Featured Posts

புறம் பேசுதல்

முஸ்லிம்களைப் புறம் பேசுவதும் அவர்களின் கண்ணியத்திற்கும் மான மரியாதைக்கும் இழுக்காகப் பேசுவதும் பெரும்பாலான சபைகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக ஆகிவிட்டது. புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அதை விட்டும் தன் அடியார்களை விலகியிருக்கச் செய்திருக்கிறான். மனித உள்ளங்கள் அருவருப்பாகக் கருதுகின்ற விதத்தில் அதற்கு ஓர் உவமானம் கூறியுள்ளான்: “உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுகின்றீர்கள்” (49:12)

புறம் என்பதின் அர்த்தத்தை நபி (ஸல்) அவர்கள் நபிமொழியில் தெளிவு படுத்தியுள்ளார்கள்: ‘புறம் பேசுதல் என்றால் என்ன? என்று நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள் எனக் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுதல் என்பது) நீ உம் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததைக் கூறுவதாகும் என்று கூறினார்கள். நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தாலுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நீ கூறுவது அவனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய். நீ கூறுவது அவனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி அவதூறு கூறி விட்டாய்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

எனவே புறமென்பது ஒரு முஸ்லிமைப் பற்றி அவனிடம் உள்ள- அவன் விரும்பாத தன்மைகளில் ஒன்றைக் கூறுவதாகும். அவனுடைய உடல், மார்க்கம், உலக விவகாரம், குணநலன்கள், உடலமைப்பு என எது தொடர்பானதாக இருந்தாலும் சரியே! இப்படிப் புறம் பேசுவதற்குப் பல முறைகள் உள்ளன. அவனுடைய குறைகளை அல்லது அவனுடைய நடவடிக்கைகள் பழக்க வழக்கங்களைக் கேலியாக எடுத்துச் சொல்வதும் அவற்றுள் ஒன்றாகும்.

புறம் பேசுதல் என்பது அல்லாஹ்விடத்தில் மிக மோசமான விஷயமாக இருந்தும் மக்கள் இது விஷயத்தில் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார்கள். பின்வரும் நபிமொழி இதை உணர்த்துகிறது. ‘வட்டியில் எழுபத்திரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் மிகக் குறைந்தது ஒருவன் தன் தாயிடம் உடலுறவு கொள்வதற்குச் சமமானதாகும். வட்டியிலேயே மிகக் கொடுமையானது தன் சகோதரனுடைய மானம் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: (ஸில்ஸிலத்துல் ஸஹீஹா 1871)

ஆகவே சபையிலிருப்பவர் அங்கு நடக்கின்ற தீமையையும் தன் சகோதரனைப் பற்றி புறம் பேசப்படுவதையும் தடுப்பது கடமையாகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமொழியில் ஆர்வமூட்டியுள்ளார்கள்: ‘யார் தன்னுடைய சகோதரனின் கண்ணியம் மற்றும் மான மரியாதைக்கு களங்கம் ஏற்படுவதை விட்டும் தடுக்கின்றாரோ அவருடைய முகத்தை அல்லாஹ் மறுமையில் நரகத்தை விட்டும் தடுப்பான்’ (நபிமொழி) அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்: திர்மிதி.

இன்ஷா அல்லாஹ் எச்சரிக்கை தொடரும்.

One comment

  1. salam masha allah, thank you too much for ur information alla rare very importent for people’s.islam is wonderful & peaceful religion alhamthurillah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *