Featured Posts

சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 5)

எம்..ஹபீழ் ஸலபி

இதுவரை சிறுபான்மை சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் எவ்வாறு அமைந்திருந்தது தொடர்பாக நோக்கினோம். முஸ்லிம் ஆட்சியில் பிற இன சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை இத்தொடர் விளக்குகிறது.

அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள்

இந்த உலகத்தில் அரசியல், ஆன்மிகம், சமூகவியல்  ஆகிய துறைகளில் ஒரு சேர மகத்தான வெற்றிபெற்று, அழுத்தமான தாக்கத்தை எற்படுத்தி, அளப்பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து,  அழியாப் புகழ் பெற்றவர்களில் இறுதித் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள்.

அன்னாரின் போதனைகள்  பிரதானமாக மறுமை விமோசனத்தை மையப்படுத்தி இருந்தது. ஆனால், உலகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவர் தீர்க்கமான தீர்வுகளை முன்வைத்தார். உலகில் யாராலும் தீர்க்க முடியாது என்று கருதப்பட்ட  சாதியம், இனமாச்சரியம், நிறவெறி, மொழிவெறி, ஏற்றத்தாழ்வு,  ஆண்டான் அடிமை நிலை அனைத்தையும் ஓர் இறைக் கோட்பாட்டுப் போதனையூடாக உலகிலேயே தீர்த்துக்காட்டினார்கள். அதனால், உலகிற்கு மகத்தான சட்டம் வழங்கியவர்களின் பெயர்ப் பட்டியலில்  அவரது பெயரும் லிங்கன் பல்கலைக்கழகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமல்லாது  அதிகாரத்தில் அமர்பவர்களுக்கும் அவரது வாழ்வில் செழுமையான முன்மாதிரிகள் உள்ளன என்று அந்நிய மத அறிஞர்கள் புகழாரம் சூட்டும் அளவு அவரது  சிந்தனைத் தாக்கம் அனைத்துத் துறைகளையும் தழுவி, இன்றுவரை வியாபித்துள்ளது.  

“அறிவுரை கூறுவோர் அவர்போல் நடக்கவும்: இவர்போல் நடக்கவும் என்று கூறுவதையே காண்கின்றோம். என்னைப்போல் நட என்று சொன்ன பெருமைக்குரியவர் பெருமானார்” என  Dr.சிலம்பொலி குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் அதிகாரத்தில் இருக்கும்  பொழுதும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் சூழலிலும் எப்படி வாழவேண்டும் என்பதை அவரது வாழ்வியல் நடைமுறைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆன்மிக – அரசில் என்று இரு மகத்தான பொறுப்பில் தலைமை ஏற்றிருந்த இறுதித் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிற மத மக்களுடன் எப்படி  நடந்துகொண்டார்கள் என்பதை விளக்கவே இக்கட்டுரை முயற்சிக்கிறது.

இன்று நமது நாட்டில் இனமுறுகல் வலுவடைந்துள்ளது. மதங்களைத் துாற்றும் அநாகரிக செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. தான் பின்பற்றும் மதத்தின் மீது வெறித்தனமும் மற்ற மதத்தவர்கள் மீது வெறுப்பும் வெளிப்படுத்தப்படுகிறது. பெரும்பான்மை சமூகம்  சிறுபான்மை இனத்தின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவதும் நிந்தனை செய்யும் நடவடிக்கைகளும் இணைய முதல் தெருமுனை வரை வியாபித்துள்ளது.

பலதெய்வ சிலை வணக்கமும், இனமாச்சரியமும், நிறவெறியும், ஆன்மிக தகிடுதத்தமும்  ஆதிக்கம் செலுத்தி, கொடுங்கோண்மை கோலோச்சிய ஒரு  பெரும்பான்மை சூழலில்  ஒற்றை மனிதனாக  வேர் முதல் விழுதுகள் வரை சீர்திருத்தம் செய்ய முனைந்தால் என்னவாகும் என்பதை கற்பனையில் கூட கற்பிதம் செய்ய முடியாத சூம்நிலையை சந்திக்க நேரும். அத்தகைய அந்நியமான சூழலில், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாகப் பிரசாரம் செய்து, அந்கு புரையோடியிருந்த அனைத்து வகையான சமூகத் தீமைகளையும் எதிர்த்ததால் பெரும்பான்மை சமூகம் அவர்களை  நசுக்க முனைந்தது.

சிறுபான்மை சூழலில் ஆரம்பிக்கப்பட்ட தனது சீர்திருத்தப் பாதையில் ஏராளமான கொடுமைகளை சந்தித்தார்கள். அவரை ஏற்றுக் கொண்ட, பல நண்பர்கள் எதிரிகளால் சித்திரவதைக்கு அளாக்கப்பட்டு, கொன்று குவிக்கப்பட்டர்கள். முஹம்மத் நபி மீதும் கொலை வெறித் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டதால், ஊரை விட்டே ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.

தனது பிரசாரத்தை ஆரம்பித்த  மக்கா சூழல் மிக மோசமாகக் காணப்பட்டது. தான் முன்வைத்த ஓர் இறைக் கோட்பாட்டில்  அவர்கள் எந்த சமரசமும் செய்யவில்லை. அதே வேளை தன்னை சூழ வாழ்ந்த பெரும்பான்மை மக்களுடன் அவரது அணுகுமுறை அவர்கள் வியப்படையும் வகையில் மிக நெருக்கமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

சிறுபான்மை சூழலில் அவர்கள் தனது சமூகத்துடன் நடந்து கொண்ட முறையை பின்வரும் நபிமொழி மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

கொள்கை எதிரிகளுடன் உறவைப் பேணிய உத்தமர்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது பொதுவாகவும் தனித்தனியாகவும் பெயர் குறிப்பிட்டு,”கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்துபோகவிடாமல்) பசுமையாக்குவேன் (உங்களுடைய உறவைப் பேணி நடந்துகொள்வேன்)” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தன்னையும் தன்னை ஏற்றுக் கொண்ட சிறுபான்மை மக்களையும் 13 ஆண்டுகள் வஞ்சித்த வன்நெஞ்சர்கள்  மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு வெகுவிரைவிலேயே நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. தனது அயராத முயற்சியால் மதீனாவில் ஓர் ஆட்சியை அமைத்தார்கள்.  அதன்  இராணுவக் கட்டமைப்புப் போன்று  இன்று வரை உலகில் எங்கும் காணமுடியாது. அதன் தளபதி நபி (ஸல்) அவர்கள். தனது சொந்த உழைப்பில் இராணுவத் தளபாடம் வாங்குவார். அவரது சிப்பாய்களும் அப்படியே செயற்பட்டனர். இன்றைய கட்டளைத் தளபதி போல், கட்டிலில் உறங்கிக் கொண்டு, கள நிலவரத்தை  காலைப் பத்திரிகையில் படித்துப் பார்ப்பவராக அவர் இருக்கவில்லை. களத்தில் அவர் முன்னிலை வகித்தார். யுத்த வியூகங்களை வகுத்தார். அகழ் வெட்டினார். எதிரிகளோடு நேருக்கு நேர் மோதினார். காயங்களுக்கு ஆளாகி, வீரத்தழும்புகளை  வீரத்தின் அடையாளமாகக் கொண்டிருந்தார். ஓர் ஆன்மிகத் தலைவர், அரசியல் தலைவராகவும், களத்தில் நேரடி யுத்தம் செய்யும் தளபதியாகவும்  வாழ்த பக்கங்கள் வரலாற்றில் இந்த மாமனிதரைத் தவிர வேறுயாருக்கும் இல்லை.

ஓர் இறைக் கோட்பாட்டாலும் அதனால், ஏற்பட்ட அன்பால் பிணைக்கப்பட்ட  வலுவான சமூகக் கட்டமைப்பும் அதிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட, ஊதியத்திற்கு ஊழியம் புரியாத,  தன்னார்வத் தொண்டரணியும், அவரது அதிகாரபீடத்தைச் சூழ இருந்த பெரும் மன்னர்கள் அச்சம் கொள்ளும் அளவு வலுவான இராணுவ பலமும்  காணப்பட்டது.  

அதிகார பலம் வந்த பின்னர்  தன்னைத் தாய் மண்ணலிருந்து விரட்டிய விரோதிகளை நபியவர்கள் வஞ்சம் தீர்த்திருக்கலாம். அவ்வாறு பழிக்குப் பழி தீர்ப்பது, அரசியலில் இற்றைவரை சர்வசாதாரணமானது. அதனால், அதை யாரும் குறை காண முடியாத அளவுக்கு நபி (ஸல்)  அவர்களுக்கு நியாயங்கள் இருந்தன. ஆனால், நபி (ஸல்) அவர்கள் தமது கை முழுமையாக ஓங்கியிருந்த காலகட்டத்திலும் யாரையும் பழிவாங்கவில்லை. எளிமையான தனது ஆரம்ப நாட்கள் போன்று மன்னிக்கும் மனப்பான்மையுடனும்  அனைத்து இன மக்களையும் அன்புடன் அரவணைக்கும்  பண்புடனும் நடந்து கொண்டார்கள். அதிகாரம், பண வசதி இவை இரண்டும் வந்த பின்னர் இவ்வாறு நடப்பது மிகமிகக் கஷ்டமானது. எனினும், அந்த மாமனிதர் உகம் வியக்க வாழ்ந்து காட்டினார்கள்.

சிறுபான்மை சூழலில் வாழும் இலங்கை முஸ்லிம் உம்மத்   அத்தகைய வரலாற்று ஆதாரங்களின் பக்கம்  கவனக் குவிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக சில முன்மாதிரி நடவடிக்கைகளை இங்கு தருகின்றேன்.

எதிரிகளுடன் ஒப்பந்தமும் விட்டுக்  கொடுப்பும்

தனக்கும் தன்னை இறைத்துாதராக ஏற்றுக்  கொண்டோருக்கும் அநீதி இழைத்து, பொருளாதாரப் பரிமுதல் செய்து, நாடுகடத்தி, பெரும் அக்கிரமம் மேற்கொண்ட எதிரிகளுடன்   நபியவர்கள் நடந்து கொண்ட முறைக்கு ஹுதைபியா உடன்படிக்கையும், அப்போது நடந்த நிகழ்வுகளும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.

வரலாற்றுக் காலம் முதல் கஃபா பொது உடமையாகவே இருந்துவந்தது. யாரும் உம்ரா –  ஹஜ் வணக்கம் செய்வது தடுக்கப்படவில்லை. அந்தவகையில், ஹிஜ்ரி 6ம் ஆண்டு 360 மைல்களுக்கு அப்பாலுள்ள மதீனாவிலிருந்து, நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்ற மக்காவை நோக்கிப் புரப்பட்டார்கள். யாரையும் தடுக்காத மக்கா துதேசிகள், நபிகள் நாயகத்தை மட்டும் ஹூதைபிய்யா என்ற இடத்தில் வைத்துத் தடுத்தார்கள்.

ஆள்பலமும் அதிகாரபலமும் இருந்த நபி  (ஸல்) அவர்கள் பலப் பிரயோகம் செய்து,  தான் பிறந்த மக்காவுக்குள் தன்னால் நுழைய முடியும் என்றாலும் எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து, நிதானமாக, தொலைநோக்கோடு, எதிரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, இரத்தம் சிந்துவதைத் தவிர்த்து மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள்.

பலம் பொருந்திய பெரும்பான்மை சூழ்நிலையிலும் பலவீனமாக இருந்த சிறுபான்மை சூழ்நிலையிலும் சமாதானத்தையே விரும்பினார்கள். தமக்கு வன்கொடுமைகள் செய்த எதிரிகளை பழி தீர்க்க தகுந்த சந்தர்ப்பம் கிடைத்தும் மன்னித்துவிடுவது இந்த மாமனிதரின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்துள்ள வரலாற்றை  புகாரி 2731, 2732 ஆகிய  ஹதீஸ்களில் காணலாம்.

பிறமதத்தினருக்கு பொருளாதார உதவி

வசதி படைத்தோருக்கு ஸகாத் எனும் ஏழைக்கான தர்மம்   இஸ்லாத்தில் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் செல்வந்தர்களிடம் திரட்டப்படும் இந்த நிதி எட்டு விதமான பணிகளுக்குச் செலவிடப்பட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் நல்லிணக்கம் வளர்வதற்காக அவர்களுக்காக வழங்குவதும் அப்பணிகளில் ஒன்று என அல்குர்ஆன் கூறுகிறது.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், திக்கற்றோருக்கும்206 தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

மாற்று மதத்தினருக்கு பொருளாதார உதவிகள் செய்வதை இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது, இஸ்லாம்.

இஸ்லாம்  தவிர்ந்த வேறு எந்த மதத்திலும் பிற மதத்தினருக்கு உதவுவது மார்க்க ரீதியாக கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்டதில்லை. எந்த மதத்திலும் இத்தகைய ஒரு சட்டத்தைக் காணவே முடியாது. நபி (ஸல்) அவர்கள்  தனது இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கு முஸ்லிம் அரசின் கருவூலத்திருந்து வழங்கினார்கள்.

ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தின் பெயரால் உதவி கேட்டார். இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு அவருக்கு ஆடுகளை வழங்கினார்கள். அவர் தனது சமுதாயத்திடம் சென்று ‘என் சமுதாயமே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், நிதி நெருக்கடியைப் பற்றி அஞ்சாமல் முஹம்மத் வாரி வழங்குகிறார்’ எனக் கூறினார். நூல் : முஸ்லிம் 4627

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக,  முஸ்லிமல்லாத மக்களின் தயவு தேவையற்ற நிலையில் இருந்த வேளையில், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்  முஸ்லிம்களிடம் வசூலிக்கப்படும் ஸகாத் நிதியிலிருந்து முஸ்லிமல்லாத மக்களுக்கு வாரி வழங்கினார்கள் என்றால் அந்த மாமனிதரின் மதம் கடந்த மனிதாபிமானத்தை தெளிவாக அறியமுடிகிறது.

அந்நிய அண்டை வீட்டாருடன் நல்லுறவு

இஸ்லாத்தை ஏற்காத பிற மதத்தவர்கள் நமது அண்டை வீட்டில்  வாழ்ந்தால் அவர்களுடன் மிக அன்பாக நடக்க வேண்டும் என்று நபியவர்கள் போதனை செய்தமை அவர்களின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் ‘நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்’ என்று முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.

நூல் : திர்மிதி 1866

முஹம்மத் நபி (ஸல்)  அவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி). அவர் அவரது அண்டை வீட்டு யூதருக்கும் தனது வீட்டில் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதற்கு நபி (ஸல்)  அவர்களின் போதனையே  காரணம் எனவும் கூறுகிறார்.

அந்நிய மதத்து அண்டை வீட்டாருடனும் நல்லுறவைப் பேணுமாறு வலியுறுத்திய முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் மதத்தின் அடிப்படையில் யாருக்கும் பாரபட்சம் காட்டக் கூடாது என்ற பாடத்தை தனது தோழர்களக்கும் கற்றுக்  கொடுத்தார்கள். அதை அவர்களும் கடைப்பிடித்துள்ளாரகள். இவ்வாறான நடைமுறைகள் இலங்கையில் முஸ்லிம்களால் ஓரளவு பேணப்படுகிறது. அந்த நடைமுறை சில பகுதிகளில் மாற்று மதத்தினரை ஈர்த்தும் உள்ளது.

அந்நிய பணியாளர்

ஆட்சியும், அதிகாரமும் வந்த பின்பு நண்பர்களையே ஒதுக்கும் காலத்தில் நாம் வாழ்கின்றோம்.ஆனால், முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் தம்மிடம் இவை அனைத்தும் வந்த பின்பும் சாதாரண முஸ்லிமல்லாத பணியாளர்களிடமும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பின்வரும் நிகழ்வு எடுத்தக்காட்டுகிறது.

முஹம்மத் நபி (ஸல்)  அவர்களிடம் யூத மதத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் பணி செய்து வந்தார். அவர் ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார். உடனே அவரை விசாரிக்க முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் அவரிடம் சென்றனர். அவரது தலைக்கருகில் முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் அமர்ந்தார்கள். ‘இஸ்லாத்தை நீ ஏற்றுக் கொள்ளலாமே’ என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அந்த இளைஞரின் தந்தையும் அருகில் இருந்தார். அந்த இளைஞர் தமது தந்தையைப் பார்த்தார். ‘நபிகள் நாயகம் கூறுவதைக் கேள்’ என்று தந்தை கூறியதும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ‘இவரை நரகத்திருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறிக் கொண்டே முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் வெளியேறினார்கள்.

நூல் : புகாரி 1356

முஹம்மத் நபி (ஸல்)  அவர்களின் ஆட்சியில் சிறுபான்மையினராக  வாழ்ந்த யூதர்கள்  சிலர் அயல் நாட்டிலுள்ள முஸ்லிம்களின் எதிரிகளுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். யூதனாக இருந்து கொண்டு, இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களாக நடித்து ஏமாற்றியவர்களும் இருந்தனர். மதீனாவின் ஆட்சி முஸ்லிம்கள் வசமானதால் நாம் சிறுபான்மையினராகிவிட்டோம் என்று அவர்கள் மீது கடுமையான கோபமும் இருந்தது.

எனினும், முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் அந்த யூத இனத்திலிருந்து ஒரவரை தனது பணியாளராகச் சேர்த்துக் கொண்டார்கள். யூதர்களில் சிலர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில் உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு அவர்களிடம் மனித நேயம் மிகைத்திருந்தது.

இவ்வாறு பிற இன, மத மக்களிடம் முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் எந்த அளவு மனித நேயத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது வியப்பாக உள்ளது.

கைதியான எதிரியுடன் கனிவான தன்மை

குற்றம் செய்து கைது செய்யப்படுபவர்களுடன்  யாரும் அன்பாக நடந்து கொள்ள மாட்டார்கள். அதுவும்  கிரிமினல் குற்றமிழைத்தவர் பிற இனத்தை,அல்லது சிறுபான்மை  இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால், தண்டனை கடுமையாகும். இது இன்றுவரை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கும் நடைமுறை. ஆனால், முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் தனக்கும் தனது சமூகத்திற்கும் அக்கிரமம் புரிந்த கைதியுடன் எப்படிப் பரிவுடன் நடந்து கொண்டார்கள் என்பதை பின்வரும் வரலாற்று நிகழ்வு தெளிவுபடுத்தகிறது.

முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் நஜ்து எனும் பகுதிக்கு சிறு படையை அனுப்பினார்கள். அப்படையினர் பனூ ஹனீபா சமுதாயத்தைச் சேர்ந்த ஸுமாமா என்பவரைப் பிடித்து வந்தனர். அவரைப் பள்ளிவாசன் ஒரு தூணில் கட்டி வைத்தனர். முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் அவரிடம் வந்து ‘ஸுமாமாவே! உம்மிடம் என்ன இருக்கிறது?’ என்று கேட்டனர். அதற்கவர் ‘முஹம்மதே! என்னிடம் செல்வம் இருக்கிறது. என்னை நீங்கள் கொன்றால் கொல்லப்படுவதற்குத் தகுதியானவனையே நீங்கள் கொன்றவராவீர்கள். நீங்கள் அருள் புரிந்தால் நன்றியுடன் நடப்பவனுக்கு அருள் புரிந்தவராவீர்கள்’ என்று கூறினார். அவரை அப்படியே விட்டு விட்டு முஹம்மத் நபி (ஸல்)  சென்று விட்டனர். மறு நாள் அவரிடம் வந்து முதல் நாள் கேட்டது போல கேட்டனர். அவரும் முதல் நாள் கூறிய பதிலையே கூறினார். மூன்றாம் நாளும் அவரிடம் முஹம்மத் நபி (ஸல்)  வந்தனர். முதல் நாள் கேட்டது போலவே அவரிடம் கேட்டனர். அவரும் முதல் நாள் கூறிய பதிலையே கூறினார். அப்போது முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் ‘ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்’ என்றார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள பேரீச்சை மரத் தோப்புக்குள் சென்று குளித்து விட்டு பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மதே! இவ்வுலகில் உங்கள் முகத்தை விட எனக்கு வெறுப்பான முகம் ஏதும் இருந்ததில்லை. இன்று உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த முகமாக உங்கள் முகம் மாறி விட்டது. உங்கள் மாக்கத்தை விட எனக்கு வெறுப்பான மார்க்கம் ஏதுமிருக்கவில்லை. இன்று உங்கள் மார்க்கம் உலகிலேயே எனக்குப் பிடித்த மார்க்கமாக ஆகி விட்டது. உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் எதுவும் இருந்ததில்லை. இன்றோ உலகிலேயே எனக்குப் பிடித்த ஊராக உங்கள் ஊர் மாறி விட்டது. உங்கள் படையினர் என்னைப் பிடித்து வந்து விட்டனர். நான் மக்கா சென்று உம்ரா நிறைவேற்ற நினைக்கிறேன். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்’ என்று கேட்டார். அவருக்கு முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் வாழ்த்துக் கூறி உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சொன்னார்கள். அவர் மக்காவுக்கு வந்ததும் ‘நீரும் மதம் மாறி விட்டீரா?’ என்று மக்கா வாசிகள் கேட்டனர். ‘இல்லை; முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நானும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் அனுமதியின்றி யமாமா’விலிருந்து ஒரே ஒரு கோதுமை கூட உங்களுக்கு இனிமேல் வராது’ என்று விடையளித்தார்.

நூல் : புகாரி 4372

யமாமா எனும் பகுதியில் குறுநில மன்னனாக இருந்த ஸுமாமாவைத் தான் முஹம்மத் நபி (ஸல்)  அவர்களின் படையினர் பிடித்து வந்தனர். ”என்னை நீங்கள் கொல்வதென முடிவு செய்தால் அதற்கு நான் தகுதியானவனே” என்று அவர் கூறுவதிலிருந்து அவர் ஒரு கிரிமினல் குற்றவாளி என்பதும், கொல்லப்படுவதற்குத் தகுதியான பல கொடுமைகளை மதீனா இஸ்லாமிய அரசுக்கு  எதிராக அவர் நிகழ்த்தியவர் என்பதும் தெளிவாகிறது.

இவ்வாறான  கொடுமைகள் செய்த தலைவர்களும், குறுநில மன்னர்களும் மன்னிக்கப்படுவது அன்றைய வழக்கத்தில் இருந்ததில்லை. ஆனால், கைதிக்கு அதிபதியின் ஒட்டகத்திலிருந்து பால், உணவு வழங்கினார்கள். முஸ்லிம்களின் கொள்கை, கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், அவர்களின் பண்பாடுகள் அனைத்தையும் அவர் காண வேண்டும் அதன் மூலம் முஸ்லிம்கள் மீது அவர் கொண்டிருந்த கருத்தியல் தவறானது என்று கருதி, மூன்று நாட்கள் அவரை கைதியாக வைத்தார்கள்.

மூன்று நாட்களின் பின்னர் கிரிமினல் கைதியிடம் எந்த நிபந்தனையும் விதிக்காமல், எந்த ஒப்பந்தமும் செய்யாமல், எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தாமல், பணமும் பெறாமல் குற்றவாளியை சாதாரணமாக விடுதலை செய்தார்கள்.

இஸ்லாத்தை கலப்படமற்றுப் பின்பற்றும் உண்மை முஸ்லிம்களின் துாய ஏகத்துவக் கொள்கை, நேர்மை பண்பாட்டு நடவடிக்கைகள் என்பனவற்றை நேரில் காண்பவர் நிச்சயம் எதிரியாக மாட்டார். உடனே நண்பராகிவிடுவார் என்று முஹம்மத் நபி (ஸல்)  நம்பியதால் தான் அவிழ்த்து விட்டார்கள். கிரிமினல் குற்றவாளிகளிடம் கூட முஹம்மத் நபி (ஸல்)  எந்த அளவு கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதை வரலாறு வியந்து நோக்குகிறது.

தன்னை வஞ்சித்த எதிரிகளிடம் கூட இத்தனை கனிவாக நடந்து கொண்டதால்தான்  தனது பிரசாரத்தைவிட, நடைமுறைகளால் மக்களின் உள்ளங்களை முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் வென்றெடுத்து, இன்றுவரை மிகப்பெரும் சமுதாயம் அவர்களது கொள்கைகளை வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பின்பற்ற வழி வகுத்தார்கள்.

சிறுபான்மை அந்நியரிடம் அடைமானம் வைத்த ஆட்சியாளர்

முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் தமது இரும்புக் கவசத்தை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்து அவரிடமிருந்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள். நூல் : புகாரி 2096, 2200

சக்திவாய்ந்த மிகப் பெரும் ஆட்சியாளராக விளங்கிய முஹம்மத் நபி (ஸல்)  அவர்களின் படாடோபமற்ற எளிமையான வாழ்வுக்குச் சான்றாக இதைக் குறிப்பிடலாம்.

நாட்டின் ஜனாதிபதி அடைமானம் வைக்கக் கூடியவராகவும், அவரது ஆட்சியில்  யூத – சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெற்றுக் கொண்டு, உணவுப் பொருளைக் கடனாக ஜனாதிபதிக்கு வாங்குபவராக  இருந்தார் என்பதிலிருந்து ,முஹம்மத் நபி (ஸல்)  அவர்களின் விசாலமான உள்ளத்தை அறிந்து கொள்ள முடியும். அத்தோடு, சிறுபான்மை சமுதாயம் அவரது ஆட்சியில் செழிப்புடன் வாழ்ந்து, பணவசதி பெற்று தம்மை ஆள்பவருக்குக் கடன்  கொடுக்கும் நிலையில் இருந்துள்ளனர். அவரது ஆழுகையில், சிறுபான்மை என்று பறிமுதல் இல்லை. நெருக்குதல் இல்லை. ஆட்சியாளரைவிட ஆளப்பட்ட சிறுபான்மை இனம் செல்வச் செழிப்பில் வாழ்ந்துள்ளது வரலாற்றில் இவரது ஆட்சியில் மட்டும்தான் என்று வியப்புறும் நேர்மையான ஆட்சியை வழங்கியுள்ளார்கள்.

விஷம் வைத்த பெண்னை மன்னித்தல்

யூதப் பெண் ஒருத்தி முஹம்மத் நபி (ஸல்)  அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை முஹம்மத் நபி (ஸல்)  சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று முஹம்மத் நபி (ஸல்)  அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 2617

நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரிகளாகவும், சிறுபான்மையினராகவும் இருந்த யூத இனத்துப் பெண்மணி விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொண்டு வந்து கொடுக்கிறாள். அவள்,  நபி (ஸல்) அவர்களை சந்திக்கும் அளவு சாதாரணமாக இருக்கிறாகள். அவளது உணவைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை இருந்துள்ளது. அவள் வழங்கிய உணவில் விஷம் கலந்த செய்தி தெரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டாள். அவளைக் கொன்று விடலாமா? என்று நபித் தோழர்கள் கேட்ட போது, வேண்டாம் எனக் கூறி மன்னித்துவிட்டார்கள். அத்தோடு,அப்பெண்ணுக்குப் பின்னணியில் கொலைமுயற்சி செய்தவர் யார் என்பதையும் விசாரிக்கவில்லை. அவளது யூத சமுதாயத்தைப்  பழிவாங்கவும் இல்லை.

மன்னராட்சியில் இது போன்று கொலை முயற்சி செய்தவர் மரண தண்டனை விதிக்கப்படுவர். அவர்கள் துாக்குத் தண்டனையிலிருந்து உயிர் பிழைப்பதே அரிது என்ற நிலையுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நபிகள் நாயகத்தின் பெருந்தன்மை எத்தகையது என்பது விளங்கும்.

இவ்வாறான அவரது செங்கோலாட்சியை காணும் எவரும் இந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கும் மனித நேயத்திற்கும்  சிறுபான்மை இனங்களுடனான அவரது நளினப் போக்கிற்கும் ஈடானது ஏதுமில்லை என்பதை ஒப்புக் கொள்வார்.

பிறமதப் பிரேதத்திற்கு எழுந்து மரியாதை

”எங்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. அதற்காக முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் நின்றோம். ‘அல்லாஹ்வின் தூதரே! இது யூதருடைய பிரேதம்’ என்று நாங்கள் கூறினோம். அதற்கு முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் ‘நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்’ எனக் கூறினார்கள். நூல் : புகாரி 1311

ஒரு நாட்டின் ஜனாதிபதி மாளிகை உள்ள இடம் எவ்வளவு பாதுகாப்பாதாக இருக்கும். காவலர்கள் குவிக்கப்பட்டு யாரும் நுழைய முடியாத காப்பரண்கள்  மைக்கப்பட்டிருக்கும். ஆனால், வலிமையான ஆட்சியாளராகத் தகழ்ந்த முஙம்மது நபி (ஸல்) அவர்கள் ஒற்றையறை ஓலைக் குடிசையில் வாழ்ந்துள்ளார்.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த  ஒருவரின் உடல் முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் பயமோ, அச்சமோ இன்றி தைரியமாகக் கொண்டு செல்கிறார்கள் என்றால் இதைவிட சிறுபான்மைக்கு உரிமை வேறு என்னதான் வேண்டும் என்ற அளவு முழு உரிமை பெற்று வாழ்ந்துள்ளனர். எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் சிறுபான்மை சமூகத்திற்கு அண்ணலாரின் ஆட்சியில் வழங்கப்பட்டதால் தான், பிணத்தைத் துாக்கிக்  கொண்டு, நபியவர்கள் அமர்ந்திருந்த இடத்தைக் கடந்து நடந்த செல்ல முடிந்துள்ளது.

முஹம்மத் நபி (ஸல்)  அவர்களின் ஆட்சியில் சிறுபான்மை மக்கள் எத்தகைய உரிமைகள் பெற்று சுதந்திரத்துடன் வாழ்ந்தனர் என்பதற்கும், நபிகள் நாயகத்தின் மதம் கடந்த மனித நேயத்துக்கும் இந்நிகழ்ச்சியும் சான்றாக அமைந்துள்ளது.

கொல்ல வந்தவனை மன்னித்தல் 

பொதுவாக எதிரிகளம் மீது யாரும் கருணை காட்ட முனையமாட்டார்கள். அதுவும் அசாதாரணமான நேரத்தில், கருணை காட்டவே மாட்டார்கள். ஆனால், முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள், தமக்கு எதிராக வன்முறையைப் பிரயோகம் செய்யது கொல்ல வந்தவர்களிடம், யுத்த களத்தில் கூட இரக்கம் காட்டியதற்குப் பல சான்றுகள் உள்ளன.

நான் முஹம்மத் நபி (ஸல்)  அவர்களுடன் நஜ்து எனும் பகுதிக்குப் போர் செய்யப் புறப்பட்டேன். முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் திரும்பிய போது நானும் திரும்பினேன். முள் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் பகல் தூக்க நேரம் வந்தது. முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கினார்கள். மக்கள் மரங்களின் நிழல் தேடிப் பிரிந்து விட்டனர். முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் முள் மரத்தின் கீழ் தங்கினார்கள். தமது வாளை அம்மரத்தில் தொங்க விட்டனர். நாங்கள் சிறிது நேரம் தூங்கியிருப்போம், அப்போது முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் எங்களை அழைத்தனர். அங்கே அவர்களின் அருகில் கிராமவாசி ஒருவர் இருந்தார். ‘நான் தூங்கிய போது இவர் எனது வாளை எடுத்து விட்டார். நான் உடனே விழித்து விட்டேன், இவர் வாளை உருவிக் கொண்டு என்னை விட்டு உம்மைக் காப்பாற்றுபவர் யார்?’ எனக் கேட்டார். அல்லாஹ் என்று கூறினேன். அவர் உடனே வாளைக் கீழே போட்டு விட்டார்! என்று கூறினார்கள். அவரை முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் தண்டிக்கவில்லை, என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி 2913, 4139

தன்னைக் கொல்ல வந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எதிரியைக் கூட முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் தண்டிக்காது, மன்னித்து விடும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை அமைந்திருந்தது.

முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் பங்கு கொண்ட ஒரு போர்க்களத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுக் கிடந்ததை முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் கண்டார்கள். அதனால், பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர். நூல் : புகாரி 3014, 3015

வரலாற்றுக் காலம்  தொட்டு போர் என்று வந்துவிட்டால் மனிதர்கள் மிருகங்களாகவே மாறிவிடுவதை இன்றுவரை உலகில் அனைவராலும் காணமுடியுமாக இருக்கிறது. அப்பாவிகளும், பெண்களும், சிறுவர்களும் போரில் எவ்விதத்திலும் பங்கு வகிக்காதவர்களும் கொல்லப்படுவதை இன்றைய சிரிய யுத்தத்தில் கூட தெலைக்காட்சி வழியாகக் காண்கிறோம். இதெல்லாம் போர்க்களத்தில் தவிர்க்க முடியாது என்று திமிருடன் நியாயப்படுத்தும் அதிகாரவர்க்கத்தையும் காண்கிறோம்.

யுத்த களத்தில் எதைத் தவிர்க்க முடியாது என்று அதிகாரவர்க்கப் போர் வெறியர்கள் கூறுகிறார்களோ, அதைத் தவிர்த்தே ஆக வேண்டும் என்று தமது படையினருக்கு முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் கண்டிப்பான கட்டளை பிறப்பித்தார்கள். அத்தோடு, நடைமுறைப்படுத்தியும் காண்பிக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கொல்லப்பட்ட பெண், போர்க் களத்திற்கு வராமல் வீட்டில் அமர்ந்திருந்தவள் இல்லை. மாறாக எதிரிப் படையினருக்கு உதவிகள் செய்வதற்காகவே களத்திற்கு வந்தவள், காயமடைந்தவர்களுக்கு உதவவும், உணவு போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பெண்கள் களத்திற்கு வருவது அன்றைய வழக்கம்.இத்தகைய பெண்களும் கூட கொல்லப்படலாகாது என்று முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் கட்டளையிட்டு போர்க்களத்திலும் புது நெறியை நிலை நாட்டினார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரை மன்னித்தல்

முஸ்லிம்களைப்  பொறுத்தவரை பள்ளிவாசல் புனிதமான இடம். அதுவும் மதீனாப் பள்ளி மிகவும் சிறப்பு வாய்ததில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அது மாமனிதரின் சொந்தப பணத்தில் அமைக்கப்பட்டது. அது, அவர்கள் தமது திருக்கரத்தால் கட்டிய பள்ளிவாசலாகும்.

பொதுவாக மனிதர்கள் புனிதமாக மதிப்பவை அசிங்கப்படுத்தும் போதுதான் அதிகமான கோபம் கொள்வது வழக்கம்.

ஆனால், புனித இடத்தை அசிங்கப்படுத்தியவருடன் நபியவர்கள்  நடந்ததுகொண்ட அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

”ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்! கடுமையாக நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படவில்லை என்றார்கள்.” நூல் : புகாரி: 220, 6128

…. அவர் சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டு விடுங்கள் என்றார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்தார்கள். ‘இது அல்லாஹ்வின் ஆலயம். இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது. தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவு கூர்வதற்கும் உரியது என்று அறிவுரை கூறினார்கள்.  நூல் : முஸ்லிம்: 429

சிறுநீர் கழிப்பவர் அதை அடக்கிக் கொள்வதற்காகச் சிரமப்படக் கூடாது.அதனால்,வேறு விளைவுகள் அவருக்கு ஏற்படலாம் என்பதற்காக அவர் முழுமையாக சிறுநீர் கழிக்கும் வரை பொறுத்திருந்து, அவரை அழைத்து, அறிவுரை கூறுகிறார்கள். குறைந்த பட்சம் இப்புனித இடத்தில் இவ்வளவ அசிங்கமாக நடந்திட்டாயே என்று கடுமையான வார்த்தைகளால் அவரை ஏசியிருக்கலாம். அல்லது அவரையே சுத்தம் செய்து தருமாறு கட்டளையிட்டிருக்கலாம். பண்பாடு தெரியாத ஒரு கிராமவாசி, அறியாமையின் காரணமாக அசிங்கம் பண்ணிவிட்டார் என்று மென்மையாக அறிவுறுத்துகிறார்கள்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிகாரபலப் பிரயோகம் செய்து, அடக்கி ஆழ்பவராக அவர்கள் இருக்கவில்லை. எல்லா சந்தர்ப்பத்திலும் அறிவு வழியில், நிதானம் தவறாதவர்களாக இருந்தார்கள் என்பதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

அண்ணலார் தனது ஆரம்ப நாட்களிலும் அதிகார பலம் வந்த நாட்களிலும் அனைத்து மக்களுடன் மிகவும் பணிவாகவும் அன்பாகவும் நடந்து  கொண்டார்கள். அவர்களது வாழ்வில் உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரி உள்ளது. அந்த முன்மாதிரிகளின் பக்கம் திசை திரும்பினால், உலகில் அமைதியும் சமாதானமும் சகவாழ்வும் நிலவும் என்று உறுதியாகக் கூற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *