எமது நாட்டில் தீவிரவாத இனவாதக் குழுவொன்று சில வருடங்களாகவே இனவாத விஷ விதையை நாட்டில் வளர்த்து வருகின்றது. இக்குழுவினால் சிறுபான்மை சமுதாயங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான எண்ண அலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களது மத, பொருளாதார, சமூக நிலவரங்கள் பேரினவாத சஞ்சிகைகளில் இலக்குகளாக மாறியுள்ளன. முஸ்லிம்களது பள்ளிவாசல்களையும் வர்த்தக நிலையங்களை யும் இதனால்தான் குறிவைக்கின்றனர்.
அண்மைக் காலமாக பேரினச் சூறாவளி அளுத்கம, பதுளைப் பகுதியில் மையம் கொண்டு பாரிய அளவில் உயிர், பொருள், சேதங்களை விளைவித்து விருகின்றன. நாடு பூராக இஸ்லாமிய எதிர்ப்புணர்வை வளர்த்து விட்டால் எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் அது நாடுபூராகவும் பற்றி எரிவதற்கு ஏதுவாய் அமைந்துவிடும்.
இந்த நிலை நீடித்துக் கொண்டிருந்தும் இதுவரை நாட்டின் அமைதியையும் நிம்மதியையும் சீர்குலைத்து இனங்களுக்கு மத்தியில் உள்ள ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் என்பவற்றைச் சிதைத்து வரும் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப் படவும் இல்லை. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவும் இல்லை. இது பெரிய மன உளைச்சலையும் கவலை யையும் ஏற்படுத்தி வருகின்றது.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பட்டியல்படுத்த முடியாத அளவுக்கு மத நிந்தனைகளும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டும் கூட முஸ்லிம் சமூகத்தால் இது தொடர்பில் ஆக்கபூர்வமான எந்த முன்னெடுப்புக்களும் முன்னெடுக்கப்படவில்லை. முஸ்லிம் சமூகத்தில் அரசியல், ஆன்மீகத் தலைமை களின் ஒற்றுமையின்மை, தூரநோக்கின்மை, பொது விடயத்தில் உடன்பட்ட நிலையின்மை போன்ற இன்னோரன்ன சமூகக் குறைபாடு களையே இது எடுத்துக்காட்டுகின்றது.
முஸ்லிம் சமூகத்தில் உள்ள சில அறிவீனர்கள் தமக்கு எதிரான இஸ்லாமிய இயக்கங்களை காட்டிக் கொடுப்பதற்காக இந்தப் பேரினவாத பூதத்தை உசுப்பேத்திவிட்டனர். அதுதான் இந்த இனவாத சக்திகளின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாகத் திகழ்கின்றது.
அப்போது அவர்கள் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் எந்த முரண்பாடும் இல்லையென்று கூறினார்கள். ஆனால், அவர்கள் ஏற்படுத்திய இனவாத சிந்தனையால் அனைத்து முஸ்லிம்களும் அவமானத்தைச் சந்தித்தனர்.
குளியாப்பிட்டியவில் பன்றியின் உருவத்தில் அல்லாஹ் என எழுதி கொடும்பாவி எரித்தது, குர்ஆனைக் கொச்சைப்படுத்திய தெல்லாம் எல்லா முஸ்லிம்களுக்கும் எதிரானதுதானே!
இதை வைத்தாவது முட்டாள்தனமான முஸ்லிம்கள் படிப்பினை பெற்றிருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் வேரூன்றிப் போயுள்ள இயக்க வெளியும், இயக்க எதிர்ப்புணர்வும் இன்னும் தணிந்ததாக இல்லை.
ஒரு இயக்கம் மாநாடு நடாத்துகின்றது. அந்த மாநாடு நல்ல முறையில் நடந்துவிடக் கூடாது என்று மற்றொரு இயக்கம் எண்ணுகின்றது. மாநாடு சம்பந்தமான அவதூறுகளைப் பரப்புகின்றது. அத்துடன் நிற்காது அந்த மாநாடு பேரினவாதிகளுக்கு எதிராக ஏசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு என்றொரு பொய்யை அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை மதத் தலைமைக்கும், அரசியல் தலைமைக்கும் போட்டுக் கொடுக்கின்றது.
உண்மையில், அவர்களுக்கு ஏசுவதற்காக மாநாடு போட்டால் கூட இப்படிச் சொன்னால் உண்மை சொன்னார்கள் என்றாவது திருப்திப்படலாம். ஆனால், இது பொய் என்பது சொன்னவர்களுக்கும் தெரியும். எப்படியாவது மாநாட்டுக்கு இடைஞ்சல் கொடுத்து அந்த நெருக்கடி அச்சம் காரணமாக மாநாட்டை நிறுத்திவிட்டால் அல்லது மாநாட்டை வெற்றிகரமாகச் செய்யவிடாமல் தடுத்து விட்டால் எமது இயக்கத்திற்குப் பெரிய சேவை செய்துவிட்டேன். எதிர் இயக்கத்தை இயங்கவிடாமல் தடுத்துவிட்டேன் என்ற அற்பத்தனமான சிந்தனை இன்றைய இயக்க வாதிகள் சிலரின் மனதில் இடம்பிடித்துள்ளது.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்தப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை எனது இயக்க நலன்தான் முக்கியம் என்ற மனநிலை இருக்குமாக இருந்தால் இயக்கம் என்பது ஹலாலாக இருக்காது.
இஸ்லாத்தின் நலனுக்காக உருவாக்கப் பட்டவைதான் இந்த இயக்கங்கள். இயக்கங்களால் இஸ்லாத்திற்குப் பாதிப்பு என்றால் அந்த இடத்தில் இயக்கம் கலைக்கப்பட்டு இஸ்லாம் மட்டுமே பற்றிப் பிடிக்கப்பட வேண்டும்.
ஆனால், இயக்க வெறி இஸ்லாத்தை விட தனது இயக்க நலனே முக்கியம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊரில் இந்த இயக்கம் வளர்ந்துவிட்டால் எமது இயக்கத்திற்கு இடம் இல்லாமல் போய்விடும். எனவே, எந்த வழியிலாவது இந்த இயக்கத்தின் செயற்பாட்டை முடக்க வேண்டும் என்ற சுயநலமும், அறியாமையும், இயக்க வெறியும் கலந்த எண்ணம் இன்று சிலரிடம் ஏற்பட்டுள்ளது.
மாற்றுமதத்தவர்களுடன் நட்புறவு கொண்டாலும் மாற்று அமைப்புடன் நட்பினை வைத்துக் கொள்ள சிலர் தயாராக இல்லை. ஒவ்வொரு இயக்கங்களும் தனித்தனி மதங்களாக மாறி வருகின்றது. இந்த நிலை நீடித்தால் இயக்கம் என்பது ஹலாலாக இருக்குமா?
நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் கூட இயக்கங்களுக்கு மத்தியில் நெருக்கத்தையும் இணக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்றால் வேறு எப்போது நாம் ஒன்றிணையப் போகின்றோம்? இது குறித்துக் கட்டாயம் நாம் சிந்திக்க வேண்டும்.
இயக்கங்களுக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை விட ஒவ்வொரு இயக்கமும் தனது இயக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், அடுத்த அமைப்பை கூட்டி விடவும் செய்த சதி வேலைகளும், சூழ்ச்சிகளும்தான் இயக்கங்களுக்கு மத்தியில் பாரிய இடைவெளியையும், இன முறிவையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலை இனியும் தொடரக் கூடாது! ஒவ்வொரு இயக்கமும் தனது பணியைத் தொடரும் அதே வேளை அடுத்தவர்களின் பணிக்கு இடைஞ்சல் தரலாகாது. முடிந்தால் அடுத்தவர்களின் நல்ல பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலை ஏற்பட வேண்டும். அடுத்த இயக்கத்தின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்ட முடியுமாக இருந்தால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் தயங்கக் கூடாது! யார் செய்தாலும் நன்மைக்கும் தஃவாவுக்கும் உதவுதல், யார் செய்தாலும் தீமைக்கும் வரம்பு மீறலுக்கும் ஒத்துழைக்கக் கூடாது என்ற ஒருநிலைத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இல்லை யென்றால் இஸ்லாத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கங்களில் மூலமே இஸ்லாம் அழிவுகளைச் சந்திக்கலாம்.
ஒவ்வொரு இயக்கத்திலும் இயக்க வெறிகொண்டவர்களும் தீவிரவாத சிந்தனைப் போக்குடையவர்களும் இருக்கலாம். அதனை அந்தந்த இயக்கங்களே இனம் கண்டு களையெடுக்க முனைய வேண்டும்.
இன்று இயக்கங்களையும், அதன் தலைமைகளையும், அதன் அடிப்படைகளையும் அந்தந்த இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாத சிந்தனைப் போக்குக் கொண்ட மார்க்க அறிவற்றவர்களே வழிநடாத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆபத்தான அறிகுறியாகும். இது களையப்பட வேண்டும்.
இந்த வகையில் குர்ஆன், ஸுன்னா பேசும் தவ்ஹீத் அமைப்புக்களின் அங்கத்தவர்களிடம் காணப்படும் குறைகளை தவ்ஹீத் அமைப்புக்களின் தலைமைகளும், தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி போன்ற அமைப்புக்களின் அங்கத்தவர்களிடையே காணப்படும். இது போன்ற குறைகளை அவ்வந்த அமைப்புக்கள் இனம் கண்டு களைய முன்வர வேண்டும். ஒருவர் குறையை அடுத்தவர் களைய முற்படும் போது அது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
நாம் ரமழான் மாதத்தில் இருக்கின்றோம். குறிப்பாக ரமழான் மாத்தில்தான் அதிகமான இயக்க மோதல்கள் இடம்பெறுவதுண்டு. அந்த மோதல்களுக்கான வாயில்களை இயக்கங்களாக அடைக்கவில்லை என்றால் எம்மை நாமே அழித்துக் கொள்வதாகவே அது அமையும்.
எனவே, இலங்கை முஸ்லிம்கள் இயக்கங்கள் தொடர்பில் ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். இயக்க வெறி அவசியம் களையப்பட வேண்டும். இயக்கங்களுக் கிடையேயான நல்லுறவுகளுக்கான வழிகள் குறித்து எல்லா அமைப்புக்களும் அவசியம் சிந்திப்பதுடன் சில முன்னெடுப்புக்களையும் செய்தாக வேண்டும்.
http://www.sonakar.com/?p=2645