புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி: சிரித்து மகிழ்ந்து, கேளிக்கைகளில் ஒரு குழு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. புறம், கோள், ‘காட்ஸ்’ விளையாட்டு போன்றவைகளே அவர்களின் சபைகளில் இடம்பெறுகின்றன! அவர்கள் எனது அணியினர்; அவர்களுடன் உட்காருவதால் அநேகமானோருடன் சகோதரத்துவ ரீதியான, வம்ச மற்றும் நட்பு ரீதியான தொடர்பை எனக்கு ஏற்படுத்தும் என்ற வகையில் அவர்களோடு நான் அமர்ந்திருப்பது கூடுமா?
பதில்: தம் சபைகளில் சிரித்து மகிழ்ந்து, வீண் விளையாட்டுக்களில் ஈடுபட்டவர்களாக தமது சகோதரர்களின் மாமிசங்களைப் புசித்துக்கொண்டிருக்கும் இவர்கள் உண்மையில் மடையர்களே! ஏனெனில், அல்லாஹ் அல்குர்ஆனில் “உங்களில் சிலர் மற்றும் சிலரைப் பற்றி புறம் பேசவும் வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்த தனது சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? அதை நீங்கள் வெறுத்து விடுவீர்கள்!” (அல்குர்ஆன், 49:12) என்று கூறுகிறான்.
தமது சபைகளில் இருந்துகொண்டு, மனித மாமிசங்களைப் புசிக்கும் இவர்கள் -அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்! – பெரும்பாவங்களில் ஒன்றையே செய்துவிட்டனர். எனவே, அவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டியது உனக்குக் கடமையாகும். அதற்கு அவர்கள் கட்டுப்பட்டு, தாம் இருக்கும் தீய வழிமுறைகளை விட்டுவிட்டால் அது உனக்கு நல்லதாகும். இல்லாவிட்டால், கீழ்க்காணும் அல்லாஹ்வின் கூற்றுக்காக அவர்களை விட்டும் நீ எழுந்து சென்று விடுவது உனக்கு அவசியமாகும்! “அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும், அவை கேலி செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும் வரை அவர்களுடன் உட்காராதீர்கள் என்று உங்கள் மீது அவன் இவ்வேதத்தில் இறக்கியுள்ளான். (மீறி நீங்கள் உட்கார்ந்தால்) நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றவர்களே! நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பவனாவான்”. (அல்குர்ஆன், 04:140)
எனவே, புறம் பேசப்படும் இடத்தில் உட்கார்ந்திருப்பவன், பாவத்தில் புறம் பேசியவனைப் போன்றே இருக்கின்றான். ஆதலால், அவர்களின் சபைகளை விட்டும் பிரிந்திருப்பதும், அவர்களுடன் உட்காராமல் இருப்பதும் உனக்கு அவசியமாகும்.
அடுத்து, ‘அவர்களுடன் நீ உட்கார்ந்திருப்பது பலமான பிணைப்பை அவர்களுடன் உனக்கு ஏற்படுத்துகிறது!’ ௭ன்ற உனது இக்கருத்து மறுமை நாளில் உனக்குப் பயன் தரமாட்டாது; மண்ணறையில் நீ தனித்திருக்கும்போதும் உனக்குப் பயன் தராது. எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும், ஒன்றில் நீ அவர்களைப் பிரிந்து விடுவாய்; அல்லது அவர்கள் உன்னைப் பிரிந்து விடுவார்கள். பின்னர், உங்களில் ஒவ்வொருவரும் தாம் செய்த செயலைக்கொண்டு பிரிந்து விடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: “அந்நாளில், பயபக்தியாளர்களைத் தவிர நண்பர்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகளாக இருப்பர்”. (அல்குர்ஆன், 43:67)
{ நூல்: ‘fபதாவா உலமாயில் bபலதில் ஹராம்’ லிஷ்ஷெய்க் சஃத் பின் அப்துல்லா அல்bபுரைக், பக்கம்: 742,743 }
السؤال: جماعة فاكهة مجالسهم الغيبة والنميمة ولعب الورقة وغيرها… هل تجوز مجالستهم مع العلم أنهم جماعتي وتربطني بأكثرهم علاقة أخوية ونسب وصداقة وغيرها؟
الجواب: { أجاب العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى }
[ هؤلاء الجماعة الذين فاكهة مجالسهم أكل لحوم إخوانهم ميتين هؤلاء في الحقيقة سفهاء، لأن الله يقول فى القرآن: « ولايغتب بعضكم بعضا أيحبّ أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه » (سورة الحجرات: الآية – ١٢). فهؤلاء الذين يأكلون لحوم الناس – والعياذ بالله – في مجالسهم قد فعلوا كبيرة من كبائر الذنوب. الواجب عليك نصيحتهم؛ فإن امتثلوا وتركوا ما هم فيه فذاك؛ وإلا يجب عليك أن تقوم عنهم لقوله تعالى: « وقد نزّل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزئ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنك إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا ». (سورة النساء: الآية – ١٤٠ )
فيكون الجالس في مكان الغيبة كالمغتاب في الإثم. فعليك أن تفارق مجالسهم، وأن لا تجلس معهم، وكونك تربطك بهم رابطة قوية هذا لاينفعك يوم القيامة، ولاينفعك إذا انفردت في قبرك فعما قريب سوف تفارقهم أو يفارقونك، ثم ينفرد كل منكم بما عمل. وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: « الأخلّاء يومئذ بعضهم لبعض عدوّ إلا المتقين » (سورة الزخرف: الآية – ٦٧)
{ من فتاوى علماء البلد الحرام للشيخ سعد بن عبدالله البريك، ص – ٧٤٢، ٧٤٣ }
தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
Very good advice for every Muslim