Featured Posts

விடைபெறும் நாளில்….

இணையத்தில் சினிமா மற்றும் பொழுது போக்கு என்று சராசரித் தமிழனாக வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ்மணத்தின் அறிமுகம் கிடைத்தது. சங் பரிவாரத்தைச் சேர்ந்த சிலர் இஸ்லாத்தின் மீதும், நபிகளார் மீதும் அவதூறுகளை எழுதிக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு என் அறிவில் பட்டதை அவர்களின் பதிவுகளிலேயே பின்னூட்டமாக பதிலளித்துக் கொண்டிருந்தேன். பின்னூட்டங்கள் வெளியிடப்படாமை, வெளியிடுதலில் தாமதம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே தனியாக வலைப்பூ ஒன்றைத் துவங்கினேன்.

அவர்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கிய போது இஸ்லாத்தைப் பற்றிய அறிவு குறைவாகவே இருந்தது. பின்னர் அவதூறுகளுக்கு பதில் அளிப்பதற்காகவே என் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டி இருந்தது.இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்ய, அதன் சட்டதிட்டங்கள் குறித்தான சந்தேகங்களை எழுப்ப எவருக்கும் உரிமை உண்டு. அப்படிச் செய்யப்படும் விமர்சனங்கள், எழுப்பப்படும் சந்தேகங்கள் நேர்மையானவையாக நியாயமானவையாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நேர்மையாக விமர்சனம் செய்யப்படும் எவருடனும் அழகிய முறையில் விவாதிக்க என்றும் நான் தாயாராகவே இருக்கிறேன்.

தமிழ்மண பதிவர்கள் மற்றும் தமிழிணைய வாசகர்களில் பெரும்பான்மையோருக்கு நல்லடியாரின் பதிவுகள் எப்படி இருக்கும் என்பது நன்கு தெரியும். தமிழ்மணம் நிர்வாகிகளும் நன்கு அறிந்தே இருப்பார்கள் என்று கருதுகிறேன். என்னை நட்சத்திரமாக இருக்க சம்மதமா என்ற மடல் வந்தபோதே, எனக்கு ஆச்சர்யம்தான். இவ்வாரத்தில் தற்காலிகமாக வேறு இடத்திற்கு பணி மாற்றம்; ஆண்டு இறுதி என்பதால் பணிப்பளு; மிகக்குறைவான இணையத் தொடர்பு என்றபோதிலும் எனக்கு அளிக்கபட்ட இவ்வாரத்தில் முன்முயற்சிகளில் முழுமையாக இன்றி எனது பாணியிலேயே எழுதியிருந்தேன்.

சிலர் தங்கள் வயிற்றெரிச்சலை ?! வெளிப்படுத்தும் விதமாக என்னை விமர்சிப்பதாகக் கருதி, தமிழ்மணம் நிர்வாகத்தையே விமர்சித்திருந்தனர்.சிலர் பின்னூட்டங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர். பிரிதொரு சந்தர்ப்பத்தில் அவற்றிற்கு தனிப்பதிவாக பதிலிடுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

இவ்வாரம் முழுவதும் எனது பதிவுகளை முகப்பிலேயே வைத்து என் வலைப்பதிவைப் பெருமைப் படுத்திய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும், என் பதிவுகளை விருப்புடனோ அல்லது வெறுப்புடனோ வாசித்தோருக்கும், வாழ்த்தியோருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

‘மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாகமாட்டான்’ (நபிமொழி)

4 comments

  1. சுட்டுவிரல்

    உங்கள் நட்சத்திர வாரத்தில் நிறையவே எதிர்பார்த்தாலும், யுனிசெஃப் போன்ற ஒரு சில பதிவுகள் தவிர நீங்கள் நடப்பு விஷயங்களை எழுதாதாலோ என்னவோ, சற்றே டல் தான். இதுவே, வழக்கமான வயிற்றெரிச்சல் பார்ட்டிகளுக்கு வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது என்னும்போது நீங்கள் fபார்மில் இருந்திருந்தால் அவர்களுக்கு பேதியே வந்திருக்கும் போல.

    உங்களை விமர்சிப்பதாக நினைத்து தமிழ்மணத்தின் மீதான தங்கள் கோபத்தையும் தீர்த்துக்கொள்ள முனைபவர்களுக்கு சொல்லிக்கொள்ள ஒரு பதில் இருக்கிறது

    ‘தமிழ்மணம் கடந்த காலங்களில் யார் எவர் என்று பாராமல் காழ்ப்புணர்வையே மூலதனமாகக்கொண்டு சுமுக சூழலை ‘நாச’ப்படுத்தியவர்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து வழங்கியிருக்கிறது’ என்பதே அது.

  2. அழகப்பன்

    அவர்களின் வயிற்றெரிச்சல் தமிழ்மண வாசர்கள் அறிந்த ஒன்றுதானே. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நல்லடியாரின் வழக்கமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

  3. நண்பன்

    நல்லடியார்,

    சிலர் தமிழ்மணத்தின் மீது பாய்வதற்குக் காரணம் – சரியான தளங்கள் இல்லாது அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய வலைப்பதிவர்களின் வலைப்பூவை பெருமளவில் மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் பெருவாரியான வாசகர்களின் விருப்ப திரட்டியாக அமைந்து போனது தான். அந்தச் செயலில், பண்பான நடையில் எழுதும் வரையிலும், எந்தப் பாகுபாடுமின்றி வாசகர்களுக்கு தேர்ந்தெடுத்து வாசிக்கும் வாய்ப்பை சம அளவில் வழங்கியது கண்டு எரிச்சல்,

    பிற ஊடகங்களில் எந்தவொரு வாய்ப்புமின்றி இருந்த பொழுது, தமிழ்மணம் என்ற திரட்டி வழங்கிய வாய்ப்பை முழுதாகப் பயன் படுத்தத் தொடங்கியதுமே, ஊடக ஆக்கிரமிப்பில் ஓட்டை விழுவதை உணர்ந்து, அதைத் தடுக்க வழி வகை அறியாது, தரம் கெட்ட மொழி நடையில் எழுதவும், திரட்டி நிர்வாகத்தினரைத் திட்டவும், இன்னும் பல செயல்களில் மறைமுகமாகவும் ஈடுபடவும் செய்கின்றனர்.

    இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், பண்பான முறையில் எழுதிக் கொண்டே செல்வது தான் நமக்கு அழகு.

    புத்தாண்டு வாழ்த்துகளுடன்

    அன்புடன்

    நண்பன்

  4. சுல்தான்

    தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் மேன்மையாய், தொய்வில்லாமல் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள். நண்பரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *