தாவூத் நபியின் மகன்தான் சுலைமான் நபியாவார். இவர்கள் இருவரும் நபியாகவும் மன்னர்களாகவும் இருந்தனர். இவர்கள் மன்னர்கள் என்பதால் புதுப்புதுப்
பிரச்சினைகள் இவர்களிடம் வருவதுண்டு. இவர்களில் சுலைமான் நபி மிகவும் நுட்பமாக, பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு கூறுபவராக இருந்தார்கள். இதற்கு
ஒரு உதாரணத்தைக் கூறலாம். ஒரே நேரத்தில் இரு சகோதரிகளுக்கு குழந்தைகள் கிடைத்தன. அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டது. இருக்கும் குழந்தைக்கு இருவரும் உரிமை கோரினர். எனவே குழந்தை மூத்தவளுக்கு உரியது என தாவூத் நபி தீர்ப்புக் கூறினார்.
இதை அறிந்த சுலைமான் நபி தன் பணியாட்களிடம் “கத்தியைக் கொண்டு வாருங்கள், இந்தக் குழந்தையை இரு கூறாகக் கிழித்து இருவருக்கும் பிரித்துக் கொடுப்போம்” எனக்கூறி குழந்தையை வெட்ட முயல்வது போல் பாசாங்கு செய்தார். மூத்தவள் சும்மா இருக்க, இளையவள் பதறிப்போனாள். “வேண்டாம் வேண்டாம். குழந்தை அவளிடமே இருக்கட்டும்” எனக் கூறினாள். சுலைமான் நபி உடனே குழந்தையின் உண்மையான தாய் இளையவள் தான் என்பதை உணர்ந்து கொண்டார். அதற்கு ஏற்ப நுட்பமாக அவர் தீர்ப்புக் கூறினார்.
ஒருநாள் தாவூத் நபியின் அரசவைக்கு ஒரு புதிய பிரச்சனை வந்தது. ஒரு கூட்டத்தினர் விவசாயிகள். மற்றொரு கூட்டத்தினர் ஆடு மேய்ப்பவர்கள். விவசாயிகள் விவசாயம் செய்து பயிர் நன்றாக வளர்ந்திருந்தது. பார்க்கப் பசுமையாக இருந்தது. இந்நிலையில் இடையர்களின் ஆடுகள் அந்த விவசாய நிலங்களை மேய்ந்து அழித்துவிட்டன. இந்த முறைப்பாட்டுடன் இரு தரப்பாரும் தாவூத் நபியின் அரசவைக்கு வந்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பயிர்களாகும். இடையர்களின் வாழ்வாதாரம் ஆடுகளாகும். அவர்களின் வாழ்வாதாரத்தை இவர்களின் வாழ்வாதாரம் அழித்துள்ளது. எனவே “இடையர்கள் தங்களது ஆடுகளை விவசாயிகளிடம் கொடுத்துவிட வேண்டும். ஆடு விவசாயிகளுக்குரியது” என்று தீர்ப்புக் கூறினார்கள். இந்தத் தீர்ப்பு இடையர்களுக்கு பெரும் இடியாக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அடிபட்டுவிட்டதை உணர்ந்தார்கள்.
இதனை அறிந்த சுலைமான் நபி, “இதற்கு நான் தீர்ப்புக் கூறி இருந்தால் எனது தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும்” என்று கூறினார்கள். தாவூத் நபி, “அந்தத் தீர்ப்பு என்ன? ” என்று கேட்டார்கள். சுலைமான் நபியின் தீர்ப்பு இப்படி இருந்தது. “இடையர்கள் தமது ஆடுகளை விவசாயிகளிடம் கொடுக்க வேண்டும், விவசாயிகள் தமது விளை நிலத்தை இடையர்களிடம் கொடுக்க வேண்டும். இடையர்கள் பயிரிட்டு அதைப் பாதுகாக்க வேண்டும். பயிர்களை ஆடுகள் உண்ணும் போது இருந்த அளவுக்கு வரும்வரை நீர் பாய்ச்சிப் பயிரைப் பாதுகாக்க வேண்டும். பின்னர் விவசாய நிலத்தை விவசாயிகளிடம் கையளிக்க வேண்டும். அதுவரை விவசாயிகள் இவர்களது ஆடுகளைப் பராமரிக்க வேண்டும்.
விவசாயிகளைப் பொறுத்தவரை இவர்கள் ஆடுகளைப் பராமரிப்பது என்பது மேலதிக வேலை. அத்துடன் அவர்களின் அறுவடையும் இவர்களின் ஆடுகள் உண்டதனால் தாமதமாகும். எனவே இதற்குப் பகரமாக தாம் பராமரிக்கும் காலப் பகுதியில் அந்த ஆடுகளிடமிருந்து அவர்கள் பால் கறந்து கொள்வார்கள். இடையர்கள் விவசாய நிலத்தை விவசாயிகளிடம் கையளித்த பின்னர் விவசாயிகள் ஆடுகளை இடையர்களிடம் கையளிக்க வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார். இந்தத் தீர்ப்பை இருதரப்பும் மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொண்டனர்.தாவூத் மற்றும் சுலைமான் இருவருக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுத்ததாகவும் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை சுலைமானுக்கு அல்லாஹ்வே புரிய வைத்ததாகவும் கூறுகின்றான்.
(இச்சம்பவம் அல்குர்ஆனில் 21:78,79ம் வசனங்களில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது).