Featured Posts

அனைத்தும் அவனுக்கு அடிபணிந்தவையே! [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

“அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. மேலும் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.” (3:83)

இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்வதாகும். இஸ்லாத்தின் வழிகாட்டலை ஒரு மனிதன் மறுக்கலாம். ஆனால், அவன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை மீறி விட முடியாது. விரும்பியோ விரும்பாமலோ அவன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டை யாரும் மீற முடியாது.

ஒரு மனிதன் தனக்கு தாயாக, தந்தையாக யார் வர வேண்டும், தான் எந்த நாட்டில் எந்தக் காலத்தில், எந்த அமைப்பில் பிறக்க வேண்டும், தனக்குப் பிள்ளையாக யார் வர வேண்டும், தனது ஆரோக்கியம் எப்படி அமைய வேண்டும், நான் எப்போது எங்கே எப்படி மரணிக்க வேண்டும்… போன்ற எந்த விடயத்தையும் மனிதன் தீர்மானிப்பதில்லை. அவனைப் படைத்த அல்லாஹ்வே தீர்மானிக்கின்றான். மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது விடயத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும். இதில் அல்லாஹ்வுக்கு விரும்பியோ விரும்பாமலோ கட்டுப்படும் மனிதன் வாழ்க்கை வழிமுறை விடயத்திலும் விருப்பத்துடன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்கு ஏற்ப வாழ்வதுதான் சரியானதாகும்.

மனிதன் தான் யாருக்கும் கட்டுப்பட்டவன் இல்லை என்று கூறலாம். ஆனால், அது போலியான வாதமாகும். எல்லோரும் ஏதோ ஒரு விடயத்தில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டே உள்ளனர்.

” (உயிர்) தொண்டைக் குழியை அடையும்வேளை, அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களே! (அதை உங்களால் தடுக்க முடியுமா?)”

“நாமே உங்களைவிட அவனுக்கு மிக சமீபமாக இருக்கின்றோம். எனினும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள்.”

“நீங்கள் (எவருக்கும்) கட்டுப்படாத வர்களாக இருந்து, (அதில்) நீங்கள் உண்மை யாளர்களாகவும் இருந்தால் அ(ந்த உயிரா ன)தை மீட்டுங்கள் பார்க்கலாம்.” (56:83-87)

உங்கள் நேசத்திற்குரியவர்கள் மரணிக்கும் போது அருகில் இருந்து அழத்தான் உங்களால் முடிகின்றது. நீங்கள் எதற்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்றால் போன உயிரை மீட்டிக் கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என அல்லாஹ் கூறுவதன் மூலம் எல்லோரும் அவனது “கத்ர்” நிர்ணயம் எனும் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளனர் என்பதை உணர்த்துகின்றான்.

அடுத்து, வானம் மற்றும் பூமி அனைத்தும் விரும்பியே அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுவிட்டன.

“பின்னர் வானத்தின் பக்கம் நாடினான். அது புகைமண்டலமாக இருந்தது. பின்னர் அவன் அதற்கும் பூமிக்கும் ‘நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ வாருங்கள்” எனக் கூறினான். அவையிரண்டும் நாங்கள் விரும்பியவைகளாகவே வருகின்றோம் எனக் கூறினான். (41:11)

இந்த உலகம் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்பவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அவனைப் படைத்த அல்லாஹ்வே சரியாக அறிந்தவனாவான். அவன் காட்டிய இஸ்லாம் எனும் இந்த இயற்கை மார்க்கத்தை ஒருவன் பின்பற்றும் போது இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்வை வாழலாம். மனிதன் இஸ்லாம் அல்லாத அதற்கு முரணான ஒரு வாழ்க்கை வாழும் போது உலகம் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் போது அதற்கு முரணாக வாழ்வதாக அமையும். அந்த வாழ்வு அவனுக்கு வெற்றியளிக்காது. இயற்கைக்கும் அவனது நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாடு அவனுக்கு அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்காது.

எனவே, வானம், பூமி அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் போது மனிதனும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவன் காட்டிய வழிப்பிரகாரம் வாழ்வதே வெற்றிக்கான வழியாகும் என இந்த வசனம் வழிகாட்டுகின்றது.

வாழ்க்கை வழிமுறைகளில் அவனுக்குக் கட்டுப்படுங்கள். நீங்கள் வெறுத்த போதிலும், நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அவனுக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்கின்றீர்கள். இதை உங்களால் மீறவே முடியாது என்பதையும் இந்த வசனம் உணர்த்துகின்றது.

தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்:
“தவ்ராத் இறக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ராயீல் (எனும் யஃகூப் நபி) தனக்கு விலக்கிக் கொண்டதைத் தவிர அனைத்து உணவும் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு ஆகுமானதாகவே இருந்தது. ‘நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை ஓதிக் காட்டுங்கள்” என (நபியே!) நீர் கூறுவீராக!” (3:93)

நபி(ச) அவர்கள் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்த மதீனா பகுதியில் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். இறுதித் தூதர் இந்தப் பகுதிக்கு வருவார், அவரைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த யூதர்களின் முனோர்கள் மதீனா வந்தார்கள். இருந்தாலும் முஹம்மத் நபி வந்த போது யூதர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
யூத மதகுருக்கள் யூத வேதத்தைத் திரித்தனர். வேதத்தில் உள்ள பல விடயங்களை மக்களுக்குக் கூறாமல் மறைத்து வந்தனர். வேதத்தில் இல்லாதவற்றை வேதத்தில் இருப்பதாகவும் கூறிவந்தனர்.

முஹம்மத் நபி எழுதப் படிக்கத் தெரியாதவராவார். முன்னைய வேதங்களை அவர் படித்தவரும் இல்லை. யூத வேதத்தில் என்ன இருக்கின்றது என்பது யூத பண்டிதர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது, முஹம்மது நபி(ச) அவர்கள் யூத வேதத்தில் செய்யப்பட்ட திருகுதாளங்கள், திருவிளையாடல்கள் பற்றியும் பேசினார்கள். யூத மதகுருக்கள் மக்களை ஏமாற்றி சுரண்டுவது குறித்தும் கூறினார்கள். அவர்கள் வேதத்தில் இருப்பதாகக் கூறும் சில விடயங்கள் வேதத்தில் இல்லை என்றும் அவர்கள் மறுக்கும் சில விடயங்கள் வேதத்தில் இருப்பதாகவும் கூறினார்கள்.

யஃகூப் நபி தனக்குத் தானே தவ்றாத் இறங்குவதற்கு முன்னர் தடுத்துக் கொண்டதைத் தவிர மற்றைய அனைத்தும் இஸ்ரவேல் சமூகத்திற்கு ஹலாலாக இருந்தது என்றும் நீங்கள் சொல்வது உண்மை என்றால் தவ்றாத்தைக் கொண்டு வந்து வாசித்துக் காட்டுங்கள் என இங்கே சவால் விடப்படுகின்றது. யூத மதத்தின் பண்டிதர்கள் இந்த அழைப்பை ஏற்கத் தயங்கினார்கள். ஏனெனில், தாம் கூறுவது போல் வேதத்தில் இல்லை. முஹம்மத் கூறுவது போல்தான் தவ்ராத்தில் உள்ளது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

வேதத்தைப் படிக்காத, எழுத, வாசிக்கத் தெரியாத முஹம்மத் நபி, வேதத்தில் என்ன இல்லை, எது திரிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் விபரித்துள்ளார்கள் என்றால் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடம் இருந்து வஹி வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இல்லையென்றால் சாத்தியமாகாது!

முஹம்மது நபியின் இந்த அறைகூவல் அவர் ஓர் உண்மையான இறைத்தூதர் அவர் போதித்த அல் குர்ஆன் ஓர் இறை வேதம் என்பதற்கான சிறந்த சான்றாகத் திகழ்கின்றது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *