவும்.
9. மக்கள் தொடர்பு வேண்டும்:
தங்களது பேச்சைக் கேட்காதவர்களின் பேச்சை மக்கள் கேட்கமாட்டார்கள். இந்த வகையில் நீங்கள் யாருக்கு தஃவா செய்கின்றீர்களோ அவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் உங்களுடன் கதைக்கும் போது கொஞ்சம் காது கொடுங்கள். அக்கறையுடன் கேளுங்கள். அவர்களது பிரச்சினை தொடர்பில் நீங்கள் அக்கறையாக இருப்பதாக அவர்கள் உணர வேண்டும். உங்களைப் பார்த்து மக்கள் பேசும் போது முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாதீர்கள். அவர்கள் பேசும் போது அவர்களது பேச்சைத் துண்டிக்காதீர்கள். அவர்களது பேச்சு உங்களுக்குப் பொருத்தமற்றதாகத் தெரிந்தாலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். இருந்தாலும் அவர்களை எள்ளி நகையாடி விடாமல், ஏளனமாகப் பார்க்காமல் தட்டிக் கொடுங்கள்É ஆறுதல் கூறுங்கள். உங்கள் மீது அவர்களுக்குப் பிடிப்பு ஏற்படும். நபி(ச) அவர்களுடன் ஒருவர் உரையாடினால் பேச்சைத் துண்டிக்க மாட்டார்கள். முகத்தைத் திருப்பமாட்டார்கள். கையைக் கொடுத்தவர் கையைத் தானாக எடுக்கும் வரை தனது கையைப் பிடுங்கி எடுக்கமாட்டார் என்பதை எல்லாம் தாஈகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை போன்ற அணுகுமுறைகளூடாக உள்ளங்களைக் கவர்ந்தால் உண்மையை எடுத்துச் சொல்வது மிக இலகுவாக அமைந்து விடும். அதை ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் மக்கள் மனங்களும் மாறிவிடும்.
very very useful tips! jazakallahu khair! May ALLAH increase your knowledge! ‘dayees’ must follow these steps insha Allah!
Masha allah Migavum Payanulla Thalaippu
Inshaallah na fallow paniran