அல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது:
لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَآءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ
‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை. நாங்கள் செல்வந்தர்கள்’ என்று கூறியவர்களின் வார்த்தையை அல்லாஹ் செவியேற்று விட்டான். அவர்கள் கூறியவற்றையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்வோம். மேலும், (மறுமையில்) ‘சுட்டெரிக்கும் வேதனையை சுவையுங்கள்!’ என்றும் கூறுவோம்.’ (3:181)
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுப்பவர் யார்? என்ற குர்ஆன் வசனம் இறங்கிய போது, அல்லாஹ் கடன் கேட்பதாகவும் அதனால் அல்லாஹ் ஏழை என்றும் நாம் பணக்காரர்கள் என்றும் யூதர்கள் பேசினார்கள். இதைக் கண்டித்தே இந்த வசனம் பேசுகின்றது.
குர்ஆன் வசனங்களின் உண்மையான அர்த்தத்தை வார்த்தை ஜாலங்களால் வளைப்பது பெரும் குற்றம் என்பதை இதன் மூலம் அறியலாம்.
அத்துடன் அல்லாஹ்வைப் பற்றி சொல்லப் படும் விடயங்களைப் படைப்புக்களோடு ஒப்பிட்டுப் பேசுவதும், நோக்குவதும் தவறு என்பதையும் இந்த வசனம் உணர்த்துகின்றது.
அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், செயல்கள் என்பவற்றை அவனது உயர்ந்த அந்தஸ்துக்கும் கண்ணியத்திற்கும் எற்பவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனித செயற்பாடுகள், நடத்தைகளுக்கு ஒப்பாகவோ, நிகராகவோ அவற்றைப் புரிந்து கொள்வது இஸ்லாமிய அகீதாவுக்கு முரணானதாகும்.