“லா தஹ்ஸன் இன்னல்லாஃ மஅனா” கவலைப்படாதே, அல்லாஹ் எம்முடன் உள்ளான். இந்த வார்த்தை யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பது தெரியுமா தம்பி தங்கைகளே! வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மக்காவில் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை ஆரம்பித்த போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை முஸ்லிம்கள்
சந்தித்தனர். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றில் நீந்தி எரிமலைகளைக் கடந்து செல்வது போலிருந்தது. இறை நிராகரிப்பாளர்களின் வதைகள் வரம்பு மீறிப்
போன போது நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்கள் சிலரை அபீசீனியாவுக்கு அனுப்பினார்கள். அதன்பின் சிலரை மதீனாவுக்கு அனுப்பினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத் என்று கூறப்படும். நபி(ஸல்) அவர்கள் தோழர்களை அனுப்பிவிட்டு மக்காவிலேயே இருந்தார்கள்.
மக்கத்து காபிர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள். எல்லா கோத்திரத்தில் இருந்தும் ஒவ்வொரு இளைஞனை எடுத்து அவர்கள்
மூலமாக நபியைக் கொல்ல வேண்டும். அப்படிச் செய்தால் தான் முஹம்மது நபியின் குடும்பத்தால் பழிவாங்க முடியாது போகும் எனத் திட்டம் தீட்டினர்.
இதன்படி மக்கத்து காபிர்கள் முஹம்மது நபியின் வீட்டை முற்றுகையிட்டனர். அவர் தமது படுக்கையில் தமது ஒன்றுவிட்ட தம்பி அலி(ரலி) அவர்களை உறங்க வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.நபி(ஸல்) அவர்கள் தமது உயிர்த் தோழர் அபுபக்கர்(ரலி) வீட்டுக்கு வந்தார்கள். இரவு நேரத்தில் தன் தோழரைக் கண்ட அபுபக்கர், நிலைமையை உணர்ந்து கொண்டார். நாடு துறக்க நபிக்கு கட்டளை வந்துவிட்டது என்பது அவருக்குப் புரிந்து விட்டது. ஏற்கனவே தயார் நிலையில் இருந்த இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
மக்காவாசிகள் சிறந்த குதிரை வீரர்கள். எனவே அவர்கள் விரட்டிப் பிடிப்பதில் வீரர்கள். அதனால் முஹம்மது நபி தொடர்ந்து பயணம் செய்யாமல்
எதிரிகளைத் தேடி அலையவிட்டு, அவர்கள் ஓய்ந்த பின்னர் பயணத்தைத் தொடர முடிவு செய்தார்கள். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ‘தவ்ர்’ எனும்
குகையில் இருவரும் ஒளிந்து கொண்டனர். தமக்கு உணவு தருவதற்கும் மக்காவின் தகவல்களைத் தருவதற்கும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டனர். அந்தக் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். முஹம்மதையும் அபுபக்கரையும் உயிருடனோ, மரணித்த நிலையிலோ கொண்டு சென்றால் ஒட்டகங்கள்
பரிசாகக் கிடைக்கும் எனும் அறிவிப்பால் மக்கா இறைநிராகரிப்பாளர்கள் அவரைத் தேடி அலைந்தனர். ஒரு கூட்டம் ‘தவ்ர்’ குகைப் பக்கம் வந்து விட்டனர். குகைக்குள் இருப்பவர்களுக்கு மேலே இருப்பவர்களின் கால்கள் தெரிகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் தான் எதிரிகள் கண்டு விடுவார்களோ… இறைத்தூதரைக் கொன்று விடுவார்களோ… என்ற கவலையும் கலக்கமும் அபுபக்கர்(ரலி) அவர்களுக்கு
ஏற்பட்டது. அப்போது அவர், “இறைத்தூதரே! அவர்களில் ஒருவர் தனது பாதங்களைப் பார்த்தால் கூட எம்மைக் கண்டு விடுவார்களே! நாம் இருவர் தானே உள்ளோம். அவர்கள் பலர் உள்ளனரே! என்ன செய்வது?” என்று தனது கவலையை வெளியிட்டார். அப்போது அபுபக்கரைப் பார்த்த இறைத்தூதர், “நாம்
இருவர் இருக்கின்றோம் என்று கவலையா? நாம் இருவர் இல்லை; மூவர் உள்ளோம். அல்லாஹ்வும் எம்முடன் இருக்கின்றான்.
“லா தஹ்ஸன் ( கவலைலப்படாதே! ) இன்னல்லாஹ மஅனா (நிச்சயமாக அல்லாஹ் எம்முடன் உள்ளான்) என ஆறுதல் கூறி உறுதிப்படுத்தினார். குகையில் இருக்கும் நிலையிலும் எதிரிகள் கொலை வெறியுடன் சூழ்ந்திருந்த சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு அல்லாஹ் தனது அமைதியை இறக்கினான். காபிர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அந்த இடத்தில் தேடாமல் சென்று விட்டனர். இதனால் உத்தம நபியும் அவரது உயிர்த்தோழர் அபுபக்கர்(ரலி)யும் பாதுகாக்கப்பட்டனர்.
அல்லாஹ் பாதுகாக்க நினைத்தால் எந்தச் சூழ்நிலையிலும் பாதுகாப்பான் என்பதற்கு இந்நிகழ்ச்சி நல்ல சான்றாக அமைந்தது. இது குறித்த வசனத்தை சூறா ‘அத்தவ்பா’ 9ஆம் அத்தியாயம் 40ஆம் வசனத்தில் காணலாம்.
மாஷா அல்லாஹ்