தாவூத் என்றொரு நபி இருந்தார். இவர் நபியாகவும், வல்லமைமிக்க மன்னராகவும் திகழ்ந்தார். கிறிஸ்தவ சகோதரர்கள் இவரைத்தான் தாவீது ராஜா என்றும், டேவிட் என்றும் அழைக்கின்றனர். இவர் ஆடு மேய்ப்பவராக இருந்தார். தனது ஆடுகளை வேட்டை மிருகங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கவணில் கல் வைத்து குறிபார்த்து எறிபவராகவும் அதில் அவர் மிகப்பெரும் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார். இன்றைய பலஸ்த்தீன சிறுவர்கள் சுற்றி சுற்றி கல் வீசுவதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா.
அப்படித்தான் தாவூத் நபி தனது ஆடுகளைக் காத்து வந்தார். ஒரு போரில் மிகப்பெரிய எதிர்ப்படை வீரனால் இஸ்ரவேல் சமூகம் பாதிக்கப்பட்டது. அவனுடன் நேருக்கு நேர் மோத அனைவரும் அஞ்சினார்கள். அந்த எதிரி வீரனை வீழ்த்துபவருக்கு தனது மகளைத் திருமணம் செய்விப்பதாக மன்னர் அறிவித்தார். தாவூத் நபி கவணில் கல் வைத்து அவனது நடு நெற்றியில் அடித்து அவனை வீழ்த்தினார். இதன் மூலம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர் அரசரானார். தாவூத் நபி மிக அழகிய குரல் வளம் பெற்றிருந்தார்கள். அவர், சபூர் எனும் வேதத்தை ஓதினால் கால்நடைகள், பறவைகள் கூட அந்தக் குரல் நயத்தில் மயங்கிக் கேட்டுக் கொண்டிருக்கும். அவர் அல்லாஹ்வைத் துதித்தால் அவருடன் சேர்ந்து பறவைகளும் மலைகளும் கூட அல்லாஹ்வைத் துதிக்கும். அவ்வளவு அழகிய குரல்வளம் அவருடையது! தாவூத் நபி மன்னராக இருந்தாலும் அவர் அரச சொத்தில் இருந்து உண்ண மாட்டார். தனது சொந்த உழைப்பில் இருந்தே உண்டு வந்தார்.
அல்லாஹ் அவருக்கு இரும்பை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். தாவூத் நபி காலத்தில் நிறையவே போர்கள் நடந்தன. அந்தக் காலத்தில் மக்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள். போர்க்களத்தில் எதிரிகளின் வாள் வெட்டில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள கேடயமும் போர்க்கவசமும் முக்கியமானதாகும். தாவூத் நபியும் போர்க் கவசம் செய்து விற்று அதில் இருந்து வரும் வருமானத்தில் தான் வாழ்ந்து வந்தார்கள்.தாவூத் நபி மன்னராக இருந்தாலும் உலக இன்பங்களை அதிகம் அனுபவிக்க விரும்பவில்லை.
அதனால் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்று வந்தார்கள். மாதத்தில் 15 நாள் நோன்பு, மீதி 15 நாள் தான் அவர் உணவு உண்பார். அவர் இரவில் பாதி நேரம் தூங்குவார்கள். பின்னர் மீதிப் பாதியில் எழுந்து அரைவாசி அளவுக்கு வணங்குவார்கள். பின்னர் மீதி இரவில் தூங்குவார்கள். இவ்வாறு ஒரு மன்னராக இருந்தாலும் உண்டு கழிக்காமலும் உறங்கி காலத்தை விரயமாக்காமலும் வாழ்ந்த ஒரு மாமன்னர் அவர் அரச சுகத்தை அனுபவிக்காமல் சொந்த உழைப்பில் உண்டு வாழவதே உயர்வானது என்பதை உணர்த்திய உத்தமர் அவர். இதேவேளை சின்ன தவறு நடந்தாலும் அதற்காக அதிகமதிகம் அழுது தொழுது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பவராக அவர் இருந்தார்.
ஒருநாள் அவர் தனது தொழும் இடத்தில் இபாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே திடீர் என இருவர் வந்தனர். இதனால் அவர் அச்சமடைந்தார். வந்தவர்கள், “அச்சப்படாதீர்கள். நாம் நமது பிரச்சினைக்குத் தீர்வு தேடி வந்துள்ளோம். எமக்கு நியாயமான தீர்வு தாருங்கள்” என்றனர். அதன்பின் அவர்களில் ஒருவர், “இவர் எனது சகோதரர். இவருக்கு 99 ஆடுகள் உள்ளன. என்னிடம் ஒரேயொரு ஆடுதான் உள்ளது. அதையும் அவர் தனது பொறுப்பில் விடச் சொல்கிறார்.
வாதத்தில் அவர் என்னை மிஞ்சி விட்டார்” என்று கூறினார்.
தாவூத் நபி அடுத்தவரிடம் அவரது நிலைப் பற்றி கேட்காமல் அவரைப் பார்த்து, “உனது ஆட்டுடன் அவரது ஆட்டையும் சேர்க்குமாறு கேட்பதன் மூலம் நீ அநியாயம் செய்து விட்டாய். இப்படித்தான் பங்காளிகளில் அதிகமானவர்கள் அநியாயம் தான் செய்கின்றனர்” என்று தீர்ப்புக் கூறிவிட்டார். அதன்பின் தாவூத் நபி தான் சோதிக்கப்பட்டதை அறிந்து உடனே சுஜூதில் விழுந்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார்கள். பேணுதலாக வாழ்ந்த தாவூத் நபி அதிகமதிகம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவராக இருந்தார்கள்.
தாவூத் நபி பற்றிய இந்தத் தகவல்களை அல்குர்ஆன் 38:17&25, 21:77&80 ஆகிய வசனங்களில் காணலாம்.