Featured Posts

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 7

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் அரேபிய நாட்டில் மிக காட்டுமிராண்டித்தனம் கோலோச்சிய அந்த நேரத்தில் ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்ட மக்களுக்கு மத்தியில் நின்று புரட்சிகரமான சில கொள்கைகளைச் சொல்லி, அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு யாராவது கிடைப்பார்களா? என்ற சந்தேகத்திற்கிடையே, அதைச் சொல்லத் தொடங்கி, முதலில் அவருடைய கொள்கை ஏற்றுக் கொண்டவர் அவருடைய துணைவியர், கதீஜா அம்மையார் என்ற அளவில் முதலில் அளவிற்குதான் அவருடைய வழியை பின்பற்றுகிறவர்கள் என்று தொடங்கி, இன்றைய தினம் அகிலம் முழுவதும் முழுவதும் ஈடு இணையற்று பெரும் இயக்கமாக இஸ்லாமிய மார்க்கம் பரவியிருக்கிறது என்றால் ‘ஐயோ’ இதை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லையே, நம்முடைய துணைவியார் மட்டும் தானே ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறார்’ என்ற சோர்வு அவருக்கு வந்திருக்குமேயானால் அந்தக் கொள்கைகள் இறுதியாக ஆக்கப்பட்டிருக்கும், இந்த அளவிற்கு வளர்ந்திருக்க இயலாது.

நபிகள் நாயகம் அவர்கள் உலகத்தைத் திருத்த முன் வந்தார். உலக மக்களைத் திருத்த முன் வந்தார். காட்டுமிராண்டித்தனத்தில் உழன்றவர்களைத் திருத்த முன்வந்தார். எதிர்ப்புக்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார் வாளோடு வாள் மோதுகின்ற போராட்டங்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார். சில நேரங்களில் எதிரிகளால் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஒடக்கூடிய சூழ்நிலையிலும் சிலகாரியங்களை அவர் துணிவோடு செய்ய முன்வந்தார்.

அந்தக் காலத்தில் அராபிய நாட்டுநிலையை எப்படி இருந்தது என்றால். பயணம் செல்கின்ற நேரத்தில் கூட பயணிகள் தங்களுடைய பயணத்தின் போது நான்கு கற்களை எடுத்துச் செல்வார்களாம். அதற்குக் காரணம் வழியில் சமையல் செய்ய மூன்று கற்களை வெத்து அதன் மீது பாத்திரங்களை வைத்து சமையல் செய்வார்களாம். நான்காவது கல் எதற்காக என்றால், ஆண்டவன் என்று அந்தக் கல்லை வணங்குவதற்காகவாம். இந்த அளவிற்கு கல்லில் கடவுளை வணங்க, இறைவனைக் காண, சிலையில் இறைவன் இருக்கிறான் என்ற உருவ வழிபாட்டில் அன்றைக்கே தங்களை ஆட்படுத்திக்கொண்டிருந்த உன்மத்தம் பிடித்த ஒரு நிலையை, தாங்கள் உருவாக்கிய ஒரு மாபெரும் புரட்சியால் தகர்த்துக் காட்டி ஒன்றே இறைவன். அந்த இறைவன் இட்டவழி அறவழி, அன்புவழி, அந்த வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கின்ற மார்க்க போதனையைச் செய்த மக்கள் சமுதாயத்தில் பெரும்பகுதியை தன்பால் ஈர்த்த மகத்தான சக்தி வாய்ந்த மனிதர்தான் நபிகள் நாயம் அவர்கள்.

நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. இன்று நாட்டிலே பார்க்கிறோம். பலபேரை. தங்களைத் திருத்திக்கொள்ள வக்கற்றவர்கள்-வகையற்றவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்லுவதும்-மற்றவர்களைத் திருத்திக்கொள்-திருத்திக்கொள் என்பதும், இன்றைக்கு வழக்கமாக ஆகி விட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை எந்த அளவுக்குச்செம்மையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒப்பற்ற மாமனிதர், இறைவனுடைய நிலை உருவத்திலேயில்லை. அது அவரவர்களுடைய அபிமானத்திலே இருக்கிறது. உள்ளத்தின் கருணையிலே இருக்கிறது. உள்ளம் பொழிகின்ற அன்பிலே இருக்கிறது என்கிற உயரிய கருத்தை உலகுக்கு வழங்கிய உத்தமர்.

-கலைஞர் கருணாநிதி-

நன்றி:
ஜே.எம். சாலி எம்.ஏ அவர்களின் “அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா”
பக்கம் : 42, 43
வெளியீடு: காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *