இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது.
“பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது!
இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்கள்.
“இப்றாஹீம்! நீ நம்பவில்லையா?” என அல்லாஹ் கேட்டான்.
“இல்லை… இல்லை… நான் நம்புகின்றேன். இதைக் கண்ணாறக் கண்டு உள்ளம் அமைதியுற விரும்புகின்றேன்” என்றார்கள்.
அதற்கு அல்லாஹ் நான்கு பறவைகளை எடுத்து நன்கு பழக்கச் சொன்னான். இப்றாஹீம் நபி நான்கு பறவைகளை எடுத்து வளர்த்தார்கள். பின்னர் அவற்றை அல்லாஹ் கூறிய விதத்தில் அறுத்து துண்டு துண்டாக்கினார்கள். பறவையின் பாகங்கள் அனைத்தையும் ஒன்றாக் கலந்தார்கள். பின்னர் கலந்த அவற்றின் மாமிச உறுப்புக்களை நான்கு பகுதிகளாகப் பிரித்து நான்கு மலைகளின் மீது வைத்தார்கள். பறவைகளின் தலைகளை மட்டும் தனது கையில் வைத்துக் கொண்டார்கள். அதன் பின்னர் அந்தப் பறவைகளின் பெயர் கூறி அழைத்தார்கள்.
என்ன ஆச்சரியம்! அவர் பெயர் கூறி அழைத்ததும் ஒவ்வொரு மலையில் இருந்தும் துண்டு போடப்பட்ட இறைச்சி அவற்றின சிறகுகள், கால் எல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் பழைய பறவையாகி வந்து இப்றாஹீம் நபியின் கையில் இருந்த தலையுடன் இணைந்தன. இவ்வாறு நான்கு பறவைகளும் உயிர் பெற்ற அற்புதத்தை இப்றாஹீம் நபி கண்ணாறக் கண்டு பேராணந்தம் அடைந்தார்கள்.
இவ்வாறுதான் இறந்து அடக்கப்பட்டவர்கள், எரிக்கப் பட்டவர்கள், கடலில் மீன்களுக்கும், காட்டில் விலங்குகளுக்கும் இறையானவர்கள் அனைவரையும் அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான்.
இப்றாஹீம் நபியும் பறவைகளும் சம்பந்தப்பட்ட இச்சம்பவத்தை சூறா அல் பகரா அத்தியாயம் 02, வசனம் 260 வதில் காணலாம்.
நாம் மரணித்த பின்னர் மீண்டும் அல்லாஹ் எங்களை உயிர் கொடுத்து எழுப்புவான். நாம் செய்த நன்மைகளுக்குப் பரிசு தருவான். பாவங்களுக்குத் தண்டனை தருவான். இது இஸ்லாத்தின் அடிப்படையான நம்பிக்கையாகும்.
எனவே, தம்பி தங்கைகளே! மறுமையில் சுவனம் என்ற பரிசைப் பெற நாம் நன்மைகள் செய்திட வேண்டும். பாவங்களைத் தவிர்த்திட வேண்டும். பெரியாரை மதித்து பெற்றோர் சொல் கேட்டு நடந்திட வேண்டும். செய்வீர்கள்தானே!