– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
கஞ்சத்தனம் வேண்டாம்! கண்ணே!
செல்வத்தின் சிறப்பை அறியாமல் சிலர் வீண்விரயம் செய்கின்றனர். காசை நீராகக் கரைக்கின்றனர். ஈற்றில் இருந்ததையெல்லாம் இழந்து வெம்புகின்றனர். இதற்கு நேர்மாற்றமாக மற்றும் சிலர் கஞ்சத்தனம் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணத்தைச் சேர்த்து வைத்து எண்ணி எண்ணிப் பார்ப்பதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம் அவசியத் தேவைக்குக் கூட செலவழிக்க மாட்டார்கள். இவர்களில் பலரின் நடவடிக்கை மிகவும் வித்தியாசமானது.
சிலர் உண்ணவும் பருகாவும் கூட பஞ்சம் பாடுவர். மாலை நேரமானதும் ஏதாவது ஒரு வீட்டிற்குச் சென்று கதை கொடுப்பர். தேநீர் குடித்து முடிந்த கையோடு “உங்களுக்கும் வேலையிருக்கும்; அப்ப நான் வாரனே” என்று கிளம்புவர்! இவர்கள் கதை கொடுப்பதே தேநீருக்குத் தான் என்பது போல் இருக்கும். இவர்கள் வீட்டுக்கு யாரும் சென்றால் ஒரு பிளேண்டியுடன் விரட்டிவிட முடியுமா என்று பார்ப்பார்கள்.
மற்றும் சிலர் எப்பவும் பக்கத்து வீட்டாரிடம் சீனி கொஞ்சம் இருக்குமா? கொச்சிக்காய் தூள் கொஞ்சம் இருக்குமா? பால்மா ஒரு கப் கிடைக்குமா? என்று அடுத்த வீட்டுப் பொருட்கள் மூலமே அடுக்களை வேலைகளை முடிப்பர். வாங்கிய பொருட்களை மீள ஒப்படைக்க மாட்டார்கள்.
அடுத்த வீட்டில் இரவல் பெருவது குற்றம் அல்ல. நபி(ச) அவர்கள் மரணித்த அன்று இரவு விளக்கு ஏற்றுவதற்கு அவர்களது வீட்டில் எண்ணெய் இருக்கவில்லை. பக்கத்து வீட்டில் இரவல் பெற்றே விளக்கு ஏற்றப்பட்டது. பக்கத்து வீட்டில் இரவல் பெற்றால், பெற்றதை விட சற்று அதிகமாகக் கொடுப்பது கண்ணியமான வழிமுறை என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
சில பெண்கள் வீட்டு உபகரணங்களை இரவல் கேட்பது போன்றே “உங்கட நெக்லஸைக் கொஞ்சம் தாங்க, உங்கட தங்கச் சங்கிலியைக் கொஞ்சம் தாங்க” என்றும் இரவல் கேட்பர்! இதைத் தவிர்க்க வேண்டும். அவசியத் தேவைகளை மட்டுமே அடுத்தவர்களிடம் இரவல் கேட்க வேண்டும். எடுத்தால் எடுத்தது போல் திருப்பிக் கொடுக்க வேண்டும். சிலர் ஐம்பது, நூறு என சின்னச் சின்ன கடன்களை எடுத்து “அல்வா” கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பர். இதற்கெல்லாம் உள்ளத்தில் ஊரிப் போன கஞ்சத்தனம் தான் காரணமாக இருக்கும்.
“(நல்லறங்களில்) செலவு செய்யுங்கள். (அது) உங்களுக்கு சிறந்ததாகும். எவர்கள் தமது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலி ருந்து பாதுகாக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.” (64:16)
கஞ்சத்தனத்திலிருந்து உள்ளம் பாதுகாப்புப் பெற்றால் அதுதான் வெற்றிக்கு வழியாக இருக்கும் என இந்த வசனம் கூறுகின்றது.
செல்வத்தைச் சேர்த்து வைத்து செலவு செய்யாமல் கஞ்சத்தனம் காட்டுவது நல்லதல்ல என அல்லாஹ் கூறுகின்றான்.
“அல்லாஹ் தனது அருட்கொடை யிலிருந்து அவர்களுக்கு வழங்கியவற்றில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு நல்லது என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீயதே! எதை அவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவை மறுமை நாளில் அவர்களது கழுத்தில் வளையங்களாகப் போடப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவனாவான்” என்று கூறுகின்றது. (3:180)
இந்த வசனம், கஞ்சத்தனம் காட்டுவதுடன் பிறரையும் கஞ்சத்தனம் பண்ணுமாறு ஏவுவார்கள் என்பதை விளக்குகிறது. அத்துடன், செல்வம் இருந்தும் இல்லாதது போல் நடிப்பர். ஒழுங்காக உடுக்காமல், உண்ணாமல் எப்போதும் பஞ்சப் பாட்டுப் பாடிக் கொண்டிருப்பர். இவர்கள் இழிவான வேதனைக்குரியவர்கள் ஆவர்.
“அவர்கள் கஞ்சத்தனம் செய்து, (பிற) மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டு கின்றனர். மேலும், அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியதை மறைக்கின்றனர். நிராகரிப்பாளருக்கு இழிவுதரும் வேதனையை நாம் தயார்செய்து வைத்துள்ளோம்” (4:37)
இவர்கள் கொடுக்காமல் இருப்பதால் அல்லாஹ்வுக்கு எந்தக் குறையும் இல்லை. இவர்களின் செல்வம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்பது போல் அல்லாஹ் பேசுகின்றான்.
“இவர்கள் தாமும் கஞ்சத்தனம் செய்து, மனிதர்களுக்கும் கஞ்சத்தனத்தை ஏவுகின்றனர். யார் புறக்கணிக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை விட்டும்) தேவையற்றவன்ளூ புகழுக்குரியவன்” (57:24)
இவ்வாறு பல வசனங்கள் கஞ்சத்தனத்தைக் கண்டித்துப் பேசுகின்றது! பெண்களில் சிலரிடம் அடிப்படைத் தேவைக்கே செலவு செய்யாத கஞ்சத்தனம் இருக்கின்றது. மற்றும் சிலர் அடிப்படைச் செலவுகளை உரிய முறையில் செய்தாலும், அடுத்தவர் விடயத்தில் இந்தக் கஞ்சத்தனப் போக்கைக் கைக்கொள்வர்.
குடும்ப உறவினர்களுக்கு செலவு செய்ய முற்படமாட்டார்கள். கணவன் தன் குடும்பத்தினருக்குச் செய்யும் செலவுகளில் கூட சில மனைவியர் தலையீடு செய்வர்.
தாய்க்கு இவ்வளவு கொடுக்க வேண்டுமா? சகோதரிக்கு இப்படிச் செய்ய வேண்டுமா? அவளுக்கு கணவன் இல்லையா? எனக் கேட்டு கணவனை நச்சரித்துக் கொண்டே இருப்பர். இதுவும் தவறாகும்.
மற்றும் சிலர் சின்னச் சின்ன தர்மங்கள் கூட செய்யமாட்டார்கள். கணவன் செய்யும் தர்மத்திற்கும் தடையாக இருப்பார்கள். இத்தகைய எல்லா வகையான கஞ்சத்தனங்களிலிருந்தும் உள்ளத்தைக் காக்க வேண்டும். எனவே தான் நபி(ச) அவர்கள் அடிக்கடி,
“யா அல்லாஹ்! கஞ்சத்தனம், சோம்பல், தள்ளாடும் வயதுவரை வாழ்தல், கப்ரின் வேதனை, தஜ்ஜாலின் பித்னா, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என நபி(ச) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (புஹாரி:4707), அறி: அனஸ் இப்னு மாலிக்)
மற்றும் சில அறிவிப்புக்களில்,
“யா அல்லாஹ்! கஞ்சத்தனத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என பிரார்த்தித்துள்ளார்கள். (புஹாரி:6370, அறி: ஸஹ்த் இப்னு அபீ வக்காஸ் (ர))
எனவே, கஞ்சத்தனத்தை விட்டும் அடிக்கடி அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும். கஞ்சனுடைய காசை வைத்தியனும் கள்வனும் கொண்டு செல்வான் என்று சொல்வார்கள். வாழ்க்கைக்குத் தேவையான செலவுகளைச் செய்தல், அடுத்தவர்களிடம் உதவி தேடுவதை முடியுமானவரை தவிர்த்தல், பிறரிடம் தேவையற்றிருத்தல், குடும்ப உறவினர்களுக்கும் அண்டை அயலவர்களுக்கும் உதவுதல், முடிந்தவரை தர்மங்கள் செய்தல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். செல்வத்தை சேர்த்து வைத்து செலவு செய்யாமல் விட்டுச் சென்று பின்னர் பிள்ளைகளுக்கு அதுவே பித்னாவாக மாறிவிடாதிருக்க வேண்டும்.
எனவே,
பெண்ணே! பெண்ணே! கண்ணே! கண்ணே!
கஞ்சத்தனம் வேண்டாம் கண்ணே!.. .. ..
(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)
thanks
Nagal virayamakamal sikkanamaha valdalum . sila nerangalil nam iratha uravuhal emakku mutthavarhal adambera vilai uyartha porutkalai katkum podu sila samyangalil vangi kodukka nerum idu thavara? avvaru kodukka villayanal irattha uruvuhalai thundittha pavam angalai serumallava?