ஒருவர் தனது சொத்தில் 1/3 க்கு அதிகமாகாத அளவுக்கு வஸிய்யத் செய்யலாம். அந்த வஸிய்யத் பொது அமைப்புக்காகவும் இருக்கலாம். குர்ஆன் குறிப்பிட்ட, வாரிசுரிமை பெறாத தனி நபர்களாகவும் இருக்கலாம். இஸ்லாமிய அடிப்படையில் ஒருவரின் மரணத்தின் பின்னர்தான் சொத்துக்கள் பங்கிடப்படும். அவரது இறுதிக் கிரியைகளுக்கான செலவுகள் போன பின்னர் அவரது கடன்கள் மற்றும் வஸிய்யத்துக்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்தான் அவரது சொத்துக்கள் பகிரப்பட வேண்டும். இது பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது,
“(இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரண சாசனம், அல்லது கடன் என்பவற்றை நிறை வேற்றிய பின்னரேயாகும்.”
அவரது வஸிய்யத்தை அல்லது கடனை நிறைவேற்றியதன் பின்னர் இப்படி பகிரப்பட வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது. இதில் முதலாவதாக வஸிய்யத்தும் அடுத்து கடனும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், வஸிய்யத்தை விட கடன் அவசியம் அடைக்கப்பட வேண்டியதாகும். நபியவர்கள் இறந்தவருக்கு தொழுகை நடத்த முன்னரே இவருக்குக் கடன் இருக்கின்றதா என்பதைத்தான் முதலில் விசாரிப்பார்கள். முதலில் கடனை அடைப்பதா அல்லது வஸிய்யத்தை நிறைவேற்றுவதா என்பது குறித்து சுன்னா விளக்கும் போது கடனையே முன்னிலைப் படுத்துகின்றது.
நபி(ச) அவர்கள் வஸிய்யத்தை விட கடனை நிறைவு செய்வதை முன்னிலைப்படுத்தி தீர்ப்புக் கூறினார்கள்.
(நூல்: திர்மிதி 2094, 2122, அஹ்மத்: 1222)
குர்ஆனில் முதலில் வஸிய்யத்தும் அடுத்து கடனும் குறிப்பிடப்பட்டாலும் இதை எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும் என்று விளக்கமளிக்கும் பொறுப்பில் உள்ள நபி(ச) அவர்கள், முதலில் கடனையும் அடுத்து வஸிய்யத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விளக்கியுள்ளதால் இதையே நாம் ஏற்க வேண்டும். இது குர்ஆனை விட சுன்னாவை முதன்மைப் படுத்துவதாகாது. குர்ஆனை சுன்னாவின் விளக்கத்துடன் பின்பற்றுவதாக அமையும். இது குர்ஆனை விளங்க சுன்னாவின் வழிகாட்டல் அவசியம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.