Featured Posts

பெண்ணே பெண்ணே! – (தொடர் 4)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

பதட்டம் வேண்டாம்! கண்ணே!

சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் அதிகம் அலட்டிக் கொள்பவர்களாகவும், பதட்டம் கொள்பவர்களாகவும் பல பெண்கள் காணப்படுகின்றனர். பதட்டம் சில பெண்களுடன் கூடப்பிறந்த குணமாகக் குடிகொண்டிருக்கும். வாழ்வில் இறக்கங்கள் ஏற்பட்டாலோ இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டாலோ வாழ்வே சூனியமாகிவிட்டது போன்று நடந்து கொள்வர், ஒப்பாரி வைப்பர், கண்ணத்திலும் மார்பிலும் அடித்துக் கொள்வர், படபட எனப் பொரிந்து தள்ளுவர். உலகில் எவருக்கும் ஏற்படாத இழப்பு தனக்கு ஏற்பட்டது போன்று நடந்து கொள்வர்.

சில பெண்கள் அல்லாஹ்வையே குறைகூறுவர். அல்லாஹ்வுக்கு கண் இல்லாயா? என்று கேட்பர். சோதிக்க வேண்டும் ஆனால் இப்படிச் சோதிக்கக் கூடாது என அல்லாஹ்வுக்கே போதிக்க ஆரம்பித்து விடுவர். பொறுமையும், கழாகத்ர் பற்றிய நம்பிக்கையும் உள்ள எந்த மனிதனும் இந்த நிலையை அடையமாட்டான்.

சிலர் ஏற்பட்ட சின்ன தோல்வி, இழப்பு, போன்றவற்றை எண்ணி அடுத்த கட்டம் என்ன என்ற முடிவு இல்லாமல் தற்கொலைக்குக் கூட சென்றுவிடுகின்றனர். இவர்களது உள்ளம் சவால்களைச் சந்திக்கத் தயங்குகின்றது. இழப்புக்களைத் தாங்க மறுக்கின்றது. பரீட்சையில் தோல்வி என்பதற்காகவும், காதலில் தோல்வி என்பதற்காகவும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பரீட்சை என்பது வாழ்க்கைக்காக. வாழ்க்கையே பரீட்சைக்காக அல்ல என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர். காதலன் ஏமாற்றிவிட்டான் என்பதற்காகப் பல பெண்கள் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது எவ்வளவு முட்டாள்தனம்! மாமியார்-மாப்பிள்ளை கொடுமை போன்ற பல பிரச்சினைகளுக்கும் சிலருக்கு தற்கொலை தீர்வாகின்றது. கணவன் அடித்து விட்டான் என்பதற்காக நெருப்பில் எத்தனை பெண்கள் எரிந்து செத்துள்ளனர். ஈமான் இன்மையும், கழாகத்ரை ஏற்றுக் கொள்ளும் பக்குவமின்மையும், பொறுமையின்மையும், பதட்டம் மற்றும் அவசர புத்தி போன்ற கெட்ட குணங்களும் தான் இத்தகைய இழிவான முடிவுகளின் முன்பால் தள்ளுகின்றன.

அவசரம் ஷைத்தானின் நின்றுமுள்ளது என்பது நபிமொழியாகும். ஷைத்தான் நல்ல முடிவின்பால் மனிதனை இட்டுச் செல்ல மாட்டான். அவ்வாறே எமது வாழ்வில் நிதானம் தேவை அவசரம், பதட்டம் தவிர்க்கப்பட வேண்டும்.

“யாருடைய உள்ளம் சுருங்கியிருக்கின்றதோ அவருடைய நாவு நீளமாக இருக்கும்”

என்பது அரபு முதுமொழியாகும். இவர்கள் அதிகம் பேசுவார்கள். படபடவென பொறிந்து தள்ளிக் கொண்டே இருப்பார்கள். உனக்கு என்ன துன்பம் ஏற்பட்டு விட்டது என்று இப்படிப் பதறுகின்றாய் என்று கேட்டால், எனக்கு இன்னும் என்ன துன்பம் தான் ஏற்பட்டுவிடவில்லை என்று பட்டெனப் பதில் சொல்வார்கள்.

இவர்களது பேச்சும், செயலும் அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நிராகரிப்பதாகவே இருக்கும். இருக்கும் அருளுக்கு நன்றி செலுத்த மாட்டார்கள். இல்லாத அருள்களைப் பற்றியே பேசிப் பேசி அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பார்கள். இதனால் இருக்கும் அருளின் அருமை தெரியாது. இருப்பதை வைத்து வாழ்வை அனுபவிக்கவும் இவர்களால் முடியாது. இருக்கும் அருளை நிராகரிக்கும் இத்தகையவர்களது வாழ்வு வளம்பெற மாட்டாது. செழிப்புறவும் மாட்டாது.

“நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக நான் உங்களுக்கு மேலும் அதிகப்படுத்து வேன் என்றும், நீங்கள் (நன்றி செலுத்தாது) நிராகரித்தால் நிச்சயமாக எனது தண் டனை கடுமையானதாக இருக்கும் என்றும் உங்கள் இரட்சகன் அறிவித்ததை (எண்ணிப்பாருங்கள்.)”
(14:07)

அதிகம் பதட்டப்படுபவர்கள் எப்போதும் தனக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கின்றனர். எனது வீட்டில் எல்லோருடைய கணவர்களும் அழகானவர்கள் ஆனால் எனது கணவர் மட்டும் அழகற்றவர். எனது குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் எனது பிள்ளைகளை விட அழகானவர்கள். இப்படியெல்லாம் கவலைப்படுபவர்கள் இருக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பெண்களையும், குழந்தைப் பாக்கியம் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் பெண்களையும் ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால் இந்தக் கவலை இவர்களை வாட்டுமா? வதைக்குமா? எனவே, எமக்கு கீழ் இருப்பவர்களை எண்ணிப் பார்த்துத் திருப்திப்படக் கற்றுக் கொள்ள வேண்டும்.நமக்கு முன்னர் வாழ்ந்த நபிமார்கள், நல்லவர்கள் தமது வாழ்வில் சந்தித்த துன்பங்கள், சோதனைகள் என்பவற்றை சற்று படித்து பயன்பெற முயல வேண்டும்.

அடுத்து நடந்து விட்ட நல்லவற்றை நினைவில் வைத்து மீட்டிப் பார்க்கலாம். இழப்புக்கள், தோல்விகள் என்பவற்றை மறக்க முயல வேண்டும். இழப்புக்களை அடிக்கடி நினைவுபடுத்தி அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தால் அமைதி கிடைக்காது. எனவே, இழப்புக்கள் மற்றும் தோல்விகளை மறக்க வேண்டும்;. மறக்கும் சூல்நிலைகளை உருவாக்க வேண்டும்.

அடுத்து அல்லாஹ் நாடியது நடக்கும். அதை யாராலும் மாற்ற முடியாது என்று உறுதியாக நம்ப வேண்டும். கழாகத்ரின்மீது உறுதியான நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் மலை போன்ற சோதனைகளையும் தாங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். கழாகத்ர் பற்றி அல்லாஹ் கூறும் போது,

“உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலை கொள்ளாதிருப்பதற்காகவும், உங்களுக்கு அவன் வழங்கியவற்றிற்காக ஆணவம் கொள்ளாதிருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தினான்.) ஆணவமும், தற்பெருமையும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்” (57:23)

என்று கூறுவதும் இதைத் தான் உணர்ததுகின்றது.

ஏற்பட்ட எந்த இழப்பு சோர்வையும், நம்பிக்கை ஈனத்தையும் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையீனம் இன்னும் பதட்டத்தையே அதிகரிக்கும். எனவே, இழப்புக்கள் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் முயற்சிகளை முடுக்கி விடவேண்டும். விழுந்தால் எழ வேண்டும். இதுதான் இயல்பான யதார்த்தமான நிலையாகும். நான் விழுந்து விட்டேன் விழுந்து விட்டேன் என்று புலம்பிக் கொண்டிருந்தால் ஆகப் போவது எதுவும் இல்லை.

அடுத்து வாழ்வில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் சிலரது கடந்த கால வாழ்வை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஆயிரம் சோகங்களையும், இழப்புக்களையும் அவமதிப்புக்களையும் தாண்டித் தான் வாழ்வில் உயர்வையும் அந்தஸ்தையும் அடைந்துள்ளனர் என்ற உண்மையை இதன் மூலம் அறியலாம்.

அடுத்து தொழுகையை முறையாகப் பேணித் தொழுவதன் மூலம் இந்தப் பதட்டத் தன்மையைத் தவிர்க்கலாம் எனக் குர்ஆன் கூறுகின்றது.

“நிச்சயமாக மனிதன் பெரும் பதட்டக் காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்”

“அவனுக்குத் தீங்கு நேர்ந்தால், பதட்ட மடைகின்றான்”

“மேலும், அவனுக்கு நன்மை ஏற்பட்டால் (பிறருக்கு வழங்காது) தடுத்துக் கொள் கின்றான்”

“தொழுகையாளிகளைத் தவிர”

“அவர்கள் தாம், தமது தொழுகையில் நிரந்தரமாக இருப்பவர்கள்.” (70: 19-23)

இந்த வசனம் தொழுகையை முறையாக, நிரந்தரமாகப் பேணித் தொழுபவர்கள் நிதானமாக வாழும் பக்குவத்தைப் பெறுவர் எனக் குர்ஆன் கூறுவதால் ஐவேளைத் தொழுகை மூலம் அல்லாஹ்விடம் மண்டியிடும் பக்குவத்தைப் பெற்று விட்டால் பதட்டத் தன்மையைத் தவிர்க்கலாம்.

அடுத்து அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்வதன் மூலம் மனதைத் திடப்படுத்தி அமைதிப் படுத்தலாம்.

“நம்பிக்கை கொண்டோரின் உள்ளங் கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன” (13:28)

எனவே, அதிகம் திக்ர் செய்து மன அமைதி பெறுவதன் மூலம் பதட்டத் தன்மையைத் தவிர்க்கலாம்.

அடுத்து பதட்டப்படும் பெண் தன் பதட்டத் தன்மையை குழந்தைகளிடமும், தன்னைச் சூழ இருப்பவர்களிடமும் பரவிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பதட்டம் ஒரு தொற்று நோயாகும். ஒரு சபையில் ஒருவர் பதட்டப்பட்டால் அனைவரையும் அது தொற்றிக் கொள்ளும். பதட்டப்படும் பெண்ணின் கட்டுப்பாட்டில் வாழும் குழந்தைகளிடமும் பதட்டத் தன்மை படர்ந்து விடும்.

சில பெண்களது பதட்டம் சில கணவர்களைக் கொலைக் களத்துக்குக்கூட இழுத்துச் சென்றுள்ளன. எனவே, உங்கள் பதட்டம் அதிகரிக்காமல் இருக்க நீங்கள் நிதானமானவர்கள் மத்தியில் வாழ வேண்டும். எனவே, உங்கள் குழந்தைகள், கணவன் என்போர் பதட்டப்படக் கூடாது என்றால் உங்கள் பதட்டத்தை அவர்களிடம் நீங்கள் காட்டக் கூடாது. அடுத்து, குழந்தைகளைக்கூட கஷ;டங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்களாகவும், பதட்டப்படாதவர் களாகவும் வளர்ப்பது முக்கியமாகும்.

உங்கள் பதட்டத்தை பலமடங்காகப் பெருக்கக் கூடியவர்களை இணங் கண்டு அவர்களுடனான உறவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை அகராதியிலிருந்து பொறுமை எனும் பதத்தை அழித்துவிடத் துடிக்கும் நண்பர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

மார்க்க அறிவும், பொறுமையும் உள்ள நன்மக்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவு ஞானம்மிக்கவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். இதன் மூலம் அமைதி பெறுங்கள்.

வாழ்க்கை என்பது சோதனையே! அதனை உறுதியுடனும், நம்பிக்கையுடனும், நிதானத்துடனும் அனுகத் தயாராகுங்கள். வாழ்வில் வெற்றி பெறுங்கள். எனவே, பதட்டம் வேண்டாம் கண்ணே!

2 comments

  1. A right topic at the right time. Expecting more to lead us in the right path. Insha allah…….

  2. Sure Real i like this topic very much….. insha allah! Allah will us……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *