Featured Posts

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்டும் அறிவான்

‘அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ ‘நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே’ என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். ‘ (30:7)

இந்த வசனத்தை மற்றும் சிலர் இப்படி மொழியாக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர, அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே எனக் கூறுவார்கள் என அர்த்தம் செய்துள்ளனர். அறபு இலக்கண விதிகளை வைத்துப் பார்க்கும் போது இரண்டுவிதமாக அர்த்தம் செய்வதற்கும் இடம்பாடு உள்ளது. என்றாலும் இந்த வசனத்தைக் கவனமாக அவதானித்தால் முதல் அர்த்தமே பொருத்தமானது என்பது தெளிவாகும்.

முதல் அர்த்தத்தின் படி முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தையும், முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான். அறிவில் தேர்ந்தவர்கள் இது எங்கள் இரட்சகனிடமிருந்து வந்தது என நாம் ஈமான் கொண்டோம் என்று கூறுவார்கள் என்பது அர்த்தமாகும்.

இரண்டாம் சாராரின் பொருள்படி முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வும் அறிவில் தேர்ந்தவர்களும் அறிவார்கள் என்பது அர்த்தமாகும். ‘வர் ராஸிஹூன்’ என்பதில் உள்ள ‘வா’ வை வைத்து இப்படி இரு விதத்தில் அர்த்தம் செய்ய முடிந்தாலும் இரண்டாம் அர்த்தத்தில் பெரியதொரு குழறுபடி ஏற்படுகின்றது.

அல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிட மிருந்து வந்தவை என்றே கூறுவார்கள்.

மேலே உள்ள வசனத்தில் வரும் ‘வா’ என்கின்ற எழுத்தை வைத்து அல்லாஹ்வும் அறிஞர்களும் விளங்குவார்கள் என அர்த்தம் செய்தால் அதற்குப் பின்னால் வரும் அவர்கள் கூறுவார்கள் என்று இடம் பெறுவதில் உள்ள அவர்கள் யார்? எனக் கேள்வி எழுகின்றது. அல்லாஹ்வும் அறிஞர்களும் கூறுவார்கள் என இந்த அர்த்தப்படி பதில் கூற வேண்டும். அல்லாஹ்வும் அறிஞர்களும் இது எங்கள் இறைவனிடமிருந்து வந்தது. நாம் இதை நம்புகின்றோம் என்று கூறுவதாக அர்த்தம் அனர்த்தப்பட்டுவிடும்.

எனவே, முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டும் அறிவான். அறிவுடையோரோ இதன் உண்மையான விளக்கத்தை நாம் அறியாவிட்டாலும் இது எங்கள் இறைவனிட மிருந்து வந்தது. அதை நாம் ஈமான் கொள்கின் றோம் என்று கூறுவர் என்று பொருள் செய்வதே சரியானதும் முறையானதுமாகும்.

இந்தப் பொருளை நியாயப்படுத்து வதற்கான மற்றும் சில காரணங்களையும் மாற்றுக் கருத்துடையோர் முன்வைக்கும் சில வாதங்களுக்கான பதில்களையும் அடுத்த இதழில் நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *