எம்.ஏ.ஹபீழ் ஸலபி
இலங்கையில் மட்டுமல்லாது இருபது கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் இந்தியா உட்பட உலகில் பல பாகங்களிலும் மிகவும் கஷ்டங்களையும் துன்பங்களையும் அடக்குமுறைகளையும் அனுபவித்து, இனச்சுத்திகரிப்புக்கு ஆட்படுத்தப்பட்டுவரும் சமூகமாக இஸ்லாமிய உம்மத் காணப்படுகிறது. இந்த அனுபவம் அனைவருக்கும் ஓர் அச்ச உணர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச்சட்டம் இருபது கோடிக்கும் அதிகமான இந்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல், இலங்கையில் சிறுபான்மை – பெரும்பான்மை என்ற விவகாரம் மிகப் பெரும் இன முறுகலையும் முரண்பாடுகளையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளது. சீனாவிலிருந்து உலகம் முழுதும் பரவிய கொரோனா வைரசிற்குக் கூட இஸ்லாமிய முலாம் பூசி, முஸ்லிம்களே பரப்பியதாக அவர்கள் மீது பழி சுமத்திவருகின்றன சில மீடியாக்கள்.
இலங்கையில் முஸ்லிம் – சிங்கள இனமோதல்கள் 1915 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1983ல் தமிழ் – சிங்கள இனமோதல் ஆயுதப் போராட்டமாக மாறி 2010களில் முடிவுக்கு வந்தது. எனினும், முஸ்லிம்கள் இரண்டு பெரும்பான்மை இனத்தினாலும் மிகப் பெரும் பாதிப்புக்களை, நீண்டதொருகாலத் துன்பத்தை இலங்கை வரலாற்றில் அனுபவித்துவருகிறது. புலிகளின் ஆயுதப் போராட்டத்திலும் அதை முறியடிக்கப்பட்ட நீண்ட வழியிலும் இலங்கை முஸ்லிம் சமூகம் பாரிய இன்னல்களை அனுபவித்துள்ளது.
சிறுபான்மை சூழல் என்பதும் அனதடியாக ஏற்படும் கசப்பனுபவமும் இஸ்லாத்தைப் பொறுத்தவரை புதிய விவகாரமல்ல. இது, இலங்கை –இந்திய இஸ்லாமிய உம்மத் மட்டும் அனுபவிக்கும் சூழ்நிலையல்ல. அது வரலாற்றின் நீண்ட பதிவுத் தடயங்களையும் பல பதிவுகளையும் படிப்பினைகளையும் சான்றுகளையும் கொண்டது என்பதை சுருக்கமாக உணர்த்தவே இக்கட்டுரை முயற்சிக்கிறது.
தூதுத்துவத்தின் துவக்கம்
இஸ்லாத்தின் இறைக் கோட்பாடு தனித்துவப் பண்புக் கூறுகளை உட்பொதிந்தது. அது இந்த உலகிற்கு ஓர் இறைவன் மட்டும் தான் உண்டு. அவன் அல்லாஹ். அவனை மட்டுமதான் வணங்க வேண்டும். அதில் இணை, துணை, சமரசம் என்று எதுவும் இல்லை என்று இறையியல் கோட்பாட்டில் விட்டுக் கொடுப்பின்றி, மிக ஆணித்தரமாக அகிலத்திற்கு பிரகடனப்படுத்தகிறது.
இந்த சமரசமற்ற ஓர் இறைக் கோட்பாட்டை உலகில் நிலைநாட்ட பல்வேறு இறைத் தூதர்கள் வருகை தந்துள்ளார்கள். அவர்கள் பெரும்பான்மை குப்ரியக் கோட்பாட்டாளர்களுக்கு மத்தியில் ஒற்றை மனிதனாகத்தான் ஏகத்துவத்தைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால், மிகப் பெரும் அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள் என்ற வரலாற்றை அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
{وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ } [النحل: 36]
“அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரும் அச்சமுதாயத்தில் இருந்தனர். வழி கேடு உறுதியானவர்களும் இருந்தனர். எனவே, பூமியில் பிரயாணம் செய்து பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!
(அல்குர்ஆன் 16 36)
அதேபோல், இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் இறுதித் தூதராக அல்குர்ஆனைப் பெறும் போது, சிறுபான்மை நிலை என்பதையும் தாண்டி ஒற்றை மனிதனாகத்தான் இருந்தார்கள். அதை அவர்கள் பின்வருமாறு நினைவுகூறுகின்றார்கள்.
– حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ وَابْنُ أَبِي عُمَرَ جَمِيعًا عَنْ مَرْوَانَ الْفَزَارِيِّ قَالَ ابْنُ عَبَّادٍ حَدَّثَنَا مَرْوَانُ عَنْ يَزِيدَ يَعْنِي ابْنَ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَدَأَ الْإِسْلَامُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ صحيح مسلم
“இஸ்லாம் அந்நியநிலையில்தான் ஆரம்பித்தது.மீண்டும் அதே நிலையை அடையும். அந்நிய நிலையில் உள்ளோருக்கு சுபசோபனம் உண்டாகட்டும்!”
அறிவிப்பவர் அபூஹூரைரா ரழி, நூல் முஸ்லிம் 232.
உலகின் துவக்க கால வரலாறு முதல் ஏகத்துவக் கொள்கை மிக எளிமையாக, சிறுபான்மை நிலையில், அந்நியமாகத்தான் ஆரம்பித்தது. சிறுபான்மை சமூக நிலை என்பது இஸ்லாத்திற்குப் புதிய ஒன்றல்ல. இலங்கை – இந்திய முஸ்லிம் உம்மத் சிறுபான்மை சமூகம் என்று தமது இருப்பை நினைத்து அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஓர் இறைக்கோட்பாட்டுப் பிரசாரக முன்னோடிகள் அனைவரும் கடந்துவந்த முற்களும் கற்களும் நிறைந்த நீண்ட நெடிய பாதை சிறுபான்மை என்ற சமூக நிலையிலிருந்துதான்.
ஏகத்துவக் கோட்பாட்டை, சிறுபான்மை சூழலில் இருந்து மிக ஆணித்தரமாக முன்வைத்த பல நபிமார்களின், சில நல்ல மனிதர்களின் வரலாற்றை அல்குர்ஆன் மிக அழகாகப் பேசுகிறது. அவற்றில் சிலவற்றை நோக்குவோம். அவை, நாம் எதிர்கொண்டுள்ள இறுக்கமான இச்சூழ் நிலையில் ஆறுதல் அளிப்பதோடு, அவர்கள் கடந்து சென்று, வெற்றி கொண்ட வழிமுறைகளையும் எமக்குக் கற்றுத் தருகின்றன.
ஒற்றை மனிதனாக இப்றாஹீம் நபி
இப்றாஹீம் நபி, ஒற்றை மனிதனாகவும் தற்துணிவாகவும் ஏகத்துவக் கோட்பாட்டை முன்வைத்து, அதனால், பெரும்பான்மை இனத்தால் பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்து, நெருப்புக் குண்டத்தை சந்தித்து, முழு மனித குலத்திற்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த இருவரில் இவரும் ஒருவர் ஆவார்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இளைஞராக இருந்த போது, சிலை வணக்கத்திற்கு எதிரான ஏகத்துவ, இறை நெறிப் போராட்டத்தை, தனி மனிதனாக நின்று தற்துணிவுடன் மேற்கொண்டார்கள். இத்தகைய இலட்சியப் போராளியை அல்லாஹ் தன் நண்பராக்கிக் கவ்ரவித்துள்ளான்.
அன்றைய மனித உள்ளங்கள் வறண்டு, ஒழுக்கம் சீர்கெட்டு, பகுத்தறிவு சிலைகளிடம் அடகு வைக்கப்பட்டிருந்த ஒரு காலப் பிரிவிலே, தனி மனிதனாக நின்று தஃவா செய்வது என்பது எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்திருக்கும்? தகவல் தொழில் நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இன்று, பல இயக்கங்களால் கூட்டிணைந்து கூட செய்ய முடியாததை அவர்கள் தனியே செய்து காட்டியுள்ளார்கள்! சிலைகளை அரணாகக் கொண்டிருந்த அச்சமூகத்தின் உள்ளமும் அச்சிலைகளைப் போலவே கல்லாய்ப் போயிருந்தன. அதனால் தான் படைத்த இறைவனை மட்டும் வணங்குமாறு அவனது ஏகத்துவத்தை எடுத்தியம்பிய ஒரே குற்றத்திற்காக ஈவிரக்கமின்றி நெருப்பில் தூக்கி எறிந்தனர்.
சிலைகளை பூஜிக்கும் தனது சமூகத்தின் சிதைந்த சிந்தனைப் போக்கை மாற்ற தனித்து நின்று முயற்சித்தார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில், தியாக உணர்வும் தற்துணிவும், உயிரோட்டமுள்ள படிப்பினைகளுள் மிக முக்கியமானவை. அவர்களின் வரலாற்றை அல்குர்ஆன் பாத்தியதையாகப் பாதுகாத்துத் தருகிறது.
قَالُوۡا سَمِعۡنَا فَتًى يَّذۡكُرُهُمۡ يُقَالُ لَهٗۤ اِبۡرٰهِيۡمُ ﴿21:60﴾
21:60. “ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர்.
பெயர் குறித்து பேசப்படும் அளவு இப்றாஹீம் நபி, தனியேதான் ஷிர்க் எனும் சிலை வணக்கக் கோட்பாட்டை எதிர்த்து, ஏகத்துவக் கோட்பாட்டை பிரகடணம் செய்துள்ளார்கள் என்பதை சிறுபான்மை உணர்வால் சிறுமைப்பட்டுள்ள மனிதர்களுக்கு அல்லாஹ் எடுத்துக் காட்டுகின்றான். அல்லாஹ் தான் அகிலத்தின் இரட்சகன். அவனைத் தவிர மற்ற அனைத்தும் போலியானவை என்று தன்னுயிரைப் பணயம் வைத்து முழக்கமிட்ட இளைஞர் இப்றாஹீம் (அலை) அவர்கள் ஒரு சிறுபான்மை சூழலிருந்துதான் உய்த்தெழுந்தார்கள்.
நாம் எத்தனைபேர் இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல. என்ன கொள்கையில் உள்ளோம், அதை எவ்வாறு பிரசாரம் பண்ணுகின்றோம் என்பதுதான் முக்கியமானது. சிதிலமடைந்த பெரும்பான்மையின் சிலை வணக்கக் கோட்பாட்டுக்கு முன்னால் தற்துணிவாய்த் தனித்து நின்று தனது ஏகத்துவக் கொள்கையை வீர முழக்கமிட்ட அந்த இப்றாஹீம் நபியின் உறுதிக்கு முன்னால் பொசுக்கும் நெருப்புக் கூட அணைந்து அடங்கியது என்ற வரலாறு சிறுபான்மை முஸ்லிம் உம்மாவிற்கு சாமரம் வீசும் சரிதையல்லவா!.
சிறுபான்மை சூழலில் ஷூஐப் நபி
இவரும் ஒரு சிறுபான்மை சூழலில்தான் பெரும்பான்மையின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் ஓர் இறைக் கோட்பாட்டை பிரசாரம் செய்கின்றார். உம்மையும், உம்முடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம் என்று பெரும்பான்மை மிரட்டுகிறது.
قَالَ الۡمَلَاُ الَّذِيۡنَ اسۡتَكۡبَرُوۡا مِنۡ قَوۡمِهٖ لَـنُخۡرِجَنَّكَ يٰشُعَيۡبُ وَالَّذِيۡنَ اٰمَنُوۡا مَعَكَ مِنۡ قَرۡيَتِنَاۤ اَوۡ لَـتَعُوۡدُنَّ فِىۡ مِلَّتِنَا قَالَ اَوَلَوۡ كُنَّا كَارِهِيۡنَ ﴿۸۸﴾
7:88. “ஷுஐபே! உம்மையும், உம்முடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்” என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?” என்று கேட்டார்.
எப்பவும் சத்தியக் கோட்பாட்டைப் பேசும் நிராயுதபாணிகளைக் கூட அசத்திய ஆயுதபாணிகள் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளத் தயங்குவார்கள். நேருக்கு நேர் அசத்தியம் சத்தியத்தை எதிர்கொள்ள முடியாது. எனவே, பெரும்பான்மை அசத்தியவாதிகள் ஊர் விலக்கல், அல்லது வெளியேற்றம் செய்ய முயற்சிப்பர். இது இயலாத போது, கொலை முயற்சி செய்வார்கள்.
இதே கோழைத்தன வழிமுறையைக் கடைப்பிடித்து, ஏகத்துவப் பிரசாரத்தை விட்டுவிடுமாறு ஷூஐப் நபியையும் அவரை இறைத் தூதராக ஏற்ற சிறுபான்மை சமூகத்தையும், கர்வம் கொண்ட பெரும்பான்மை சமூகம், குப்ரிய படுகுழியில் விழுமாறு மிரட்டிப் பார்த்தது. ஏகத்துவப் போதகர் ஷூஐப் நபியவர்கள் மிரளவில்லை. எனவே, ஊரிலிருந்து வெளியேற்ற முயற்சித்தது.
இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்…