Featured Posts

எனக்கு வாசிக்கத் தெரியாதே! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-43]

அதற்கு ‘ஜபலுந்நூர்’ (ஒளி மலை) என்றும் கூறுவார்கள். அந்த மலைக்கு ஏன் அந்தப் பெயர் சொல்லப்படுகிறது தெரியுமா? உலகையே இருளில் இருந்து மீட்டு ஒளியின் பால் இட்டுச் செல்லும் அற்புத வேதம் குர்ஆன் முதன்முதலில் இறக்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயது நெருங்கையில் மனித இனத்தின் அவல நிலை குறித்து கவலைப்பட்டார்கள். இதனால் தனித்திருந்து இறைதியானத்தில் ஈடுபட்டார்கள். அந்த மலை உச்சியில் உள்ள குகையில் அவர்கள் இருக்கும் போது திடீர் என ஒருவர் வந்தார். வந்தவர் “இக்ரஃ (ஓதுவீராக வாசிப்பீராக)” என்றார்.

முஹம்மத் நபி எழுத வாசிக்கத் தெரியாதவர். “எனக்கு வாசிக்கத் தெரியாது” என்றார். உடனே வந்தவர், முஹம்மத் நபியை இறுகக் கட்டி அணைத்தார். பின் மீண்டும் “வாசிப்பீராக” என்றார். முஹம்மது நபி மிக நல்ல பண்புள்ளவர். நிதானமானவர். கோபம் கொள்ளாதவர். எனவே மீண்டும் “எனக்கு வாசிக்கத் தெரியாது” என்றார். வந்தவர் மீண்டும் கட்டியணைத்து, மீண்டும் “வாசிப்பீராக” என்று கூறிவிட்டு, “படைத்த உம் இறைவன் திருப்பெயரால் ஓதுவீராக! அவன்தான் மனிதனை ‘அலக்’ என்ற நிலையில் இருந்து படைத்தான்.

ஓதுவீராக! உம் இறைவன் மிக கண்ணியமானவன். அவன்தான் பேனா மூலம் கற்பித்தான். அவன் மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்றுக்
கொடுத்தான்” என்ற ஐந்து வசனங்களை அவர் கற்றுக் கொடுத்தார். அதன்பின் நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள். பின்னர் அவர் அப்படியே வான் நோக்கிச் சென்றுவிட்டார். இந்த நிகழ்வால் முஹம்மத் நபி அச்சம் கொண்டார்.

“என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்று கூறிக்கொண்டே வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி அன்னை கதீஜா(ரலி) அவர்கள் ரொம்ப விபரமானவர். அவர் ந பி (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். “நீங்கள் அனாதைகளை அரவணைத்துள்ளீர்கள். ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் உதவுகின்றீர்கள். உறவுகளைப் பேணுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றும் தீங்கு நடக்காது. எனது உறவுக்காரர் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் வரக்கத் இப்னு நவ்பல். அவர் முந்தைய வேதங்களைப் படித்தவர். அவரிடம் இதுகுறித்து கேட்டுப் பார்ப்போம்” என்று கூறினார்கள்.

இந்த ஆலோசனைப்படி முஹம்மத் நபி வரக்கத் இப்னு நவ்பலிடம் சென்று நடந்ததைக் கூறினார். அப்போது முந்தைய வேதங்களைப் படித்த அவர், “உங்களிடம்
வந்தது நாமூதுஸுல் அக்பர் என்று கூறப்படும் வானவர் தலைவர் ஜிப்ரீல் ஆவார். உங்களுக்கு அவர் சொன்னவை வேத வெளிப்பாடாகும்.நீங்கள் இந்த மக்களுக்கு உபதேசம் செய்யும் போது இந்த மக்கள் உங்களை எதிர்ப்பார்கள். உங்களை இந்த ஊரை விட்டும் விரட்டுவார்கள். அவர்கள் விரட்டும் போது நான் இருந்தால்
உங்களுக்கு உதவுவேன்” என்று கூறினார். ஆனால் அதற்குள் அவர் மரணித்து விட்டார்.

இதன்பின்னர் தான் தன்னிடம் மனித ரூபத்தில் வந்தது ஜிப்ரீல் எனும் வானவர் என்பது முஹம்மத் நபிக்கு தெரியவந்தது. இந்த நிகழ்வு ஹிரா குகையில் நடந்தது. இங்கிருந்து தான் அவருக்கு நபித்துவப் பணி தொடங்குகிறது. முதன்முதலில் இறைவசனங்கள் இங்கு இறக்கப்பட்டதால் தான் இந்த மலை ஜபலுந்நூர் (ஒளி மலை) என அழைக்கப்படுகின்றது.

முஹம்மது நபிக்கு முதன்முதலில் அருளப்பட்ட ஐந்து வசனங்கள் 96ஆம் அத்தியாயமான ‘அல்-அலக்’ அத்தியாயத்தில் (1-5) இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *