இம்ரான் என்றொருவர் இருந்தார். அவரது மனைவி கருவுற்றார். அவர் தனக்கு ஆண் குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பலஸ்த்தீன் பள்ளியில் பணிபுரிய அல்லாஹ்விடம் நேர்ச்சையும் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு பெண் குழந்தையே கிடைத்தது. அந்தக் குழந்தைக்கு மர்யம் எனப் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையையும் அதற்குக் கிடைக்கும் குழந்தையையும் அல்லாஹ் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்.
மர்யம் வளர்ந்தாள். பக்குவமும் ஒழுக்கமும் நிறைந்த பெண்ணாகத் திகழ்ந்தாள். ஒருநாள் அவள் குளிப்பதற்குத் தயாராகி தனித்திருந்த போது மனித தோற்றத்தில் வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) வந்தார். தான் தனித்திருக்கும் போது ஒரு ஆண் வருவதைக் கண்டு பயந்த மர்யம், அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். அப்போதுதான் வந்தவர், தான் வானவர் என்றும், உனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கப் போகிறது என்றும் கூறினார். இதைக் கேட்டு மர்யம் அதிர்ச்சி அடைந்தார். “எந்த சீணும் என்னைத் தொட்டதில்லை. நான் கெட்டவளும் இல்லை. இப்படி இருக்க எனக்கு குழந்தை கிடைக்குமா?” என்று கேட்டார்கள். “இது உன் இறைவனின் ஏற்பாடு. அவன் அனைத்திற்கும் ஆற்றல் உடையவன். உனக்கு ஒரு குழந்தை கிடைக்கும். அந்தக் குழந்தை இறுதி நாளுக்கான அத்தாட்சியாக இருக்கும்” என்று கூறி மர்யமின் கற்பில் ரூஹை ஊதினார்.
மர்யம் கர்ப்பவதியானார். ஒருநாள் கர்ப்ப வேதனை அதிகரித்தது. குழந்தை கிடைத்தால் குழந்தையின் தந்தை யார் என மக்கள் கேட்டு கேவலப்படுத்துவார்களே… என்று அவர் கவலைப்பட்டார். அப்போது ஒரு சத்தம் கேட்டது. ஒரு ஈத்த மரம் இருந்தது. அதை உசுப்பினால் அதிலிருந்த ஈத்தம் பழங்கள் விழும். அதை உண்டு வாழவும், ஒரு நீரோடை இருந்தது. அதில் நீர் அருந்துமாறும் அல்லாஹ் கட்டளை இட்டான். யாரும் பேசினால் அவர்களுடன் பேச வேண்டாம் என்றும், தான் உண்ணாவிரதம் இருப்பதாகவும் கூறச் சொன்னது.
கர்ப்பவதிகள் ஈத்தம் பழம் உண்பதும், குழந்தையை நீருக்குள் பெற்றெடுப்பதும் பிரசவ வேதனையை இலகுபடுத்தும். அடுத்து இயேசு டிசம்பரில் பிறந்ததாக நம்பப்படுகிறது. டிசம்பர் என்பது பலஸ்த்தீனில் கடும் குளிர்காலமாகும். சூடான காலத்தில் தான் ஈத்தம்பழம் கனியும். எனவே இயேசு குளிரான டிசம்பர் காலத்தில்
பிறக்கவில்லை என்றும் இந்தச் சம்பவம் சொல்கிறது. மர்யம் (அலை) அவர்கள் குழந்தையை பெற்றெடுத்தார்கள். அவர்தான் தந்தை இன்றிப் பிறந்த அற்புதக் குழந்தை ஈஸா ஆவார். அவரையே இயேசு என மக்கள் அழைக்கின்றனர். மர்யம் தனது குழந்தையுடன் வந்தபோது மக்கள் அவரைக் குறை கூறினார்கள். “மர்யமே உன் தாயும் நல்லவள், உன் தந்தையும் நல்லவர். இப்படி இருக்க நீ ஒழுக்கம் தவறியது எப்படி?” எனக் கேள்வி கேட்டனர். மர்யம் அவர்கள் “இந்தக் குழந்தையிடமே கேளுங்கள்” என சைகை காட்டினார்கள். இது கேட்டு ஆத்திரம் கொண்ட மக்கள், “மடியில் இருக்கும் குழந்தையிடம் எப்படிக் கேட்பது?” என்று கேட்டார்கள். அப்போது அந்த அதிசயம் நடந்தது. குழந்தை ஈஸா பேசத் துவங்கியது.
“நான் அல்லாஹ்வின் அடிமை. அவன் எனக்கு வேதத்தைத் தந்து என்னை இறைத்தூதராக்குவான். என்னை அவன் அருள்வளம் மிக்கவனாக ஆக்கியுள்ளான். தொழுமாறும், ஸக்காத் கொடுக்குமாறும், என் தாய்க்கு நல்லது செய்யுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். நான் ஆதிக்கம் செலுத்துபவனாய் இருக்கமாட்டேன். நான் பிறந்த நாளிலும், மரணிக்கும் நாளிலும், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் நாளிலும் என் மீது அமைதி இருக்கும்” என குழந்தை பேசியது.
இந்தப் பேச்சின் மூலம் இயேசு அற்புதமாகப் பிறந்தவர்; அவர் கடவுள் அல்ல, கடவுளின் தூதர்; அவருக்கு வேதம் வழங்கப்பட்டது; அவர் அமைதியான முறையில் இயற்கையாக மரணிப்பார்; மறுமையில் ஈடேற்றம் பெற்றவராக அவர் இருப்பார் என்ற உண்மைகள் உரத்துக் கூறப்படுகின்றன.
அல்குர்ஆனில் இச்சம்பவத்தை மர்யம் எனும் 19ஆம் அத்தியாயத்தில் 17&33 வசனங்களிலும், 3ஆம் அத்தியாயத்தில் 35&38 வரையுள்ள வசனங்களிலும் காணலாம்.
ஹாரூத் மாரூத் பற்றி விளக்கமாக கூறுங்களேன்.