Featured Posts

இசையும் இசைக் கருவிகளும்

“மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவுமின்றி (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான்” (31:6). இவ்வசனத்திலுள்ள மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்பதன் கருத்து பாடல்களே என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

‘விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் தோன்றும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஆமிர் (ரலி), மற்றும் அபூமாலிக் அல்அஸ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி.

மேலும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘திண்ணமாக இந்த சமுதாயத்தில் பூகம்பம், உருமாற்றம் செய்யப்படுதல், அவதூறு கூறல் ஆகியவை உண்டாகும். எப்போதெனில் அவர்கள் மது பானங்களை அருந்தும்போது, (நடனமாடி) பாட்டுப் படிக்கும் பெண்களை ஏற்படுத்தும் போது, இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னு அபித்துன்யா) இதே கருத்து திர்மிதியிலும் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் முரசு அடிப்பதைத் தடுத்துள்ளார்கள். நாதசுரம் (Pipe) பற்றிக் குறிப்பிடும் பொழுது அது தீய மோசமான சப்தம் எனக் கூறியுள்ளார்கள். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் முன் சென்ற மார்க்க அறிஞர்களும் யாழ் (வீணை), மேன்டலின், ரீபெக், (Mandolin, Rebec-இவை யாவும் வீணையில் ஒவ்வொரு வகை), புல்லாங்குழல், சிங்கி (Cymbal) போன்ற இசைக் கருவிகள் ஹராம் எனக் கூறியுள்ளனர்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் இசைக் கருவிகளைத் தடுத்துள்ள ஹதீஸில் வயலின், சிதர் (Zither-இது ஒரு வகை நரம்பு இசைக்கருவி), பியானோ, கிதார் போன்ற நவீன இசைக் கருவிகளும் அடங்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் சொல்லவதானால் இந்த நவீன இசைக் கருவிகள் ஹதீஸ்களில் தடை வந்துள்ள பழங்கால இசைக் கருவிகளை விட பெருமளவு பரவசம், போதை, மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். இப்னுல் கய்யூம் போன்ற அறிஞர்கள் கூறியதுபோல இசையின் போதை மதுவின் போதையை விடக் கடுமையானது. இசையுடன் பாடலும், மனமகிழ்ச்சியூட்டி பரவசப்படுத்தும் பெண்களின் குரலும் இணைந்து விட்டால் அது அதைவிடக் கூடுதல் ஹராமாகும், கூடுதல் பாவமாகும் என்பதில் சந்தேகமில்லை.

பாடலின் வரிகள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தக் கூடியதாகவும் காதலியின் அழகை வர்ணிப்பதாகவும் இருந்தால் விபரீதம் மேலும் அதிகமாகிவிடும். இதனால் தான் பாடல்கள் விபச்சாரத்திற்குத் தூது விடுகின்றது, உள்ளத்தில் நயவஞ்சகத்தை வளர்க்கின்றது என அறிஞர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் பாடல்கள் மற்றும் இசையின் பிரச்சனை இக்காலத்தில் மிகப் பெரும் குழப்பமாகவும் சோதனையாகவும் ஆகிவிட்டது.

மேலும் நம்முடைய இக்காலத்தில் பல்வேறு பொருட்களில் இசை நுழைந்து விட்டிருப்பது மிகப் பெரும் தொல்லையாகும். உதாரணத்திற்கு கைக்காடிகாரங்கள், அலாரங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், கம்யூட்டர்கள், சில தொலைப்பேசி சாதனங்கள் ஆகியவற்றை சொல்லலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பெரும் மன உறுதி வேண்டும் என்றாகி விட்டது. அல்லாஹ்தான் உதவி செய்ய வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *