Featured Posts

ஜூம்ஆவில் குளிப்பது கடமை..

485. ”உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :877 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)


486. ஜும்ஆ நாளில் உமர் (ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர் (ரலி) அழைத்து ‘ஏனிந்தத் தாமதம்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்’ என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) ‘உளூ மட்டும்தான் செய்தீரா? நபி (ஸல்) அவர்கள் குளிக்குமாறு கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!” என்று கேட்டார்கள்.

புஹாரி : 878 உமர் (ரலி)


487.”ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 858 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


488. (மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங்களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதியும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும் போது வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

புஹாரி:902 ஆயிஷா (ரலி)


489. ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி நான் அம்ராவிடம் கேட்டேன். அதற்கு அம்ரா ‘அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே கோலத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே என்று கூறப்பட்டது’ என ஆயிஷா (ரலி) கூறினார் என விடையளித்தார்.

புஹாரி :903 ஆயிஷா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *