அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : சூறா அந்நிஸா
அந்நிஸா என்றால் பெண்கள் என்று அர்த்தமாகும். இந்த அத்தியாயத்தில் பெண்கள் பற்றியும் பெண்களுக்குத் தேவையான பல சட்டங்கள் பற்றியும் பேசப்படுகின்றது. குறிப்பாக சமூகத்தில் பலவீனமான நிலையில் இருப்பவர்களின் உரிமைகள் பற்றி இந்த அத்தியாயம் அதிகம் பேசுகின்றது. அல்குர்ஆனில் நான்காம் அத்தியாயமாக இடம் பெற்றுள்ள இந்த சூறா 176 வசனங்களைக் கொண்டது.
மனித இனத்தின் தோற்றம்
‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவி லிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் அதிலிருந்து அதன் துணைவியைப் படைத்து, அவையிரண்டிலிருந்தும் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும், இரத்த உறவுகளை(த் துண்டித்து நடப்பதை)யும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்ப வனாக இருக்கின்றான்.’ (4:1)
மனித இனத்தின் தோற்றம் பற்றிய தப்பான அபிப்பிராயங்கள்தான் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. உண்மையில் மனித இனத்தின் தோற்றம் பற்றி மனிதனைப் படைத்தவன் சொல்வதை ஏற்பதுதான் சரியான தீர்வாகும். முதல் மனிதனின் வரலாறு நிச்சயமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்காது எனவே, வேத வழிகாட்டல் இல்லாவிட்டால் மனித இனத்தின் தோற்றம் பற்றி வெறும் யூகங்களை மட்டுமே செய்ய முடியும். மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்து வந்தவன் என்ற கருத்தை டார்வின் சொன்னான். அன்றைய கால கிறிஸ்தவ உலகு விஞ்ஞானத்தை எதிர்த்து வந்ததால் நாஸ்திகத்தை விரும்பும் விஞ்ஞானிகளாலும் மக்களாலும் இந்தக் கருத்து நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை போன்று பரப்பப்பட்டது. பாடப் புத்தகங்களிலும் இக்கருத்து இடம்பிடித்து மாணவர்கள் மனதில் திணிக்கப்பட்டது.
மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவன் என்பது வெறும் யூகம்தானே தவிர உண்மை கிடையாது. அத்துடன் அறிவியலுக்கு முரணானதும் கூட. குரங்கு மனிதனாக பரிணாமம் பெற்றிருந்தால் இன்றும் கூட சில குரங்குகள் மனிதனாக மாறிக் கொண்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. குரங்கிலிருந்து வந்த மனிதன் அதிலிருந்து பரிணாமம் அடைந்து இன்னொரு உயிராக மாறியிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. பரிணாமத்தின் மூலம் உடல் அமைப்பு மாறினால் கூட பகுத்தறிவு உருவாக வாய்ப்பே இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் நிர்ப்பந்த நிலைகளாலும் உடல் மாற்றம் ஏற்பட்டது என்றால் குரங்கின் அறிவு பகுத்தறிவுமிக்கதாக மாறியதற்கான நிர்ப்பந்த நிலை எது என்பதற்கான பதில் டார்வினிஸ்டுகளிடம் இல்லை.
அத்தோடு ஆதி மனிதன் ஒன்றுமே அறியாமல் இருந்தான், பச்சையாக மாமிசங்களை உண்டு வந்தான், காட்டுத் தீயில் எரிந்த மிருகத்தை உண்ட போது தீயில் சுட்டு உண்ணக் கற்றுக் கொண்டான் என்றெல்லாம் மனித வரலாறு பற்றி போதிக்கப்படுகின்றது.
முதல் மனிதர்களாக ஆதம்-ஹவ்வா (ஆதாம் – ஏவாள்) ஆகிய இருவரும் சுவர்க்கத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்படும் போதே போதிய அறிவுடனும் வழிகாட்டலுடனும்தான் அனுப்பப்பட்டார் என்று குர்ஆன் கூறுகின்றது. ஆதி மனிதர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆதி காலத்திலேயே ஈடுபட்டனர் என்றும் குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆகவே, மனிதன் அறிவில்லாமல் இருந்தான் என்பது தப்பாகும்.
இந்த உலகில் உள்ள அத்தனை மக்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணில் இருந்து பல்கிப் பெருகியவர்கள், அனைவரும் ஒரு தாய்-தந்தை மக்கள் என இந்த வசனம் கூறுவதுடன் பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்கான அடிப்படையைத் தகர்த்து விடுகின்றது.
அடுத்து வரலாற்றில் ஒரு கால கட்டத்தில் பெண்ணுக்கு ஆன்மா உண்டா? இல்லையா? அப்படி இருந்தால் அது மனித ஆன்மாவா அல்லது மிருக ஆன்மாவா? என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன. முதல் மனிதன் ஆதம்-ஹவ்வா இருவரும் ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்ட வர்கள் என இந்த வசனம் கூறி ஆண், பெண் என்ற அடிப்படையில் உயர்வு-தாழ்வு கற்பிக்கப்படுவதையும் இந்த வசனம் கண்டிக்கின்றது.
உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற இந்த வார்த்தை மூலம் ‘ஒருவனே தேவன்’ என்பதையும் அந்த ஒரு ஜோடியில் இருந்துதான் ஒட்டுமொத்த மனித சமூகமும் உருவானது என்பதன் மூலம் ஒன்றே குலம் என்பதையும் குர்ஆன் உரத்து முழங்குகின்றது. இந்த வசனம் ஓரிறைக் கொள்கையையும் சமத்துவத்தையும் மட்டுமன்றி மனித இனத்தின் தோற்றம் வளர்ச்சியையும் தெளிவாகக் கூறுகின்றது.
தொடரும்…