Featured Posts

குஜராத் ‘நினைவுத் துயரங்கள்’ 4-ம் ஆண்டு

நினைவுத் துயரம் – குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை

எதிரே வருகிறது பிப்ரவரி. நான்கு ஆண்டுகளாகியும் கிஞ்சிற்றும் மறக்க முடியாத கொடூரத் துயரங்கள், கண்களை விட்டு அகல மறுக்கும் வன் செயல்கள், ரத்த வாடைகள், சரியாகச் சொல்வதென்றால் பிப்ரவரி 28, 2002 அன்று தான் குஜராத்தில் முஸ்லிம்கள் கூட்டங் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் தொடங்கியது. அதற்கு முந்தைய நாள்தான் பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் ரயில் எரிந்த சம்பவம் நிகழ்ந்தது. ரயில் எதனால் எரிந்தது? எப்படி எரிந்தது? விபத்தா? சதியா? யார் பொறுப்பு? என்பதெல்லாம் ‘தெளிவாகாத’ நிலையிலும் எல்லாருமே அந்தச் சம்பவத்தைக் கண்டித்தனர். இப்போது கோத்ரா நிகழ்வு ஒரு விபத்துதான் என்பதை யு.ஸி. பானர்ஜி விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை தெளிவுபடுத்தி விட்டது.

குஜராத் வகுப்பு கலவரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையிலான கமிஷன் விசாரித்தது. கரசேவகர்கள் ரயிலிலேயே சமையல் செய்ததால்தான் ரயில் பெட்டியில் தீப்பிடித்தது. வெளியிலிருந்து யாரும் தீ வைக்கவில்லை என்று பானர்ஜி இடைக்கால அறிக்கை அளித்தார். (தினமணி ஞாயிறு 22 ஜனவரி 2005

இவர்கள் குஜராத்தில் பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் முக்கியமாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இதர அமைப்புகளிலிருந்து வெளியேறிய தொண்டர்களும் அடங்குவர். இவர்களின் கூற்றுப்படி, ‘குஜராத் படுகொலைக்கான ஏற்பாடுகள் நரேந்திர மோடி பதவி ஏற்ற அன்றிலிருந்தே தொடங்கிவிட்டது. தாங்கள் ஏற்கனவே செய்து வைத்திருந்த பயங்கர தயாரிப்புகளை பயன்படுத்திட அவர்கள் ஏற்பாடு செய்ததே கோத்ரா ரயில் எரிப்பு.’ (தி ஹிந்து 15.05.2002)

ஆனால் ஒரு தீவிர, இறுகிப் போன ஆர்.எஸ்.எஸ், ஆளாகவும் குஜராத் முதலமைச்சராகவும் இருக்கும் நரேந்திர மோடியோ ரயிலில் இருந்த ராம சேவகர்களைக் கொல்வதற்காக முஸ்லிம்கள்தான் ரயிலை எரித்தனர் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளை நியூட்டனின் வினை – எதிர் வினை தியரியைச் சொல்லி நியாயப்படுத்தினார், மோடி.

இந்த பூமியில் ஒரு பெரும் வன்முறை பயங்கரவாதம் நடக்கப் போகிறது என்பதை அதிகாரிகள் மோடிக்கு சுட்டிக் காட்டாமலில்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம் பண்டார்வாடா என்ற குக்கிராமம். அந்த கிராமத்தில் விஹிபயினர் கோத்ரா சம்பவத்திற்கு 3 வாரம் முன்பு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அந்த கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கெடுத்து கொண்டார்கள். முஸ்லிம்களை அழிப்பதே இவர்களின் குறிக்கோள். கூட்டத்திற்கு வந்திருந்த மக்களின் இரத்தத்தை சூடேற்றி அவர்களை கொண்டு முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.

விஹிப தலைவர்கள் ஒவ்வொருவராக பேச தொடங்கினர். கூடியிருந்த மக்களின் இரத்தம் சூடேற்றப்பட்டது. போதுமான அளவுக்கு வெறியூட்டபட்டது. அந்த மக்களுக்கு முன் இப்படி பேசினார்கள்: ‘எனதருமை இந்து சமுதாயமே! நாம் தெய்வமாக வழிபடும் கோமாதாவை, முஸ்லிம்கள் என்று சொல்லும் இந்த அரக்கர்கள் வெட்டி திண்கிறார்கள். நம் தெய்வத்தையே வெட்ட துணியும் இந்த அரக்கர்கள் நம்மை வெட்டி கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவர்கள் மனிதர்கள் அல்ல, அரக்கர்கள். நம் தெய்வத்தை வேட்டையாடும் இந்த அரக்கர்களை உங்கள் கிராமங்களை விட்டும் அப்புறப்படுத்துங்கள். கிராமங்களை தூய்மைபடுத்துங்கள். அவர்களை விரட்டுங்கள். கொல்லுங்கள். நெறுப்பிட்டு கொளுத்துங்கள்.’ என்றெல்லாம் பேசி அங்கு கலவரத்தை தூண்டும் அத்துணை வேலைகளையும் செய்தார்கள்.

குஜராத்தை கலவர பூமியாக்க ஒரு பெரும் திட்டம் ஒன்று அரங்கேற இருப்பதை கண்டு பல அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளனார்கள். அதில் ஒருவர் தான் சக்கரவர்த்தி (காவல்துறை உயர் அதிகாரி, குஜராத்). இவர் விஹிபவினர் ஒரு பெரும் கலவரத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களை கட்டுபடுத்துங்கள் என்று பிப்ரவரி 27, 2002 அன்று முதல்வர் நரேந்திர மோடியை கேட்டு கொண்டார். அதனால் அவர் இடமாற்றத்திற்கு ஆளானார்.

இப்படியெல்லாம் பேசி ஒன்றுமறியா அப்பாவி மக்களின் உள்ளத்தில் முஸ்லிம்களின் மேல் வெறியை ஊட்டினார்கள். மேலும் கலவரத்தை மிகவும் கச்சிதமாக நடத்தி முடிக்க ஒரு யுத்ததிற்கு எப்படி திட்டமிடப்படுமோ அதை போல கனகச்சிதமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட்டது.

கலவரத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே, விஹிப, பஜ்ரங்தள் தொண்டர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துப்பாக்கி பயிற்சியும் அடங்கும். பல இடங்களில் இவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தியே முஸ்லிம்களை கொன்றார்கள் என்பதற்கு இதுவே சான்று. (Outlook March 25, 2002).

இனப்படுகொலை நடத்தப்பட்ட பல மாதங்களுக்கு முன்பே முஸ்லிம்களின் வீடுகள், முஸ்லிம்களின் கடைகள், வியாபார நிறுவனங்கள், முஸ்லிம்களின் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்கள், முஸ்லிம்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவைகளின் பட்டியல் தயார் செய்யபட்டது. ரேசன் கார்டுகளை வைத்து முஸ்லிம்களின் வீட்டு முகவரியை எடுத்தார்கள். இந்த முகவரிகளை மாநகராட்சியனரும், ரேசன் கார்டு வினியோகம் செய்யும் அதிகாரிகளும் கொடுத்து உதவினர். அது மட்டுமல்ல மாநில தேர்தல் ஆணையமே இவர்களுக்கு வாக்களர் பட்டியலை கொடுத்து உதவி செய்தது. இவர்கள் கஷ்டப்படகூடாது என்று அதிகாரிகளுக்கு அவ்வளவு அக்கறை. (FrontLine March 29, 2002)

குஜராத் தலைநகரான காந்தி நகரில் பிப்ரவரி 27 அன்று நடந்த போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் ” நாளை நடக்கவிருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின் போது காவல்துறை தலையிடக் கூடாது” என்று முதல்வர் மோடி கட்டளையிட்டார் என்பது ஊரறிந்த உண்மையாகும். நரேந்திர மோடியின் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா இது தொடர்பாக மக்கள் விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 27 பிப்ரவரி அன்று காவல்துறை மூத்த அதிகாரிகளுக்கு மோடி கட்டளையிட்ட விவரம் குறித்து தன்னுடைய தந்தையிடமும் தெரிவித்திருக்கின்றார், ஹரேன் பாண்டியா, மோடியின் தவறுகளுக்கு அதிகாரப்பூர்வமான, நேரடியான சாட்சியாக இருந்த பாண்டியா படுகொலை செய்யப்பட்டு விட்டார். என்றாலும் பாண்டியாவின் தந்தை குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் நானாவதி ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஆக, இந்தப் படுகொலையில் குஜராத் அரசாங்கத்துக்கு இருந்த நேரடிப் பங்கு குறித்து எவருக்கும் கிஞ்சிற்றும் சந்தேகம் எஞ்சி இருக்கவில்லை. குஜராத் இனப்படுகொலை சாதாரண நிகழ்வல்ல. எந்த வகையில் பார்த்தாலும் சுதந்திர இந்தியாவில் குஜராத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான, பயங்கரமான தாக்குதல்கள் என்றே அந்த இனப்படுகொலையைச் சொல்ல முடியும்.

எங்களுடைய ஆட்சியில் வகுப்புக் கலவரமே நடந்தது கிடையாது என பா.ஜ.க. பீற்றிக் கொண்டதுண்டு. ஆனால் குஜராத் சட்டப்பேரவையில் மிகப் பெரும்பான்மை பலத்துடன் அது ஆட்சியில் இருந்த போதுதான் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான மிக மோசமான இனப்படுகொலை நடந்தது.

முஸ்லிம்கள் மட்டும் கோத்ராவை போதுமான அளவுக்குக் கண்டித்திருந்தால் குஜாராத்தில் பேரழிவு நடந்திருக்காது என்று அப்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்த முனைந்ததுதான் மோசம். பிற்பாடு ராஜதர்மத்தைக் கடைப்பிடிக்கும்படி மோடியை வாஜ்பாய் வலியுறுத்தினார். ஆனால் வாஜ்பாயைப் பொருத்தவரை, இன்று ஒன்றைச் சொல்வதும், நாளை அதற்கு முற்றிலும் மாறுபட்டதைச் சொல்வதும் கை வந்த கலை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகும். அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியோ இன்னும் ஒருபடி மேலாக போய் கோத்ரா நிகழ்வுக்குப் பிறகு குஜராத்தில் சட்ட ஒழுங்கை மிகச் சிறப்பாக ‘நிலை நிறுத்தினார்’ மோடி என்று நற்சான்றிதழ் கொடுத்து விட்டார்.

அது மட்டுமா? குஜராத்தின் மோசமான படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட இல்லாமல் போனதுதான் கொடுமை, இதுவரை என்றுமே, எங்குமே நடக்காத அக்கிரமத்தைச் செய்யவும் மோடி கிஞ்சிற்றும் வெட்கப்படவில்லை. நிவாரண முகாம்களை இழுத்து மூட உத்தரவிட்டார், மோடி. தண்ணிர் விநியோகத்தையும், உணவு தானிய விநியோகத்தையும் துண்டித்து விடுவேன் என்று மிரட்டினார். மோசமான, பயங்கரமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட அபலைகள் மீது கருணை காட்ட மறுத்தார். இந்தக் கொடூரங்கள் எல்லாமே சமூக நல்லிணக்கத்துக்காகவே உயிரைக் கொடுத்த காந்தியின் மாநிலத்தில் நடந்தன என்பதுதான் வேதனையான முரண்.

அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களான சட்டத்துறை, அரசு இயந்திரம், நீதித்துறை ஆகிய மூன்றுமே வகுப்புவாத மயமாகி விட்ட நிலையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக, அவர்களின் துயர் துடைப்பதற்காக யார் தான் வருவார்கள். அரசு எந்திரமும், காவல்துறையும் மிக ஆழமாக வெறியூட்டப்பட்டிருந்தன, (ஒரு சில கண்ணியமான, மரியாதைக்குரிய விதிவிலக்குகள் உண்டு).

சட்டத்தின் ஆட்சியை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நிலைநாட்ட பாடுபட்டு வரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற சர்வதேச மனித உரிமை அமைப்பு குஜராத் இனப்படுகொலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ”India – Justice the victim – Gujarat state fails to protect women from violence” என்கிற தலைப்பில் அந்த விரிவான அறிக்கை ஒரு மாதத்துக்கு முன்புதான் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் இனப்படுகொலைப்பற்றிய மற்ற அறிக்கையை போலவே அந்த அறிக்கையை வாசிப்பதும் ஒரு பயங்கரமான அனுபவமாகும். குஜராத் படுகொலையை சட்ட ஒழுங்கு சீர்குலைவு என்று மட்டுமே சொல்ல முடியாது. அவ்வாறு சொல்வது உண்மை நிலையை மிகவும் குறைத்து சொல்வதாகும். கச்சிதமாக திட்டமிட்டு வேண்டுமென்றே செய்து முடிக்கப்பட்ட இனப்படுகொலை என்றே அதனைச் சொல்ல வேண்டும்.

ஆம்னெஸ்டி அறிக்கையில் இதற்கென தனி அத்தியாயமே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. ”வன் செயல்களில் காவல்துறையினரின் ஆதரவும் நேரடி பங்கேற்பும்” என்கிற தலைப்பில் நிறைய குறிப்புகளும், உண்மை நிகழ்வுகளும் ஆதாரங்களுடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

”கொடுமைக்காளானவர்களுக்கு உதவ மறுத்ததோடு காவல்துறையினர் நின்றுவிடவில்லை. வன்தாக்குதல்களில் வெறிக்கும்பலுக்கும் ஒத்தாசையாக இருந்தனர். மிருகத்தனமாக நடந்து கொண்டனர். பொதுமக்கள் முன்னிலையில் பெண்களுடனும், குழந்தைகளுடனும் இழிவாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்டனர். பாராபட்சமற்ற வகையில் சட்டத்தின் ஆட்சியை பராமரிக்க வேண்டியவர்கள் ஆதரவற்ற முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிய இந்துத்துவ கும்பலின் ஒரு பகுதியாக மாறிவிட்டதைப் போல, அவர்களுடைய நடத்தை இருந்தது” என்று ஆம்னெஸ்டி அமைப்பு வேதனையுடனும், காட்டமாகவும் கண்டித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகளே தங்களின் காவல் வாகனங்களிலிருந்து டீசலை எடுத்து கும்பலுக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த காவல்துறை டீசலைக் கொண்டு முஸ்லிம்களின் வீடுகள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. இது பல்வேறு ஆய்வுக் குழுக்களின் விசாரணை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்றே நானாவதி – ஷா விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்த பல்வேறு சாட்சிகளும் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் என்கிற கலவரத் தடுப்பு சிறப்புக் காவல்துறையினரே தங்களின் வேன்களிலிருந்தும், ஜீப்களிலிருந்தும் டீசலை எடுத்து வெறிக்கும்பலுக்கு கொடுத்ததாகவும் அந்த டீசலைக் கொண்டு முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும் கொளுத்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

அஹமதாபாத்தில் ஒரு ஏரியா இன்ஸ்பெக்டரே வெறிக்கும்பலைத் தூண்டிவிட்டு உற்சாகப்படுத்தி முஸ்லிம்கள் மீது ஏவி விட்டதாக ஒரு பெண்மனி விசாரணை ஆணையத்திடம் சாட்சியம் அளித்துள்ளார். ”அந்த இன்ஸ்பெக்டரே தாமாக முன் வந்து தன்னுடைய வண்டியிலிருந்து டீசலை எடுத்துச் சென்று தீ வைக்குமாறு தூண்டி விட்டார்” என்கிறார் அந்தப் பெண்மனி.

வகுப்புக் கலவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற ஓரே நோக்கத்துக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கலவரத் தடுப்பு சிறப்புக் காவல்படை தான் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல வகுப்புக் கலவரங்களைத் தடுப்பதில் ஓரளவுக்குப் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்கிற படை என பெயர் பெற்ற மத்திய ரிசர்வ் காவல் படையிலிருந்து (சுடீகு) தேர்ந்து எடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு படை தான் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ். இதற்கு முன்பு நாட்டின் பிற இடங்களில் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட சிறப்பு படை தான். ஆனால் குஜராத்தில் அரசியலும், மதவாதமும் இரண்டறக் கலந்து மதவெறி தீவிரமாக கிளறப்பட்ட கொந்தளிப்பான சூழலில் அந்த சிறப்புப் படையும் வகுப்புவாத மயமாகிப் போனது தான் பரிதாபமானது, வெட்கக் கேடானது. அந்த சிறப்புப் படையின் பெயருக்கே நீங்கா களங்கம் ஏற்பட்டு விட்டது.

காவல்துறையினரின் நடத்தை வியப்புக்குரிய ஒன்றல்ல. ஏனெனில் குஜராத் காவல்துறையில் இருக்கும் மூத்த அதிகாரிகள் பலரும் இந்து வலது சாரி அமைப்புகளின் உறுப்பினர்களே…! அவர்கள் தத்தமது கடமையை ஆற்றுவதற்குப் பதிலாக தத்தமது அமைப்புகளின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தான் முனைப்புடன் இருந்து வந்துள்ளார்கள் என்று ஆம்னெஸ்டி அமைப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது.

வேறு எந்தவொரு நாகரிகமான சமூகத்திலும் இவ்வாறு சமூக விரோத அமைப்புகளில் எந்தவொரு காவல்துறை அதிகாரியும் இணைந்தார் எனில் ஒரேயடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார். இத்தகைய அரசியல் அமைப்புகள் யாதொன்றையும் சாராததாக காவல்துறை இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நிலை பெறுவதற்கு இது இன்றியமையாதவொன்றாகும்.

குஜராத் பேரழிவின் மோசமான, பயங்கரமான, சோகமான பரிமாணம் என்னவெனில் பெண்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டதும், அதிக அளவில் கற்பழிப்புகள் நிகழ்ந்ததும் தான் மனித மாண்புகளே கற்பழிக்கப்பட்டதைப் போன்று தோன்றுகிறது. குஜராத் பேரழிவின் இந்கப் பரிமாணத்தையும் ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கையில் தனி அத்தியாயமாக தொகுக்கப்பட்டுள்ளது.

”பெண்கள் மீதான வன்தாக்குதல்கள்” என்கிற தலைப்பில் கீழ் தொகுக்கப்பட்ட அத்தியாயத்தில் உலகெங்கும் நடந்த வகுப்புவாத, இன, வன்முறைகள் எல்லாவற்றிலும் குஜராத்தில் பெண்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் தனித்து நிற்கிறது.

குஜராத்திலும் சரி, நாட்டின் இதர பகுதிகளிலும் சரி எத்தனையோ கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் யாதொன்றிலும் 2002-இல் குஜராத் இனப்படுகொலையின் போது இருந்ததைப் போன்று இளம்பெண்கள், சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், பொதுமக்கள் வேடிக்கை பார்க்க நடந்தேறிய அவலங்கள் முக்கியமான அம்சமாக இருந்தது கிடையாது.

பெண்கள் மீது மிக மிக கொடூரமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர்கள் பெண்களாகவும், முஸ்லிம்களாகவும் இரண்டு அடையாளங்களும் ஒருங்கே பெற்றவர்களாக இருந்ததுதான். முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குவதற்காக கிளம்பிய இந்து வலது சாரிகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தின் ‘வெறுப்புக்குரிய’ குறியீடுகளாக முஸ்லிம் பெண்கள் தென்பட்டார்கள். அதனால் அவர்களை மிரட்டவும், இழிவுபடுத்தவும், ஊனப்படுத்தவும், காயப்படுத்தவும், அழிக்கவும் இந்து வலது சாரிகள் அதிகமான ஆர்வங் காட்டினார்கள்.

நேரடியாக தாக்கப்படாவிட்டாலும், கற்பழிப்புக்காளாக விட்டாலும் கூட வன்முறை, பேரழிவு ஆகியவற்றால் சின்னாபின்னமான குடும்பங்களைக் கோர்த்து, பராமரித்து வளர்க்க வேண்டிய திடீர் பொறுப்பும் கவலையும் சுமத்தப்படுவதால் பெண்கள் தான் உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிக அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

குஜராத் இனப்படுகொலையின் போது பெண்கள் மீது மிக அதிகமான பாலியல் கொடுமைகள் இழைக்கப்பட்டன. கௌஸர் பானு மற்றும் பல்கீஸ் பேகம் ஆகியோருக்கு நேர்ந்த கொடுமைகள் அதிகமாகப் பேசப்படுகின்றன.

அஹமதாபாத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நரோடா பாடியா பகுதியைச் சேர்ந்தவர் கௌஸர் பானு எட்டு மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு எட்டு மாத சிசு வெளியே எடுக்கப்பட்டு நெருப்பில் வீசப்பட்டது. இந்த அளவுக்கு பயங்கரமான, மிருகத்தனமான கொடுமைகள் இந்திய வகுப்புக் கலவர வரலாற்றிலேயே நடந்தது கிடையாது.

பல்கீஸ் பேகமோ தாஹோட் மாவட்டத்தின் ரந்தீகாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். அந்த நிலையிலும் அவரை ஒரு கும்பலே கற்பழித்தது. அவருடைய கண் முன்னாலேயே அவருடைய உறவினர்கள் ஒன்பது பேரை கும்பல் வெட்டிச் சாய்த்தது. அவரையும் செத்துப் போய் விட்டதாக எண்ணிவிட்டு கும்பல் ஒடிவிட்டது. ஆனால் உயிர் பிழைத்த பல்கீஸ் பேகம் நடந்த உண்மைகளை உலகுக்கு சொல்லிவிட்டார். இந்த வழக்கில் மருத்துவர்களும், காவல்துறைகளும் கொடூரத்தை மூடி மறைக்கும் விதத்தில் கைகோர்த்துச் செயல்பட்டதுதான் சாபக்கேடு ஆகும். இறுதியில் உச்ச நீதி மன்றம் தலையிட்டு வழக்கு விசாரணையே வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டியதாகி விட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் கௌஸர் பானுவும், பல்கீஸ் பேகமும் மட்டுமா? ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கையின்படி நூற்றுக்கணக்கான பெண்களும், இளம் பெண்களும் தத்தமது குடும்பத்தவர் முன்னாலேயே இழுத்துச் செல்லப்பட்டு துகிலுரியப்பட்டனர். வன்மம் மிகுந்த இந்து வெறியர்கள் அந்தப் பெண்களை திட்டினார்கள்: கிண்டலடித்தார்கள்: இழிவுப்படுத்தினார்கள்: கற்பழித்துக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். பிறகு அவர்கள் கற்பழிக்கப்பட்டார்கள், கூட்டுக் கற்பழிக்கப்பட்டார்கள், தடிகளாலும், திரிசூலங்களாலும், பட்டாக்கத்திகளாலும் அடிக்கப்பட்டார்கள். மார்பகங்கள் வெட்டப்பட்டன. கர்பப்பைகள் கிழிக்கப்பட்டன. பிறப்புறுப்பில் இரும்புத் தடிகளால் கிழித்தார்கள். துண்டம் துண்டமாக வெட்டி சாட்சியம் கிடைக்காதவாறு எரிக்கப்பட்டார்கள் என்று ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கை அலறுகிறது.

இவையெல்லாவற்றிலும் அரசும் உடந்தையாக இருந்ததால் குஜராத் மாநிலத்துக்குள் இருந்து நீதி பெறுவது குதிரைக் கொம்பாகிவிட்டதுதான் வேதனை…! உச்ச நீதி மன்றம் தலையிடாக வேண்டியதாகி விட்டது. இன்று இவ்வாறு பல்வேறு வழக்குகள் அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்துக்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணை நடந்து வருகிறது.

”ஆதாரம் இல்லை” என்று சப்பைக்கட்டு கட்டி 3000க்கும் அதிகமான வழக்குகளை குஜராத் காவல்துறை மூடிவிட்டது. இந்த 3000 வழக்குகளிலும் மறுபடியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. அவ்வாறு மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில் பல்கீஸ் பேகத்தின் வழக்கும் ஒன்று.

குஜராத்தில் நீதித்துறையின் கீழ்மட்டம் முழுமையாக வகுப்புவாத மயமாகிவிட்டது. நீதித்துறையின் மேல்மட்டமும் ஒரளவுக்கு வகுப்புவாத மயமாகி இருக்கிறது. அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களில் பெரும்பாலோர் விஸ்வ இந்து பரிஷத்தின் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் நிலவரமாகும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்?

எதிர்மறைவான உணர்வுகளைக் கிளற வேண்டும் என்பதற்காக நாம் இவற்றையெல்லாம் நினைவு கூரவில்லை. இனி எதிர்காலத்தில் இந்தியாவில் எங்குமே இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழக்கூடாது என்பதற்காகவே இவற்றை நாம் நினைவு கூர்கிறோம். வகுப்புவாத, பாசிச சக்திகளின் கையில் ஆட்சிக் கடிவாளம் சென்றால் என்ன நடக்கும் என்பதை இந்த ஞாபகங்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

வகுப்பு வெறியர்களுக்கு எதிரான போர் ஜனநாயக வழிமுறைகள் மூலம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். வகுப்பு வெறியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்;: பலவீனப்படுத்தப்பட வேண்டும்.

அமைதியும், சகிப்புத்தன்மையும் நிறைந்த பண்பாடு நிலை நிறுத்தப்படும் போது தான் ஜனநாயகம் செழித்தோங்கும்.

ஒரு உயிர்த்துடிப்புள்ள, ஆரோக்கியமான சிவில் சொசைட்டியின் தேவையும் மிக மிக அதிகமாக இருக்கிறது. ஜனநாயகம் தழைக்க அத்தகைய சிவில் சொசைட்டி இன்றியமையாதவொன்றாகும். விஷய ஞானம் மிக்க, தகவல்களை நன்கு அறிந்த, தீரமும், உறுதியும் மிக்க குடிமகன்களால் அத்தகைய சொசைட்டியை அமைக்க முடியும்.

(பல்வேறு இடங்களிலிருந்து இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் திரட்டப்பட்டன).

நன்றி:
– G. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை
http://www.tamilmuslim.com/Avalangal/gujarat-feb-27.htm

2 comments

  1. “னி எதிர்காலத்தில் இந்தியாவில் எங்குமே இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழக்கூடாது என்பதற்காகவே இவற்றை நாம் நினைவு கூர்கிறோம். வகுப்புவாத, பாசிச சக்திகளின் கையில் ஆட்சிக் கடிவாளம் சென்றால் என்ன நடக்கும் என்பதை இந்த ஞாபகங்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். “

    உண்மையான தேசபக்திஉள்ள ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்தவேண்டிய வரிகள்.

    சொந்த மண்ணில் அகதியாக்கப்பட்ட மக்களின் வடுக்களான இந்த நினைவுகள் துயரத்தை அளித்தாலும் எதிர்கால இந்தியாவின் அமைதிக்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளை இடையறாது செய்ய உதவும்.

    இனப்படுகொலைகளிலும் மதக்கலவரங்களிலும் தம் ஆதிக்கத்தையும், தேசத்திற்கு இழிவையும் அறுவடை செய்யும் மதவெறி சக்திகள் இனியேனும் தலை தூக்காதிருக்க நம் விழிப்பை இவை உறுதி செய்யும்.
    பதிவுக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *