Featured Posts

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 3

அறிஞர்கள் போற்றும் பெருமானார்

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
– ஜவஹர்லால் நேரு –

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
– எஸ். எச். லீடர் –

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
– வாஷிங்டன் இர்விங் –

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும் மனித குலம். முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
– டாக்டர் ஜான்சன் –

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
– பெர்னாட்ஷா –

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
– நெப்போலியன் –

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
– ஜி.ஜி. கெல்லட் –

சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
– வில்லியம்மூர் –

ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
காந்திஜி –

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
– தாமஸ் கார்லைல் –

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
– டால்ஸ்டாய் –

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
– கிப்பன் –

செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.
– கலைஞர் கருணாநிதி –

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.

எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது. அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.

எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.
ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?
பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது. அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.

உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான். ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.

மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.

இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
– கவியரசி சரோஜினி நாயுடு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *