1837. நாங்கள் உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர் (ரலி) ‘நீர் அதற்குத் தகுதியானவர் தாம்’ என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன். அதற்கு உமர் (ரலி), ‘நான் இதைக் கருதவில்லை’ என்றனர். ‘கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால் முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன்’ என்று கூறினார்கள். இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என கூறினேன். ‘அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?’ என உமர் (ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். ‘அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது’ என்று உமர் (ரலி) கூறினார். ஷகீக் கூறினார். அந்தக்கதவு எதுவென உமர் (ரலி) அறிவார்களா? என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். ‘ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல் அதை உமர் (ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்’ என்று ஹுதைஃபா (ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹுதைஃபா (ரலி) ‘அந்தக் கதவு உமர் (ரலி) தாம்’ என்றார்கள்.
கடலலைகள் போல் குழப்பங்கள் பரவுதல்.
புஹாரி : 525 ஷகீக் (ரலி).
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library