ஒரு முஸ்லிம் தன்னுடைய தந்தையை விடுத்து வேறொருவருடன் தன்னை இணைத்து நான் அவருடைய மகன் என்று சொல்வதோ இதுபோல தன்னுடைய குடும்பத்தை விடுத்து வேறொரு குடும்பத்துடன் தன்னை இணைத்துச் சொல்வதோ மார்க்கத்தில் கூடாததாகும். சிலர் உலக இலாபங்களுக்காக இப்படிச் செய்கின்றனர். பொய்யான இந்த உறவை அரசு ஆவணங்களில் கூட பதிவு செய்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களுடைய தந்தை அவர்களை சிறு வயதிலேயே புறக்கணித்து, கவனிக்காமல் விட்டதற்காக தம் தந்தையின் மீதுள்ள வெறுப்பில் குரோதத்தில் இப்படிச் செய்யலாம். இவையனைத்தும் விலக்கப்பட்டவையாகும். இதனால் திருமணம், வாரிசுரிமை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் பெரும் குழப்பங்கள் ஏற்படும். ஆதாரபூர்வமான நபிமொழியில் வந்திருப்பதாவது:
‘யார் தன்னுடைய தந்தையை விடுத்து வேறொருவருடன் தன்னை இணைத்துச் சொல்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), (புகாரி)
வம்ச உறவுகளை மாற்றக்கூடிய அல்லது அதில் பொய்யை இணைக்கக் கூடிய அனைத்து செயல்களும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவையாகும். சிலர் மனைவியுடன் தகறாறு ஏற்படும் போது அவளைத் தேவிடியாத்தனம் செய்பவள் என்று திட்டி விடுகின்றனர். தம்முடைய குழந்தையைக் கூட தம்முடையதல்ல என எந்த ஆதாரமும் இன்றிக் கூறி விடுகின்றனர். இன்னும் சில பெண்கள் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு தவறான உறவால் அடுத்தவனின் கருவைச் சுமந்து தனது கணவனின் வம்ச உறவில் சேர்த்து விடுகின்றனர். நபிமொழியில் இது குறித்து கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘லிஆன் (ஒருவரையொருவர் சபித்தல்) சம்பந்தமான வசனம் (24:6-9) இறங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஒரு பெண் ஒரு குடும்பத்துக்குச் சம்பந்தமில்லாத (விபச்சாரத்தின் மூலம் உருவான கருவை அல்லது) குழந்தையை அக்குடும்பத்துடன் சேர்த்தால் அவளுக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது. மேலும் தனது சுவனத்தில் அல்லாஹ் அவளை சேர்க்க மாட்டான். (அதுபோல) ஒரு மனிதன் தன்னுடைய குழந்தை – அது அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் – அது எனக்கு பிறந்ததல்ல என மறுத்தால் அவனை விட்டும் அல்லாஹ் தூரமாகி விடுகிறான். மேலும் (மறுமையில்) மனிதர்களில் முன்னோர் பின்னோர் அனைவரின் முன்னிலையில் அவனைக் கேவலப்படுத்துவான்’ (அபூதாவூத்).