பொம்மைகளும் பேசும்
என்பதை
புரிய வைத்தவன்
என் பிள்ளை
மேலும் பல பொம்மைக் கனவுகளுடன்தான்
பிள்ளை என்னை
வேலைக்கு அனுப்புகிறான்
முத்தமிட்டு அவன் சிரித்தாலும்,
என் “மணிபேஸ்”
மடிவெடித்துப் போகிறது
அவனது ஏக்கங்களால்
என் காரியாலயக் கோவையின்
கோர்க்கப்பட்ட நாடாவுக்குள் அவனையும் சேர்த்து முடிந்தாற்போல ஒரு வலி
அவனுக்கேயுரித்தான எனது
பொழுதுகளை
காலாவதியாக்கி விடுகிறது
காரியாலயம்
கடமையில் நான்
காணும் மகிழ்ச்சியெல்லாம்
அவனது மௌனங்களுக்குள்
காணத்தே போகிறது
நான் திரும்பும்வரை
என் பிள்ளைக்கான உணவுகளை
பத்திரப்படுத்துகிறது
என்வீட்டுப் “பிறிட்ஜ்”
அதுபோல,
என் தாய்மையையும்
வைத்துப் போக
ஒரு சாதனம்
ஒரேயொரு சாதனம்
கண்டுபிடியுங்கள்
அழும்போதெல்லாம்
அந்தச் சாதனம் அவனை
அரவணைக்க வேண்டும்
ஏனெனில்,
நான் ஆணுக்கு நிகராக தினமும் வேலைக்கு போகின்றவள்
அவன் நனைத்த ஆடை மாற்றி சுத்தம் செய்யும் கரங்கள்
அதற்கு இருத்தல் வேண்டும்
அவனது கேள்விகளுக்கெல்லாம் அன்போடு விடை தரவும் வேண்டும்
ஏனென்றால்,
பெற்றெடுத்த எம் பெண்ணுரிமை காக்க
நான் வேலைக்கு போயே ஆக வேண்டும்
நான் வீடு திரும்பினாலும்
தொடர்ந்து பார்த்துக் கொள்வதாயும்
அதிருத்தல் வேண்டும்
காரணம்,
நான் களைப்பு நீங்கச்
சற்றே ஓய்வெடுக்க வேண்டும்
தாய்மையின்
நிழலில் என்மகன் நனையாத
பொழுதுகள்
பொசுங்கியே போயிற்று
இப்போதெல்லாம்
வேலைக்கு போகும்
வேளை பார்த்து
“உம்மா நானும்” என்கிறான்
வேண்டாம் மகனே!
அங்கே தூங்கவொரு தொட்டிலில்லை
விளையாடவும் நண்பரில்லை
தோள் சுமந்திட யாருமில்லை
உன் எச்சில் துடைக்க
ஒரு துணியுமில்லை
என்கிறேன்
மறுபடியும்
“உம்மா நானும்” என்கிறான்
அவனது அடம்பிடித்தல்களை அறிந்தும் அறியாமலும் கடக்கிறேன்
காலம் அவனையும் கடந்து விடலாம்
அவனது விருப்பங்கள் சிலது
சபையேறாமலே போகலாம்
ஏன் அவனுக்கே அவை
மறந்தும் போகலாம்
ஆனால்…
ஆனால்,
விடை கிடைக்காத வினா…
நிறைவேறாத அன்பு…
துடைக்கப்படாத துயர்…
இன்னும் பலவற்றால்
அவனது எந்தச் சிந்தனை
சிதறிப்போனதோ?
எந்த மௌனம்
அவனைத் தழுவிக்கொண்டதோ?
இருந்தாலும் நான் வேலைக்கு போக வேண்டும்
– பர்சானா றியாஸ்